தினமணி கொண்டாட்டம்

மறக்க முடியாத மனித நேயப் பணி

21st Jun 2020 04:21 PM | -வனராஜன்

ADVERTISEMENT

பொது முடக்கம் தொடங்கிய நாள் முதல் இப்போது வரையிலும் திருப்பூரில் வசிக்கும் பொதுமக்களுக்கு, சமூக இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் போன்ற விஷயங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, கரோனா நோய்த்தொற்றைத் தடுக்கும் பணியிலிருந்த பல்வேறு துறையைச் சார்ந்தவர்களுக்கு உதவி செய்து பாராட்டைப் பெற்றுள்ளது "டிரீம் 20' என்ற பசுமை அமைப்பு.  இது பற்றி அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நந்தகுமாரிடம் பேசினோம்: 

டிரீம் 20 பசுமை அமைப்பு 2015-ஆம்  ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் 20 பேர் உறுப்பினர்களாகவும், 130 பேர் தன்னார்வலர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள். 

மார்ச் 23-ஆம் தேதி பொது முடக்கம் தொடங்கிய நாள் முதல் இன்று வரையிலும் மாவட்ட நிர்வாகத்துடன், மாநகராட்சியுடனும் இணைந்து இரவு பகல் பாராமல் ரயில் நிலையம், பேருந்து நிலையம், காய்கறி மார்க்கெட் மற்றும் பொது சாலைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா? மக்கள் முகக்கவசம் அணிந்து வருகிறார்களா என்பதை கண்காணித்து வருகிறோம். மேலும் முறையாக கை கழுவுதல் போன்ற விஷயங்களை மாவட்டம் முழுவதும் ஓவியமாக வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

27.5 டன் பழம் மற்றும் காய்கறிகள், 1500 தேங்காய்கள் நேரடியாக விவசாயிகளிடமிருந்தும் பெற்று நாங்களே குறைந்த விலையில் பொதுமக்களுக்கு அளித்தோம். 

ADVERTISEMENT

முகநூல் மூலமாக பப்பாளி வியாபாரி ஒருவர் ஒன்றரை டன் பப்பாளி வீணாகும் நிலையில் உள்ளது. அதை விற்பதற்கு அனுமதி வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அவரிடம் மட்டுமல்ல சுற்றியுள்ள தோட்டத்தைச் சேர்ந்தவர்களிடம் நான்கரை டன் பப்பாளி பழங்களைப் பெற்று விற்பனை செய்தோம். கோரிக்கை வைத்த நபருக்கு விற்பனை செய்ய அனுமதி பெற்று கொடுத்தோம். 

தொடர்ந்து நாங்கள் களப்பணியில் ஈடுபடுவதால் 10 நாள்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டோம். உதவி செய்வது ஒரு புறம் எங்களால் யாருக்கும் எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்று கவனமாக பார்த்துக் கொண்டோம். 

வெளி மாநில தொழிலாளர்கள்: சண்டிகார், பீகார், ஒடிசா போன்ற மாநிலங்களிலிருந்து எங்கள் ஊரைச் சேர்ந்த 40 ஆயிரம் பேரை பத்திரமாக அனுப்புமாறு திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு நபர்களைப் பட்டியலிட்டு அந்தந்த மாவட்ட நிர்வாகனத்தினர் கோரிக்கை விடுத்தனர்.  

அந்தப் பட்டியலில் உள்ள  10,500  நபர்களையும் சரிபார்த்து அவர்களை ரயில் நிலையம் அழைத்து வந்து உணவுப் பொருட்களை வழங்கி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தோம். இதுவரை 28 ரயில்களிலும், 100 பேருந்துகளிலும் வட மாநிலத் தொழிலாளர்கள் பயணமாகியுள்ளனர். இன்னும் 50 ஆயிரம் பேர் திருப்பூரில் இருக்கிறார்கள். 

யாரும் பசியுடன் இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில்  தமிழ்நாட்டிலுள்ள பிற மாவட்டங்களைச் சேர்ந்த 760 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை முடிந்த அளவு வழங்கினோம். 

உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த 30 வயதான இளம் பெண் ஒருவர் தனியாக அந்தப் பகுதியில் மாட்டிக் கொண்டார். அவருடைய கணவர் பெங்களூருவில் பணியாற்றுகிறார். காதல் திருமணம் செய்ததால் அந்தப் பெண்ணை அம்மா, அப்பா கூட ஏற்றுக்கொள்ளவில்லை.

யாருடைய உதவியும் இல்லாமல் அவரால் தனிமையில் இருக்க முடியவில்லை. கணக்கெடுப்புப் பணியில் இருந்த எங்களிடம் உதவி கேட்டு வந்தார். ஹோம்களில் இளம் பெண் என்பதால் அவரைச் சேர்க்க மறுத்துவிட்டார்கள். 

எங்கு செல்வது என்று தெரியாமல் அழுது கொண்டிருந்த அந்தப் பெண் மாவட்ட நிர்வாகத்திடம் சிறப்பு அனுமதி பெற்று சொந்த ஊரான தருமபுரிக்குக் கொண்டு சென்று அவருடைய உறவினர் வீட்டில் விட்டு வந்தோம். இந்த பொது முடக்கத்தில் இது போன்ற சொல்வதற்கு ஏராளமாக நிகழ்வுகள் உள்ளன. 

மொத்தத்தில் மறக்க முடியாத மனித நேயப்பணி இது. இன்று வரை தொடர்கிறது என்கிறார் நந்தகுமார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT