தினமணி கொண்டாட்டம்

தொன்மைச் சிறப்பு:

7th Jun 2020 04:21 PM | -கி.ஸ்ரீதரன், தொல்லியல்துறை (ஓய்வு)

ADVERTISEMENT

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகில் பழையனூர் ஊராட்சியில் உள்ள நீர்வளம் மிக்க புத்தேரியை தூர்வாரும் பணிகள் மேற்கொண்ட பொழுது முதுமக்கட்தாழியின் பகுதிகள், உடையாத மண்பானைகள், மட்குவளைகள் மற்றும் பண்டைய பானை ஓடுகள் போன்றவை கிடைத்தன. இவற்றில் சில மண்பானைகளை உடையாமல் கிராம இளைஞர்கள் எடுத்துள்ளனர். 

தொல்லியல் சிறப்பு வாய்ந்த மட்கலங்கள் பானைகள் கிடைத்த செய்தியினை அறிந்து தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினர் பழையனூர் சென்று ஆய்வினை மேற்கொண்டனர். 

பழையனூர் ஊரின் தொன்மைச் சிறப்பினை அறியும் முன் திருவள்ளூர்  மாவட்டத்தின் தொன்மையான வரலாற்றுச் சிறப்பினை அறிந்து கொள்வோம். 
தமிழகத்தில் மிகத் தொன்மையான சிறப்பு வாய்ந்த மாவட்டமாக திருவள்ளூர் மாவட்டம் விளங்குகிறது. இம்மாவட்டத்தில் பாயும் கொற்றலை, ஆரணி ஆற்றின் கரைகளில் பழைய கற்கால நாகரீகம் மிகச்சிறந்த நிலையில் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. கொற்றலை ஆறு, பழைய பாலாறு எனவும் ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.

அகழ்வாராய்ச்சிகள்

ADVERTISEMENT

கொற்றலை ஆற்றுப் பகுதிகளில் ஆற்றின் படுகைகளில் பூண்டி, நெய்வேலி, வடமதுரை, அத்திரம்பாக்கம் போன்ற ஊர்களில் அகழ்வாராய்ச்சிகள் முன்பு நடைபெற்றுள்ளன. தொல்லியல் அறிஞர்களான இராபர்ட் புருஸ்பட், பானர்ஜி, கிருஷ்ணசாமி போன்றோர் இப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அண்மையில் அத்திரம்பாக்கம் பகுதியில் சர்மா மரபியல் கல்வி மையமும் ஆய்வினை மேற்கொண்டது. பூண்டி நீர்தேக்கம் அருகில் உள்ள அல்லிக்குழி மலைத்தொடரில், பழைய கற்கால மனிதர்கள் வாழ்ந்த இயற்கையாய் அமைந்த, 16 குகைகள் உள்ளன. "குடியம்' என்ற குகையில் அகழ்வாராய்ச்சி நடைபெற்றுள்ளது. கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவிகள் கிடைத்தன. மேலும் இங்க "பரிக்குளம்' என்ற இடத்தில் தமிழகத் தொல்லியத்துறை மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் சுமார் 3 லட்சம் ஆண்டுகளுக்கு  முன்னர் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய கற்கருவிகள் செய்யும் தொழிற்கூடம் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. மேலும் கொற்றலையாறு மற்றும் ஆரணி ஆற்றின் அருகில் உள்ள பகுதிகளில் நடைபெற்ற தொல்லியல்கள ஆய்வில் 100-க்கும் மேற்பட்ட இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது சிறப்பாகும்,

பூண்டி-தொல்மாந்தர் காட்சியகம்

இத்தகைய சிறப்பு வாய்ந்த பூண்டி பகுதியில் கற்கால வரலாற்றுச் சிறப்பினை பொதுமக்கள்- மாணவர்கள்- ஆய்வாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் தொல்மாந்தர் காட்சியகத்தினை தமிழகத் தொல்லியல் துறை 1985-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. தற்காலக் கருவிகள் இரும்பு காலத்தைச் சேர்ந்த தாழிகள், ஈமப்பேழைகள் போன்ற பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இது வரலாற்று காட்சிக்கான கையேடு ஆய்வாளர் துளசிராமனால் எழுதப்பட்டு தொல்லியல்துறை 2005-ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது. 

பட்டரை பெரும்புதூர் அகழ்வாராய்ச்சி

திருவள்ளூர் அருகே கொற்றலை ஆற்றின் கரையில் பட்டரைபெரும்புதூர் அமைந்துள்ளது. பல்லவர் காலத்தில் இவ்வூர் "பெருமூர்' என அழைக்கப்பட்டதை பல்லவ மன்னன் அபராஜிதவர்மன் கல்வெட்டு குறிப்பிடுகிறது. அண்மையில் இங்கு தமிழக தொல்லியத்துறை அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டது. அதில் கற்காலக் கருவிகள், பெருங்கற்கால பானை ஓடுகள், பண்டைய தமிழ் எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், கூம்பு வடிவ ஜாடிகள், ரோமானிய பானை ஓடுகள், உறைகிணறு போன்ற பல அரிய வரலாற்றுச் சான்றுகள் கிடைத்துள்ளது சிறப்பானதாகும்.

திருவாலங்காடு

திருவள்ளூர்-திருத்தணி சாலையில் அடுத்து உள்ளது திருவாலங்காடு திருத்தலம். தேவார மூவராலும் போற்றப்பட்ட திருத்தலம். சிவபெருமான் நடனமாடிய சபைகளில் இத்தலம் "ரத்தின சபை' என சிறப்பித்து கூறப்படுகிறது. இறைவன் இங்கு ஆடிய ஊர்த்துவ தாண்டவம் சிறப்பானது. காரைக்காலம்மையார் வரலாற்றோடு தொடர்பு கொண்ட திருத்தலம். இக்கோயிலில் கிடைத்த சோழமன்னன் ராஜேந்திர சோழன் காலத்தில் வெளியிடப்பட்ட திருவாலங்காடு செப்பேடு சோழர் வரலாற்றை அறிந்து கொள்ளப் பெரிதும் உதவுகிறது. கல்வெட்டுகளில் இவ்வூர்  ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து மேன்மலை மணவிற் கோட்டம் பழையனூர் நாட்டுத் திருவாலங்காடு எனக் குறிக்கப்படுகிறது. 

பழையனூர்

புகழ்பெற்று விளங்கும் திருவாலங்காடு பண்டைய நாளில் பழையனூரின் ஒரு பகுதியாகவே விளங்கியிருக்கிறது. கி.மு 1000 முதல் கி.மு. 300 வரை அதாவது சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் மக்கள் வாழ்ந்து வந்ததற்கான சான்றுகளாக விளங்குகின்றன. இங்கு கிடைத்த மண்பானைகள், பானை ஓடுகள் போன்றவை பூண்டி அருங்காட்சியத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. தொன்மையான மண்பாண்டங்கள் கிடைத்த இடத்தினை தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் விசயராகவன், பழையனூர் ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி சிவசங்கரன்  ஆகியோர் உடனிருந்து தொல்லியல் ஆய்வுக்கு உதவியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் தொல்லியல் கள ஆய்வில் 100-க்கும் மேற்பட்ட தொன்மை சிறப்பு மிக்க இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அமிர்தமங்கலம் என்ற ஊரில் முதுமக்கள் தாழிகள் மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறையால் அகழாய்வு செய்யப்பட்டுள்ளது. 

பழையனூர் ஊரிலும் காணப்பட்ட தொல்லியல் சான்றுகளும் சிறப்பானவையாக விளங்குகின்றன. எதிர்காலத்தில் இங்கு கள ஆய்வுகள் மேற்கொண்டு அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டால் பல வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கும் என்று உறுதியாக கூறலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT