தினமணி கொண்டாட்டம்

மலையாள இதழியல் இமயம் வீரேந்திரகுமார்

7th Jun 2020 03:59 PM | -சிற்பி பாலசுப்பிரமணியம்

ADVERTISEMENT


எழுத்தாளரும் தேர்ந்த பயண இலக்கியப் படைப்பாளியும் ஆற்றல் மிக்க பேச்சாளரும் மலையாள இதழியலில் தன் அழியாத முத்திரை பதித்தவருமான பேராளுமை அண்மையில் காலம் சென்ற எம்.பி.வீரேந்திர குமார். "மாத்ருபூமி' நாளிதழின் மகத்தான சாதனைகளுக்குக் கையொப்பமிட்டு அவ்விதழ்க் குழுமத்தின் நிர்வாக இயக்குநராக வரலாறு படைத்தவர் அவர்.

நெருங்கிய நண்பர்களால் வீரன் என்று அன்போடு அழைக்கப்பட்டிருந்த வீரேந்திர குமார், தன் தனித்திறன்களால் தான் செயல்பட்ட ஒவ்வொரு துறையிலும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவராகத் திகழ்ந்தார். "தத்துவ ஆழம் மிக்க சிந்தனை, அரசியலின் கடும் வெப்பத்தின் இடையிலும் ஓய்வு ஒழிவில்லாத போராட்டம், புத்தகங்களோடு உயிருக்கு நிகரான நேசம், பயணங்களின்மீது கொண்ட எல்லையற்ற ஈடுபாடு என்ற அடிப்படைகளில் அவர் பிறரிடமிருந்து மாறுபட்டிருந்தார்'என்று தன் தலையங்கத்தில் வியந்து பாராட்டியிருக்கிறது புகழ்பெற்ற நாளிதழான "மலையாள மனோரமா'.

கேரளச் சட்டமன்றம், நாடாளுமன்றம், நாடாளுமன்ற மேலவை ஆகிய களங்களில் அரசியல் கண்டவரான வீரேந்திர குமாரின் வாழ்க்கை துறைகள் பல கொண்ட பேராறு போன்றது.

காப்பித் தோட்ட அதிபரும் ஜெயப்பிரகாஷ் நாராயணனின்சோஷியலிஸ்ட் கட்சித் தலைவரும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவருமான பத்மப்பிரபா கவுடர்-மருதேவி ஒளவை ஆகியோரின் மகனாக 1936-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம் நாள் வயநாடு சார்ந்த கல்பற்ற நகரில் பிறந்தவர். அவர்தம் குடும்பம் சமண சமயம் சார்ந்தது.

ADVERTISEMENT

கேரளத்தில் கல்வியைத் தொடங்கிய வீரேந்திர குமார் தம்முடைய முதுகலைப்படிப்பைச் சென்னையில் விவேகானந்தா கல்லூரியில் தொடர்ந்தார். அவர் தெரிவு செய்து கொண்ட துறை தத்துவம். மேலாண்மையில் முதுகலைப்பட்டத்தை அமெரிக்க நாட்டு சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் பெற்றார். தந்தையார் அவரிடம், "என்ன படித்தாய்?' என்று கேட்டபோது, தாம் கற்றவைகளை விரித்துரைத்தார் மகன். அப்பா இந்தப் பதிலால் மகிழ்ச்சி அடையாமல் கேட்டார்: "ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு உயிரும் ஒரு பிரபஞ்சம். நீ அதைப் படித்ததாகச் சொல்லவில்லையே..' மகன் "படித்திருக்கிறேன்'என்று சொன்னாராம். "அப்படியானால் மாடு மேய்ப்பது கூட, நல்ல தொழில் தானே!'என்று பாடம் புகட்டினாராம் தந்தை. எப்படிப்பட்ட தந்தை! எப்படிப்பட்ட பிள்ளை!

1951-இல் ஜெயப்பிரகாஷ் நாராயணன் என்ற தேசபக்தச் செம்மலிடமிருந்து ஆசிபெற்று அவருடைய இயக்கத்தில் உறுப்பினரான பதினைந்து வயது சிறுவர் வீரேந்திர குமார். அன்று முதல் ஜனதா தளம் என்ற சோஷலிஸ்ட் இயக்கத்தில் அதன் பிளவுகளுக்கும் இணைப்புகளுக்கும் ஈடு கொடுத்துக் கொண்டே அவர் அரசியல் இயங்கியது.

1987-இல் கேரளச் சட்டமன்றத்துக்கு, கல்பற்ற தொகுதியிலிருந்து உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996, 2004 நாடாளுமன்றத் தேர்தல்களில் வென்று நாடாளுமன்ற உறுப்பினராகத் திகழ்ந்தார். 2018-இல் நாடாளுமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனதா தளம் பன்முறை பல்வேறு பிரிவுகளாகப் பிளவுபட்டபோதும் அதன் ஏதோ ஒரு பிரிவில் தேசியத் தலைவராக விளங்கினார். எல்லாப் பிரிவினரோடும் இணக்கமும் பிணக்கமுமாக அரசியல் நடத்தியபோதிலும் அனைவராலும், குறிப்பாக மாற்றுக் கட்சியினராலும் மதிக்கப்பட்டவராக இருந்தார். ஜார்ஜ் பெர்னாண்டஸ், லோகியா, ஏ.கே.கோபாலன், தேவேகெளடா, நிதிஷ் குமார் எனப் பல அரசியல் தலைவர்களோடும் நேசமும் நெருக்கமும் கொண்டிருந்தார்.

மக்கள் நலனுக்கானது

அரசியல் என்பது மக்கள் நலனுக்காக என்பதில் மிகத் தெளிவாக இருந்தார். 1987-இல் நாயனார் அமைச்சரவையில் கேரள வனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இயற்கை நேசமும் சூழலியல் பாதுகாப்பில் தீவிரப்பற்றும் கொண்டிருந்ததால் அமைச்சரானதும் வனங்களில் ஒரு மரம் கூட வெட்ட அனுமதி இல்லை என்று அறிவித்தார். இதற்கு ஆளும் கூட்டணி உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்புக்குரல் எழுப்பியதும் பதவி ஏற்ற 48 மணி நேரத்தில் உடனடியாகப் பதவி விலகினார். அந்த அளவுக்குத் தம் இயற்கைப் பாதுகாப்பு உணர்வில் ஊன்றி நின்றவர் வீரேந்திர குமார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் எப்போதும் அளவிறந்த ஈடுபாடு கொண்டிருந்த காரணத்தால் அமைதிப்பள்ளத்தாக்கைக் காக்கும் பேரியக்கங்கள் நடந்தபோது போராட்டக்களத்தின் முன்னணியில் நின்றவர் வீரேந்திரகுமார். உலகின் கவனத்தையே ஈர்த்த மற்றொரு போராட்டக்களத்தில் வீர நாயகனாக ஒளிர்ந்தவர் அவர். 2002 ஏப்ரலில் பிளாச்சிமடை என்ற இடத்தில் கோகோகோலா நிறுவனம் செயல்படத் தொடங்கியபோது வேளாண்மைக்கும் குடிநீருக்கும் பேராபத்து நேருமென விவசாயிகளும் ஆதிவாசிகளும் போராட்டம் தொடங்கினர். ஏனோ தானோ என்று மக்கள் போராட்டம் தடுமாறிக் கொண்டிருந்த சூழலில் அன்று ஜனதாதள் மாநிலத் தலைவராக இருந்த வீரேந்திர குமார் களத்தில் இறங்கினார். கோகோகோலா நிறுவனத்தை அங்கிருந்து அகற்றியே தீரவேண்டுமென்ற முழக்கம் கேரளத்தையும் ஏன் உலகத்தையும் கூட அதிரவைத்தது. பன்னாட்டுக் குழுமமான கோகோகோலா நிறுவனம் அகற்றப்படும் வரை மக்கள் இயக்கத்தை வழிநடத்தி வெற்றி கண்டார்.

அதே பிளாச்சிமடை என்ற களத்தில் அவருடைய பெரு முயற்சியால் உலகத் தண்ணீர் மாநாட்டை உலகளாவிய சுற்றுச்சூழல் அறிஞர்களையும் அழைத்து நடத்திய சிறப்பும் வீரேந்திர குமாருக்கு உண்டு. பிரான்சிலிருந்து விவசாயிகளின் தலைவரான ஹோசே பூவே, கனடாவிலிருந்து மோட் பார்லோ முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட சூழலியலாளரும் இந்தியாவிலிருந்து மேதாபட்கர்,வந்தனா சிவா, சுகுமார் அழிக்கோடு, அச்சுதானந்தன் ஆகியோரும் கலந்து கொண்டு இயற்கையை இருகரம் கோத்துக் காக்க வேண்டிய இன்றியமையாமையை மக்களுக்குச் சொல்லும் அரிய வாய்ப்பாக அது அமைந்தது.

