தினமணி கொண்டாட்டம்

ரோஜா மலரே! - 29: குமாரி சச்சு

8th Mar 2020 07:49 PM | சலன்

ADVERTISEMENT

எப்பொழுதுமே மேடை நடனத்தில் திடீரென்று ஏதாவது பிரச்னை ஏற்படும். அது சிறிய பிரச்னையாகக் கூட இருக்கலாம். அதுதான் எனக்கும் ஒரு நடன நிகழ்ச்சியில் ஏற்பட்டது. அந்தக் கால கட்டத்தில் கொஞ்சம் குண்டாக இருப்பேன்.

என் வீட்டில் என்றுமே உணவு விஷயத்தில் சில கட்டுப்பாடுகள் உண்டு. நாங்கள் எல்லோரும் நடிகர்கள் என்பதால் சாதாரணமாகவே இதை எல்லாம் சாப்பிடலாம், இதைச் சாப்பிடக் கூடாது என்று ஒரு வகையான திட்டமிடல் இருந்தது. ஆனால் என்னைப் பொருத்தவரை என் பாட்டி நான் குழந்தை என்பதால் படப்பிடிப்புத் தளத்தில் அதிகமாகக் கட்டுப்பாடு விதிக்க மாட்டார். காரணம், என் மீது அவருக்கு என்றுமே பாசம் அதிகம். அதே சமயம் நான் நல்லா நடிச்சு பெயர் வாங்கவேண்டும் என்ற ஆசையும் கூட இருந்தது. அதனால் பாட்டியை பல சமயம் ஏமாற்றி வீட்டில் நான் ஐஸ் கிரீம், கேக் மற்றும் திண்பண்டங்கள் எது எல்லாம் சாப்பிட்டால் உடல் பெருக்குமோ அதை எல்லாம் தெரிந்தும், தெரியாமலேயும் சாப்பிட்டு விடுவேன். இன்னும் சொல்லப் போனால், பல தடவை குழந்தை என்று என் மீது பிரியப்பட்டுப் படப்பிடிப்புத் தளத்தில் மூன்று ஐஸ் கிரீம் கொடுப்பார்கள்.

நான் புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரம் என்பதால் எந்த கேள்வியும் கேட்காமல் ஒரு ஐஸ் கிரீமுக்கு, இரண்டாகக் கொடுத்து என்னை சந்தோஷப்படுத்துவார்கள். ஆனால் எனது வீட்டை பொருத்தவரை எப்பொழுதுமே எனக்கு சத்தான உணவினை தான் தருவார்கள். குழந்தை வயதில் நான் இஷ்டத்துக்குச் சாப்பிடுவேன். பெரியவளானதும் இதை எல்லாம் குறைக்க வேண்டும் என்று பாட்டி முடிவு செய்து, பல விஷயங்களைக் குறைக்க ஆரம்பித்தார்.

அப்படி ஒரு கல்யாண கச்சேரிக்காக ஒரு திருமண வீட்டார் எங்களை ஒப்பந்தம் செய்தார்கள். காரைக்காலில் ஒரு பஸ் முதலாளி வீட்டின் கல்யாணம் அது. பெரும் பணக்காரர் அவர். அவரது வீட்டின் கல்யாணம் என்றால் அந்த நகரமே விழாக்கோலம் பூண்டது மாதிரி இருக்கும் என்று வந்தவர்கள் சொன்னார்கள்.

ADVERTISEMENT

இது போன்ற பெரிய வீட்டின் கல்யாணத்தில் எல்லாமே எங்களைப் போன்ற சினிமா புகழ் பெற்ற நடனமணிகள் தான் வரவேற்பில் நடனம் ஆடுவோம். நாங்கள் இல்லை என்றால் லலிதா, பத்மினி ராகினி, ஈ.வி.சரோஜா, குசலகுமாரி போன்ற சினிமா பிரபலங்கள்தான் அந்த வரவேற்பில் நடனமாடுவோம். ஒரு வேளை எங்களுக்கு அந்த நாளில் படப்பிடிப்பு இருந்தால், நாங்கள் இந்தத் தேதியில் இல்லை, நீங்கள் இருக்கிறீர்களா என்று இதில் உள்ள ஒரு பிரபலத்தைக் கேட்டு அவர்கள் இருந்தால், அவர்களை ஒப்பந்தம் செய்யச் சொல்லி அனுப்பி விடுவோம்.

இந்த மாதிரி செய்ய எனக்கு வழி சொல்லிக் கொடுத்ததே லலிதா, பத்மினி தான். அவர்கள் எப்பொழுதுமே, “நம்மை நம்பி வருபவர்களை ஏமாற்றக் கூடாது. நமக்கு முடியாவிட்டாலும், பிரபலமானவர்களிடம் அவர்களை அனுப்பி உதவ வேண்டும்”என்று சொல்வார்கள். அதையே நானும் என் அக்காவும் பின்பற்றி அவர்களுக்கும் சரி, எங்களுக்கும் சரி, நாங்களே உதவி செய்து கொள்வோம்.

இந்த பஸ் உரிமையாளரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு மாதத்திற்கு முன்பே எங்களிடம் வந்து, மேடையைப் பற்றியும் மற்ற விஷயங்களைப் பற்றியும் கேட்டுத் தெரிந்து கொண்டு போனார்கள். குறிப்பாக மேடை நடனம்
என்பதால், எவ்வளவு உயரம் மேடை இருக்க வேண்டும் என்றும், எவ்வளவு அகலம் - எப்படி இருக்க வேண்டும் என்று எங்களிடம் கேட்க, எங்கள் வேலை ஆட்கள் சரியான அகலம், நீளம் முதலியவைகளை சொல்ல, கேட்டுக் கொண்டு சென்று விட்டார்கள்.

எப்பொழுதுமே நாங்கள் நடனம் ஆடும் நாள் அன்று தான் நடன நிகழ்ச்சியைப் பற்றியே நினைவில் கொள்வோம். காரணம் எங்களுக்கு மாதத்தில் 10 நாட்களுக்கு மேல் நடன நிகழ்ச்சி இருக்கும். அதனால் நடனம் ஆட எங்களுக்குப் பயிற்சி என்று தனியாகத் தேவையில்லை என்பதால், அந்த நாள் அன்று மட்டும் எதை, எப்படிச் செய்யப் போகிறோம் என்று எங்களுக்குள் நாங்களே தீர்மானித்து அதற்கேற்றவாறு உடை மற்றும் ஆபரணங்களை எடுத்து வைத்துக் கொள்வோம். இந்த நிகழ்ச்சிக்கும் அதே போல் தான் செய்தோம்.

மாலை வரவேற்பு நிகழ்ச்சிக்குதான் எங்கள் நடனம் என்பதால், காலையில் சென்னையில் இருந்து கிளம்பி பகல் உணவு இடைவேளைக்குப் போய் இறங்கி விட்டோம். இரவு 7 மணிக்கு தான் எங்கள் நடன நிகழ்ச்சி என்பதால் நாங்கள் எங்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். நாங்கள் வந்து விட்டோம் என்று செய்தி எல்லோருக்கும் தெரிந்தவுடன், எங்கள் மேடையை அவசர அவசரமாகச் செய்ய முற்பட்டார்கள். அதுவரைக்கும் என்ன செய்திருந்தார்களோ தெரியாது, எங்கள் வருகை, அவர்களை மேடையைச் செய்யத் துரிதப்படுத்தி விட்டது. வேகமாக வேலை நடந்து முடிந்து விட்டது. ஒலி, ஒளி ஆகிவைகளும் சரிபார்க்கப்பட்டன.

கல்யாண சத்திரத்தில் கச்சேரி என்பதால் எங்களுக்கு என்று தனியாக மேடை அமைத்துக் கொடுத்திருந்தார்கள். இதற்குக் காரணம், நாங்கள் சினிமா புகழ் என்பதால், எங்களைப் பார்க்க கூட்டம் அதிகம் வரும் என்பதாலும், சத்திரத்தின் உள்ளே இல்லாமல் வெளியே முதலாளிக்கு சொந்தமான, பல்வேறு பஸ்களை நிறுத்தும் பெரிய இடத்தில், இந்தப் புதிய மேடையை அமைத்து இருந்தார்கள். புதிய மேடை யைப் பார்க்கவே அழகாக இருந்தது.

புதிய ஜமக்காளத்துடன் காட்சி அளித்தது. சத்திரத்தின் உள்ளே இருந்த நிரந்தர மேடையில் மாப்பிளையும் பெண்ணும் அமர்ந்திருந்தார்கள். வரும் விருந்தினர்கள் அவர்களைப் பார்த்து வாழ்த்து தெரிவித்து விட்டுச் செல்லும் வகையில் ஏற்பாடு செய்திருந்தார்கள். வெளியே வரும் போது எங்கள் நடனத்தை அவர்கள் பார்க்கும் வண்ணம் இந்த அமைப்பு இருந்தது. வரும் விருந்தினர்கள் வேண்டும் என்றால் எங்கள் நடனத்தைக் கொஞ்ச நேரம் உட்கார்ந்து ரசித்துப் பார்க்கலாம். இல்லை என்றால் இரவு உணவு உண்ண அதே வழியில் சென்றால், உணவு இருக்கும் இடத்தை அடைந்து விடலாம்.

இப்படி எல்லாம் சரியாகச் செய்து இருந்தார்கள். நாங்களும் நடனம் ஆட, தயாராக இருந்தோம். எப்பொழுதுமே எங்கள் நடன நிகழ்ச்சியில் முதல் மூன்று நடனங்கள், நானும் என் அக்காவும் சேர்ந்து ஆடுவோம். அப்புறம் நான்காவது நடனம், என் அக்கா தனியாகவும், அடுத்த நடனம் நான் தனியாகவும் ஆடுவோம். இதற்குக் காரணம் என்னவென்றால், நான் உடை மாற்றும் போது, என் அக்கா ஆடுவார், பின்னர் அவர் உடை மாற்றும் போது நான் தனியாக ஆடுவேன். இப்படிச் செய்தால் தான் எங்களால் நடனத்தை இடைவிடாமல் நடத்த முடியும் என்றும், நாங்களும் உடை மற்றும் வேறு ஆபரணங்கள் அணிந்து கொண்டு வர தாமதமானாலும், பார்க்கும் மக்களைக் காக்க வைக்கக் கூடாது என்பதால் தான் இந்த ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் அன்றுநான் நடனம் ஆடும் போதுதான் இந்த நிகழ்ச்சி நடந்தது. என் அக்கா தனியாக ஆடி முடித்ததுடன் என் நடனம் ஆரம்பிக்க வேண்டும். அதற்காக நான் இருட்டில் மேடைக்குச் சென்று நடு நாயகமாக மேடையில் நின்றேன்.

நான் அப்பொழுது சற்று குண்டாக இருந்தேன் என்று முன்பே குறியிருக்கிறேன். என்னை நானே ஒல்லியாக, அல்லது எனது எடையைக் குறைக்க வேண்டும் என்றமுயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போழுது தான் இந்தக் கல்யாண கச்சேரி வாய்ப்புக் கிடைத்தது. இங்குதான் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது. விளக்குகள் எரிந்தவுடன், எனது நட்டுவாங்க மாஸ்டர், தனது வேலையை ஆரம்பிக்க, பாடகர் எனக்கான பாடலைப் பாட, நான் ஒரு காலை தூக்கி ஓங்கி தரையில் வைக்க, கால் தரையின் உள்ளே சென்று விட்டது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. மேடையில் எப்படிக் கால் உள்ளே போகும் என்று யோசிக்கக் கூட நேரம் இல்லாமல், உள்ளே போன காலை வெளியே எடுக்க முயற்சி செய்கிறேன், முடியவில்லை. இதற்குள் எனது மாஸ்டர் அடுத்த வரியை பாட எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

என்னால் காலை எடுத்து வைக்க முடியவில்லை என்று தெரியாமல், என் மாஸ்டர் எனக்குக் கண்களால் சமிக்கை செய்கிறார். நான் காலை எடுக்க முடியவில்லை என்று என் பதிலை கண்களால் அவருக்குக் காண்பிக்கிறேன். சிறு நொடியிலேயே மிகவும் கஷ்டப்பட்டுக் காலை எடுத்து அந்த நடனத்தை ஆடி முடித்தேன். பின்னர் தான் எனக்குத் தெரிந்தது, இவர்கள் பனை மரத்தை வெட்டி அதில் களிமண்ணை நிரப்பி மேடை அமைத்த விஷயம். ஈரமான களிமண் என்பதால் கால் சிக்கிக் கொண்டு விட்டது. இப்படிப் பல தமாஷ்கள் நடன நிகழ்ச்சியில் நடந்தன. திடீரென்று ஒரு புதிய பாடலை கொடுத்து, ஆட சொன்னால் ஆடுவீர்களா? கேட்டார் ஒரு விஐபி. யார் அவர் ? அடுத்த வாரம் சொல்கிறேன்.

(தொடரும்)

சந்திப்பு: சலன்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT