தினமணி கொண்டாட்டம்

பெருமையைப் போற்றும்: காவல் அருங்காட்சியகம்

2nd Feb 2020 07:46 PM

ADVERTISEMENT

 

பொதுமக்களின் நண்பனாகவும், பாதுகாப்பும் அளித்து வரும் காவல்துறையின் சீரிய பணிகள் பற்றியும், அதன் சிறப்புகள் - மாற்றங்கள் பற்றி எடுத்துக்கூறும் அருங்காட்சியகம் கோவை மாநகரில் அமைந்துள்ளது. கோவை ரயில் நிலையத்திற்கு எதிரில் உள்ள ஹாமில்டன் மன்றத்தில் காவல்துறை அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

வரலாற்றுச் சான்றுகளைப் பார்த்தோமேயானால் தொன்றுதொட்டு மக்கள், ஊர், கோயில், போன்றவற்றை பாதுகாக்க காவல் அமைப்புகள் இருந்து வந்ததை அறிய முடிகின்றது.

சங்க இலக்கியங்களான புறநானூறு, மலைபடுகடாம், மணிமேகலை போன்றவைகளில் காவல் அமைப்புப்பற்றி கூறப்படுகிறது. புறநானூறு "ஊர்காப்பார்' என்ற அமைப்பினை குறிப்பிடுகிறது (புறம் 37:19) பல்லவ மன்னர் காலத்தில் "நாடுகாவல்' என்ற அமைப்பினைப் பற்றி கல்வெட்டுகள் கூறுகின்றன. சோழர் மன்னர்கள் காலத்தில் "பாடி காவல்', "பெரும்பாடி காவல், நாடுகாவல்' போன்ற அமைப்புகளைப் பற்றி அறிகிறோம்.

ADVERTISEMENT

தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டுகளில் திருமெய்க்காப்பாளர்கள் என்பவர்கள் குறிப்பிடப்படுவதைக் காணலாம். இவர்கள் திருக்கோயில் பாது
காவலர்களாக பணியாற்றியவர்கள். இன்று "மெய்க்காவல்' எனக் குறிப்பிடப்படுகின்றனர்.

கோவை நகரில் அமைந்துள்ள காவல் அருங்காட்சியகம் அமைந்துள்ள கட்டடம் வரலாற்றுச் சிறப்பு மிகுந்தது. இக்கட்டடத்தினை பிரிட்டிஷ் காவல்துறை அதிகாரி ஹாமில்டன் என்பவர் வாங்கி 1918-இல் கட்டப்பட்டதாகும். காவல்துறையினர் தங்குவதற்கும், ஓய்வு நேரத்தில் விளையாட்டுகள் விளையாடுவதற்கும் பயன்பட்டது. இக்கட்டடம் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு தற்போது அருங்காட்சியகமாக இயங்குவதுசிறப்பானது.

இக்காட்சியகத்தில் காவல்துறை அலுவலர்களின் சீருடை மாற்றங்கள், அலுவலர்களின் பதக்கங்கள், பதவிகளின் அடையாளங்கள், பயன்படுத்தும் துப்பாக்கிகள், வெடிகுண்டு ரவைகள், புகைப்படக் காமிராக்கள், மின் தகவல் தொடர்பு சாதனங்கள், இசைக்கருவிகள், தகவல் தொடர்பு சாதனங்கள், கலவரத் தடுப்பு ஆயுதங்கள், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் குண்டுகள், காவல் நிலையத்தில் பதிவேடுகள் வைக்க பயன்படும் மரப்பெட்டி, போன்றவை இடம் பெற்றுள்ளன.

வாள்கள்: 1708-இல் முதன்முதலில் தோற்றுவிக்கப்பட்ட “தேம்ஸ் நதி காவல்”, இங்கிலாந்தின் பழைமையான காவல் அமைப்பாக விளங்குகிறது. காவலர்களுக்கு பாதுகாப்பிற்காகவும், கப்பல்களில் நடைபெற்ற திருட்டு – கொள்ளையை தடுக்கவும், வாள்கள் வழங்கப்பட்டன. பின்னர் துப்பாக்கிகள் அறிமுகமான ஆண்டில் வாள் பயன்படுத்துவது குறைந்தது. அணிவகுப்பு நிகழ்ச்சிகளின் போது அதிகாரிகளால் தங்கள் பதவியை குறிக்கும் வகையில் அணியப்படுகிறது.

அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் மற்றும் முக்கிய நிகழ்வுகளின்போது பயன்படுத்தப்பட்ட வாள்கள் காட்சியில் இடம்பெற்றுள்ளன. இதனை 2018-ஆம் ஆண்டு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி திறந்து வைத்தார். மேலும் அவர் 2017-ஆம் ஆண்டு கோவை காவல் அலுவலக புதிய கட்டடத்தை திறந்து வைத்த போது எழுதிய குறிப்பும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

வெள்ளிவாள்: மறைந்த முதலமைச்சர் எம்.ஜி. ராமசந்திரனால் அளிக்கப்பட்ட வெள்ளிவாள் இடம் பெற்றுள்ளது, குறிப்பிடத்தக்கது. காவல்துறை - பொதுமக்கள் நட்புறவை மேம்படுத்த பணியாற்றுபவர்களுக்கு இது சுழற்கோப்பையாக வழங்கப்பட்டது என்ற குறிப்பும் காணப்படுகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா 2003-ஆம் ஆண்டு அனைத்து மகளிர் காவல் நிலைய துவக்கவிழாவின் போது வழங்கிய செய்தியும் நிழற்படமும் இடம் பெற்றுள்ளது.

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி 2001-ஆம் ஆண்டு கோவை காவல் ஆணையர் புதிய கட்டடம் மற்றும் காவலர் சமுதாயக் கூடத்தை திறந்து வைத்தபோது எழுதிய குறிப்பும் இடம் பெற்றுள்ளது. அதில் அவர் "காவல்துறை நாட்டின் கண்ணாகும்' என்று சிறப்பித்து எழுதியுள்ளார்.

பதிவேடுகள்: இக்காட்சியகத்தில் காவல் நிலையத்தில் உயரதிகாரிகள் ஆய்வு செய்த பதிவேடு (1865 - 1910) 1919-ஆம் ஆண்டு தங்கும் அறை கட்டண உணவுக் குறிப்பு பதிவேடு போன்றவைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. காவல் அருங்காட்சியகத்தில் முக்கியமான, குற்றங்கள் குறித்த குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன.

முக்கியமான வழக்குகள்: விஷஊசி வழக்கு (1970-72), கோவை கள்ள நோட்டு வழக்கு (1959) தொடர்பான பணத்தாளின் பிளாக்குகள், அச்சடித்த இயந்திரம், போன்றவையும் இடம் பெற்றுள்ளன.

(1964) மலையூர் மம்பட்டியானிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் , (2004) சந்தன கடத்தல் வீரப்பன் பயன்படுத்திய துப்பாக்கிகள், (1991) இலங்கை தமிழ் ஈழப் போராளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன.

காவல்துறையில் பணி செய்யும் மோப்ப நாய் படையின் பணி மிகவும் போற்றுதலுக்குரியது. குற்றம் நடைபெற்ற இடத்தில் ஆய்வு, வெடிமருந்து, போதை மருந்து போன்றவற்றை கண்டுபிடிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 1952-ஆம் ஆண்டு இப்பிரிவு துவங்கப்பட்ட குறிப்பு – காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

பீரங்கி: 1760 -ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க போரில் பயன்படுத்தப்பட்ட இரும்பு பீரங்கி அருங்காட்சியக வாயிலை அலங்கரிக்கிறது. கோவை மாவட்டம் சேவூர் புறக்காவல் நிலையத்திலிருந்து 1934-ஆம் ஆண்டு பெறப்பட்ட விளக்குத்தூண் இடம் பெற்றுள்ளது பழம் பெருமை வாய்ந்தது. மேலும் வாயிலின் அருகில், கார்கில் சண்டையின் போது பயன்படுத்தப்பட்ட பீரங்கி வாகனம் இந்திய நாட்டின் வீரத்தை பறைசாற்றும் வகையில் காட்சி அளிக்கிறது.

மக்களின் நண்பனாக, நடைபெறும் குற்றங்களைத் தடுத்து சேவை செய்து வரும் காவல் துறையின் சிறப்புகளை எடுத்துக்கூறும் வகையில் பல காவல்துறை அதிகாரிகளின் பெரும் முயற்சியால் கோவை காவல்துறை அருங்காட்சியகம் அமைந்துள்ளது பெருமை கொள்ள செய்கிறது.

(அருங்காட்சியக காட்சி நேரம் : காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரையும், உணவு இடைவேளைக்கு பின் மதியம் 2 மணி முதல் 4 மணிவரை)

கட்டுரையாளர் : தொல்லியல் துறை (ஓய்வு) சென்னை
 

ADVERTISEMENT
ADVERTISEMENT