தினமணி கொண்டாட்டம்

மாரடோனாவை உயிர் பிழைக்க வைத்தவர் !

பிஸ்மி பரிணாமன்


"நான் கால்பந்து ஆட்டக்கடவுள் இல்லை... சாதாரண ஆட்டக்காரன்.. அவ்வளவுதான்' என்று எளிமையாகச் சொல்பவர் மாரடோனா!

கால்பந்தை தனது இதயமாகவும், கால்பந்தாட்ட மைதானத்தைத் தனது வீடாகவும் மதித்த டீகோ அர்மாண்டோ மாரடோனா கால்பந்து ஆட்டத்தின் கடவுளாகப் பவனி வந்தவர். மாரடோனா கேரளம் வந்த போது அவரது பிறந்த நாளையொட்டி, கால்பந்து மைதானம் போல வடிவமைக்கப்பட்ட கேக்கின் நடுவே கால்பந்தையும் உருவாக்கி மாரடோனாவை கேக்கை வெட்டச் சொன்னார்கள். "எனது வீட்டையும் இதயத்தையும் எப்படி என்னால் சிதைக்க முடியும்.." என்றவாறே கேக்கில் மைதானத்திற்கு வெளியே தெரிந்த பகுதியை சிம்பாலிக்காக வெட்டினார் மாரடோனா.

மாரடோனாவின் ஆயுள் சுமார் 15 ஆண்டுகாலம் நீட்டப்படக் காரணம் கியூபாவின் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ.

1986-இல் உலக கால்பந்து கால் இறுதி போட்டியில் மாரடோனா இங்கிலாந்து அணிக்கு எதிராக அடித்த கோல் மாரடோனாவின் தலையெழுத்தை மாற்றியது. அர்ஜென்டினா அணிக்காக மாரடோனா அடித்த கோலை "தப்பான ஆட்டம்' என்று இங்கிலாந்து அணி அலறியது; புலம்பியது. இங்கிலாந்து ஊடங்கங்கள் மாரடோனாவை "சாத்தான்' என்று திட்டித் தீர்த்தன. போட்டி முடிந்ததும் "உங்கள் கை பந்தில் பட்டதா?' என்ற கேள்விக்கு "கொஞ்சம் மாரடோனாவின் தலை... கொஞ்சம் கடவுளின் கை'... பந்தில் பட்டு "கோல்' ஆக மாறியது' என்றார், அர்ஜென்டினாவுக்கு உலகக் கோப்பை பெற்றுத் தந்த "பிதாமகன்'.

உண்மையில் மாரடோனா தன் தலையால் பந்தை முட்டினாலும் பந்து அவர் கையில் பட்டு கோலானது. இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர்கள் 7 பேர்களின் தடையை மீறி கடந்து சென்று கோல்கீப்பரையும் மீறி மாரடோனா அடித்த அந்த "கோல்', "மாயாஜால கோல்' என்று கால்பந்து ரசிகர்களால் இன்றைக்கும் கொண்டாடப்படுகிறது. அந்த "அதிசய கோல்' 20 - ஆம் நூற்றாண்டின் மிகச் "சிறந்த கோல்' விருதினையும் பெற்றது. உலக ரசிகர்களைக் கவர்ந்த இந்த கோல், கியூபாவின் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவையும் கவர்ந்து, மாரடோனாவின் ரசிகராக மாற்றியது. "மாரடோனா கியூபாவிற்கு வருகை தர வேண்டும்' என்று காஸ்ட்ரோ அழைப்பு விடுக்க 1987-இல் மாரடோனா கியூபா சென்றார். காஸ்ட்ரோவை "சித்தப்பா' என்று சொல்லும் அளவுக்கு மாரடோனா நெருக்கமானார்.

கிரீஸ் நாட்டிற்கு எதிராக மாரடோனா அர்ஜென்டினாவுக்காக ஆடிய கடைசிப் போட்டி அவரைப் புரட்டிப் போட்டது. மாரடோனாவின் ரத்தப் பரிசோதனை அவர் போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்த உலகக் கோப்பை போட்டிகளிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

மாரடோனாவின் உடல்நலம் .2004 -இல் மோசமாகப் பாதிக்கப்பட்டது. அளவுக்கு அதிகமாக போதைப் பொருள்களைப் பயன்படுத்தியதால் உடல் எடை 127 கிலோ கூடிப்போனது. அதுவே உயிருக்கு எமனாக மாறியது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாரடோனாவை கியூபாவுக்கு வரவழைத்து ஹவானா மருத்துவமனையில் சுமார் ஆறு மாத கால சிகிச்சையும், போதை மருந்து பழக்கத்தை மறக்க பயிற்சியும் மாரடோனாவுக்கு காஸ்ட்ரோ தரச் செய்தார்.

உடல் எடை இயல்பு நிலைக்கு வர... மீண்டும் கால்பந்தாட்டத்திற்கு மாரடோனா திரும்ப முடிந்தது. "காஸ்ட்ரோவின் கையோடு கை சேர்த்து குலுக்குவது மேகத்தோடு கை குலுக்குவது மாதிரி இருக்கும். கடவுளுக்குப் பிறகு, எனது ஆயுள் நீள காஸ்டரோவும் காரணம்.' என்று மாரடோனா நெகிழ்வார். காஸ்ட்ரோவின் உருவத்தை உலகம் பார்க்க வேண்டும் என்பதற்காக மாரடோனா தனது அதிர்ஷ்டமான இடது காலில் பச்சை குத்திக் கொண்டார்.

ஏழ்மையில் உழலும் குடும்பத்தில் நான்காவது குழந்தையாகப் பிறந்தவர் மாரடோனா. அப்பா செங்கல் தயாரிக்கும் தொழிலாளி. ஒரு சிறிய அறையில் 9 பேர்கள் அடங்கிய மாரடோனா குடும்பம் வசித்தது. கால்பந்தாட்டப் பயிற்சி, போட்டிகள் நடக்கும் போது எல்லை தாண்டி வரும் பந்தை எடுத்து கொடுக்கும் பையனாக மாறிய போது மாரோடனாவுக்கு வயது 12. இடைப்பட்ட நேரங்களில் பந்தை மார்புக்கு இடையில் வைத்துக் கொண்டு மாரடோனா செய்த வித்தைகள் சாகசங்கள் பார்வையாளர்களையும், கவர்ந்து இளநிலை கால்பந்தாட்ட வீரராக மாற்றப்பட்டார்.

1976 முதல் 1997- ஆம் ஆண்டு வரை 21 ஆண்டுகள் நின்று ஆடிய மாரடோனா, 490 போட்டிகளில் பங்கெடுத்து 311 கோல்கள் அடித்து சாதனை படைத்தார். மாரடோனா 4 உலகக் கோப்பை போட்டிகளில் அடுத்தடுத்து விளையாடியுள்ளார். மாரடோனா மகன் டீகோ சிங்காரா தந்தை வழியிலேயே கால்பந்து ஆட்டக்காரராகப் பயணிக்கிறார். இந்தியாவில் மாரடோனா ரசிகர்கள் மேற்கு வங்காளம், கேரளம், கோவா, நாகலாந்து மாநிலங்களில் மாரடோனா பெயரில் கால்பந்து கிளப்கள் நடத்தி வருகிறார்கள். கோவா அரசு மாரடோனா சிலையை உருவாக்க 2018 -இல் முடிவு செய்தது.

மாரடோனா இந்தியாவிற்கு இரண்டு முறை வருகை தந்துள்ளார். உலகில் வேறு யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு மாரடோனாவுக்குக் கிடைத்தது. கொல்கத்தாவில் சொந்த சிலையை திறந்து வைக்கும் வாய்ப்பினை கொல்கத்தாவாசிகள் 2017-இல் மாரடோனாவுக்கு வழங்கினார்கள். 1986 -இல் அர்ஜென்டினா அணிக்காக மாரடோனா கால்பந்து உலகக் கோப்பையைப் பெற்றுக் கொண்ட போது எடுத்த நிழல்படத்தை அடிப்படையாக வைத்து 12 அடி உயரச் சிலை உருவாக்கப்பட்டது.

மாரடோனாவுக்கு நான்கு மனைவிகள். 5 வாரிசுகள். உலகமெங்கும் கால்பந்து ஆர்வலர்கள் மாரடோனாவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்ற நிலையில், இந்தியாவைச் சேர்ந்த மணல் சிற்பி சுதர்சன் பட்நாயக் மாரடோனா உருவத்தை மணலில் உருவாக்கியுள்ளார்.

கால்பந்து என்றால் "பிரேசில் ... பிரேசிலின் பீலே' என்றிருந்த நிலையை மாற்றி கால்பந்து என்றால் அர்ஜென்டினா... அர்ஜென்டினாவில் மாரடோனா என்று ஆர்வலர்களின் கவனங்களைத் திரும்பியவர் மாரடோனா..!

தனது சுயசரிதை புத்தகத்தை 2000-இல் வெளியிட்ட மாரடோனா ,'கால்பந்தாட்டத்தில் யாராலும் தவிர்க்க முடியாத ஆளுமையாக உயர்ந்து விட்டவர்...!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT