தினமணி கொண்டாட்டம்

ஒப்பாரும் மிக்காரும் இல்லா சங்கீத சாகரம்!: காந்திஜிக்காக கதாகாலட்சேபம்...

26th Jul 2020 06:00 AM | ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன்

ADVERTISEMENT


இசை உலகில் கொடிகட்டிப் பறந்த ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், தனது பாதையை மாற்றிக்கொண்டு "ஹரிகதை' எனப்படும் கதாகாலட்சேபத்திற்கு ஏன் மாறினார் என்பது குறித்துப் பல கருத்துகள் நிலவுகின்றன. அவரது சாரீரம் ஒத்துழைக்காததால் ஹரிகாதைக்கு மாறிவிட்டார் என்பது அபத்தமான குற்றச்சாட்டு. சாரீர பலம் இல்லாமல் ஹரிகதையில் சோபிக்க முடியாது என்பதுதான் உண்மை.

சங்கீதக் கச்சேரிகள் செய்வதற்கு, முறையாக இசை கற்றுத்தேர்ந்து, நல்ல சங்கீத ஞானமும் சாரீர வளமும் இருந்தால் போதும். ஹரிகதைக்கு சங்கீதம் தெரிந்திருப்பது மட்டுமல்லாமல், சாஸ்த்திர, புராண, இதிகாசங்களில் ஆழங்காற்பட்ட புலமை வேண்டும். பல மணி நேரம் கேட்போரைக் கட்டிப்போட்டுக் கேட்க வைக்கும் தோற்றப் பொலிவும், சொற்பொழிவுத் திறமையும், இசையுடன் சொற்பொழிவையும் சம அளவில் கலந்து கதை சொல்லும் ஆற்றலும் வேண்டும்.

ஒலிபெருக்கி இல்லாத காலத்தில், வெங்கலக் குரலால் இசை தெரிந்த பண்டிதர்களையும், புராண இதிகாசங்களில் பழுத்த ஆன்மிகவாதிகளையும், பக்தி மட்டுமே தெரிந்த பாமரர்களையும் கட்டிப்போடும் வித்தகம் முந்தையா பாகவதரிடம் மட்டும்தான் இருந்தது.

திருவாரூருக்கும், திருத்துறைப்பூண்டிக்கும் இடையே மாவூர் என்ற கிராமத்தில் ஆர்.எஸ். சர்மா என்பவர் இருந்தார். மகாத்மா காந்தி முதல் அனைத்து அரசியல் தலைவர்களும் அவருக்கு நண்பர்கள். கல்கத்தாவிலிருந்து ஆங்கில நாளிதழ் ஒன்றையும் நடத்தி வந்தார். முத்தையா பாகவதரின் விசிறிகளில் அவரும் ஒருவர்.

ADVERTISEMENT

கல்கத்தாவில் ஹரிகதா காலட்சேப நிகழ்ச்சி நடத்துவதற்காக முத்தையா பாகவதருக்கு அழைப்பு விடுத்தார் மாவூர் சர்மா. பாகவதரும் அங்கு சென்றார். அந்த நேரத்தில் மகாத்மா காந்தி கல்கத்தாவில் முகாம் இட்டிருந்தார். காந்தியிடம் சென்று "எங்கள் தமிழகத்தில் இருந்து ஒரு மிகப்பெரிய இசை மேதை வந்திருக்கிறார். அவர் ஹரிகதா காலட்சேபம் செய்வதில் வல்லவர். தாங்கள் அதைக் கேட்க வேண்டுமே' என்றவுடன், ""இன்று மாலை என்னுடைய பிரார்த்தனை நேரம் முடிந்ததும் அவரை அழைத்து வாருங்கள். ஆனால், அரைமணி நேரம் மட்டுமே தருவேன். அதன்பிறகு நான் வேறு ஒரு வேலையாக வெளியே செல்ல வேண்டி இருக்கிறது'' என்று காந்திஜி கூறினாராம்.

அதற்கு சம்மதம் தெரிவித்து மாவூர் சர்மா முத்தையா பாகவதரை காந்தி குறிப்பிட்ட நேரத்திற்கு அவர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று பாகவதரை அறிமுகப்படுத்தினார்.

தனது பக்க வாத்தியங்களோடு அங்கே சென்ற முத்தையா பாகவதர் ""எந்தத் தலைப்பிலே உங்களுக்கு நான் ஹரிகதை நிகழ்ச்சி நடத்த வேண்டும்?'' என்று காந்தியைப் பார்த்து கேட்டார். ""எனக்கு இந்த தேசம் தான் பிடிக்கும்'' என்று காந்தி சிரித்துக்கொண்டே பதில் அளித்தார்.

சர்மாவிற்கு "பக், பக்' என்று அடித்துக் கொண்டதாம். ஏனென்றால் முத்தையா பாகவதர் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் மற்றும் வள்ளி கல்யாணம், சீதா கல்யாணம், ராதா கல்யாணம் இது போன்ற விஷயங்களில் மட்டுமே வல்லவர் என சர்மா நினைத்திருந்தார். ஆனால் சர்மா சற்றும் எதிர்பாராத விதமாக முத்தையா பாகவதர் ""தேசத்தைப் பற்றியே கதா காலட்சேபம் செய்கிறேன்'' என்று சொல்லி எந்த முன் தயாரிப்பும் இல்லாமல் அந்த இடத்திலேயே "பாரத தேசம்' எனும் தலைப்பிலே கதா காலட்சேபம் செய்தார்.

பாரத மாதா பற்றி சில பாடல்களைப் பாடி விட்டு பண்டைய காலத்து 56 தேசங்களையும் பட்டியலிட்டு விவரித்தார். இவர் பாகவத சம்பிரதாயத்தில் வந்தவர் என்பதால் மராத்திய அபங் பாடல்களையும் இடையிடையே சொல்லித் தனது கதா காலட்சேபத்தை அழகுபடுத்தினார்.

"அரைமணிநேரம் தான் தருவேன்' என்று கண்டிப்பாகச் சொன்ன காந்திஜி முத்தையா பாகவதரின் கந்தர்வக் குரலில் ஹரிகதையைக் கேட்டு 2 மணி நேரம் அங்கிருந்து அசையவில்லை. அழைத்துச் சென்ற சர்மாவிற்கோ ஒரே சந்தோஷம். "இவர் ஒரு மிகப்பெரிய இசை வித்தகர்' என வியந்து முத்தையா பாகவதரை பாராட்டி விட்டுச் சென்றார் காந்தி.

மாவூர் சர்மா தனது சொந்த ஊரில் கல்கத்தா காளிக்கு கோயில் அமைக்க வேண்டும் என விரும்பினார். கல்கத்தாவில் உள்ள காளி விக்கிரகம் போலவே உயர் ரக வெள்ளை நிற மார்பிள் கல்லில் காளி சிலை செய்து அதை சிறப்பு ரயில் மூலம் மாவூருக்கு கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகமும் வெகு விமரிசையாக செய்தார். மாவூர் காளி மீது 6 தமிழ்ப் பாடல்களை முத்தையா பாகவதர் இயற்றியதும் அப்பொழுதுதான்.

(தொடரும்)

ADVERTISEMENT
ADVERTISEMENT