தினமணி கொண்டாட்டம்

கவிஞர் மருதகாசி  

16th Feb 2020 03:48 PM | ரா.சுந்தர்ராமன் 

ADVERTISEMENT

 

தமிழ்த் திரைப்பட உலகில் பாடல்கள் எழுதுவதில் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் தனக்கென்று ஒரு இடத்தை  ஏற்படுத்துவதற்காக திரையுலகில் அடியெடுத்து வைத்து தலைமுறைகள் கடந்தும், தன் கவிநயத்தால், இசைக்காக மட்டுமே பாடல்கள் எழுதி ரசிகர்களை  இன்ப வெள்ளத்தில்  மூழ்கடித்தவர், அவர் திரைக்கவித் திலகம் என்றழைக்கப்பட்ட கவிஞர் அ. மருதகாசி. 1920-ஆம் ஆண்டு பிப்ரவரி  11- அன்று பிறந்த கவிஞருக்கு  நூற்றாண்டு  "2020' ஆகும்.

நாடகத்திற்கு பாடல்கள் எழுதிக்கொண்டிருந்த அ.மருதகாசி தமிழ்த் திரையுலகில் இரண்டாம் தலைமுறை ஆரம்பித்த 1949-இல் பாடல்கள் எழுத வந்தார். உடுமலை நாராயணகவி,  கா.மு.ஷெரிப், சுரதா, தஞ்சை ராமையாதாஸ், கே.டி.சந்தானம், கம்பதாசன், ஆத்மநாதன், கே.பி.காமாட்சி போன்றோர் சாதனையாளர்களாக வலம் வந்த காலகட்டம் அது.  

இசையமைப்பாளர்கள் கொடுத்த மெட்டுக்கு பாடல்கள்  எழுதுவதில் சாதனையாளராக இருந்த  அ. மருதகாசி - திருச்சி மாவட்டம் தா.பமூர் மேலக்குடிக்காடு என்ற கிராமத்தில் அய்யம்பெருமாள் - மிளகாய் அம்மாள் தம்பதியருக்கு மூன்றாவது பிள்ளையாக பிறந்தார். இவருக்கு முன் பிறந்த இரண்டு பிள்ளைகள் இறந்ததால், மூன்றாவதாக பிறக்கும் குழந்தைக்கு மூக்கில் துளையிட்டு மூக்குத்தி அணிவித்தால் எதுவும் ஆகாது, குழந்தை தங்கும் என்ற நம்பிக்கையைப் பின்பற்றி அ.மருதகாசிக்கு மூக்குத்தி அணிவித்தனர் அவரது  பெற்றோர். 

ADVERTISEMENT

வசதியான விவசாயக் குடும்பத்தில் பிறந்து  இண்டர்மீடியட் வகுப்பு வரை படித்த மருதகாசிக்கு எழுதப் படிக்கத் தெரியாத அவரது தாயார் அவ்வப்போது பாடிய கற்பனையான பாடல்கள்தான் கவிஞருக்கு கவிதைகள், பாடல்கள் எழுதுவதற்கு உந்து சக்தியாக இருந்துள்ளது. 

ஸ்ரீராமுலு நாயுடு, கே.வி.ஜானகிராமன் மற்றும் தி.ஜானகிராமன் போன்றோர் கல்லூரி நண்பர்களில் அதிக நெருக்கம் கொண்டவர்கள். 

கவிஞருக்கு கல்லூரி வாழ்க்கை கலகலப்பாகப் போய்க்கொண்டிருந்த போது குடும்பச் சூழ்நிலையால் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு கிராமத்திற்கு வந்து தன் தந்தையார் பார்த்து வந்த கிராம அதிகாரி பொறுப்பையும், குடும்பப் பொறுப்பையும் ஏற்றார்.  ஆனாலும் கவித்தாகம் தணியவில்லை. கும்பகோணத்தில் முகாமிட்டிருந்த ஸ்ரீ தேவி நாடக சபாவின் முதலாளி மறைந்த கே.என்.ரத்தினம், கவிஞரின் நண்பரான ஸ்ரீராமுலு நாயுடு வீட்டில் வாடகைக்குத் தங்கியிருந்தார். ஒரு நாள் நாயுடு ரத்தினத்திடம் மருதகாசியை அறிமுகப்படுத்தி, "இவர் நன்கு பாட்டெழுதுவார், இவரைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்' என்று சொன்னவுடன் ரத்தினம் தன்னுடைய நாடகக் கம்பெனியில் சேர்த்துக் கொண்டார்.  தேவி நாடக சபாவில் இருந்த ஏ.கே.வேலன் எழுதிய”"சூறாவளி'” நாடகத்திற்கான மெட்டைக் கேட்டவுடன் கவிஞர் பாட்டெழுதினார். 

தேவி நாடக சபாவினர் அரு.ராமநாதன் எழுதிய “"வானவில்'” நாடகத்தை மேடையேற்றுவதற்காக காரைக்குடியில் தங்கியிருந்தனர்.  நாடகத்தின் பாடல்களுக்கு இசையமைக்க திருச்சி லோகநாதன் அழைக்கப்பட்டிருந்தார். லோகநாதன் கொடுத்த மெட்டிற்கு கவிஞர் அ. மருதகாசி பாடல்களை எழுதிக் கொடுத்தார். பாடல்களின் கருத்தையும், இனிமையையும் வியந்து ரசித்த லோகநாதன், சேலத்திற்குச் சென்று மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரத்திடம்  நாடகத்திற்கான பாடல்களைப் பாடிக் காண்பிக்கிறார். சுந்தரம் பாடல்களைக் கேட்டவுடன் மருதகாசி-கா.மு.ஷெரிப் இருவரையும் மாடர்ன் தியேட்டர்ஸ் அலுவலகத்திற்கு வருமாறு தந்தி கொடுக்கச் சொல்கிறார்.  இவ்வாறு அ. மருதகாசியின் தமிழ்த் திரையுலகத்தில் பாடல் எழுதும் பயணம் ஆரம்பித்தது. 
சேலத்தில் தன்னைச் சந்தித்த மருதகாசி - கா.மு.ஷெரிப் இருவரையும் இசையமைப்பாளர் ஜி. ராமநாதனுக்கு அறிமுகப்படுத்தி "மாயாவதி' சரித்திரப் படத்திற்கு பாடல்கள் எழுத பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார் சுந்தரம். 
உடனே ஜி. ராமநாதன் மெட்டு கொடுக்க 

""பெண்ணெனும் மாயப் பேயாம் - பொய் மாதரை
என் மனம் நாடுவேனோ - அழகினால் - உலகமே அழியும்''”

என்று முதல் பாடலை புகழ் பெற்ற இசைமேதை ஜி. ராமநாதன் இசையில், உச்சதஸ்தாயில் பாடும் டி.ஆர். மகாலிங்கம் பாடியதன் மூலம்  மருதகாசியின் பாடல்கள் எழுதும் பயணம் இனிமையாகத் துவங்கியது. அடுத்த வரியில் "மீன் விழிப் பார்வை நோயால் - மெய்யறிவுதன்னிலே மாறுவேனோ' என பெண்களின் பார்வையை நோயிற்கு ஒப்பிட்டு காதலை வித்தியாசமாகச் சொல்லியிருப்பார்.

மாயாவதிக்கு பிறகு "பொன்முடி' படத்தில் அனைத்துப் பாடல்களையும் எழுதினார். படத்தில் அ. மருதகாசி அதற்குக் கீழ் ஷெரிப் என்று வரும். பல படங்களில் இருவரும் சேர்ந்தே பணியாற்றினார்கள். 

அதன் பின் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த  "மந்திரி குமாரி' படத்திற்கு   ஒரு பாடல் தவிர அனைத்துப் பாடல்களையும் அ.மருதகாசியே எழுதினார். இப்படத்தில் இடம்பெற்ற "உலவும் தென்றல் காற்றினிலே' "அன்னமிட்ட வீட்டிலே', "வாராய் நீ வாராய் போகுமிடம் வெகுதூரமில்லை' என மூன்று பாடல்களும் தமிழ் நாட்டிலும், வெளிநாடுகளிலும் பிரபலமாயின.  இலங்கை வானொலியில் மூன்று பாடல்களில் ஏதாவது ஒரு பாடல் ஒலிபரப்பு ஆகாத நாளே இல்லை எனக் கூறலாம்.  

"நீ வாராய் போகுமிடம் வெகுதூரமில்லை'” பாடல் எழுதுவதற்கு முன்பு படத்தின் இயக்குநர் எல்லிஸ் ஆர். டங்கன் பாடல் இல்லாமல் பாடல் சம்பந்தப்பட்ட காட்சியை படம் பிடித்து விட்டார். படத்தில் நடிகர் எஸ்.ஏ.நடராஜனும், நடிகை மாதுரி தேவியும் குதிரையில் அமர்ந்து மருதமலைச் சாரலுக்கு வருவார்கள். மலை அடிவாரத்திற்கு வந்ததும், இருவரும் குதிரையை விட்டு இறங்கி மருதமலையில் ஏறுவது போல் படமாக்கியிருப்பார். 

இந்தக் காட்சியைக்  காண்பித்து பாடல் எழுதச் சொன்ன இயக்குநர் எல்லீஸ் ஆர். டங்கனிடம் உடனே பல்லவியை எழுதிக் காண்பித்தார். பிறகு முழுப்பாடலையும் எழுதி முடித்துவிட்டார். ஏறக்குறைய எழுபது ஆண்டுகளுக்கு முன்பு - பாடல் காட்சியை படமாக்கிய பிறகு, காட்சியைப் பார்த்து பாடல் எழுதிய ஒரே கவிஞர் தமிழ்த் திரையுலகில் மருதகாசியாகத்தான் இருக்க முடியும் .

மாடர்ன் தியேட்டர்ஸின் ஒப்பந்தத்தில் இருக்கும் போதே, தியாகராஜபாகவதர், சுந்தரத்திடம் சிறப்பு அனுமதி வாங்கி தன்னுடைய "அமரகவி' படத்திற்கு பாடல்கள் எழுத வைத்தார். ஏனோ, படம் வெளிவர தாமதமாயிற்று, இதற்கிடையில் அருணா பிலிம்ஸார் தயாரித்த "ராஜாம்பாள்' படத்திற்கு ஞானமணி இசையில் அனைத்துப் பாடல்களையும் எழுதினார். அதில் ஒரு பாடல்

“வாழ்வு உயர வேண்டும் - நாட்டின்
வளமும் பெருக வேண்டும்
ஏழை எளியவர்க்கே - உதவும்
எண்ணம் பரவ வேண்டும்
பேதம் அகல வேண்டும் - மத 
பேதமகல வேண்டும் - ஜாதி
பித்தம் நீங்க வேண்டும் “
என்ற பாடல் இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்தக்கூடிய சமுதாயக் கருத்துகள் இடம் பெற்ற பாடலாகும்.

களம் கிடைக்கும் போதெல்லாம் விவசாயத்தையும் சமுதாயக் கருத்துகளையும் எழுதியவர் கவிஞர் மருதகாசி. 

மருதகாசி நூற்றாண்டு 20 பிப்ரவரி 1920 - 2020

என் அப்பா மருதகாசி 

- கவிஞர் மருதபரணி
கொள்ளிடக் கரையோரம் உள்ள எங்கள் கிராமத்தில் ஆற்றங்கரையில் ஏராளமான மரங்கள் இருந்தன. பறவைகள் ஏராளமாக வந்து அவைகளில் அமரும். குட்டி வேடந்தாங்கல் என்று சொல்லலாம். அந்த மரங்களின் நிழலில் அமர்ந்து எங்கள் பாட்டி தானாகப் பாடலை இட்டுக்கட்டி பாடுவார். அவரிடம் இருந்து தான் எங்கள் அப்பாவுக்கு இயற்கையாகவே பாடல் எழுதும் திறன் வந்திருக்க வேண்டும். 

அப்பாவுடன் பல ஆண்டுகள் அவர் பாடல் எழுதும்போது உடன் போயிருந்தேன். மெட்டுக்கேற்ப பாடல்கள் எழுதுவதில் அவர் தனித்துவம் பெற்று விளங்கினார். ஒரு மலையாள பாடல் வரியில், "மலையாளமே! எண்ட மலையாளமே!" என்று அவர்களது மொழியைப் புகழ்ந்து ஒரே பாடல் வரி வருகிறது. இதற்கு எப்படி தமிழில் எழுதப்போகிறார் கவிஞர் என்று இயக்குநரே கவலையுடன் இருந்தார். அப்பா தயங்காமல் உடனடியாக உதட்டசைவுக்கு ஏற்ப தமிழில் ஒரு வரியை உடனே எழுதினார்: "மலையாகுமே! திரு...மலையாகுமே!". உதட்டசைவு சிறப்பாக பொருந்துகிறது என்று இயக்குநர் மிகவும் பாராட்டி இருக்கிறார்.

பாடல்களை எழுதுவதில் அப்பாவுக்கு சோர்வு ஏற்பட்டதேயில்லை. ஒரே ஆண்டில் 48 படங்களுக்கு பாடல்களை எழுதினார். சொந்தமாக படம் எடுத்து பெரும் இழப்பு ஏற்பட்ட போதும் சிறிதும் கவலைப்படவில்லை. விவசாயம் இருக்கிறது. பார்த்துக்கொள்கிறேன் என்று கிளம்பி விட்டார். அந்த மனநிலையை விளக்கும் பாடல் ஒன்றை "ஆயிரம் ரூபாய்' படத்தில் எழுதினார்.

"ஆனாக்கா அந்த மடம். ஆகாட்டி சந்தை மடம்! அதுவும்கூட இல்லாக்காட்டி பிளாட்பாரம் சொந்த இடம்!", என்று தன் சொந்த விவசாய வாழ்க்கை ஆதாரமாக இருப்பதை மறைமுகமாக உணர்த்தி  பாடிவிட்டுத்தான் போனார்.

நான் படித்து முடித்தவுடன் இயக்குநராக ஆசைப்பட்டேன். அவருக்கு விருப்பம் இல்லை என்றாலும் இயக்குநர் எஸ்.பி. முத்துராமனுக்கு ஒரு கடிதம் கொடுத்து அனுப்பினார். தமிழில் அதிகமான பங்களிப்பு செய்ய முடியாமல் தெலுங்கு திரையுலகுக்கு போய் நிலைத்து நின்றேன்.  மொழிமாற்றுப் படங்களுக்கு கதை-வசனம், பாடல்களை எழுதுவதில் தீவிர கவனம் செலுத்தி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு திரைவசனம், பல படங்களில் பாடல்களும் எழுதி உள்ளேன்.

தன் வாரிசுகளை திரையுலகில் நுழைக்க அப்பா எப்போதும் விரும்பியதில்லை. எங்கள் அனைவரையும் நன்றாகப் படிக்க வைத்ததுடன் என் பெயரைச் சொல்லிக்கொண்டு எவரிடமும் நீங்கள் உதவி கேட்டு சென்று நிற்க வேண்டாம். உங்கள் திறமையால் உழைத்து முன்னுக்கு வாருங்கள் என்றார். இன்று அவரது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவருமே நல்ல நிலையில் இருக்கிறோம்!.

தன் குருநாதராக உடுமலை நாராயண கவியைக் கருதினார். மெட்டுக்கு பாட்டெழுதுவதில் அப்பா பெயர்பெற்ற கவிஞராக இருந்ததால் அவரது காலத்தில் உடுமலை நாராயண கவி அதிக புகழ் பெற்றவராக இருந்தாலும்  மெட்டுக்கு பாட்டெழுத வேண்டும் என்றால் இயக்குநர்களை அப்பாவை நோக்கி கைகாட்டி விடுவார்.

- தொகுப்பு: ரத்தினம் ராமசாமி 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT