தினமணி கொண்டாட்டம்

ரோஜா மலரே! 27 - குமாரி சச்சு

25th Feb 2020 02:04 PM

ADVERTISEMENT

எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசு, ஜவஹர்லால் நேருவை சந்தித்தது தான். நாங்கள் நடித்த குறும்படத்தின் பெயர் "கண்ணாடி' (Mirror). குழந்தைகள் எல்லோரும் நேரு மாமாவை சந்திக்கப் போகிறோம் என்ற செய்தி கேள்விப்பட்டவுடன் மகிழ்ச்சி கொண்டோம். நேரு சென்னைக்கு அப்பொழுது வர இருப்பதனால், அவரைச் சந்திப்பது மட்டும் அல்ல, நீங்கள் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்கலாம் என்று சொன்னவுடன் எங்களுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. நான் ரொம்பவே இந்தச் சந்திப்பை எதிர்பார்த்துக்காத்திருந்தேன்.
 நேருவை சந்திக்கும் அந்த நாளும் வந்தது. எங்களுடன் அன்று வந்திருந்தவர்கள் பலரும் குழந்தைகளாக இருந்தவர்கள் தான். அவர்களில் ஒருவர் இன்று நாட்டிய உலகின் முடி சூடா ராணியாகத் திகழும் டாக்டர். பத்மா சுப்ரமணியம். அவருடைய சகோதரர் சந்துரு, கவிஞர் வாலியின் மனைவி ரமண திலகம், எங்க அக்கா மாடிலக்ஷ்மி, மல்லிகா அப்பாதுரை அபஸ்வரம் ராம்ஜி, மற்றும் சிறந்த குச்சுப்புடி நடனமணியாகத் திகழும் ரத்ன பாப்பா.
 இவர்கள் தவிர மற்ற குழந்தைகள் வேறு ஊர்களில் இருந்து நேருவை பார்ப்பதற்காக சென்னை வந்தார்கள். ஆனால் இங்குள்ள எல்லோருமே பத்மா சுப்ரமணியம் தவிர, இந்தப் படத்தில் நடித்தவர்கள்தான். சில பிள்ளைகள் வட மாநிலத்தில் இருந்து வந்தவர்கள். அங்கு சென்றவுடன்தான், ஆளுக்கொரு ஒரு கேள்வி கேட்கவேண்டும் என்கிற, நினைப்பே வந்தது பல பெரியவர்களுடன் சேர்ந்து முடிவு செய்து கேள்வி கேட்க, அதை ஒளிப்பதிவு செய்தார்கள். முதல் கேள்வி பத்மா சுப்ரமணியம் கேட்க, அதற்கு நேரு பதில் சொன்னவுடன், அடுத்தக் கேள்வி நான் கேட்கவேண்டும். அவரைப் பார்த்தவுடன் என் பிரமிப்பு அடங்கவில்லை. கேள்வி கேட்க வேண்டும் என்று வாயை திறந்தால் காற்று தான் வந்தது.
 நான் தயங்குகிறேன் என்பதைப் புரிந்து கொண்டு நேரு என்னைத் தட்டிக் கொடுத்து, ஊக்கப்படுத்திப் பேச வைத்தார். அதற்குள் எல்லோரும் சகஜநிலைக்கு வந்து விட்டோம். எங்கள் எல்லோரையும் வைத்து புகைப்படமும் எடுத்தார்கள். அவருக்காக நான் நடனமும் ஆடி காண்பித்தேன். அந்த நடனத்தை எனக்குச் சொல்லிக் கொடுத்தவர் யார் தெரியுமா டாக்டர். பத்மா சுப்ரமணியம். அந்தச் சிறிய வயதிலேயே எனக்குச் சொல்லிக் கொடுக்கும் அளவிற்கு வளர்ந்தவர். நான் நடனம் ஆடியதை நேரு பார்த்துப் பாராட்டியது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.
 அந்தக் காலத்தில் எங்களுக்கு வேலையே சினிமாவில் நடிப்பது மட்டுமல்ல, சினிமா பார்ப்பது தான். "ஜனக் ஜனக் பாயல் பாஜே' என்று ஒரு இந்திப் படம் வந்தது. அந்தப் படத்தை இயக்கியவர் வி.சாந்தாராம். அவர் ஒரு சிறந்த திரைப்பட இயக்குநர். ஒரு செய்தியை இங்கு முக்கியமாக சொல்ல விரும்புகிறேன். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த சமயம். ஒரு நாள் இயக்குநர் வி.சாந்தாராம் சென்னைக்கு வருகை புரிந்தார். அப்போது "நவ்ரங்க்' படம் எடுத்ததற்காக அவருக்குப் பரிசு ஒன்றை அளிக்க விரும்பினார். நவ என்றால் 9 என்று அர்த்தம், அதனால் அவருக்கு 9 சவரனில் தங்க செயினை செய்து பரிசளிக்க விரும்பினார்.

அந்த நாளும் வந்தது. மேடையில் பிரதமர் மொரார்ஜி தேசாய் (என்றுதான் நினைக்கிறேன்), முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியும் கூட அமர்ந்திருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில், தான் கொண்டு வந்த செயினை இயக்குநர் சாந்தாராமிடம் கொடுக்க, அவர் எம்.ஜி.ஆரைப் பார்த்து, ""நீங்களே எனக்குப் போட்டு விடுங்கள்'", என்று கூற, எம்.ஜி..ஆர். செயினை அவர் கழுத்தில் போட முயற்சிக்க, அது கை தவறி கீழே விழ, உடனேயே எம்.ஜி.ஆர். குனிந்து அதை எடுக்க முயற்சிக்க, புகைபடக்காரர்கள் படமெடுக்க, அது சாந்தாராம் கால்களில் எம்.ஜி.ஆர். விழுந்தது போல் இருந்தது. அடுத்த நாள் படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர். என்ன சொன்னார் தெரியுமா? ""நான் அவர் காலில் விழுந்தாலும் தவறொன்றும் இல்லை. மிகப் பெரிய இயக்குநர் மட்டும் இல்லை. என்னை விட எல்லாவிதத்திலும் பெரியவர்"' என்று கூறினாராம்.
 பின்னாளில் எம்.ஜி.ஆர். நடிப்பில் உருவான ஒரு படம், இயக்குநர் சாந்தாராம் எடுத்த ஒரு படத்தின் தமிழாக்கம் தான். ஆமாம், சிறை தண்டனை என்பது கைதிகளை நல்வழிப்படுத்தவே அமைக்கப்பட்டவை என்ற எண்ணத்தை மக்கள் மனதில் விதைக்கும் ஒரு சிறந்த படத்தை எடுத்துள்ளார் வி.சாந்தாராம். அதுதான் "தோ ஆங்கேன் பாரா ஹாத்'" என்ற படம். இந்தப் படம் இந்திய திரை உலகில் ஒரு மைல் கல் என்று கூறலாம். பெர்லின் நகரில் நடந்த திரைப்பட விழாவில் வெள்ளிகரடி விருதையும், அமெரிக்காவிற்கு வெளியே எடுக்கப்பட்ட படங்களில் சிறந்த படம் என்ற விருதையும் பெற்ற படம் இது. இந்தத் திரைப்படத்தைத் தான் எம்.ஜி.ஆர். தனது நடிப்பில் "பல்லாண்டு வாழ்க" என்று தமிழில் நடித்து வெற்றிப் படமாக்கினார். மௌனப்படக் காலத்தில் சாந்தாராம் 6 படங்களை இயக்கினார். 1930 -ஆம் ஆண்டு மத்தியில் இந்தி, மராத்தி என இருமொழிகளிலும் படம் எடுக்கத் துவங்கினார்.
 இப்படிபட்ட வி. சாந்தாராம் ஒரு மிகப் பெரிய இயக்குநர் இயக்கிய படம்தான் "ஜனக் ஜனக் பாயல் பஜே". இந்தப் படம் ஒரு நாட்டிய பெண்மணியைப் பற்றிய படம். இந்தத் திரைப்படம் வட இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. "கதக்' என்ற நடனத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட படம். இந்தக் கதையில், பாரம்பரிய கலை வடிவமான "கதக்' நடனத்தை, படம் எடுக்கப்பட்ட காலத்துக்குத் தகுந்தாற்போல் மாற்றியமைத்து, அதே சமயம் அதன் மெருகு குலையாமல் வி.சாந்தாராம் திரைப்படமாக எடுத்து இருந்தார். இந்தத் திரைப்படம் கதக் நடனத்துக்குச் சமூகத்தில் இருந்த மதிப்பை பெருமளவில் உயர்த்தியதோடு சாந்தாராமுக்கு பல திசைகளிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது. உலகத் திரைப்பட ஆளுமைகள் வரிசையில் வைத்துப் புகழப்பட்டார் சாந்தாராம். படத்தின் கதாநாயகி சந்தியாவின் கதாபாத்திரத்தால் கவரப்பட்டவர்களில் பலரும் இருந்தனர். நடுத்தரக் குடும்பம் முதல் பெரிய வீட்டுப் பெண்கள் வரை "கதக்' பயில ஆர்வம் கொண்டனர்.
 வட இந்தியாவில் நிறைய "கதக்' நடனப்பள்ளிகள் உருவாகக் காரணமானதும் இந்தத் திரைப்படம்தான். இந்தப் படம் இந்தியாவின் முதல் வண்ணப்படமும் கூட. நடனக் கலைஞர்களைக் கதாநாயகர்களாகக் கொண்ட இந்தப் படம் அன்று மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதைத் தனக்குப் பிடித்த பல படங்களில் ஒன்றாகச் சொல்லியிருக்கிறார், நடிகர் கமல் ஹாசன்.
 அவர் சொன்னது இதுதான்: இந்தப் படத்தை எனது தந்தை தான் முதலில் பார்க்க சொன்னார். அவர் சொன்னதால் நானும் போய் பார்த்தேன்.. பார்த்த பின்னர் ஒரு நாள் முழுக்க எனக்கு அந்தப் படத்தின் நினைவாகவே இருந்தது. நாம் கண்டிப்பாக ஒரு படம் இது போல் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன்.
 குறிப்பாக நடனம் சம்பந்தப்பட்ட படமாக அது இருக்க வேண்டும் என்றும் தீர்மானம் செய்தேன். அன்று எடுக்கப்பட்ட முடிவின் படிதான் "சாகர சங்கமம்'" என்ற பெயரில் இயக்குநர் விஸ்வநாத் இயக்க, தான் நடித்த படம், இது "ஜனக் ஜனக் பாயல் பாஜே' என்று படத்தைப் பார்த்ததால் ஏற்பட்ட விளைவு", என்றும் கூறியுள்ளார் கமல்ஹாசன். பின்னாளில் வந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்குப் பிடித்த படங்களில் இந்த "ஜனக் ஜனக் பாயல் பஜே' படமும் இடம் பெற்றது.
 இப்படி எம்.ஜி.ஆர். புகழும் இயக்குநர், அவரது படத்தைப் பார்த்து நாமும் இப்படி ஒரு நடனம் தொடர்பான படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பிய கமல்ஹாசன், இயக்குநர் இமயம் பாரதிராஜா போன்றோர் பாராட்டும் இயக்குநர் சாந்தாராம் ஒரு வெற்றிகரமான இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர், சுமார் அரை டஜன் படங்களில் நடித்தும் இருக்கிற நடிகர் என்ற பல முகங்களைக் கொண்டவர் சாந்தாராம்.
 திரைப்படங்களில் ஒலியையும் ஒளியையும் நல்ல முறையில் புகுத்திய கலைஞர்களில் இவர் ஒரு முன்னோடி. நாம் குறிப்பிடும் "ஜனக் ஜனக் பாயல் பஜே' சிறந்த படம் என்று இந்திய அரசாங்கம் தேர்தெடுத்த படங்களில் ஒன்று. பல்வேறு விருதுகளைப் பெற்றது. எதற்கு இந்தப் படத்தினைப் பற்றிய விரிவான செய்தி என்று அடுத்த வாரம் சொல்கிறேன்.
 (தொடரும்)
 சந்திப்பு: சலன்
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT