தினமணி கொண்டாட்டம்

ரோஜா மலரே! - 38: குமாரி சச்சு

10th May 2020 08:16 PM | சலன்

ADVERTISEMENT


நாங்கள் சென்ற இடம் ஹட்டன் என்ற கொஞ்சம் குளிர் அதிகமாக இருந்த இடம். அதனால் மாலை 6 மணிக்கு மேல் வெளியே வந்தாலே, நடுங்கத் தொடங்கினோம். இந்தக் குளிர் எங்கள் குழுவிற்கு ஒருபிரச்னையை உருவாக்கியது.

எங்கள் குழுவில் இருந்த ஓர் இசைக் கலைஞர் திடீரென்று மூச்சு விட கஷ்டப்பட ஆரம்பித்தார். அவரது பிரச்னை நேரம் ஆக ஆக அதிகமாகியது. அவர் எங்கள் குழுவில் புல்லாங்குழல் வாசிப்பவர். அவரை ஒரு மருத்துவரிடம் நாங்கள் அழைத்துச் செல்ல முடிவு செய்து, நிகழ்ச்சி அமைப்பாளரிடம் தெரிவித்தோம். அவர் உடனேயே ஒரு காரை ஏற்பாடு செய்து, அந்தப் புல்லாங்குழல் வாசிக்கும் இசைக் கலைஞரை ஏற்றிக் கொண்டு ஒரு மருத்துவரை நாடிச் சென்றோம்.

அவருக்குக் கொஞ்சம் வயசாகி இருந்தாலும் மிகவும் திறமையாகப் புல்லாங்குழல் வாத்தியத்தை மிகவும் சிறப்பாக வாசிப்பார். எப்பவுமே சாதாரணமாக வாசிக்கும் புல்லாங்குழல் வித்வான்களால் நடனத்திற்குப் புல்லாங்குழல் வாசிக்க முடியாது. அதற்காகப் பயிற்சியும் ஓரளவிற்கு முயற்சியும் கண்டிப்பாகத் தேவை. இவரிடம் இந்த இரண்டுமே இருந்தது. இவர் நடனத்திற்கு உறுதுணையானவர்.

எங்கள் குழுவில் நீண்டக்காலம் புல்லாங்குழல் வாசிப்பவர். இவருக்கு எங்கள் பாடல்கள் அத்துப்படி. அது மட்டுமல்லாமல் நாங்கள் ஆடிக்கொண்டு இருக்கும் போது, நாங்கள் சொல்வதைக் கண் அசைவால் அல்லது கை ஜாடையால் செய்து காட்டினாலும் புரிந்து கொண்டு அழகாக வாசிக்கக் கூடியவர். இவருக்கு நடு வழியில் இப்படி ஆகிவிட்டதே என்று நாங்கள் எல்லோரும் மிகவும் பயந்து விட்டோம்.

ADVERTISEMENT

இப்படி ஏதாவது ஏற்பட்டால் எங்கள் நிகழ்ச்சி கண்டிப்பாகத் தடை ஏற்பட்டு பிரச்னையாகி விடும். எல்லோரும் இவருக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது என்று எங்களுக்குத் தெரிந்த கடவுளை எல்லாம் வேண்டிக் கொண்டிருந்தோம். இவரைப் பார்த்த அந்த மருத்துவர் இவரைப் பரிசோதிக்கத் தொடங்கினார். நாங்கள் பரிசோதனை செய்யும் அறைக்கு வெளியே தவிப்புடன் அமர்ந்திருந்தோம். மருத்துவப் பரிசோதனை முடிந்து வெளியே வந்தவுடன் இவரை அழைத்துக் கொண்டு மருத்துவர் முன் அமர்த்தினோம்.

அந்த மருத்துவரிடம் - இவர் சந்தோஷமாக இதுவரை நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார். ஹட்டன் வந்தவுடன் திடீரென்று மூச்சு விட முடியாமல் கஷ்ட படுகிறார் என்று கூறினோம். நாங்கள் சொன்னதைக் கேட்டு மருத்துவர் பரிசோதனை எல்லாம் முடித்து விட்டு அவரிடம் சில கேள்வியைக் கேட்க அவரும் அதற்குப் பதில் அளித்தார்.

மருத்துவர்: உங்களுக்கு என்ன வருத்தம்?

இசைக்கலைஞர்: வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. வீட்டை விட்டு விட்டு இவர்களுடன் இந்த நடன நிகழ்ச்சியில் பங்கு கொள்ள வந்தேன். இங்கு வந்தவுடன் இப்படி மூச்சுத்திணறல் ஏற்பட்டு விட்டது. எங்கே நான் இவர்களுக்குக் கஷ்டம் கொடுத்து விடுவேனோ என்ற வருத்தமும் இருக்கிறது. இந்த 6 நிகழ்ச்சிகளும் நல்லபடியாக முடித்து விட்டு ஊர் போய் சேரவேண்டும் என்ற வருத்தமும், எதிர்பார்ப்பும் இருக்கிறது.

இப்படி புல்லாங்குழல் கலைஞர் கூறியதை கேட்ட மருத்துவர், உடனேயே அந்த ஊரை சேர்ந்தவரை பார்த்தார். எங்கள் நிகழ்ச்சி அமைப்பாளர் எங்கள் குருவை பார்த்தார். எங்கள் குருதான் தாளம் தட்டி ஜதி சொல்வார். அவர் எங்கள் எல்லோரையும் பார்க்க, நாங்கள் எல்லோரும் புரியாமல் எங்களுக்குள்ளேயே பார்த்துக் கொள்ள, ஒவ்வொருவருக்கும் மைண்ட் வாய்ஸ் பேச தொடங்கியது. உடல் நிலை என்ன என்ற கேள்விக்கு ஏன் இவர் தன் குடும்ப விவரங்களை, இங்கே சொல்கிறார் என்று எல்லோரும் யோசித்தோம்.

நாங்கள் எல்லோரும் ஆச்சரியத்தோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தோம். அதற்குள் எங்கள் நிகழ்ச்சி அமைப்பாளர் அங்குள்ள நிலைமையைப் புரிந்து கொண்டு, "உங்கள் குடும்ப விஷயங்களைக் கேட்கவில்லை. உங்களுக்கு என்ன உடம்பிற்கு என்று கேட்கிறார் டாக்டர்', என்று சொல்ல, அதுவா எனக்கு முன்பே ஆஸ்துமா இருக்கிறது. அதற்கு தான் என்னென்ன மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

எங்களுக்கு இந்த உரையாடல் மிகவும் நகைச்சுவையாக இருந்தது. காரணம், உங்களுக்கு என்ன வருத்தம் என்றால், தூய தமிழில் உங்கள் உடம்புக்கு என்ன என்று அர்த்தம் என்று புரிந்தது. இப்படி சில நேரங்களில் தமிழ் எங்களுக்குப் புரியாத புதிராக இருந்தது. நல்லவேளையாகப் பிரச்னை இல்லாமல் அந்த மருத்துவர் இவரைக் குணமாக்கினார். நாங்கள் எல்லோரும் சுத்தமான தமிழுக்கு நன்றி சொன்னோம். சிறப்பாக எல்லா நடன நிகழ்ச்சிகளையும் முடித்து விட்டு சென்னை திரும்பினோம்.

இன்னொரு நடன நிகழ்ச்சியையும் இங்கே குறிப்பிட வேண்டும். அந்த சமயம் பர்மாவிலிருந்து குடும்பம் குடும்பமாய் அகதிகளாய் பல ஆயிரகணக்கானோர் சென்னை வந்து இங்கே தஞ்சம் அடைந்தார்கள். அவர்கள் ஏதாவது தொழில் செய்து பிழைக்க வேண்டும் என்ற நிலையில் ஒரே இடத்தில் இவர்கள் பலர் கடை வைத்து பிழைக்க முடிவு செய்தார்கள். பின்னர், அவர்கள் எங்குத் தொழில் செய்தார்களோ அந்த இடம் "ஆன்ழ்ம்ஹ ஆஹக்ஷ்ஹழ்' என்ற பெயரில் புகழ் பெற்ற இடமாக ஆகிவிட்டது. சிலர் அச்சுத் தொழில் செய்யத் தொடங்கினார்கள். திடீரென்று அவர்கள் இடம் பெயர்ந்ததால் அவர்கள் எல்லோரும் செய்வதறியாது திகைத்து விட்டார்கள்.

அப்பொழுது யாரோ அவர்களிடம் என்னை பற்றியும் என் குடும்பத்தினரை பற்றியும் சொல்லி இருக்கிறார்கள் போலும். புகழ் பெற்று இருக்கும் நடிகை சச்சுவும் அவரது அக்கா மாடிலட்சுமியின் தாத்தா பி.எஸ்.ஐயர் பர்மாவில் வாழ்ந்தவர்கள். அவர்கள் எல்லோரும் பர்மாவில் இருந்து வந்தவர்கள் என்றும், இன்னும் சொல்லப்போனால் அவரது தாத்தா பி.எஸ்.ஐயர், பாட்டி கல்பகத்துடன் பர்மாவில் உள்ள ரங்கூனில் இருந்தவர்கள் என்றும் கூறி இருந்தார்கள். என் தாத்தா பி.எஸ்.ஐயர் ரங்கூனில் உள்ள நீதிமன்றத்தில் வேலை பார்த்தவர்.

ரங்கூனில் தமிழ் சங்கம் வைத்து பல தமிழர்களுக்கு உதவி செய்தவர். அகதிகளாக தமிழ் நாட்டிற்கு செல்ல விரும்பும் பலருக்கு பண உதவி செய்து முதலில் கப்பலில் ஏற்றி அனுப்பியவர். நீங்கள் ஏன் முதலில் செல்ல முயற்சிக்க வில்லை என்று யாரோ கேட்டதற்கு, முதலில் என் தமிழ் மக்கள் போகட்டும் கடைசி மனிதராக நான் போய் கொள்கிறேன் என்று சொன்னாராம்.

இப்படி மக்களுக்கு நன்மை செய்யும் குடும்பத்தில், அதுவும் குறிப்பாகத் தமிழர்களுக்குப் பணம் கொடுத்து இந்தியாவிற்கு, அதிலும் மெட்ராஸ் மாகாணத்திற்கு (அன்று மெட்ராஸ் மாகாணம் என்றுதான் பெயர்) செல்ல விரும்பும் பலருக்கு உதவி செய்த அந்த மா மனிதரின் குடும்பம் இங்கு வசிக்கிறது. அவர்களிடம் சென்று உதவி கேட்டால் கண்டிப்பாக உதவி செய்வார்கள் என்று சொல்ல, அவர்கள் சார்பாக சிலர் எங்களைப் பார்த்து உதவி கேட்க வந்தார்கள்.

"மாடி' லட்சுமி அக்கா தான் பேசினாங்க. பர்மாவில் இருந்து வந்த அவர்கள் தங்களது நிலைமையை சொல்ல, நாங்கள் கண்டிப்பாக உதவி செய்கிறோம் என்று சொல்லி, பல்வேறு வகையான யோசனைகளைக் கூறினார்கள். முதலில் ஓர் அரங்கம் வேண்டும். அதுவும் குறைந்த வாடகைக்கு கிடைக்க வேண்டும். அப்படிக் குறைந்த வாடகைக்குக் கிடைக்க வேண்டும் என்றால் அது அரசுக்கு சொந்தமாக உள்ள கலைவாணர் அரங்கம் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

நீங்கள் உங்கள் நிலைமையை அரசாங்கத்திடம் சொல்லி ஒரு மனு கொடுத்தால் கலைவாணர் அரங்கம் மிகவும் குறைந்த வாடகையில் வழங்குவார்கள். அவர்கள் சொல்லும் தேதியில் நாங்கள் வந்து நடனம் ஆடுகிறோம். அதையும் உங்களுக்கு இலவசமாக அந்த நிகழ்ச்சியை நாங்கள் நடத்தி கொடுக்கிறோம். எங்களுக்கு நீங்கள் சம்பளமாக எதுவும் கொடுக்க வேண்டாம். நாங்களே நிதி திரட்டி, அதில் வரும் பணத்தை மேடையிலேயே உங்களுக்கு நாங்கள் தருகிறோம் என்று சொன்னார்கள்.

அது மட்டும் அல்ல அத்துடன் ஒரு மலர் வெளியிடலாம். நகரில் உள்ள பல பெரிய மனிதர்களிடம் வாழ்த்துகளை வாங்கி அந்த மலரில் பிரசுரிப்போம். அது மட்டும் அல்லாமல் விளம்பரங்களையும் வாங்கி அதிலிருந்து ஒரு தொகையையும் நமக்குக் கிடைக்கச் செய்வோம். அதையும் உங்களுக்கு மேடையிலேயே தந்து விடுகிறோம் என்று சொல்லி ஒரு பெரிய தொகையை அன்று மேடையிலேயே அளித்தார்கள்.

திருவள்ளுவர் பிரஸ் என்று ஒன்று வைத்திருந்தார்கள். அது மட்டும் அல்ல; அதற்குப் பிறகு பர்மா பஜாரில் உள்ள ஒவ்வொரு கடைகளுக்கும் ஒரு தொகையையும் இந்த நிதியிலிருந்து அளித்தார்கள். நாங்கள் மட்டும் இலவசமாக செய்யவில்லை, அவர்களுக்கு எந்த விதமான செலவும் வைக்கக்கூடாது என்று, எங்கள் இசை குழுவினருக்கும் நாங்களே சம்பளம் கொடுத்தோம். அவர்கள் கலைவாணர் அரங்கத்திற்கு மட்டும் தான் வாடகை
கொடுத்தார்கள்.

மற்ற எல்லாவற்றையும் நாங்கள் தான் செலவு செய்தோம். எனக்கு என்ன சந்தோஷம் என்றால், நமது பாட்டி தாத்தா இருந்த ரங்கூனிலிருந்த வந்த நமது தமிழர்களுக்கு எங்களால் செய்ய முடிந்த இந்த உதவி எனக்கு மிகவும் மன நிறைவை அளித்தது.

சினிமா நட்சத்திரம் என்றால் எல்லோரும் பணத்தாசைப் பிடித்தவர்கள். கறாராக காசை வாங்கி கல்லாவில் போட்டுக் கொள்வார்கள் என்று என்றும் சொல்ல முடியாது.

நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அதே மாதிரிதான் சினிமா நட்சத்திரங்களும் இருப்பார்கள் என்று உணரவேண்டும். எங்கள் குழுவில் இருந்த ஒரு புகழ் பெற்ற மனிதரைப் பற்றி இங்கே நான் குறிப்பிட வேண்டும். அவர் யார் என்று அடுத்த வாரம் சொல்கிறேன்.

(தொடரும்)
சந்திப்பு: சலன்

ADVERTISEMENT
ADVERTISEMENT