தினமணி கொண்டாட்டம்

ஆயுர்வேதம் கரோனாவை வெல்லும் ஆயுதம்!

7th Jun 2020 04:01 PM | வனராஜன்

ADVERTISEMENT

"கரோனாவுடன் போராடும் மக்களுக்கு ஆயுர்வேதம் முன்னேற்றம் கொடுப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகிறது' என்கிறார் "யோகா குரு' பாபா ராம்தேவ். கடந்த 40 ஆண்டுகளாக சற்றும் ஓய்வு இல்லாமல் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை உழைத்து வருகிறார். இவர் கரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். 
பாபா ராம்தேவிடம் " நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' பிரபு சாவ்லா சில கேள்விகளை முன் வைத்த போது, அவர் அளித்த பதில்கள் இதோ:

சுயசார்போடு இந்தியா இருப்பதற்கு நம் நாடு எடுக்க வேண்டிய முக்கியமான நடவடிக்கை எதுவென்று  நினைக்கிறீர்கள்?

நிறைய இருக்கிறது. உணவுப் பொருட்கள் உற்பத்தியும், சமையல் எண்ணெய் உற்பத்தியும் முக்கியமானவை. நம் நாடு சுய சார்போடு இருப்பதற்காக நாம் உட்கொள்ளும் எண்ணெய் வகைகள் ( சோயா, சூரியகாந்தி, கடுகு எண்ணெய்) எது வேண்டுமானாலும் இருக்கலாம். அதனை பெருமளவு விளைவிக்க ஓர் இயக்கத்தை உருவாக்குவேன்.  இந்தத் திட்டம் 5 முதல் 10 ஆண்டுகளில் நிறைவேறும். இதன் மூலம் 5 லட்சம்  மக்கள் வாழ்வாதாரம் பெறுவார்கள். மேலும் இந்தியா சமையல் எண்ணெய்க்காக  அடுத்த நாட்டை எதிர்பார்க்க வேண்டிய தேவையும் இருக்காது. பதஞ்சலி மற்றும் ருசி சோயா திட்டங்களின் மூலம் 1 லட்சம் கோடி நிதி உதவி அளிக்க முடியும். 

அரசியல்வாதிகளிடமிருந்து உங்கள் எதிர்பார்ப்பு என்ன?

ADVERTISEMENT

விவசாயம், தொழிற்சாலை, உற்பத்தி போன்ற பல்வேறு பிரிவுகளில் வேலைகள் உள்ளடங்கி இருப்பதால் நம் நாட்டின் கொள்கைகள் அகில இந்திய அளவில் அமைக்கப்பட வேண்டும். பல தொழிற்சாலைகள் நடத்துபவர்களிடம் பணம் உள்ளது. அதை  அவர்கள் செலவழிக்க தயங்காத வண்ணம் அவர்களுக்கு முதலீடு செய்வதன் மூலம் லாபத்தைப் பெற முடியும் என்ற எண்ணத்தை உருவாக்கும் வகையில் நம் நாட்டின் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.

கரோனா நோய்த்தொற்றுக்கு மருந்து கண்டுபிடிப்பீர்களா?

அதற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. விரைவில் வெற்றியடைவோம்.  கரோனா நோய்த்தொற்று தொடங்கிய நாளிலிருந்து இதற்கான எங்களது ஆராய்ச்சியைத் தொடங்கிவிட்டோம். பிராணாயாமம் செய்வது நல்ல பலனை அளிக்கிறது. இயற்கை பொருட்களான மஞ்சள், இஞ்சி, கருமிளகு, ஏலக்காய், துளசி போன்றவற்றை கொண்டு தயாரிக்கப்படும் தேநீரை உட்கொள்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கிறது. இதனை நாங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆராய்ச்சி செய்து பார்த்தோம். குறிப்பாக மத்திய பிரதேசத்திலுள்ள 500-க்கும் மேற்பட்ட மக்களுக்கு நாங்கள் தயாரித்த தேநீரை வழங்கினோம். கரோனாவிலிருந்து அவர்கள் 7 முதல் 10 நாட்களில் மீண்டு வந்தனர். இது ஒரு முன்னோட்ட முயற்சி தான். இது சம்பந்தமான ஆராய்ச்சி கட்டுரை சர்வதேச பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளது. ஆயுர்வேதம் கரோனாவை வெல்வதற்கு ஆயுதமாகச் செயல்படும் என்பதில் மாற்று கருத்தில்லை. 

உங்கள் மருந்திற்கான சூத்திரத்தை அரசாங்கத்திடமே ஐ.சி.எம்.ஆர் போன்றவர்களிடம் தெரியபடுத்தி இருக்கிறீர்களா? அதற்கு அங்கீகாரம் கிடைத்ததா?

பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஆங்கில மருந்துகளை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களின் தலையீடும் அரசியலும் பெருமளவு உள்ளது. அதற்காக மாற்று வழியைக் கண்டுபிடித்துள்ளோம். தற்போது  ஆய்வு ரீதியாக வெற்றியை காண்பிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். 

பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஆங்கில மருந்து உற்பத்தியாளர்கள் உங்களது கண்டுபிடிப்புக்குத் தடையாக இருக்கிறார்களா?

ஆமாம். அவர்கள் யோகா, ஆயுர்வேதம் மற்றும் இந்திய கலாசாரத்திற்கு எதிரானவர்கள். மேலும் அயல்நாட்டு வியாபாரிகளும் இங்கு வருகிறார்கள். ஏனென்றால் அரசியல் கொள்கைகள் அவ்வாறு உள்ளது. அரசாங்கம் எல்லாவற்றையும் கவனித்து செய்ய இயலாது. மக்களுடைய மனநிலையில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும். 

வெளிநாட்டு வியாபாரிகளை எதிர்த்துப் போராடுவதில் வெற்றி கிடைக்கும் என நினைக்கிறீர்களா?

50 சதவிகித மாநிலங்களில் வீட்டு உபயோகப் பொருட்களைத் தவிர பல் மற்றும் சரும பராமரிப்புப் பொருட்களை விற்பனை செய்வதில் அதிகம் முன்னேற்றம் கண்டுள்ளோம். இந்த ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே பதஞ்சலி, ருசி சோயா திட்டங்களில் மூலம் 25 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டியுள்ளோம் என்கிறார் பாபா ராம்தேவ். 

ADVERTISEMENT
ADVERTISEMENT