தினமணி கொண்டாட்டம்

ஊருக்கு பாதை காட்டிய தந்தை-மகன்!

7th Jun 2020 04:42 PM | -பிஸ்மி பரிணாமன்

ADVERTISEMENT


கரோனா தாக்கத்தினால் ஊரடங்கு, வீட்டடங்கு கட்டாயம் ஆகிவிட்டநிலையில், எத்தனை பேர்கள் தங்களுக்கும் பிறருக்கும் பயன்படும் விதத்தில் ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள்?

கேரளத்தில் அப்பா மகன் இருவர் சேர்ந்து ஊரடங்கு காலத்தில் இரு நூறு மீட்டர் (650 அடி) நீளம், எட்டு மீட்டர் (25 அடி) அகலமுள்ள பாதை ஒன்றை குன்றுப் பகுதியில் அமைத்துள்ளார்கள்.

கேரள மாநிலம் கோழிக்கோடு வட்டாரத்தில் கூடரஞ்சி குன்றுப் பகுதியில் வாழ்ந்து வருபவர் அகஸ்டின். இந்தப் பகுதிக்கு இரு சக்கர வாகனமோ, ஆட்டோவோ வர பாதையில்லை. பிரதான சாலையிலிருந்து நான்கு கி. மீ ஒற்றையடிப்பாதையில் நடந்துதான் வர வேண்டும். ஒன்றும் செய்ய முடியாத நிலைமை. இவர்களின் குடியிருப்பு பாதை வசதி இல்லாமல் துண்டாகத் தனியாக நின்றது . இணைப்புப் பாதை உருவானது எப்படி?

அகஸ்டின் தொடர்கிறார்:

ADVERTISEMENT

"இந்தப் பகுதிக்கு பாதை அமைத்துத் தர வேண்டும் என்று சுமார் 15 ஆண்டுகளாக பஞ்சாயத்திடம் வேண்டுகோள் விடுத்து வருகிறோம். முதல் இரண்டு ஆண்டுகளில் பாதை அமைப்பது குறித்து ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் எனக்கு சொந்தமான நிலத்தில் 15 சென்ட் இடத்தை பாதை அமைப்பதற்காக பஞ்சாயத்திடம் ஒப்படைத்தேன். இடத்தைக் கொடுத்து 13 ஆண்டுகள் ஆன போதும், பாதை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தக் குன்றுப் பகுதியில் அநேகக் குடும்பங்கள் வாழுகின்றனர். ஆனாலும், எங்கள் வேண்டுகோள் அதிகாரிகள் காதுகளில் விழவில்லை.

வீட்டுக்கு வேண்டிய அரிசி , கால்நடைத் தீவனம் எல்லாவற்றையும் நாங்கள் தலையில் சுமந்து குன்று ஏறி மூச்சு இரைக்க வியர்வையில் குளித்து நடந்து வர வேண்டும். பொறுத்துப் பார்த்த நானே பாதையை அமைப்பது என தீர்மானித்தேன்.

ஊரடங்கு காலத்தில் எங்கும் வெளியே போக முடியாது. பட்டணத்திற்குச் சென்று வேலையும் பார்க்க முடியாது. யாரும் பாதை அமைக்க முன் வரவும் மாட்டார்கள்.அடுத்தவர்களை எதிர்பார்த்து ஆண்டுகள் கடந்து போனதுதான் மிச்சம்.இந்த ஊரடங்கு காலத்தில் உருப்படியாக அனைவருக்கும் பயன்தரும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்த போது, "இந்தப் பகுதியில் பாதை மிக அவசியம் .. பாதையை அமைப்போம்' என்று முடிவு செய்தேன்.

உதவிக்கு மகன் ஜோசப்பை மட்டும் அழைத்தேன். அவனுக்கு 27 வயதாகிறது. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக உதவிக்கு வேறு யாரையும் அழைக்கவில்லை. பஞ்சாயத்து அலுவலகத்தில் எனது தீர்மானத்தைத் தெரிவித்து பாதை அமைக்க பஞ்சாயத்தின் முன் அனுமதியைப் பெற்றேன். குன்றுப் பகுதி என்பதால் பாதை அமையும் இடம் ஏற்றம் இறக்கம் நிறைந்தது. பாறைகளைக் கொண்டிருந்தது. அவற்றை நீக்கினால் மட்டுமே சம தள பாதையை ஏற்ற இறக்கத்துடன் அமைக்க முடியும்.
தேவையான கருவிகளுடன் நாங்கள் இரண்டு பேரும் களத்தில் இறங்கினோம். காலையில் ஏழு மணிக்கு வேலையைத் தொடங்குவோம். மாலை ஐந்தரை மணி வரை பாறைகளை அகற்றினோம். தரைக்கு வெளியே தலை காட்டி நிற்கும் பாறையின் முனைகளை உடைத்து சமமாக்கினோம். கிட்டத்தட்ட தினமும் பத்து மணி நேர வேலை. வெளி ஆள்களை வைத்து பாதை அமைக்கும் அளவுக்கு எனக்கு பொருளாதார வசதி இல்லை. இந்தப் பகுதியில் வசிப்பவர்களும் நிதி உதவி செய்யும் அளவுக்கு வருமானம் இல்லை.

ஊரடங்கு என்பதால் மகனுக்கும் அலுவலகம் போக முடியாது. எனவே மகனும் பாதை அமைப்பதில் அவனது பங்களிப்பை வழங்க வாய்ப்பு உருவானது. . 38 நாட்கள் வேலையைத் தொடர்ந்தோம். அக்கம் பக்கம் கிடைத்த சிவப்பு மண்ணைப் பாதையில் பரப்பினோம். 39-ஆவது நாளில் பாதை உருவாகிவிட்டது. ஸ்கூட்டர் வர முடியாத எங்கள் பகுதிக்கு இப்போது லாரியே வரும். நான்கு கி. மீ. நடந்து வர வேண்டிய நாங்கள் அமைத்த பாதையில் இப்போது 2 கி.மீ. நடந்தால் போதும்.. வீட்டை அடைந்துவிடலாம்.

இந்தப் பகுதியில் வாழும் அனைவருக்கும் புதிய பாதை பல வசதிகளைத் தரும். மகனை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வேளாண்மை பட்டப்படிப்பு படிக்க வைத்தேன். வங்கியில் கல்விக் கடன் வாங்கினேன். மகனுக்கு உடல் நலக் குறைவினால் படிப்பை நிறைவு செய்ய முடியவில்லை. கல்விக் கடனும், இதர கடன்களும் உண்டு. நிலத்தில் சில பகுதியை விற்க வேண்டும். பாதை இல்லாததால் நிலத்திற்கு உரிய விலை கிடைக்கவில்லை. இப்போது பாதை இருப்பதால் எனது நிலத்திற்கு நல்ல விலை கிடைக்கும். அதனால் தார் பூச்சு அல்லது கான்கிரீட் போட வேண்டும் என்று பஞ்சாயத்தைக் கேட்டுக் கொண்டுள்ளோம்' என்கிறார் அகஸ்டின்.

ADVERTISEMENT
ADVERTISEMENT