தினமணி கொண்டாட்டம்

மக்கள் போற்றும் மகாராணி

14th Jun 2020 04:03 PM | -வனராஜன்

ADVERTISEMENT

அரச குடும்பத்தை சேர்ந்த அந்த இளம் பெண் தனது 21-ஆவது வயதிலேயே தன்னுடைய வாழ்க்கையை இங்கிலாந்து மக்களுக்காக அர்ப்பணிக்க விரும்புகிறேன் என்று வானொலியில் மக்களுக்கு உரையாற்றினார். அப்போதே அனைத்து மக்களின் மனங்களிலும் இடம் பிடித்தவர் அந்த இளம் பெண். அவர் தான் பின்னாளில் இங்கிலாந்து ராணியாக வலம் வருவார் என்பது யாருக்கும் தெரியாது.

மக்கள் மனதில் இடம் பிடித்து பின்பு ராணியாக 1952-ஆம் ஆண்டு முடிசூட்டிக் கொண்ட அந்த இளம் பெண் தான் ராணி இரண்டாம் எலிசபெத். ஒரு நாட்டை 68 ஆண்டு காலம் ஒரு பெண்ணால் ஆள முடியும் என்பதை நிரூபித்துகாட்டியவர் இவர்.

தனக்கென வண்ண வண்ண உடைகள், விலை உயர்ந்த கற்கள் பதித்த தொப்பிகள், ராணிக்கான கிரீடம் என இன்று வரை வசீகரம் குறையாதவராக வலம் வருபவர். ஐந்தாம் ஜார்ஜின் மகன் இளவரசர் ஆல்பர்ட் - எலிசபெத் பெளவ்ஸ் நியோன் தம்பதிக்கு, 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி பிறந்தார் எலிசபெத். இவரின் இயற்பெயர், எலிசபெத் அலெக்ஸாண்ட்ரியா மேரி. குழந்தைப் பருவத்தில் இவரின் செல்லப் பெயர் "லில்லிபெட்'.

எலிசபெத்தும் அவருடைய தங்கை மார்க்கரெட்டும் அரண்மனையிலேயே கல்வி கற்றனர். தங்கை மீது அதிக பாசம் கொண்டவர். வளர்ப்புப் பிராணிகள் மீதும் அதிக ப்ரியம் உண்டு. இவர் தனது 10-ஆவது வயதிலேயே குதிரையேற்றம் கற்றுக்கொண்டார். நாட்டின் குதிரைப் படையிலும் அங்கம் வகித்தவர். குதிரை பந்தயத்தின் தீவிர ரசிகை எலிசபெத்.இளவரசர் பிலிப் மவுன்ட்பேட்டனை, 1947-ஆம் ஆண்டு நவம்பர் 20-ம் தேதி திருமணம் செய்துகொண்டார். ராணிக்கு, இளவரசர் பிலிப்பை 13 வயதிலிருந்தே தெரியும். இருவருக்குமிடையேயான இனம் புரியாத நட்பு, திருமணத்தில் முடிந்தது. எனினும் கணவரின் பெயரை, தன் பெயருடன் ராணி எலிசபெத் இணைத்துக்கொள்ளவில்லை. பிலிப்-எலிசபெத் தம்பதிகளுக்கு சார்லஸ், ஆன், ஆண்ட்ரூ, மற்றும் எட்வர்டு என்ற நான்கு வாரிசுகள் உண்டு.

ADVERTISEMENT

அரச குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு என்ற பாரம்பரியமான குணங்கள் உண்டு. அந்த வகையில் ராணி இரண்டாம் எலிசபெத் இதுவரை யாரிடமும் அதிகம் பேசியதும் இல்லை. அதிர்ந்து பேசியதும் இல்லை.

ராணி இரண்டாம் எலிசபெத்தை எந்த சட்ட திட்டங்களும் கட்டுபடுத்தாது. ராணி மீது எந்த வழக்கும் பதிய முடியாது. உலகில் எந்த நாடுகளுக்கு வேண்டுமானாலும் அவர் சென்று வரலாம். அதற்கு பாஸ்போர்ட் தேவையில்லை. இங்கிலாந்தில் அவர் கார் ஒட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் தேவையில்லை. அவர் போக்குவரத்து விதிகளை மீறினாலும் தண்டிக்க முடியாது. ஆனாலும் இதுவரை எந்த சர்ச்சையிலும் அவர்சிக்கியதில்லை.

பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை இன்று வரை உயிர்ப்போடு வைத்திருப்பது மட்டுமல்ல சமூக மாற்றத்திற்கான முன்னோடியாகவும் இருப்பவர் இவர். மன்னர் ஆட்சி முறையில் மாற்றம் கொண்டு வந்தவர். குறிப்பாக அரச குடும்பத்திற்கும், அரண்மனைக்கும் தேவையான செலவினங்களை இங்கிலாந்து மக்களின் வரி பணத்திலிருந்து வழங்கும் முறையை 2012- ஆம் ஆண்டு மாற்றினார்.

கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளின் பிரதமர்கள் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அந்த நாட்டிற்கான நிரந்தர அதிபர் ராணி எலிசபெத் தான். எந்த நாட்டின் மீது போர் தொடுக்கும் அதிகாரம் இருந்தாலும் இதுவரை போர் தொடுக்க விரும்பியதில்லை.

தனது 68 ஆண்டு கால ஆட்சியில் வின்ஸ்டன் சர்ச்சில் முதல் இன்றைய போரிஸ் ஜான்சன் வரை 15 பிரிட்டன் பிரதமர்களுடன் பணியாற்றியவர்.

பிரிட்டனில் இவர் ஆட்சி பொறுப்புக்கு வந்தபின் இதுவரை 13 அமெரிக்க அதிபர்கள் மாறியிருக்கிறார்கள். அவர்களில் அநேகம் பேரை தனது அரண்மனைக்கு வரவழைத்து விருந்து அளித்தார் ராணி எலிசபெத்.

1961 மற்றும் 1983 ஆகிய காலகட்டங்களில் இந்தியாவுக்கு வருகை தந்திருக்கிறார் ராணி எலிசபெத். 1997-ஆம் ஆண்டு இந்தியா வருகையின் போது தான் கமலின் "மருதநாயகம்' படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். "இந்த ஆன்ட்டி ரொம்ப அழகா இருக்காங்க' என தனது மூத்த மகள் ஸ்ருதிஹாசன் கூறியதாக நடிகர் கமல் சொல்வதுண்டு. ராணியிடம் மறக்க முடியாத நினைவுகள் பற்றி கேட்டால், "1992-ஆம் ஆண்டு கசப்பான பல சம்பவங்கள் நடைபெற்றதை மறக்க முடியவில்லை' என கூறுகிறார். இங்கிலாந்து அரச குடும்பத்தில் புயல் வீசிய ஆண்டு அது. டயானாவிற்கும் மூத்த மகன் சார்லஸிற்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் இவர்கள் 1992-ஆம் ஆண்டு பிரியலாம் என முடிவு செய்தனர். அதன் பின் அதிகாரப்பூர்வமாக 1996-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரிந்துவிட்டனர். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதிக்கு பிறந்த குழந்தைகள் ஹாரி, வில்லியம். இதில் ஹாரியால் ஏற்பட்ட சலசலப்புகளை பின்னர் பார்ப்போம்.

மாமியார்-மருமகள் போன்று இல்லாமல் டயானாவிற்கும், ராணி எலிசபெத்துக்கும் இருக்கும் புரிதல் மிகவும் ஆழமானது. தனக்கு மன கஷ்டம் என்றால் ராணி எலிசபெத்தை சந்தித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருப்பாராம் டயானா. அரண்மனையை விட்டு வெளியேறிய டயானா 1997-ஆம் ஆண்டு கார் விபத்தில் மரணம் அடைந்தார்.

அழகு தேவதையாக உலகமே கொண்டாடிய டயானா மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. எனவே டயானாவின் மரணம் குறித்து எந்த பதிலும் சொல்லாமல் ராணி எலிசபெத் மவுனமாக இருந்தார். இதனால் அவர் மீது மக்களின் கோபப் பார்வை திரும்பியது. மக்களின் கோபம் அதிகமானதை உணர்ந்த உடனே டயானாவின் இறுதி ஊர்வலத்தின் போது பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெளியே வந்து அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
சார்லஸ்-டயானா திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றதை போன்று முப்பது ஆண்டுகள் கழித்து அவர்களுடைய மூத்தமகன் வில்லியமிற்கும் -கேத்தரின் மிடில்டனுக்கும், லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தில் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தை நேரடியாகவும், தொலைக்காட்சி வழியாகவும் உலகெங்கும் இருந்து மக்கள் கண்டு களித்தனர்.

இந்த திருமண நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை சுமார் 200 கோடி பேர் பார்த்தனர். இதற்கான ஏற்பாட்டை முழுமையாக செய்தவர் ராணி எலிசபெத் தான்.

மீண்டும் புயல்: டயானா தம்பதியின் இளைய மகன் இளவரசர் ஹாரி. இவர் அமெரிக்க நடிகை மேகன் மார்கிலை காதலித்து வந்தார். அவர்களின் திருமணத்துக்கு, நீண்ட யோசனைக்கு பின்பு ராணி ஒப்புதல் அளித்தார்.

காரணம் டயானா -சார்ல்ஸ் காதல் திருமணம் ஏற்படுத்திய வலி அவர் மனதில் இன்னும் உள்ளது. இதையடுத்து ஹாரி -மேகன் திருமணம் நிச்சயமானது. 2018 -ஆம் ஆண்டு மே மாதம் 19-ஆம் தேதி வின்ட்சர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் திருமணம் கோலாகலமாக நடந்தது. இந்த திருமணத்தை உலகிலுள்ள 80 கோடி மக்கள் தொலைக்காட்சி மூலம் கண்டு ரசித்தனர்.

இந்த நிலையில் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பில் இருந்து விலகுவதாக இளவரசர் ஹாரி, இளவரசி மேகன் தம்பதி கடந்த ஜனவரி மாதம் அறிவித்தனர்.

இங்கிலாந்து அரசு மற்றும் அரச குடும்பத்தின் அதிகாரம் மீது ஹாரி, மேகன் ஆகிய இருவரும் பற்றில்லாமல் இருந்து வந்த நிலையில் அந்த தம்பதி இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டனர்.

இந்த நிலையில், அரச குடும்பத்தின் மூத்த குடும்ப உறுப்பினர் பதவியில் இருந்து மார்ச் 31-ஆம் தேதி சட்டப்படி விலகிய ஹாரி-மேகன் தம்பதி தற்போது அமெரிக்காவில் குடியேறியுள்ளனர்.

இளவரசர் ஹாரி - மேகன் தான், பிரிட்டன் அரச குடும்பத்தில் தானாக வெளியேறும் முதல் தம்பதியினர். இதற்கு முன் சில காரணங்களுக்காக அரச குடும்பம், அதன் சில உறுப்பினர்களை வெளியேற்றியுள்ளது.

""ஹாரியும், அவரது மனைவியும் புதிய வாழ்க்கையை வாழப் போவதாக முடிவு எடுத்து உள்ளனர். அதற்கு அரச குடும்பம் ஆதரவு தெரிவித்துள்ளது. அவர்களது தனிப்பட்ட விருப்பத்தில் தலையிட, அரச குடும்பம் விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் மேலும் சில பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டியுள்ளது'' என்கிறார் ராணி எலிசபெத் சொந்த வாழ்க்கையில் குழந்தைகளால் பல கசப்பான அனுபவங்களை சந்தித்தாலும், அதனை கடந்து 21-ஆவது வயதில் இங்கிலாந்து மக்களுக்கு அளித்த வாக்கை இன்று வரை காப்பாற்றி வருகிறார் ராணி இரண்டாம் எலிசபெத்.

இனிமையான பயணம்

ராணி எலிசபெத்துக்கு, உலகம் முழுக்க 23 மெழுகுச்சிலைகள் உள்ளன. இவருக்கென தனி முகநூல் பக்கம் உள்ளது. மகன் சார்லஸ் கரோனாவால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் தான் குணமானார். கரோனாவுக்கு பின்னர் ராணி இரண்டாம் எலிசபெத் பொதுவெளியில் தோன்றவில்லை.

தற்போது வின்ட்சர் கோட்டை மைதானத்தில் இங்கிலாந்து ராணி எலிசபெத் கம்பீரமாக குதிரை சவாரி செய்யும் புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. கணவர் பிலிப் ஆகியோருடன் லண்டனுக்கு மேற்கே உள்ள வின்ட்சர் கோட்டையில் தங்கியுள்ளார் ராணி எலிசபெத். அவர்களுடன் குறைந்த எண்ணிக்கையில் ஊழியர்களும் உள்ளனர்.இந்த நிலையில் அவர் வின்ட்சர் கோட்டையில் உள்ள மைதானத்தில் வார இறுதி நாளில் குதிரையில் சவாரி செய்கிறார். 14 வயதான ஃபெல் பொனி குதிரை மீது சவாரி செல்வது ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு கொள்ளை இஷ்டமாம்.

தனிமையை போக்கும் விதமாக ராணி இரண்டாம் எலிசபெத், குதிரை சவாரி உள்ளிட்ட பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும் தனது 68 ஆண்டு கால ஆட்சியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

Tags : அரச குடும்பம் ராணி இரண்டாம் எலிசபெத் ராணி எலிசபெத் டயானா அழகு தேவதை டயானா மரணம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT