தினமணி கொண்டாட்டம்

தமிழைப்போல் இளமை குன்றாமல் இருக்கும் தினமணி

2nd Feb 2020 09:55 PM

ADVERTISEMENT

அதிகாலை நாலரை மணிக்கு எழுகிற அப்பா யோகா செய்துவிட்டுப் பால் வாங்கப் போவார். ஆவின் பாலோடு, தினமணியும் வாங்கி வந்து என்னை எழுப்புவார். ஒரு கையில் தினமணியுடன் அப்பாவுக்கு பில்டர் காபி போட்டுக் கொடுத்தகாலம்! அது என் வாழ்க்கையின் வசந்தகாலம். தொலைக்காட்சி எல்லாம் எங்கள் வீட்டுக்குள் நுழையாத பொழுதுகளில் ஏழரைமணிக்கான வானொலிச் செய்திக்கு முன் நாட்டு நடப்புகளை முந்தித் தெரிந்துகொள்வதற்கு தினமணியே வாய்ப்பானது.

தினமணி "சிறுவர்மணி'யின் இளந்தமிழ் மன்றத்தை அக்கப் பக்கம் சிறுவர்களுடன் இணைந்து உருவாக்கி,நிகழ்ச்சிகளைப் படம் பிடித்து, அனுப்ப தினமணியில் அந்தப் புகைப்படம் வெளிவந்தது மறக்கமுடியாத ஓர் அங்கீகாரம்!

கல்லூரி நாள் விழாவின் மேடையில் நான் பரிசுபெற்ற புகைப்படம் தினமணி நாளிதழின் கட்டிங்காக எனது புகைப்படச் சேகரிப்பில் இன்றும் உள்ளது.

இளங்கலை வேதியியல் பயின்ற பிறகு தமிழ் ஆர்வத்தால் மதுரை காமராசர் பல்கலையில் தமிழ் இலக்கிய முதுகலையில் சேர்ந்திருந்தேன். அப்போது தினமணியில் புதிதாக தமிழ்மணி வெளிவரத் தொடங்கியிருந்தது. எங்கள் பேராசிரியர் தமிழண்ணல் "நல்லதமிழ் எழுத வேண்டுமா?' என்ற தொடரை எழுதி வந்தார். தமிழ்துறையின் பிற பேராசியர்களும் அவ்வப்போது தமிழ் இலக்கியம், இலக்கிய ஆளுமைகள் குறித்தெல்லாம் கட்டுரை எழுதுவார்கள். தமிழ்மணி மாணவர்களுக்குப் பெரும் ஊக்கமாக இருந்தது.

ADVERTISEMENT

அந்தக் காலகட்டத்தில் "கப்பலோட்டிய தமிழரின் தமிழ்ப்பணி' என்ற எழுத்துரையை அனுப்ப, செப்டம்பர் மாதம் தமிழ்மணியில் பிரசுரம் ஆனது. பேராசிரியர்களுக்கு இடையில் எனக்குத் தனியான அங்கீகாரத்தை அப்பிரசுரம் தந்தது. தமிழ்மணியில் தொடர்ந்த வாசகர் கடிதங்கள் "நல்லதமிழ் எழுதவேண்டுமா?' தொடருக்கான வினாக்கள், தமிழ்மணி கட்டுரைகளுக்கான
எதிர்வினைகள் எனத் தொடர்ந்த என் எழுத்துப்பணிக்குத் தொடர்களமாகத் தமிழ்மணி இருந்தது.

வ.உ.சி.யின் தமிழ்ப்பணி தொடர்பான நூல் ஒன்றுக்கு விமர்சனம் செய்ய எனக்குத் தினமணி தந்த வாய்ப்பு, அந்தத் தேசிய நாளிதழின் பட்டியலில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய இடம்!

வரப்பெற்றோம் பகுதியில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் பாரதி பற்றி தொ.மு.சி.யின் அறக்கட்டளைப் பொழிவு நூல் ஒன்றை இலவசமாக அளித்த தினமணிச் செய்தி வழி அந்நூலைப் பெற்றமை அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.

சம்பந்தம் ஆசிரியராக இருந்தகாலம் என்று கருதுகிறேன். மதுரைப் பதிப்பில் மதுரைக்கு என்று பக்கம் ஒதுக்கிய போது மதுரை பற்றிய பல செய்திகளைப் புனை பெயரில் தொடர்ந்து எழுதினேன்.

திருமணம், பணி என மதுரையை விட்டுப் புலம்பெயர்ந்த போதும்,அம்மா வீட்டுக்கு வரும் பொதெல்லாம் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் தினமணியையும், கதிரையும் எப்படியாவது புரட்டுவதற்கு நேரம் ஒதுக்கிவிடுவேன். (மூன்று மாதம் கழித்தே பழையபேப்பர் போடுவது எங்கள் வழக்கம்) என் வாழ்க்கையின் கோடைக்காலம் முடிந்த மீண்டும் வசந்தகாலத் திருப்பமும் தினமணியில்தான் எனலாம். கல்லூரிப் பணியில் மதுரைக்கு மாற்றலாகி வந்தபோது எனது பேராசிரியர்கள் தமிழண்ணல், திருமலை ஆகியவர்களை தொடர்ந்து நெடுநல்வாடைக்கு உரை ஒன்றை மீனாட்சி புத்தக நிலையத்தின் வழி வெளியிட்டிருந்தேன்.

கல்லூரி விட்டு வீடு வந்த பிறகு தினமணியின் மதுரை நிருபர் வழி தொடர்பு கொண்டதாக உடன் பணிபுரிந்த பேராசிரியர் கூறினார். காரணம் தெரியாத குழப்பத்தில் தொடர்பு கொண்ட போது நெடுநல்வாடை குறித்த நூல் விமர்சனத்திற்குப் புகைப்படம் வேண்டும் என்று கேட்டார்கள். இன்றைய தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன், கலாரசிகனாக அந்நூலைப் பற்றிய அலசி ஆராய்ந்து எழுத்துரையை எனது புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தார். தமிழ்மணியில் வெளிவந்த அந்த எழுத்துரை தமிழ்க் கல்விப்புலத்தில் எனக்கு ஓர் அடையாளத்தைத் தந்தது. ஆசிரியர் வைத்தியநாதன் தொடர்ந்து என்னை எழுதுவதற்கு ஊக்குவித்தார்.

தமிழ் மணியில் தொடர்ந்து அவ்வப்போது எழுதுவதன் வழி, வாசகியாக இருந்து எழுத்தாளராக மாறினேன்.

85 ஆண்டுகள் ஆகியும் தமிழைப்போல் இளமை குன்றாமல் இருக்கும் இந்த இதழ் பல நூற்றாண்டு காணட்டும் என வாழ்த்துகிறேன்!

கட்டுரையாளர் : பேராசிரியர், மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரி, மதுரை.

ADVERTISEMENT
ADVERTISEMENT