தினமணி கொண்டாட்டம்

விண்வெளி அதிசயங்கள்!

14th Jun 2020 04:59 PM | -வே.சிவாஜி,

ADVERTISEMENT

இயற்கையால் படைக்கப்பட்ட சூரிய குடும்பத்தின் குடும்ப உறுப்பினரான பூமி கிரகம் மனித இனத்திற்காக மட்டும் படைக்கப்பட்டதல்ல. கோடானகோடி ஜீவராசிகளுக்கும், பல்வேறு வகையான தாவர குடும்பங்களுக்கும் சொந்தமானது ஆகும். இந்த அபூர்வ கிரகத்தில் மனிதனின் கண்ணிற்கும், அறிவிற்கும் புலப்பட்ட விஷயங்களைத் தவிரப்  புலப்படாத விஷயங்கள் ஏராளம்.

விண்கற்கள்

சூரிய குடும்பத்தில் உள்ள உயர் கிரகமான பூமியின் சுற்று வட்டப்பாதையில் சிறிதும் பெரிதுமான விண்கற்கள் பூமியை போலவே சூரியனை சுற்றி வருகின்றன. விண்கற்களின் தொகுதி சூரிய குடும்பத்தில் செவ்வாய் கிரகத்திற்கும்-வியாழன் கிரகத்திற்கும் இடைபட்ட பகுதியில் அமைந்துள்ளது.

இங்கு  சிறிதும் பெரிதுமான  எண்ணற்ற விண்கற்களும், விண்துகள்களும் இருக்கின்றன. மற்ற கிரகங்களைப் போலவே அவைகளும் தனது சுற்றுவட்டப் பாதையில் சூரியனை சுற்றி வருகின்றன. பொதுவான அவற்றின் அளவுகள் கோள்களை விட சிறியதாகும். 

ADVERTISEMENT

பல்வேறு காரணங்களால் விண் எரிகற்கள் பூமியின் சுற்று வட்டப்பாதையில் குறுக்கிடுகின்றன. சில பூமியை கடந்து செல்கின்றன. சில பூமியின் காற்று மண்டலத்தில் நுழைகின்றன. சில காற்று மண்டலத்தின் உராய்வு காரணமாக எரிந்தும், சில எரியாமலும் பூமியை வந்தடைகின்றன. சில எரிந்து சாம்பலாகி பூமியின் மேற்பரப்பில் தூசுகளாகப் படிகின்றன. 

ஒவ்வொரு நாளும் சுமார் 25 மில்லியன் விண் எரிகற்கள் மற்றும் அதன் துகள்கள் பூமிக்கு வந்து சேருகின்றன. இதனால் ஒவ்வொரு வருடமும் சுமார் 15 ஆயிரம் டன் விண்பொருட்கள் பூமியின் காற்று மண்டலத்தை வந்தடைகின்றன. இவை பெரும்பாலும் நிக்கல் இரும்பு தாதுகளின் கலவை கொண்ட அழுத்தமான பாறைகளின் சிறுசிறு பாறை பகுதிகளாகும். இவைகளின் தாய்வீடு எனப்படுவது வால் நட்சத்திரங்களாகும். சில வகை விண் எரிகற்கள் செவ்வாய் கிரகம் அல்லது சந்திரனுடைய பகுதிகளாகும்.

சமீபத்தில் வானில் தென்பட்ட விண் எரிகற்களின் பொழிவை தமிழ்நாட்டில் உடுமலை அருகே பதிவு செய்திருக்கிறார்கள். இது தவிர மரக்காணம் அருகில் கடல் பகுதியில் எரிகல் ஒன்று வீழ்ந்ததாக செய்திகள் வெளியாகின. 

பூமிக்கு அருகில் வரும் வால்நட்சத்திரங்களில் இருக்கும் நீண்ட வால் போன்ற பகுதியில் நீர்த்திவலைகள், ஐஸ்கட்டிகள் மற்றும் ஜடப் பொருட்கள் கொண்டதாக உள்ளது என்று இன்றைய அறிவியல் கூறுகின்றன. இவற்றை பற்றிய ஆய்வுகள் தொடருகின்றன. 

பூமியின் காற்று மண்டலம்

பூமியின் மேல் பகுதியிலிருந்து 12 கி.மீ உயரம் வரையிலான காற்று அடுக்கினை troposphere என்று அழைக்கப்படுகின்றது. இதில் பல்வேறு காற்று மாசுகள், ஈஸ்டுகள், வைரங்கள் பாக்டீரியா பல்வேறு கிருமிகள், பூக்களின் மகரந்தங்கள், தூசுகள் மற்றும் பல்வேறு வாயுக்களும் இருக்கின்றன. இந்தக் காற்றடுக்கிலேயே மேக கூட்டங்கள், மழை, பனி, ஈரப்பதம், தட்பவெப்பம் போன்றவையும் தோன்றுகின்றன. இவற்றைத் தவிர 12 கி.மீ முதல் 3000 கி.மீ உயரம் உள்ள பகுதியில் பூமியின் பல்வேறு காற்று அடுக்குகள் உள்ளது. இந்தப் பூமியில் உள்ள உயிரினங்களைக் காப்பாற்ற தேவையான பாதுகாப்பு அரண்கள் இயற்கையாகவே அமைய பெற்றுள்ளன. மனித குலத்தின் பல்வேறு நாகரீக நடவடிக்கைகளால் ஓசோன் போன்ற பாதுகாப்புப் படலங்களில் ஓட்டைகள் வீழ்ந்தும், வலுவிழந்தும் காணப்படுகின்றது. 3000 கி.மீ உயரத்துடன் பூமியின் காற்று மண்டலம் முடிவடைகின்றது.

பூமியின் வயது பல்வேறு காலகட்டங்களை கொண்டது. ஒவ்வொரு கால கட்டத்திலும் சில உயிரினங்கள் மற்றும் தாவர குடும்பங்கள் அதீத வளர்ச்சி பெற்று, வியாபித்து ஏகபோகமாக வாழ்ந்து வந்துள்ளன. அவற்றில் ஜுராஸிக் காலகட்டத்தில் வாழ்ந்து மறைந்து போன டைனோசர் விலங்கினங்களும் ஒன்றாகும்.

நீரிலும் நிலத்திலும், பறக்ககூடியதுமாகிய பல்வேறு டைனோசர் குடும்பங்கள் உலகின் பல பகுதிகளில் வாழ்ந்து மறைந்துள்ளன.  இதற்குச் சான்றாக டைனோசர்களின் தொல்லுயிரி எச்சங்கள் உலகின் பல பகுதிகளில் கிடைத்து வருகின்றன. அவ்வாறு  உலகின் பல பகுதிகளில் நெடுங்காலமாக வாழ்ந்து வந்த டைனோசர் இனங்கள் பூமியில் திடீரென அழிந்து மறைந்து போயின. 

டைனோசர்களின் இந்தத்  திடீர் மறைவை ஆராய்ந்த புவி தொல்லுயிரி ஆய்வாளர்கள் பல்வேறு கருத்துகளை முன் வைத்து விவாதித்தனர். விவாதத்தில் ஒரே கருத்திற்கு வந்தனர். அதாவது பூமியில் டைனோசர்கள் மறைந்து போனதற்கு காரணம் பூமியின் மீது மோதிய விண்எரிகற்களே காரணம் என்ற ஒருமித்த கருத்திற்கு வந்துள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT