தினமணி கொண்டாட்டம்

தினமணியும் நானும் : 1934 -2019

26th Jul 2020 06:00 AM

ADVERTISEMENT

 

தமிழ் உலகம் போற்றும் உன்னதப்பணி 


பள்ளிப் பருவத்தில் சென்னையில் படித்துக் கொண்டிருந்த போது கட்டுரைப் போட்டியொன்றில் பரிசாக இரண்டு புத்தகங்கள் கிடைத்தன. அதில் ஒன்று ராஜாஜி எழுதிய "வியாசர் விருந்து'. இந்தப் புத்தகம் ஒரு ரூபாய் விலையில் மலிவுப் பதிப்பாகத் தினமணி பதிப்பகம் வெளியிட்டிருந்தது. தினமணியுடன் என்னுடைய தொடர்புக்கு இதுவே காரணம்.

பெங்களூரில் குடியேறிய பின்னர் தமிழ் பத்திரிகைகளுக்கு எழுதத் தொடங்கிய போது, முதல் துணுக்கு தினமணி கதிரில் வெளியாயிற்று. ஆசிரியர் சாவியுடன் தொடர்பு ஏற்பட்ட போது, "வாசகர்களை முதலில் கவனிக்கச் செய்வது துணுக்குச் செய்திகள் தான். கட்டுரைகளுடன் துணுக்குச் செய்திகளையும் எழுதுங்கள்' என்றார்.

கூடவே பல துணுக்கு எழுத்தாளர்களையும் உருவாக்கினார். இன்றும் தினமணியின் இணைப்பிதழ்களில் பல துணுக்குச் செய்திகள் வெளியாவதை காணலாம். பல வாசகர்களை எழுத்தாளர்களாக மாற்றிய பெருமை தினமணிக்கு உண்டு.

ADVERTISEMENT

உண்மையில் தினமணி இதழல்ல இயக்கம் என்று குறிப்பிடுவது பொருத்தமானது தான். ஒரு பத்திரிகையின் வளர்ச்சியில் 85 ஆண்டுகள் சாதாரணமானதல்ல. நாட்டின் வரலாறு மட்டுமல்ல. சமூகத்தின் அடையாளங்கள் அனைத்தையும் தாங்கி நிற்பதும் பத்திரிகை தான்.

தமிழ் உலகம் போற்றும் தினமணியின் உன்னதப் பணியைத் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுத்தி வரும் ஆசிரியர் கி. வைத்தியநாதன் மற்றும் ஆசிரியர் குழுவினருக்கும் 70 ஆண்டு கால தினமணி வாசகன்  மற்றும் எழுத்தாளன் என்ற முறையில் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

-அ.குமார், பெங்களூரு  


வாசகர்களை எழுத்தாளராக மாற்றிய "தினமணி'


நான் பிறந்த ஊர் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள பழமார்நேரி கிராமம். நிறைய படிக்க வேண்டும் மருத்துவராகி மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என் ஆசை நிறைவேறவில்லை. ஆனால் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களை மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்று ஆசையை நிறைவேற்றியது தினமணி தான். 

நான் தினமணியின் 30 ஆண்டு கால வாசகி. சில ஆண்டுகளுக்கு முன் தினமணியின் கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றேன். அதைத் தொடர்ந்து ஆரோக்கியக் குறிப்புகள், மருத்துவ உணவு முறை, சமையல் குறிப்புகள் சிறு கட்டுரைகள் என எழுதுவேன். அவை தினமணியின் சிறுவர்மணி, மகளிர் மணி இதழ்களில் பிரசுரமாகி உள்ளன. வாசகி என்ற நிலையிலிருந்து என்னை எழுத்தாளராகவும் மாற்றியது தினமணி. மேலும் பலவிதமான வியாதிகளால் கஷ்டப்படுபவர்களுக்குச் சிறுதானியம் மற்றும் நவதானியம் மற்றும் மருத்துவக் குணமுடைய நாட்டு மருந்து பொருள்களைக் கொண்டு நான் தயாரித்த பொருளுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்தது. 

அந்த வகையில் நான் தயாரிக்கும் சிறுதானிய உணவுகளுக்காக 2015-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினத்தன்று ஜனாதிபதி மாளிகையில் விருது பெற்றேன். அந்த நிகழ்வினை புகைப்படத்துடன் மகளிர் மணியில் பிரசுரித்து என்னைப் பெருமைப்படுத்தியது தினமணி. 

-ராஜேஸ்வரி, திருவையாறு

ADVERTISEMENT
ADVERTISEMENT