"மாத்ருபூமி' தினமணியைப் போலவே தேசபக்தர்களால் உருவாக்கப்பட்ட பத்திரிகை. எம்.பி. வீரேந்திர குமார் அதன் நிர்வாக இயக்குநர் ஆகும் வரை அதன் வளர்ச்சி, ஓரளவுக்கு இருந்ததே தவிர பேரளவுக்கு உரியதாக இருக்கவில்லை. மேலாண்மையின் அனைத்து உத்திகளையும் பயன்படுத்தி அதனை இன்றைய உன்னத நிலைக்குக் கொண்டு வந்தவர் அவரே. பொறுப்பேற்றுக்கொண்ட உடனே அவர்சந்தித்த முதல் மனிதர்களில் ஒருவர் மலையாள இதழ்களில் நூற்றாண்டு கண்ட பெருமைக்குரிய "மலையாள மனோரமா' இதழின் முதன்மை ஆசிரியராக இருந்த மாமன் மேத்யூ. அவரே தன் அஞ்சலிக் குறிப்பில் இது குறித்து எழுதியிருப்பது வீரேந்திர குமாரின் ஒப்பற்ற உழைப்பைப் புலப்படுத்தும்.

"அந்த நிறுவனத்தை நவீன மேலாண்மைக்குக் கொண்டுபோனது அவர்தான். அதுவரை சுதந்திரப் போராட்டத் தலைவர்களால் நடத்தப்பட்டு வந்த "மாத்ருபூமி' பத்திரிகையை புதுமையின் நவீனத்துவத்தின் இதழாக, தொழில் நுட்பத்தின் துணையோடு புதிய யுகத்தில் காலூன்ற வைத்த பங்களிப்பு வரலாற்றுச் சிறப்புடையது'''என்கிறார் மாமன் மேத்யூ.

இதன் விளைவாக மாத்ருபூமி நாளிதழ் பல ஊர்களிலிருந்து பதிப்புகளை வெளியிடும் சாதனைக்குக் காரணமானார். அதன் வார இதழ் மலையாள மொழி இலக்கியப் படைப்புகளின் அணிதிகழ் களமாயிற்று. உலகப் பெரும் பத்திரிகைக் குழுமங்களில் ஒன்றாயிற்று "மாத்ருபூமி'. இதன் விளைவாக, பத்திரிகை உலகப் பெரும்புள்ளி ஆனார் வீரேந்திர குமார். இந்தியப் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர்,பி.டி.ஐ. நிறுவனத்தின் துணைத்தலைவர், அந்த நிறுவனத்தின் அறங்காவலர், காமன்வெல்த் பிரஸ் யூனியன் உறுப்பினர், W‌o‌r‌l‌d U‌n‌i‌o‌n ‌o‌f N‌e‌w‌s‌p​a‌p‌e‌r‌s அமைப்பின் செயற்குழு உறுப்பினர் என உலகளாவிய பெருமைகளுக்கெல்லாம் உரியவரானார்.

அரசியலில், பண்பாட்டியலில், இதழியலில், மக்கள் பிரச்னைகளில், சமுதாயப் போராட்டங்களில், சுற்றுச்சூழலியலில் தன் சாதனைகளால் முத்திரை பதித்த வீரேந்திர குமார் மக்கள் மனதில் நிலைத்த இடத்தைப்பெற்றுள்ள மற்றொரு துறை அவருடைய அழியாச் சித்திரங்களான இலக்கியப் படைப்புகள்.

"காட் ஒப்பந்தமும் காணாச் சரடுகளும்', "ராமனின் துக்கம்', "புத்தனின் புன்னகை', "ஒருமைப்படுதலின் வசந்தம்' என அரசியல் பொருளாதாரச் சிந்தனைகளைக் கவலையோடு பகிர்ந்துகொண்ட விவாதங்களைக் கிளப்பிய நூல்கள் பல எழுதித் தந்தார். "ஆத்மாவுக்குள் ஒரு தீர்த்த யாத்திரை', "விவேகானந்தன் "துறவியும் மனிதனும்' என மற்றொரு தளத்திலிருந்து எழுதிய நூல்கள் இன்னொரு வகை. கவிஞர் சங்ஙம்புழ பற்றிய அற்புதமான திறனாய்வு நூல் மற்றொரு வகை.

பேசப் பேச பெருமை

அழியாப் புகழை அவருக்கு வழங்கிய நூல் பயண நூலான "வெள்ளிப் பனிமலையின்மீது' இமாலயப்பயணத்தை மையமாகக் கொண்டது. ஓயாப் பயணியாக உலகைப் பன்முறை வலம் வந்தவர் வீரேந்திரகுமார். தம் மராட்டிய மனைவியான உஷா அவர்களுடன்தான் பெரும்பாலான பயணங்களை நிகழ்த்தியிருக்கிறார். "டான்யூப் சாட்சி'என்ற நூல் ஐரோப்பியப் பயணங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. அந்நூல் ஐரோப்பியக் கலை வரலாற்றின் மீது வெளிச்சம் பாய்ச்சுவதாகும்.

""ஹைமவதபூவில்''என்ற குமாரன் ஆசானின் கவிதைத் தொடரைத் தலைப்பாகக் கொண்ட, ""வெள்ளிப் பனிமலையின்மீது''உலகத்தின் தலைசிறந்த பயண நூல்களில் ஒன்று. 2007-ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த நூல், என்னால் 2009-இல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது. அப்போதே மலையாளத்தில் இரண்டாண்டுகளில் 20 பதிப்புகள் கண்ட இந்த நூல் கடந்த பதின்மூன்று ஆண்டுகளில் 56 பதிப்புகள் கண்டு மேலும் வெற்றி நடை போட்டு வருகிறது.

இது வெறும் பயண நூல் அல்ல. மலையாளப் பெருங்கவிஞர் சச்சிதானந்தன் கூறுகிறார்: ""இந்தியாவின் பண்பாட்டுப் பன்மைக்கும் அந்த வேறுபாடுகளை மகத்தான ஒருமைப்பாட்டுக்குள் இணைக்கும் எடுத்துரைப்புகளின் உள்ளார்ந்த இசைவுக்கும் அழைத்துச் செல்கிற மாபெரும் பயணம் குறித்த மனம் கவரும் படைப்பு இது. இந்தப் படைப்பில் சமரசம் செய்து கொள்ளாத ஒரு இயற்கை ஆராதகனும், பழமைவாதி அல்லாத ஒரு பாரம்பரிய ஆய்வாளனும், தேடல் நிரம்பிய ஒரு வரலாற்றாசிரியனும், கற்பனை வல்ல ஒரு கதைசொல்லியும், செய்தி ஆர்வம் மிக்க ஒரு பத்திரிகை ஆசிரியனும், இதய நெகிழ்வுடைய ஒரு கவிஞனும் ஒன்றாகி ஒரே பேனாமுனையில் நின்று உரையாடுவதாய்த் தோன்றுகிறது. இந்தப் படைப்பு பயண இலக்கியத்தின் எல்லைக்கோடுகளை மாற்றி அமைக்கிறது.''

பேசப் பேசப் பெரிதாகும் பெருமை கொண்டது மலையாள இதழியல் இமயமான எம்.பி.வீரேந்திர குமாரின் சிறப்புச் சாதனைகள். அதிகம் தற்பெருமை கொண்டவர்களிடம் அவர் கேட்பதுண்டாம்: "நீங்கள் பலரிடமும் பலவற்றையும் பேசுகிறீர்கள். உங்களோடு ""நீங்கள் பேசிக் கொண்டதுண்டா? அப்படிப் பேசிக்கொண்டால் நாம் எவ்வளவு அற்பமென்றும் நாம் யாரென்றும் தெரிந்து கொள்ளலாம். உங்களோடு பேசிப் பழகுங்கள்''தன்னையறியும் தத்துவமும் தெரிந்தவராக இருந்தார் வீரேந்திர குமார்.

கட்டுரையாளர்: சாகித்திய அகாதெமியின்தமிழ்மொழி ஒருங்கிணைப்பாளர்

ADVERTISEMENT
ADVERTISEMENT