தினமணி கொண்டாட்டம்

நூற்றாண்டு காணும் படைப்பாளிகள்  

16th Feb 2020 03:53 PM | எழுத்தாளர் லக்ஷ்மி வாதூலன்

ADVERTISEMENT1950-ஆம் வருடம். கூட்டுக் குடும்பமாக புரசைவாக்கம் கிருஷ்ணப்ப முதலி தெருவில் மாடியில் ஒரு போர்ஷன், குளியலறைக்குச் செல்லும் பாதையில், வலது பக்கம் ஒரு தடுப்புக்கதவு, அங்கு இன்னொரு போர்ஷன்.

ஒரு நாள் காலை அந்தப் போர்ஷனில் வசித்து வந்த ராதாபாய் என் சித்தியிடம், (அம்மாவின் ஓரகத்தி) ""பசுபதி அய்யர் போயிட்டாரம்மா!'' என்கிறாள் சோகத்துடன்.

""ஓ! போன வாரமே சமையல்காரி செüபாக்கியம் அவருக்கு உடம்பு மோசமாயிருக்குன்னு சொல்லிண்டிருந்தா. நாய் வேறு ஊளையிட்டதே! போயிட்டாரா? அடப் பாவமே.'' என்று சித்தி பதிலளித்தாள். வழக்கம் போல, கூட்டுக்
குடும்பத்தில் அடங்கி ஒடுங்கிப் போன என் தாயார் மவுனம் சாதித்தாள்.

ஆச்சரியப்பட வேண்டாம். புரசைவாக்கம் போர்ஷனில் வசித்து வந்தவர்களுக்கு  சமையலுக்கு என ஓரு பெண்மணி இருக்கும் வீடு, எப்படி பரிச்சயம் என்று புருவத்தை உயர்த்தாதீர்கள். செüபாக்கியம், பசுபதி அய்யர், ஈஸ்வரன் (அய்யரின் கடைசிப் பிள்ளை) அனைவரும் லக்ஷ்மியின் பிரபலமான "மிதிலா விலாஸில்' வரும் பாத்திரங்கள். அவர் நாவல்களைப் படிக்கும்போது கதாபாத்திரங்கள் ஏதோ நிஜமாகவே கண் முன் நடமாடுவது போல் பிரமை ஏற்படும்.

ADVERTISEMENT

மணமாகும் முன்னரே, மிதிலா விலாசின் மொத்தப் பொறுப்பும் தனக்குத்தான் என்று இரும்புப் பீரோ சாவியைப் பெற்றுக் கொண்ட கிரிஜாவின் ஆட்டபாட்டம்; தான் கல்லூரி நாளில் காதலித்த பாஸ்கரனை, தன் மைத்துனர் பெண்ணுக்கு கணவனாகப் போகிறானே என்று குமுறும் இளையாள் ரேவதி (நாயக்கர் மக்கள்); அழகான வாலிபன் தன் சினேகிதி கீதாவுக்குக் கிடைத்து விட்டானே என்ற பொறாமையில் வீண் வம்பு பேசி அந்தக் குடும்பத்தைச் சிதைக்க முற்படும் விமலா (லட்சியவாதி) என்று நாவலில் பல பாத்திரங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஜீவனுள்ள மானுடப் பாத்திரங்கள் போலவே, உயிரற்ற அசேதனப் பாத்திரங்களும் லக்ஷ்மியின் எழுத்தாற்றலினால் மெருகு ஏறின. பசுபதி அய்யர் இறந்த பதினாறாவது நாள் வக்கீல் வாசிக்கும் உயில், சயனடை உட்கொண்டு தற்கொலை செய்து கொள்ளும் முன் தன் காதலர்களுக்கு ரேவதி எழுதிய கடிதங்கள்; மணமாகாத ஆண்களைப் பற்றி வம்பு பேசும் பூந்திடல் லேடீஸ் கிளப்.

பொதுவாக, லக்ஷ்மியின் நாவல்களில் சஸ்பென்ஸாக ஒரு மைய நிகழ்வை வைத்திருப்பார். அதற்கான அறிகுறியாக நாவலின் துவக்க அத்தியாயங்களிலேயே ஒரு கோடி காட்டி விடுவார். அல்லது நடுப்பகுதியில்  கணவனது சாடையிலேயே இருக்கும் சிசுவை பார்த்து கீதா சந்தேகப்படும் நிகழ்வு. ஆனால் சஸ்பென்úஸ இல்லாமல், அதே சமயம் வித்தியாசமான பாத்திரத்தைக் கதை இறுதியில் கொணர்ந்து சம்பவங்களை இணைத்தவர். அந்த நாவல் 
"சூர்ய காந்தம்''.

"சூர்ய காந்தம்' நாவல் மிக வித்தியாசமானது. போதைப் பொருள் கடத்தல், சிறார்களை குழந்தைத் தொழிலாளியாக விற்பது, கல்வியின் அவசியம். இது போன்ற பல அம்சங்களைக் கொண்டு எழுதப்பட்ட நாவல்.

இதில் ஒரு வக்கீலை இறுதி அத்தியாயத்துக்கு முன்புதான் அறிமுகப்படுத்துவார். கதாநாயகனான தியாகராஜன், மேல்தட்டில் படுத்துக் கொண்டிக்கும்போது, கீழே வக்கீல், தான் வாதாடி விடுவித்த குற்றவாளியைப் பற்றி பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருப்பார்.

நாகம்மா என்ற மனநிலை பிறழ்ந்த பெண்மணி, கல்லால் அடித்துக் கணவனைக் கொன்ற வழக்கில், அவள் சார்பாக வாதாடினார் இந்த வக்கீல். வளர்ப்பு மகனை, வேறு தீய செயல்களுக்கு உடந்தையாக்கக் கணவன் முயன்றபோது ஓர் ஆவேசத்தில் கல்லால் அடித்துக் கொலை செய்து விடுவாள். இந்த ஆவேசக் கொலையையும், வேறொரு திட்டமிட்ட கொலையையும் (விஷம் வைத்து) வக்கீல் விவரிக்கையில், படுத்திருந்த தியாகராஜனுக்கு வியர்த்து கொட்டும்.

ஏனென்றால் நாகம்மா  அடைக்கலம் கொடுத்த சிறுவன்தான் தியாகராஜன். திட்டமிட்டு கொலை செய்தவள் அவனுடைய இப்போதைய காதலி. ஆரம்பப் பாராவில் குறிப்பிட்ட மிதிலா விலாசத்தைப் பற்றிச் சில வரிகள். பசுபதி அய்யர் இறந்த 10-ஆம் நாளன்று, தர்மாம்பாள் தன் பிள்ளைகளிடம் மன்றாடுவாள். ""அன்றைக்கு போட்ட சண்டை போறுமடா குழந்தைகளா, அப்பா காரியம் எல்லாம் ஆன மறுநாள் அவர் உயில் பிரகாரம் பாகப் பிரிவினை செய்து கொள்ளுங்கள். உங்களுக்குக் கோடிப் புண்ணியம் உண்டு'' மிதிலா விலாசத்தின் எஜமானி என்ற அகங்காரத்துடன் திரிந்து கொண்டிருந்த தர்மாம்பாள் ஆத்திரத்தில் துடித்துக் கொண்டிருந்த பிள்ளைகள் நடுவே கெஞ்சிக் கொண்டு, கண்ணீர் வழிய நின்ற அந்தக் காட்சி மிகவும் பரிதாபமானதாக இருக்கும். (அத்தியாயம் 33)

அதே போல் உயில் வாசிக்க வக்கீல் தொண்டையைக் கனைத்துக் கொண்டவுடன், பிள்ளைகள் மூன்று பேர், மனைவி தர்மாம்பாள் இவர்கள் ஆசையை தத்ரூபமாக வர்ணிப்பார். மிதிலா விலாஸ் பங்களா, தன் தங்கை பெண் தேவகிக்கு எழுதி விடுவார் பசுபதி அய்யர்.

மிதிலா விலாசை பற்றி எழுதும் போதே, ஸ்ரீமதி மைதிலி ஞாபகம் வருகிறது. இரண்டுக்கும் அசாத்தியமான ஒற்றுமைகள் பல உண்டு. தர்மாம்பாள்  ஸ்ரீமதி மங்களம்; ஈஸ்வரன்  நீலகண்டன்; சாம்பு அய்யர்  சாமண்ணா என்று பல, அதே மாதிரியான கூட்டுக் குடும்பக் கதை; ஆனால் முக்கியமான வேறுபாடு என்னவென்றால், மிதிலா விலாசில் கிரிஜாவின் பழைய காதல்  சஸ்பென்ஸாகக் கடைசியில் தெரியவரும்.

சினிமாவிலும், கிரிக்கெட்டிலும் இரண்டாவது இன்னிங்ஸ் என்று சொல்லுவார்கள். அதுமாதிரி தென் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பி வந்து (1976) மீண்டும் பல பத்திரிகைகளில் எழுதினார். பூக்குழி (கல்கி), அத்தை (குமுதம்),வானம்பாடிக்கு ஒரு விலங்கு (விகடன்), ஒரு காவிரியைப் போல (குங்குமம்), புதை மணல் (சாவி), மங்களாவின் கணவன் (கதிர்) மேலும் நிறைய மாத நாவல்கள்.

மேற்சொன்ன காவிரியைப் போல சாகித்ய அகாடமி பரிசு பெற்றது. தென் ஆப்பிரிக்க சூழலில் பிறந்து வளர்ந்து, நர்ஸாகப் பணியாற்றும் காவேரி என்ற பெண்ணைச் சுற்றியே கதை நகரும்.

அதில் வரும் வர்ணனைகளிலிருந்து ""தலையில் வெள்ளைத் துணியால் ஆன விசிறி அலங்காரம் செய்து கொள்ளத் தேவையில்லை என்பது அரசு உத்தரவு. அவள் வரை அது நல்லதாகி விட்டிருந்தது. இடை வரை மயில் தோகையாக விரிந்து தொங்கிய தன் அடர்ந்த கூந்தலை வாரி அழகானதொரு கொண்டையாக அவசரமாகச் சுற்றி முடிந்துக் கொண்டாள். வெளிர் ரோஜா வண்ண உதட்டுச் சாயத்தில் உதடுகள் மின்னுவதையும் மஸ்காராவில் கண் இமைகள் பட்டாம் பூச்சியின் சிறகு போல அலங்காரமாகத் துடிப்பதையும் கண்ணாடியில் பார்த்துத் தன் அழகிலே ஒரு கணம் மகிழ்ந்து போனாள்.''

பச்சைப் போர்வையணிந்தது போல ஒன்றன் பின் ஒன்றாக எழுந்து குவியலாகக் காணப்படும் ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறு குன்றுகளும், அந்தப் பச்சை போர்வையிலே சிதறிக் கிடக்கும் ரத்தினச் சுடர்கள் போல் சிவந்த பூக்களைத் தாங்கி நிற்கும் கல்யாண முருங்கை மரங்களும், அவைகளுக்கிடையே சூரிய ஒளியில் வெள்ளிக் கோடு போல நெளிந்து ஓடிக் கடலுடன் கலக்க அவசரப்படும் அம்கேனி ஆற்றின் அழகுத் தோற்றமும்.

பெரிய அண்ணன் மரணத்துக்குப் பின் சின்ன அண்ணன்  அண்ணியிடம் அவஸ்தைப்படுகிறாள் காவேரி. மேலும் பெரிய அண்ணியும் இதய நோயால் இறந்து போனவுடன்  நிலைமை மோசமாகிறது. நர்ஸ் வேலை பார்க்கும் காவேரி ஓர் ஆறு மாதம் விடுப்பு எடுத்துக் கொண்டு சென்னை வருகிறாள்.

உறவுக்காரர்களின் சுயநலம்; ஆசிரமத்தில் நிலவும் ஒத்துழைப்பின்மை; விடுதியில் நிகழும் முறைகேடுகள்  எல்லாவற்றையும் சந்தித்து மனம் நொந்து மறுபடியும் தென்ஆப்பிரிக்காவுக்கே சென்று, பழைய காதலரான தாமோதரனை மணம் செய்து கொள்ளுவாள். ஆனால் அரசியல் காரணங்களுக்காகத் தாமோதரன் சிறை செல்ல நேரிடும். என்றாலும் காவேரி மனம் தளராமலிருப்பாள்.

லக்ஷ்மியின் எல்லா நாவல்களிலும் தென்படும் ஓம் அம்சத்தைக் குறிப்பிட வேண்டும். பழைய சம்பவங்களை கொணரும் போது ஒரே அத்தியாயத்தில் மொத்தமும் எழுதாமல், விட்டு விட்டு வேறு வேறு அத்தியாயங்களில் பொருத்தமான நிகழ்வுகளுடன் இணைத்து கூறுவது.

சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நாவலில், காவேரிக்கு கராத்தே தெரியும் என்பதை 25-ஆவது அத்தியாயத்தில் விவரிக்கிறார். இன்னொன்று, இந்த நாவலில் தெ. ஆப்பிரிக்கா  இந்தியா வாழ்க்கை ஒப்பீடுகள், "காந்தி' பட விமர்சனம் போன்றவை இடம் பெறுகின்றன.

இத்தனை அபாரமான எழுத்தாற்றல் கொண்ட லக்ஷ்மி, இளமையில் கஷ்டப்பட்டிருக்கிறார். மருத்துவப் படிப்புக்கான கட்டணம் செலுத்தவே, விகடனில் தொடர்கதைகள் எழுதினார். கதை எழுதும் ஆர்வத்தை குடும்பத்தினரிடம் தெரிவித்த போது, எல்லாரும்  தாயார் உள்பட  சிரித்து விட்டார்களாம்.

""கதை எழுதுகிற மூஞ்சியைப் பார்'' என குட்டித் தங்கை வேடிக்கையாகச் சிரித்து விட்டாள். அழுகையும், கோபமுமாக அன்று நான் சாப்பிடாது செய்த சத்தியாககிரகத்தின் நினைவு, விகடனில் எழுத வேண்டும் என்று என்னுள் மலர்ந்த லட்சியம் 1940-ஆம் ஆண்டு நிறைவேறியது.

(1934-ஆம் ஆண்டு  விகடனுக்கு வயது 50  1928-1978  தொகுத்தவர் லக்ஷ்மி)
மிகத் தற்செயலாக எனக்கு "லக்ஷ்மி'யை நேரில் பார்க்க வாய்ப்பு ஏற்பட்டது. 1976-ஆம் வருடம் சென்னையில் செட்டில் ஆகி விட்டதாகக் கேள்விப்பட்டு, ஒரு நாள் பிற்பகல் அவரைச் சந்தித்தேன். பழைய நாவல்களைப் பாராட்டிப் பேசிக் கொண்டிருந்தேன். நடுவில் ஒரு சந்தேகம் எழுந்தது.

""காதலனுக்கு கடிதம் எழுதும் போது பேனா நிப் உடைந்துவிடும், அதை அபசகுணம் என்று எண்ணுவாள், சூர்ய காந்தத்திலா, அடுத்த வீடா?'' என்று கேட்டேன்.

""அடுத்த வீடு'' என்று பதிலளித்தவர் ""ஆம் இந்த நாவலைப் பற்றி ஒன்று சொல்லணுமே? கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த பெண் வேற்று சாதி பையனைக் காதலிப்பாள். அதற்காக கோவையைச் சேர்ந்த சமூக சேவகி கண்டனம் தெரிவித்து, வாசனுக்கு எழுதினார். ஆனால், வாசன் கவலைப் படவேண்டாமென்றும்  என்று தைரியம் கொடுத்தாரென்றும், நன்றியுடன் சொன்னார்'' லக்ஷ்மியிடம் ஒரு பழக்கம், நடந்து கொண்டே வேகமாய் பேசுவது. சமையல் கட்டுக்கும், கூடத்துக்கும் போய் வந்து கொண்டே கருத்துக்களை வீசினார். அப்போதைய காலகட்டத்தில் பிரபலமாக இருந்த "நியூ வேவ்' தன்மையை விமர்சித்தார். பாலுணர்வு ஒரு நார்மல் பயாலஜிக்கல் நீடு. அதற்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்.

வேறொரு பிரபல எழுத்தாளரின் மாத நாவலை குறிப்பிட்டு ""அதை அவர் ஆங்கிலத்தில் எழுதியிருக்கலாம்'' என்றார் லேசான கிண்டலுடன். தன்னுடைய "அத்தை'யை குமுதம் ஆசிரியர் பாராட்டினதைப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். ""அந்த அம்மா மசஆஞகஈஐசஎ  நல்லா செய்யறாங்க'' ஓரிரண்டு வருடங்களில் ராயப்பன்பட்டி கிளைக்கு மாற்றலான பிறகும் லக்ஷ்மியுடன் கடிதத் தொடர்பு இருந்தது. 1987-இல் அவர் காலமான போது, நான் சென்னையில் இல்லாதது ஒரு பெரிய குறையாகவே உணர்ந்தேன்.

மேலும் சில தகவல்கள் திரிபுரசுந்தரி என்ற இயற்பெயர் கொண்ட லக்ஷ்மி, தொட்டியம் என்ற கிராமத்தில் பிறந்தவர். தொட்டியத்திலும், தூய சிலுவை பள்ளியிலும் (திருச்சி) படித்தவர். ஸ்டான்லியில் மருத்துவப் படிப்பு முடித்தவர்.
லக்ஷ்மியின் முதல் சிறுகதை "தகுந்த தண்டனையா?' முதல் நாவல் "பவானி' லக்ஷ்மியின் இரண்டு நாவல்கள் திரைப்படமாக வெளி வந்துள்ளன. காஞ்சனா (காஞ்சனையின் கனவு). இருவர் உள்ளம் (பெண் மனம்) 1963  இருவர் உள்ளத்திற்கு திரைக்கதை வசனம்  கலைஞர் மு. கருணாநிதி. அவருடைய பெண் மனமும், மிதிலா விலாசமும் தமிழ் வளர்ச்சி கழகம் பரிசு பெற்றது.

2009-இல் தமிழக அரசு லக்ஷ்மியின் படைப்புக்களை, நாட்டுடைமையாக்க முன் வந்த போது, அவர் வாரிசுகள் மறுத்து விட்டார்கள். துணிவுக்கும், தன்னம்பிக்கைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய லக்ஷ்மி, 1947-57 கால கட்டங்களில், தொடர்கதைகளுக்கு ஒரு முக்கிய அந்தஸ்து கொடுத்தவர்களில் முக்கியமானவர். 

லக்ஷ்மி நூற்றாண்டு 
21 மார்ச் 1920-2020

ADVERTISEMENT
ADVERTISEMENT