தினமணி கொண்டாட்டம்

ரோஜா மலரே! - 43: குமாரி சச்சு

14th Jun 2020 04:46 PM | சலன்

ADVERTISEMENT

 

"டணால்' தங்கவேலுவைப் பற்றி என்னிடம் கேட்டால் தொடர்ந்து நான் பல சம்பவங்களைக் கூறுவேன். இதற்கு முடிவே இல்லாமல் அது தொடரும். ஒரு நாள் என்னை தொலைபேசியில் தங்கவேலு அண்ணன் அழைத்தார். "என்ன என்று கேட்டேன்'. ""என்னுடைய முதல் மகள் வளர்மதிக்கு மஞ்சள் நீராட்டு விழா வெகு சிறப்பாகக் கொண்டாட இருக்கிறேன். நீங்கள் இருவரும் சகோதரிகளா வந்து இந்த விழாவில் நடனம் ஆடவேண்டும் என்று விரும்புகிறேன்'' என்றார். நான் உடனேயே ""அண்ணே நீங்கள் தேதியையும், நேரத்தையும் சொல்லுங்கள். கண்டிப்பாக வந்து நடனம் ஆடுகிறோம்'' என்று சொன்னோம். அதற்கு அவர் "தேதியையும், நேரத்தையும் சொல்லிவிட்டு, எங்கள் வீட்டில் தான் இந்த நிகழ்ச்சி நடைபெறப் போகிறது'என்றும் கூறினார்.

அவரது வீடு, சென்னை, தியாகராய நகர், ராஜாபாதர் தெருவில் அன்று இருந்தது. நாங்கள் மிகவும் சந்தோஷப்பட்டு, அந்த நாளை நினைவில் வைத்து காத்திருந்தோம். அந்த நாளும் வந்தது. நாங்கள் நடனம் ஆடச் சென்ற போது, தங்கவேலு அண்ணன் வீடு விழா கோலம் பூண்டிருந்தது. அவர் வீட்டிற்குள் ஒரு காலியான நிலம் இருந்தது. அந்த இடத்தில் ஒரு பெரிய பந்தல் போட்டு, அதில் ஒரு மேடையும் அமைத்திருந்தார். அந்த மேடையில் நாங்கள் நடனம் ஆடினோம். அன்று சினிமாவில் இருந்த பிரபலங்கள் சென்னையின் புகழ் பெற்ற மனிதர்கள் என ஒருவர் பின் ஒருவராக வந்து தங்கவேலு மகள் வளர்மதியை வாழ்த்தி சென்றனர். இந்த நிகழ்ச்சிக்கு நாங்கள் நடனமாடியது எங்களுக்கு மன நிறைவையும், மகிழ்ச்சியையும் தந்தது.

அங்கு விழாவிற்கு வந்திருந்த இரட்டை இயக்குநர்களான கிருஷ்ணன் பஞ்சு . எங்கள் நடனம் என்பதால் உட்கார்ந்து நடனத்தைப் பார்த்து விட்டு மனதாரப் பாராட்டினார்கள். இதில் பஞ்சு சார் என்னிடம், ""உன்னை குழந்தை நட்சத்திரமாக தான் நாங்கள் பார்த்தோம். இன்று தான் திரும்பவும் நான் உன்னைப் பார்க்கிறேன். நீ நன்றாக வளர்ந்து விட்டாய். நாங்கள் அடுத்ததாக ஏ.வி.எம் நிறுவனத்திற்காக ஒரு படம் இயக்கப் போகிறோம். அந்தப் படத்தின் பெயர் "அன்னை'. அதில் ஒரு முக்கியமான இளம் கதாநாயகி கதாபாத்திரம் இருக்கிறது. நாளை கார் அனுப்புகிறோம், பாட்டியுடன் வா. அதில் நீ நடிக்கச் சரியாக இருப்பாய்'', என்று சொல்லி விட்டுச் சென்றார்கள்.

ADVERTISEMENT

ஏ.வி.எம் பெரிய பட நிறுவனம். அதில் நடிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஒரு முறை அறிஞர் அண்ணா வட நாட்டிற்கு சென்றிருந்தார். மாலை வரை அவர் வட நாட்டிற்கு வந்த வேலையை முடித்து விட்டு, தன் கூட வந்த நண்பர்கள் எல்லோருடன் தங்கும் அறைக்கு வந்து, பேசிக் கொண்டிருந்தார். ஒரு நண்பர் இவரிடம் "ஏதாவது சினிமாவிற்குப் போகலாமா?' என்று கேட்க, அண்ணா சந்தோஷமாக போகலாம் என்று கூற, எல்லோரும் அருகில் இருந்த கொட்டகைக்குச் சென்றார்கள். திரைப்படம் ஆரம்பிக்கும் முன்பாக அனுமதி சீட்டு வாங்கிக் கொண்டு எல்லோரும் உள்ளே போய் உட்கார்ந்தார்கள். சென்சார் சான்றிதழ் காண்பிக்கப்பட்டவுடன், படம் தொடங்கியது. முதலில் படத்தைத் தயாரித்த தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் வந்தவுடன், பார்த்துக் கொண்டிருந்த எல்லோரும் மிகப் பெரிய கரகோஷம் செய்தார்களாம். இதைப் பார்த்து விட்டு அறிஞர் அண்ணா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

அறிஞர் அண்ணா அவர்கள் எதற்காக மகிழ்ச்சி அடைந்தார் என்று நாம் யோசித்தால், நாம் எல்லோரும் மிகவும் அளவில்லா ஆனந்தம் அடைவோம். அதுவும் குறிப்பாக எனக்குப் பேரானந்தம் ஏற்பட்டது. அண்ணா ஏன் மகிழ்ச்சி அடைந்தார்கள் தெரியுமா? அந்தப் படத்தைத் தயாரித்த நிறுவனம் ஏ.வி.எம். ஒரு நிறுவனத்தின் பெயர் திரையில் வந்த போது இவ்வளவு கரகோஷம் கிடைத்தது என்றால், யாருக்குதான் சந்தோஷம் இருக்காது. அது நடந்தது தமிழ் நாட்டில் இல்லை.

அதுவும் வட நாட்டில், இந்த நிறுவனத்திற்கு இவ்வளவு பெயர் வந்தது எப்படி தெரியுமா? அவர்கள் தயாரித்த தரமான படங்கள் மூலம் என்று அண்ணா பலரிடமும் அன்று சொல்லி மகிழ்ந்தார். அந்த நிறுவனத்தில் நான் நடிக்க போகிறேன். என்று தெரிந்த போது எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. இந்தப் படத்தில் நடிக்க எனக்கு சந்தர்ப்பம் கொடுத்த இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சுவுக்கு அன்றே நான் மானசீகமாக நன்றி சொன்னேன். நாங்கள் தங்கவேலு அண்ணன் வீட்டில் நடனம் ஆடியதால் தான் இந்த இனிமையான வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. எப்பொழுதுமே தங்வேலு அண்ணன் என்னை மனதார வாழ்த்துவார். ""நீ திறமைசாலி. உனக்கு சரியான சந்தர்ப்பம் கிடைத்தால் மிகப்பெரிய உயரத்தை அடைவாய், என் ஆசீர்வாதம் எப்பொழுதும் உனக்கு உண்டு'', என்று கூறுவார். தங்கவேலு அண்ணன் நிகழ்ச்சியில் நான் பங்கு கொண்டதால் தான் என்னை பஞ்சு அண்ணன் பார்த்தார். அதனால்தான் நான் ஏ.வி.எம் என்ற பெரிய தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க, எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. இவர்கள் இருவரையும் என்னால் இன்று மட்டும் அல்ல என்றுமே மறக்க முடியாது.

இவ்வளவு தூரம் நான் சொல்வதற்கான காரணம், குழந்தை நட்சத்திரமாக இருந்த நான் வளர்ந்து பெரியவளான பின்னும், நாங்கள் யாரிடமும் போய் வாய்ப்பு கேட்டதில்லை. எனக்கே அந்தக் காலத்தில் ஓரளவிற்குத் திரையுலகில் எல்லோரையும் தெரியும். அப்படி இருந்தும் நானோ, என் சார்பாக வேறு யாருமோ,இயக்குநர்களையோ அல்லது தயாரிப்பாளர்களையோ சந்தித்துப் படத்தில் நடிக்க வேண்டும் என்று என்றுமே வாய்ப்புக் கேட்டதில்லை. அதனால்தான் இவர்கள் இருவரையும் நான் மிகுந்த நன்றியுடன் இன்றும் நினைத்துப் பார்க்கிறேன். எனக்கு அன்று 15 வயது தான் நிறைவு அடைந்து இருந்தது. உடல் வளர்ச்சி அடைந்து இருந்தாலும் நான் இன்னும் சின்னப் பெண்தான்.

அறிஞர் அண்ணாவைப் பற்றிப் பலரும் பல விஷயங்களையும் நிறையச் சொல்லி உள்ளார்கள். அவர் எவ்வளவு சிறந்த மனிதர் என்பதற்கு இங்கே ஒன்றைச் சொன்னால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏ.வி.எம் நிறுவனத்தின் புகழைப் பார்த்து மகிழ்ந்த அண்ணா, என்னையும் பல சந்தர்பங்களில் பாராட்டியுள்ளார். அதில் முக்கியமான ஒன்றை இங்கே நான் சொல்ல விரும்புகிறேன். காரணம் அறிஞர் அண்ணாவின் பாராட்டு எனக்கு மிகவும் உயர்ந்தது.

நடனத்தில் பல்வேறு வகைகள் உண்டு. அதில் சாஸ்திரிய நடனம், தமிழ்ப் பாடல்களுக்கு மட்டும் ஆடும் நடனம் உள்ளது. இதில் நாட்டிய நாடகங்கள் தனி வகை. பெரும்பாலும் இந்த, நாட்டிய நாடகங்கள் நமது இதிகாசப் புராணங்களில் உள்ள கதைகளை எடுத்துக் கொண்டு அமைந்தவை. ஏன், இதிகாசப் புராணங்கள் தான் நாட்டிய நாடகங்களாக இருக்க வேண்டுமா என்ன, என்று அன்று எங்களுக்குத் தோன்றியது. அதை மாற்றி அமைக்க முயற்சி எடுத்தோம்.

சமூகக் கதைகளையும் இந்த நாட்டிய நாடகத்தில் செய்யலாம் என்று அன்று முடிவு செய்தோம். அந்த முடிவை செயலில் காட்ட நாங்கள் ஒரு நாட்டிய நாடகம் செய்ய வேண்டும், என்ற போது, எதைக் கருவாக வைத்து அந்த நாட்டிய நாடகத்தை எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது, எங்களுக்கு ஒரு சிறப்பான யோசனைத் தோன்றியது. அதைப் பேச்சு வாக்கில் பலரிடம் நாங்கள் சொன்னோம். ஆனால் இது தேவையா என்று பலர் எங்களிடம் கேட்டார்கள். ஆனால் நானும் அக்காவும் இதை எல்லாம் பொருட்படுத்தாமல் இந்த நாட்டிய நாடகத்தை நடத்த முடிவு செய்தோம். இப்படித் தேவையா என்று பலர் கேட்டதற்குக் காரணம், நாங்கள் போடுவதாக இருந்த நாட்டிய நாடகம் முழுக்க முழுக்க அரசியல் பற்றிய நாட்டிய நாடகம். அதுவும் அந்தக் கால அரசியல் பற்றியது.

இந்த அரசியல் நாட்டிய நாடகத்தை நடத்த எங்களுக்கு வேறு காரணங்களே இல்லை. என் குடும்பத்தாருக்கு அறிஞர் அண்ணா மேல் இருந்த மரியாதையையும், பாசமும் தான் காரணம். இந்த நாட்டிய நாடகம் நடத்த எங்கும் நாங்கள் போகவில்லை. எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்த விஷயங்களை வைத்தே, இந்த நாட்டிய நாடகத்தை நாங்கள் திறமையாகக் கையாண்டு இருந்தோம்.

நாடகம் என்றால் வசனங்கள் இருக்கும் திரைக்கதை அமைக்க வேண்டி வரும். ஆனால் நாட்டிய நாடகத்தில் எல்லாமே பாடல்களாக இருக்கும் என்ற நிலையில் சிறந்த ஒரு பாடலாசிரியரை இந்த நாட்டிய நாடகத்திற்கான பாடல்களை எழுதச் சொல்லலாம் என்று யோசிக்கும் போது, எங்களுக்குப் பிளிச்சென்று ஒருவர் தான் எங்கள் நினைவிற்கு வந்தார். அவர்தான், புலவர் புலமைப்பித்தன். அவர் தமிழைக் கற்றுத் தேர்ந்தவர். பல பாடல்களை எழுதிப் புகழ் பெற்றவர். அதற்கு உதாரணம் வேண்டும் என்றால் அவர் எழுதிய ஒரு பாடலே போதும். "குடியிருந்த கோயில்' படத்தில் அவர் எழுதிய "நான் யார் நான் யார் நீ யார்', என்ற பாடல் அவரது திறமையைப் பறைசாற்றியது. "யார்' என்ற ஒரு வார்தையை வைத்து அந்தப் பாடல் முழுவதும் விளையாடி இருப்பார் புலவர் புலமைபித்தன். அது சரி, நாட்டிய நாடகத்தின் பெயர் என்ன என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. அடுத்த வாரம் சொல்கிறேன்.

(தொடரும்)

Tags : தங்கவேலு - குமாரி சச்சு ஏ.வி.எம் பெரிய பட நிறுவனம். அறிஞர் அண்ணா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT