தினமணி கொண்டாட்டம்

பரத கண்டத்தில் ஸ்திரீகளின் ஸ்தானம்

8th Mar 2020 07:12 PM | வ.வே.சுப்ரமண்ய ஐயர்

ADVERTISEMENT

பூர்வ காலத்தில் நமது நாட்டில் பெண்களது நிலைமையானது நாம் பெருமை பாராட்டிக் கொள்ளத் தக்கதாயிருந்தது என்பது சிறிது கற்றோருக்கும் தெரிந்த விஷயமாயிருக்கிறது. நமது விரோதிகளும், நமது தற்கால ஈன நிலைமையைக்கண்டு அதை மாற்ற முனைந்து வேலை செய்வதைவிட்டு நமது நாகரிகத்தையே பழிக்கும், கருத்தில்லாத சீர்திருந்தக்காரரும், நம் ஸ்திரீகளின் நிலைமையைச் சுட்டிக்காட்டி நம்மைத் திக்கரித்துப் பேசும் போது, நாம் சீதை, தமயந்தி, சாவித்திரி, ஜிஜிபாய், சந்த்பீபி, அஹல்யா பாயி, ஒளவை, அம்மங்காதேவி, மங்கம்மாள் முதலியோரின் பெயரைச் சொல்லி இவர்கள் வாழ்ந்த நாட்டில் ஸ்திரீகள் அவமதிக்கப்பட்டார்கள் என்று எவ்வாறு சொல்லலாம் என்று கேட்கிறோம். உண்மையிலேயே ஆரியருள்ளும், திராவிடருள்ளும் முன் காலத்தில் ஸ்திரீகளுக்குச் சர்வ சுதந்தரங்களுமிருந்தன. ஸ்தீரிகள் கல்வி கற்றார்கள். அவைக்களங்களில் வந்து பண்டிதர்களோடு தருக்கித்திருக்கிறார்கள். சாரத்தியம் செய்திருக்கிறார்கள்.

வடநாட்டில் ஷத்திரியர்க்குள்ளாவது சுயம்வரமும், காந்தர்வ விவாகமும் நடைபெற்று வந்திருக்கின்றன. கலித்தொகையையும், குறுந்தொகையையும் மற்றுமுள்ள அகப்பாட்டுக்களையும் படிக்கையில் பண்டைய நாட்களில் தமிழ்ப் பெண்டிர் விவாக விஷயத்திலும் மற்ற விஷயத்திலும் எத்தனை சுதந்தரம் அனுபவித்தார்கள் என்பது நன்கு புலனாகும். மற்றெந்தப் பாஷையிலும் எழுதியுள்ள பெண் கவிகளைவிட, தமிழ்ப் பாஷையில் பாடிய பெண் கவிகளின் தொகை மிகவும் அதிகம்.

இதெல்லாம் நமது ஆஸ்தி. ஆனால் இப்பொழுது அவ்வாஸ்தி நம் பூமியில் எங்கேயோ புதையுண்டு கிடக்கிறது. நெற்றி வேர்வை நிலத்தில் விழ, பூமியெல்லமாம் தோண்டிப்பார்த்து அதைக்கண்டு பிடித்து அடைய வேண்டும். இப்பொழுது நமது ஸ்திரீகள் இருக்கும் நிலைமை திருப்திகரமான நிலையாக இல்லை. இதைக் கால சுபாவத்துக்கேற்றபடி மாற்றிக் கொண்டால்தான் தேசத்தில் ஷேமம் உண்டாகும். இதற்கு ஆண் மக்கள் பெண் மக்களாகிய இருபாலரும் ஒத்துழைத்தால்தான் காரியசித்தியாகும்.

மாற்ற வேண்டும் என்று சொல்லிவிடுவது எளிது. ஆனால் அதை எவ்வாறு மாற்றுவது என்னும் விஷயத்தில் பல அபிப்பிராயங்கள் இருந்தே தீரும். இந்தப் பல அபிப்பிராயங்களும் நடவடிக்கை உலகத்தில் உலவிக்கொண்டிருக்கிறபடியால் நமது ஜனக் கூட்டத்தில் ஒரு சலனம் ஏற்கெனவே உண்டாயிருக்கிறது. இந்தச் சலனம் எப்படிப்பட்டதாயிருக்கிறது என்றும், அது எந்தத் திசையில் சென்றால் நாட்டிற்குப் பூரண சுகம் ஏற்படும் என்றும், என் சிற்றறிவுக்குத் தோன்றுவதையும் எழுதி வெளியிடுவது சிறிது நன்மை பயக்கலாம் என நினைத்து இது எழுதலானேன்.

ADVERTISEMENT

இப்பொழுது இருக்கிறதே, அல்லது சென்ற தலைமுறையில் இருந்ததே சரியான நிலை, அதைவிட்டுப் புதிய வழிகளைப் பின்பற்றினால் பிரளயம் வந்துவிடும் என்று ஒரு கட்சியார் கூறுவர். இவர்க்கு எதிர்க்கட்சியார், நாம் (மற்ற விஷயங்களில் போலவே) இவ்விஷயத்தில் நிற்கும் நிலை மிகவும் அநாகரிகமானது, இதைக் கட்டோடும் மாற்றி நாகரிகத்தின் முன்னணியில் நிற்கும் ஐரோப்பியருடைய, முக்கியமாக ஆங்கிலேயருடைய வழியைப் பின்பற்றினால்தான் பிழைப்போம், இல்லையாகில் அழிந்துவிடுவோம் என்று கூறுவர்.

இம்மாதிரி ஒன்றற்கொன்று முற்றிலும் எதிரிடையான அபிப்பிராயங்கள் ஒன்றோடொன்று போராடும்போது உண்மையானது அவ்விரண்டிலும் அகப்படுவது வழக்கமில்லை. அவற்றிற்கு மத்தியஸ்தமான அபிப்பிராயத்தில்தான் நிற்பது வழக்கம் என்பதை மட்டும் குறித்துக் கொண்டு இவ்விரண்டு அபிப்பிராயங்களையும் சற்றுக் கவனித்துப் பார்ப்போம்.

தற்காலத்தில் நமது சகோதரிகள் நமது குடும்ப வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் வகிக்கும் ஸ்தானம் நாம் சந்தோஷப்படும்படியாக இருக்கிறதா? அல்லது நாற்பது வருஷங்களுக்கு முன் அவர்கள் வகித்த ஸ்தானம்தான் நாம் பெருமை பாராட்டதற்குரியதாய் இருந்ததா? நன்றாக யோசித்துப் பார்க்கிறவர்களுக்கு இக்கேள்விகளுக்கு ஆம் என்று பதில் சொல்லுவது சாத்தியமாயிராது.

நமது சகோதரிகள், குழந்தைகள் மீது தம்மை மறந்த அன்பு செலுத்துகிறார்கள். வீட்டிலுள்ள ஆண்மக்களுக்கு நல்லுணவு பக்குவம் செய்து போடுவதில் மிகவும் சிரத்தையுள்ளவர்களாயிருக்கிறார்கள். வயிறு எப்படிப் பசித்தாலும் ஆண்மக்களுக்கும், விருந்தாளிகளுக்கும் அன்னமிடாமல் சாப்பிடமாட்டார்கள், வீட்டைக் கூடியமட்டில் சுத்தமாக வைத்துக் கொள்ளுகிறார்கள். வீட்டிலுள்ளோர் நோயால் வருந்துகையில் அவர்களுக்கு வேண்டிய சுசுருஷைகளெல்லாம் (பணிவிடைகளை எல்லாம்) கடுப்பின்றிச் செய்கிறார்கள். தெய்வத்தினிடத்திலும் கணவனிடத்திலும் பக்தி செலுத்துகிறார்கள்.

சென்ற தலைமுறையில் ஸ்திரீகளுக்கெல்லாம் அநேக நோய்களுக்குக் கை வைத்தியமும் தெரிந்திருந்தது. கொஞ்சம் சௌக்கியமாய் வாழும் குடும்பங்களில் ஸ்திரீகளுக்குச் சங்கீதமும் சிறிது கல்வியும் போதிக்கப்படுகிறது. ஆனால் குடும்பத்துக்குப் புறம்பாக உள்ள எத்தனை விஷயங்களை ஆண்மக்கள் கவனிக்கிறார்கள்? அவற்றுள் ஒன்றாவது நம்முடைய சகோதரிகளின் வாழ்க்கையுள் புகுவதில்லை.

நாட்டிலுள்ள பஞ்சம், கல்வியின்மை, சுயராஜ்ஜியக்கிளர்ச்சி, தொலைவியாபாரம், சித்திரம், சிற்பம், சாஸ்திரீய சங்கீதம், இவற்றைப்பற்றி அவர்கள் கவனிப்பதில்லை. பெரிய சாஸ்திர விசாரணைகள் ஏதும் அவர்கள் மட்டில் எட்டுவதில்லை. சுவதேச இராஜ தந்திரமே (உள்நாட்டு அரசியலே) அவர்களுக்குச் சுஷ்சுமாக மகிழ்ச்சியாக இருக்கும்போது சர்வ தேசிய ராஜதந்திரத்தை (உலக அரசியல்) அவர்கள் எங்கே கவனிக்கப்போகிறார்கள்? இன்னும் தொழிலாளரின் இயக்கம், ஆகாய விமானம் முதலிய யந்திரங்களின் நிர்மாணம், இரஸாயன கற்பனைகள், ஜடசக்திகளின் பிரயோகங்கள் ஆகிய இவை போன்ற விஷயங்களில் ஸ்திரீகள் தலையிடுகிறதில்லை என்பது மாத்திரமில்லை, இவைகள் சம்பந்தமாக உலகத்தில் நடைபெறுகிற முயற்சிகள் கூட நமது சகோதரிகளுக்கு இன்னவை இன்னவை என்று தெரியாது.

வீட்டுக்குள்ளும் சௌஜன்னிய வாழ்க்கை குறைந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். மருமகள்மார் வரும் வரையில் குடும்பத்தில் பிளவு அதிகமாக இருப்பதில்லை. ஆனால் ஒரு மருமகள் வீட்டில் பிரவேசித்ததும் மனஸ்தாபங்கள் மலிந்து விடுகின்றன. மாமிக்கும் மருமகளுக்கும் மன ஸ்தாபம் தாய்க்கும் மகனுக்கும் மன ஸ்தாபமில்லாவிடில் அவ்விருவருக்கும் சேர்ந்து மருமகள் மீது மனஸ்தாபமாகிவிடுகிறது. இரண்டு மூன்று மருமகள்கள் வந்துவிட்டாலோ சொல்லவே வேண்டியதில்லை.

இனி ஐரோப்பியரின் வழியைப் பின்பற்றினால் தான் நாம் úக்ஷமத்தையடையலாம் என்று சொல்லுபவரின் குடும்பங்களில் ஸ்திரீகளின் நிலைமைப் பார்த்தாலோ அதுவும் நமது மனதைக் கவரவில்லை. இவர்களுக்குள் நகைப் பைத்தியம் சற்று குறைவாக இருக்கிறது என்றால் உடைப் பைத்தியம் அநாகரீகப் பெண்களை விட அதிகமாக இருக்கிறது. புஸ்தகங்கள் படிக்கிறார்கள் என்பதும் அனாவசியமான கூச்சத்தை விட்டிருக்கிறார்கள் என்பதும் இவர்களிடமிருக்கும் நற்குணங்கள். ஆனால் மற்றப் புறத்தில் பார்க்கும்போது இவர்களிடம் பூர்வாசாரங்களிடத்தில் ஓர் வெறுப்புத் தோன்றியிருக்கிறது. அடக்கம் மிகவும் குறைவாக இருக்கிறது. கற்ற கல்விக்கு மிகவும் மீறின அகம்பாவம் காணப்படுகிறது. பரோபகார சிந்தை குறைவாகவும் சுயநல சிந்தையும், போக வஸ்துக்களின் மீது ஆசையும் அதிகமாகவும் இருக்கிறது. குடும்ப காரியங்களைச் சரிவரச் செய்வதற்கு இவர்களிற் பெரும்பாலாருக்கு வணங்குவதில்லை. அவைகளைச் செய்வது இழிவு என்ற நினைவு அநேகருக்கு இருக்கிறது.

வருங்காலத்தில் நம் ஸ்திரீகள் வகிக்க வேண்டிய ஸ்தானம் இவ்விரண்டினுக்கும் வேறுபட்டதாக இருக்க வேண்டும் என்று இதுவரையில் நாம் சொல்லி வந்ததைக் கவனித்தோர் ஒப்புவார்கள் என நம்புகிறோம். மற்று அது எவ்வகைத்தாயிருந்தல் வேண்டும்?

நமது தர்மசாஸ்திரங்களில் மனைவியருக்குக் கொடுத்திருக்கும் ஒரு பெயர் ஸ்திரீகளின் ஸ்தானம் இதுவாக இருக்க வேண்டும் என்று காட்டிவிடுகிறது. அந்தப் பெயர் "ஸஹதர்ம சாரிணீ' என்பதாகும். அதாவது புருஷனோடு கூட ,புருஷனுக்கு இணையாக நின்று தர்மத்தை நடத்துகிறவள். இன்று நமது சகோதரிகளும் மனைவியரும் குமாரிகளும் மனிதப் பிறப்பிற்குரிய சகல தர்மங்களையும் நடத்த முன்வரவேண்டும். இது அவர்களுடைய கடமை. அவர்களுடைய உரிமையும் இதுவே. அரை குறையான வாழ்க்கை இனி இந்த நவயுகத்தில் உதவாது. பரிபூரணமான வாழ்க்கையையே ஆண்மக்களோடு பெண்மக்களும் நாட வேண்டும்.

ஆண்மகன் வீட்டிற்குள் அரசனாகவும், தேசத்தில் அநேக கடைமைகளையும் உரிமைகளையும் உடைய பிரஜையாகவும், சம்சார சக்ரத்தில் ஆத்மசாக்ஷôத் காரத்தை பெறமுயலவேண்டிய தர்ம சரீரமுள்ள ஜீவனாகவும் இருக்கிறது போலவே, ஸ்திரியும் வீட்டிற்குள் அரசியாகவும் தேசத்திலும் சம்சாரசக்ரத்திலும் அதே மாதிரி பிரஜையாகவும் ஜீவனாகவும் இருத்தல் வேண்டும். வீட்டிற்குள் ஸ்திரீ அரசி வீட்டுக் காரியமனைத்தையும் தாயாக நடத்த வேண்டும். குடும்பத்திற்கு வேண்டிய பொருள்கள், உடைகள்,பாத்திரங்கள் முதலியவை வாங்குவதும் அவற்றைப் பழுது பார்ப்பது, சீர்படுத்துவது முதலிய சகல விஷயங்களும் அவளுடைய அதிகாரத்துக் குட்பட்டதாயிருக்க வேண்டியது. விருந்தாளிகளை உபசரித்து பண்டிகை, உற்சவங்கள் கொண்டாடுதல், வேலையாட்களிடம் வேலை வாங்குதல், குழந்தைகளை வளர்த்தல், வீட்டை அலங்கரித்தல் இவையெல்லாம் அவளுடைய இலாக்காவாக இருத்தல் வேண்டும். மனிதன் அவளுக்கு இல்லற விஷயமாக யோசனைகள் சொல்லலாம்.

ஸ்திரீயின் காரியத்தில் யோசனைகள் சொல்ல மனிதனுக்கு உரிமை இருப்பது போலவே அவனுடைய காரியத்திலும் அவளுக்கு யோசனை சொல்லும் பாத்தியமிருக்க வேண்டியது.இயற்கை அறிவு பெண்களுக்கு அதிகமாகவே உத்தியோகத்தி லாகட்டும், கொடுக்கல் வாங்கலிலாகட்டும் வியாபாரங்களிலாகட்டும், மற்றும் குடும்ப யோகúக்ஷம சம்பந்தமான சகல விஷயங்களிலும் உண்டு. அப்போதைக்கப்போது தோன்றும் சிக்கல்கள் ஸ்திரீகளின் நுண்ணிய அறிவோடு கலந்து யோசிக்கும் புருஷதர்களுக்கு வெகு இலகுவாய் நேராகிவிடும்.

இதனோடு கணவனும் மனைவியும் அரிய பெரிய அறிவுப் பொருள்களைப் பற்றி ஒருவரோடொருவர் விவாதித்து, உரையாடும் உற்ற நண்பர்களாக இருக்க வேண்டும். ஒரு மனிதனுடைய நேரத்தின்மீது அவனுடைய மனைவிக்கும் தாய்க்கும் சகோதரிக்கும் சகாக்களுக்கும் மக்களுக்கும் தான் முதல் அவசியமாயிருக்கிறது. கல்விப் பயிற்சி பெண் மக்களுக்குக் குறைவாக இருப்பதால் இந்த பாத்தியத்தை அவர்கள் அனுபவிக்க முடியாமல் போகிறது.

ஆகையால் சுய பாஷையிலும் சமஸ்கிருதத்திலும் சாத்தியமானால் ஹிந்தி, இங்கிலீஷ் முதலிய அந்நிய பாஷையில் ஸ்திரீகளுக்கு கல்வி புகட்டி இலக்கியங்களின் சுவையை அனுபவிக்கவும் பிறரை அனுபவிக்கச் செய்யவும் சக்தி உண்டாக்கி நாம் நம்முடைய வீடுகளைக் கல்விக்கும் கேள்விக்கும் தாய் வீடாக்க வேண்டியது அவசியத்திலும் அவசியம்.

ஸ்திரீகளை சம்பாதிக்கும்படி விடுவது முடிவில் நற்பயனைத் தராது என்று தோன்றுகிறது. ராம ராஜ்யத்தில் கூடத் திரவியம் சம்பாதிக்கும் தொழிலில் அநேகமான முரட்டுத்தனங்களும், செம்மையின்மையும் காட்ட வேண்டியதாகத்தான் இருக்கும். ஐரோப்பாவில் ஸ்திரீகளில் பெரும்பாலார் தற்காப்புக்காக ஏதாவது ஒரு தொழில் செய்ய வேண்டியதாக இருப்பதால் அங்கே பெண்மைக்குரிய குணங்கள் குறைந்து வருகின்றன. அன்பும் இரக்கமும் மென்மையும் நேர்மையும் தற்கால நீதியில் குமாஸ்தாவிடத்திலும் டைபிஸ்டினிடத்திலும் தையற்காரியினிடத்திலும் கடைக்காரியிடத்திலும் தேய்வதற்குத்தான் காரணமிருக்கிறதே ஒழிய வளருவதற்குக் கராணமில்லை. மனிதனுக்கு நட்பையும் அன்பையும் ஆறுதலையும் தந்து அதற்குக் கைமாறாக முரட்டு வேலைகளிலும் கூலிக்குச் செய்வதனால் சுவை அற்ற வேலைகளிலும் இறங்காமல் காக்கப்பட வேண்டியது ஸ்திரீகளின் உரிமை என்பது என் தாழ்ந்த அபிப்பிராயம்.

தேசீய விஷயங்களில் ஸ்திரீயானவள் மனிதனைப் போலவே உரிமைகளும் கடமைகளும் உடைய பிரஜையாக இருக்க வேண்டும் என்று சொன்னோம். நாடு சுபிக்ஷமாக இருப்பதற்கு நாட்டிலுள்ள ஆண், பெண் அடங்கலும் உழைக்க வேண்டியதவசியம். நாட்டில் சரிபாதி ஜனங்கள் ஸ்திரீகள். அவர்கள் சுதேசி விரதத்தைத் சிரத்தையோடு கைப்பற்றாவிட்டால் நாட்டில் சுதேசியம் ஒருநாளும் வளராது.

சீட்டிச் சேலைகளையும், தந்தச் சீப்புகளையும், எனாமல் பாத்திரங்களையும், úஸாப்புகளையும் வாஸ்லின் கொழுப்புகளையும், மெல்லின்ஸ் ஆகாரத்தையும், ஹார்லிக்ஸ் பாலையும், "ùஸன்ட்'களையும், ரெடிங் பிஸ்கோத்துகளையும் ஸ்திரீகள் வர்ஜ்ஜனம் செய்யாத வரையில் நாம் சுவதேசக் கைத்தொழில்களை விருத்தி செய்து தேசத்தின் வறுமையைக் குறைப்போம் என்கிறது வீண் ஆசை.

தேசாபிமான, தர்மாபிமான மில்லாத குடும்பங்களில் பெண் கொடுப்பதுமில்லை, வாங்குவதுமில்லை என்று நமது சகோதரிகள் ஒரு சிறிய விரதம் எடுத்துக் கொண்டால் அடுத்த நாளே நம் நாட்டில் ஒளி பிறந்து விடும்! ஸ்திரீகள் மனது வைத்தால் வரதக்ஷிணை வாங்குவதால் வரும் கேடுகளை நாளைக்கு ஒழித்துவிடலாம். சிசு விவாகமும், ஆலைகளில் சிசுக்களின் கூலி வேலையும், இன்றும் நடைபெற்று வருகிறதானால், கஷ்டத்தினால் தொழில் செய்ய வேண்டி வரும் ஸ்திரீகளுக்குப் போதிய ஓய்வு நேரம் கிடைக்க வில்லையானால், இதற்கெல்லாம் முக்கிய காரணம் செளக்கிய வாழ்க்கை வாழும் ஸ்திரீகள் பொது விஷயங்களைக் கவனித்து வராததே. தேசத்தில் பசியும் பிணியும் துர் வழக்கங்களும் கோணலான வாழ்க்கையும் அஸ்வாதந் தரியமும் (சுதந்திரமில்லாமையும்) இருப்பது ஆண்மக்களுக்குப் போலவே பெண்மக்களுக்கும் அளவற்ற துன்பங்கள் தருவதால் இவற்றைப் போக்கி இவற்றின் எதிரிடைகளைப் பரவச் செய்ய வேண்டியது ஸ்திரீகளுடைய காரியமும் ஆகிறது.

இனி, ஆத்மா சாக்ஷாத்காரம் (ஆன்ம விடுதலை) பெறச்செய்ய வேண்டிய முயற்சிகளைச் செய்வதும் ஸ்திரீகளுடைய பாத்தியங்களுள் ஒன்று. விரதங்களை அனுஷ்டித்தல், விருந்தாளிகள் குருக்கள் இவர்களை உபசரித்தல், கோயில் குளங்களுக்குப் போதல் இவற்றோடு முடிந்து விடுகிறது ஸ்திரீகளின் கர்ம வாழ்க்கை. ஆனால் வேதாந்த விசாரணை செய்தலும், பக்திஞான கர்மஹட யோகங்கள் செய்து சாக்ஷாத் காரத்தை நாடுவதும், பெரியோரிடம் உபதேசம் பெறுதலும், தனக்குக் கீழ்ப்படிதலிலுள்ளோருக்கு உபதேசம் செய்தலும் ஆகிய இத்தியாதி காரியங்கள் செய்வதற்கு ஸ்திரீகளுக்கு வசதி கொடுத்தால் கூட அதுவும் போதாது. அறிவுள்ள ஆண்மக்களுக்குப் போலவே அறிவுள்ள பெண்மக்களுக்கும் இது சனாதனமான கடமை என்ற எண்ணத்தை நாட்டில் பரப்பி விட வேண்டும்.

இதிலெல்லாம் பழைய ஸ்மிருதிகள் இடம் கொடுக்கின்றனவா கொடுக்கவில்லையா என்று விவகரிப்பதே பிசகு. ஸ்மிருதிகள் இத்துணை இருப்பதே காலதேசங்களுக் கேற்பப் பழக்க வழக்கங்கள் மாறவேண்டியது அவசியம் என்பதை நிதரிசனமாகக் காட்டுகின்றது.

இது நவயுகம், புதிய எண்ணங்களும் புதிய சக்திகளும் தோன்றியிருக்கின்றன. நாம் மனுவின் காலத்திலும் ஆபஸ்தம்பன் காலத்திலும் வசிக்கவில்லை. நமது வாழ்க்கை அவர்களுடைய காலத்து நடவடிக்கையோடு ஒத்திருந்தால் மாத்திரம் போதாது. அது அன்று பிரதானமான காரியம். மற்று, தற்காலத்தில், ஐரோப்பாவின் பேராசையும் இரக்கமின்மையும், தந்நம்பிக்கையும், தாருட்டியமும், அறிவு விசாலமும் ஸர்வ ஜன சமத்துவ மதமும் உலகத்தில் சிருஷ்டித்து விட்டிருக்கிற புதிய சந்தர்ப்பங்களுக்குப் பொருந்தியதாக இருத்தல் வேண்டும்.

ஆகவே இந்தப் பாரமார்த்திக வாழ்க்கை ஸ்திரீகளுக்கு உரிமையும் கடமையும் ஆகிறது என்று நாம் சொல்லும் கட்சியை ஆúக்ஷபிப்பவர் (மறுப்பவர்) ஸ்மிருதிகளை மாத்திரம் காட்டி ஆúக்ஷபிக்க மாட்டார்கள் என நம்புகிறோம். நியாயவாதம் மாத்திரம் புரிந்தால் நம்முடைய கட்சியை எல்லோரும் ஒப்புக்கொள்ளுவார்கள். அவ்விதம் அவர்கள் ஒப்புக்கொண்டு இந்தச் சுதந்தரங்கள் நடவடிக்கையில் ஸ்திரீகளுக்குக் கிடைக்கும்படி செய்தாலும் அல்லது ஸ்திரீகளே அவற்றை எடுத்துக் கொண்டாலும், வைதவ்வியத்தில் வீழ்ந்து மாளாத்துயரத்தை அனுபவித்துக் கொண்டும், இடிசோறு உண்டு கொண்டும் வருகிற ஸ்திரீகள் பரோபகார வேலைகள் செய்து ஆன்மலாபம் சம்பாதித்துக் கொள்ளுவதோடு தேச úக்ஷமத்தையும் பெருக்குவார்கள்.

சம்சார வாழ்க்கையில் அருவருப்புள்ள சிறுபான்மையான பெண்டிரும், பரோபகார ஆகருஷணம் அதிகமாயுள்ள பெண்டிரும் இதில் சேர்ந்து உழைப்பார்கள். அப்பொழுது நாம் பெண்மக்களைக் கிறிஸ்தவக் கன்னியாஸ்திரீகள் வைத்திருக்கும் பள்ளிக்கூடங்களுக்குத் தான் அனுப்ப வேண்டுமென்ற கட்டாயம் இராது.

நம்முடைய நாகரிகத்தில் அன்பு வைத்த நம் நாகரிகத்தை வளர்ப்பதையே நோக்கமாகக் கொண்ட இந்தியக் கன்னியாஸ்திரீகளின் பள்ளிக்கூடங்களில் நமது குமாரத்திகள் படிப்பார்கள். நோயுற்றபோது நம் ஸ்திரீகள் இந்திய ஸ்திரீகள் வைத்து நடத்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவார்கள். கிரகங்களில் வந்து வயதான ஸ்திரீகளுக்குக் கல்வி பயிற்றவும் ஆறுதல் சொல்லவும் புத்திமதி சொல்லவும் நம் தேச தர்மங்களில் பற்று வைத்த பெண்மணிகள் அகப்படுவார்கள்.

பெளத்த காலத்தில் இம்மாதிரி பெண் சந்நியாசிகள் இருந்தார்கள் என்று ஒரு முறை "தேசபக்த'னில் எழுதி யிருக்கிறோம். அந்த உதாரணத்தைக் கத்தோலிக்க கிறிஸ்தவர் கைக்கொண்டிருக்கிறார்கள். நாம் தான் மறந்துவிட்டோம். ஆனால், புதிய ஹிந்துஸ்தானத்தில் ஸ்திரீகள் அவர்களுடைய மூதாட்டிகளைப்போல விரிவான வாழ்க்கை வாழ்ந்து தங்களுக்கும் தேசத்துக்கும் மனித ஜாதி அனைத்துக்கும் பயன்தரக்கூடிய பெரிய காரியங்கள் செய்ய முன்வருவார்கள் என நம்புகிறோம்.

மனித சரீரம் எடுத்திருப்பதைப் பயனுள்ளதாகச் செய்யும் பொருட்டு நமது சகோதரிகள் மேலே நாம் சூசிப்பித்திருப்பதை ஆழ்ந்து கருதி, தங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிற உந்நதமான ஸ்தானத்தை அவரவர்களுடைய சக்திக்கேற்றவாறு வகித்துப் பரிபூரண வாழ்க்கையில் இறங்குவார்களாக!

தகவல் : சீனி.விசுவநாதன்


சித்தார்த்தி வருஷம் தை மாதம் 30-ஆம் தேதி 12.02.1920 - இல் வெளியான திரு.வி.க நடத்திய தேசபக்தன் இதழில் வ.வே.சுப்பிரமணிய ஐயர் எழுதிய இந்தக் கட்டுரையின் வயது நூறு. ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய பெண்களின் சுதந்திரம் குறித்த சிந்தனையை மகளிர்தினமான மார்ச் 8-ஆம் தேதியான இன்று வெளியிடுகிறோம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT