தினமணி கொண்டாட்டம்

தமிழர்களைப் பின்பற்றும் கம்போடியர்கள்

6th Dec 2020 06:00 AM | -விஷ்ணு

ADVERTISEMENT


சங்க காலம் முதல், தமிழரின் வாழ்வில் பனைமரம் ஓர் அங்கமாகவே இருந்துள்ளது. அதற்கு உதாரணம் தமிழர்கள் பனை ஓலைச்சுவடிகளில்தான் தங்களின் இலக்கியங்களையும், வரலாறுகளையும் பாடல்களாக எழுதினார்கள். பழந்தமிழர் வாழ்வில் பனை மரம் கற்பக விருட்சமாக கருதப்பட்டது. விழாவிற்கும் (திருமணம் -தாலி மற்றும் காதணி), ஓலைச்சுவடி, இனிப்புக்கும், மர வேலை, நாட்டு மருந்து ஆகிய பல்வேறு வகைகளில் பயன்படக்கூடிய அறிய மரம் பனை.

தொல்காப்பியமும், திருக்குறளும் பனை ஓலைகளின் மூலம்தான் காலகாலமாகக் காப்பாற்றப்பட்டு இன்று நம் கைகளுக்கு கிடைத்துள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மொழியையும், தமிழகத்தின் கிணறுகளையும் வற்றாமல் வைத்திருந்த பனை மரங்கள் தமிழர்களின் முகவரியும் கூட! இதே போல் கம்போடியா நாட்டு மக்களும் பனை மரத்தை தங்களது வாழ்வின் ஓர் அங்கமாகவே கொண்டாடி வருகிறார்கள். அந்நாட்டு தேசிய மரமே பனை மரம்.

உலகில் ஒரு மரத்தின் அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பயன்படும் என்றால், நிச்சயம் அது பனை மரமாகத்தான் இருக்கும் என்று கம்போடிய மக்களின் நம்பிக்கை. இங்கே பூங்காக்களில் வண்ண செடிகளையும், குட்டையான வெளிநாட்டு ரக மரங்களையும் வளர்க்கிறோம். அங்கே பனை மரங்கள் இல்லாத பூங்காக்களைப் பார்க்க முடியாது.

நம்முடைய வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு டீ, காபி கொடுத்து வரவேற்கிறோம். ஆனால் கம்போடியா மக்கள் பதநீர் மற்றும் பனை மரத்திலிருந்து பெறப்பட்ட பொருட்களை மட்டுமே விருந்தினர்களுக்குக் கொடுக்கிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் உண்டு. பதநீர் அருந்திய நபர்களுக்கு மூட்டுவலி, பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் தொந்தரவு இல்லாமல் இருக்கும் என்பது நம்பிக்கை. கால்சியம் பற்றாக்குறையால் ஏற்படும் குறைபாடுகள், பல் சம்பந்தமான குறைபாடுகள் இருக்கவே இருக்காது. இதுபோல பல நோய்களைக் குணப்படுத்தி உடலுக்கு உறுதியைத் தரும். இன்றும் கம்போடிய மக்கள் உறுதியாக இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம். அங்கு சுத்தமான பனங்கருப்பட்டி, பனை வெல்லம் போன்ற பொருட்கள் எல்லா இடங்களிலும் கிடைக்கும். இந்தப் பொருள்களைத்தான் கம்போடிய மக்களும் பெரிதளவில் விரும்புகின்றனர்.

ADVERTISEMENT

மேலும் கம்போடியாவில் கிராமங்கள் இன்னும் பனை ஓலை வீடுகளை விட்டு கான்கிரீட் வீடுகளுக்கு மாறவில்லை. பனை ஓலைத் தொப்பி, பனை ஓலை விசிறி, பனங் கிழங்கு, பனம் பழம், பெட்டிகள், மரச் சாமான்கள் எனப் பல பொருட்கள் பனை மரத்தால் ஆனவையே. ஒவ்வொரு பொருளிலும் பனை ஓலையை முன்னிலைப்படுத்தவும் அவர்கள் தவறவில்லை. பனை ஓலைத் தட்டுகள், கரண்டிகள், பாத்திரங்கள் ஆகியவைதான் கம்போடிய மக்களின் பெரும்பாலான உபயோக பொருள்கள்.

கம்போடிய மக்கள் அனைவரும் கண்டிப்பாக தொப்பி அணிந்திருப்பார்கள். அதனை ஒரு ஸ்டைலாகவும் வைத்திருக்கிறார்கள். அவர்கள் அணிந்துள்ள தொப்பி எதனால் ஆனது என தொட்டுப் பார்த்தால் பனை ஓலையால், வண்ணம் பூசப்பட்டுச் செய்யப்பட்டிருகிறது.

கம்போடியாவிலும் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஏராளமான பனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அங்குள்ள அரசும் பனை மரங்களைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

கம்போடியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் நேரடித் தொடர்பு என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கிறது. கடல் வாணிபம் மூலம் உலகின் அனைத்து மூலை முடுக்குகளுக்கும் பயணித்த தமிழர்கள் அங்கே பொருட்களை மட்டுமல்ல, பண்பாட்டையும் கலாசாரத்தையும் பகிர்ந்து கொடுத்தே வந்திருக்கிறார்கள். உண்மையில் தமிழர்கள் வியந்து பாராட்டி, பெருமைப்பட்டுக் கொள்ள ஏராளமான வரலாற்று அம்சங்கள் கம்போடிய மண்ணில் உண்டு என்கிறார்கள் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளர்கள்.

அதற்கேற்ப கம்போடியாவில் கால் வைத்தவுடன் நமக்கு முதலில் தோன்றுவது நம்ம ஊரைப் போல புற்கள், செடி கொடிகள், மா, வாழை, தென்னை... போன்றவை தமிழ்நாட்டில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

அங்குள்ள தட்ப வெப்பம், மண், நீர், காற்று, வெளிச்சம் என அனைத்துமே நம்முடைய தமிழகத்தில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன.

உண்மையில், தமிழும், தமிழ் நாகரீகமும் அனைத்து மொழிகள் மற்றும் அதனையொட்டிய நாகரீகங்களுக்கு மட்டும் மூத்தது அல்ல பல பண்பாடுகளுக்கு இன்றளவும் ஒரு வழிகாட்டியாகவும் திகழ்கிறது.

பனை மரம் வளர்ப்பில் முன்னணியில் இருந்தது தமிழ்நாடு. முன்பு கிருஷ்ணகிரி மத்தூர், பட்டுகோட்டை, அறந்தாங்கி, சிவகங்கை, பரமக்குடி, காரைக்குடி, ராமநாதபுரம், காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் திண்டிவனம் போன்ற பகுதிகளில் அதிகம் பார்க்கலாம். தற்போது அந்தப் பகுதிகளில் கூட பனை மரத்தை பார்ப்பது அரிதாகிவிட்டது.

Tags : தினமணி கொண்டாட்டம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT