தினமணி கொண்டாட்டம்

கிளியோபாத்ராவின் ஊசி

30th Aug 2020 06:00 AM | -டி. எம்.இரத்தினவேல்

ADVERTISEMENT


கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகள் முன்னதாக எகிப்து மன்னனாக விளங்கியவன் மூன்றாம் எதிமோஸ். இவன் சிறந்த போர் வீரன் மட்டுமல்ல, கட்டடக்கலை நிபுணனும் கூட . புகழ்பெற்ற ஹீலியோபோனிஸ் என்ற கதிரவன் கோயிலை அலங்கரிக்க இரண்டு பிரம்மாண்டமான தூண்களை நிறுவினான். இவை "கிளியோபாத்ராவின் ஊசி' என்று அழைக்கப்பட்டன.

ஒரே கருங்கல்லில் ஒரு கம்பம். ஒவ்வொன்றும் எழுபது அடிக்குமேல் நீளம். ஒவ்வொன்றின் எடையோ நூற்று எண்பது டன்னுக்கும் அதிகம். பிரமிட் போன்று சதுர வடிவம் உள்ள முனை. கூர்மையான உயர்ந்த கோபுரம். இப்படிப் பல தூண்கள் புராதன காலத்திய எகிப்து ஆலயங்களின் முகப்பு வெளிகளை அலங்கரித்தன. கார்னாக், லக்சார் என்ற இடங்களில் இந்த பிரம்மாண்டமான தூண்கள் நிறுவப்பட்டிருந்தன.

நம் நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் உள்ள கொடி மரங்களுக்குப் பித்தளை அல்லது செம்புத் தகடுகளில் கவசம் போர்த்தி இருப்பார்கள் அல்லவா?

அதே போன்று எகிப்தில் சில தூண்களில், நுனியில் குறுகிய கூர் கோபுரங்களில் பளபளக்கும் உலோகங்களின் கவசத்தகடுகள் போர்த்தி இருந்தனர்.

ADVERTISEMENT

கார்னாக் என்ற இடத்தில் ஹாட்ஷிபுட் என்ற மன்னன் நிறுவிய அற்புதத் தூண் தொண்ணூற்று ஏழு அடி உயரம் கொண்டது. அதில் பொறிக்கப்பட்டிருந்த சாசனங்கள், இத்தூணை ஏழே மாதத்தில் செய்து முடித்ததாகக் கூறுகின்றன.

காலம் சுழன்றது எகிப்தில் பாரோக்கள் ஆட்சி நகர்ந்தது. ரோமானிய மன்னனும் பிரம்மாண்டமான தூண்களைக் கண்டு ஆச்சர்யப்பட்டான்.

அகஸ்டஸ் சீசரின் பொறியாளனும் அடிமைகளும் கூடி அங்கிருந்த இரண்டு மாபெரும் தூண்களைப் பிடுங்கி எடுத்து வந்து அலெக்ஸாந்திரியா நகரில் புதிதாய் சீசருக்கு நிர்மாணித்த அரண்மனை வாயலில் நட்டு விட்டார்கள்.

பதினைந்து நூற்றாண்டுகள் கழிந்தன. இரண்டு தூண்களில் ஒரு தூண் சாய்ந்தது. கால வெள்ளத்தில் யார் யாரோ வந்து ஆட்சிபுரிந்துவிட்டு மாயமானார்கள்.

கடைசியாக எகிப்தில் புகுந்த பிரிட்டிஷ்காரர்களான வெள்ளையர் பார்வையில் பிரம்மாண்டமான, அதிசயமான, "கிளியோபாத்ராவின் ஊசி' என்று அழகிய பெயர் பொறிக்கப்பட்ட தூண் சிக்கியது.

"கிளியோபாத்ராவின் ஊசி' என்று புகழ்பெற்ற மாபெரும் இக்கல்தூணையும் அவர்கள் இங்கிலாந்துக்குக் எடுத்துச் செல்ல முடிவு செய்தார்கள். இந்தப் பெரிய தூணைவிட, நீண்டதாகப் பெரிய இரும்புக் குழாய் ஒன்றைச் செய்தார்கள். ஏராளமான ஆட்கள் துணைக்கொண்டு அதனுள் தூணை இட்டார்கள். பிறகு கனமான உலோகத் தகட்டால், இரும்புக் குழாயின் இரண்டு புறமும் நன்றாக மூடி சீல் வைத்தார்கள்.

இப்படி தயாரான பெரிய இரும்புக் குழாயைக் கடலில் மிதக்கவிட்டு அதை ஒரு உறுதியான நீண்ட கயிற்றில் கப்பலின் பின்னால் பிணைத்துவிட்டார்கள். இந்த இரும்புக் குழாய் பிரம்மாண்டமான கல்தூணுடன் கடலில் மிதந்த வண்ணம் கப்பலைத் தொடர்ந்து.

ஆனால், பிஸ்கே வளைகுடாவில் ஒரு பெரிய ஆபத்து ஏற்பட்டது. பயங்கரப் புயல் வீசி கப்பலை நிலை குலையச் செய்ய மாலுமிகளுக்குப் பயம் கண்டுவிட்டது. அந்தப் பிரம்மாண்டமான நீண்ட கல்தூண் புயலின் சீற்றத்தால் கப்பலோடு வந்து உராய்ந்தால் கப்பல் தவிடு பொடியாகி விடுமேயென்று அஞ்சி இணைப்பைத் துண்டித்து விட்டார்கள்.

அப்படியும் கல்தூண் கொண்ட குழாய் கடலில் மூழ்கவில்லை. அது தன்னிச்சையாக வேறு ஒருபுறம் மிதந்து சென்றுவிட்டது. இக்குழாயை வேறொரு கப்பல் தலைவன் கண்டு, அதைத் தன்னுடைய மரக்கலத்தில் மாட்டிக் கொண்டு, இங்கிலாந்துக்குக் கொண்டு வந்து விட்டான்.

"கிளியோபாத்ராவின் ஊசி' என்று அழைக்கப்பட்ட அந்தக் கல் தூண் தேம்ஸ் நதிக்கரையில் இன்றும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. இது நிகழ்ந்தது கி.பி. 1877 -ஆம் ஆண்டு. மற்றொரு தூணின் கதி என்ன?

அந்தக் கல்தூண் அமெரிக்காவிற்குப் போய் நியூயார்க் நகரில் மத்திய பூங்காவில் கி.பி. 1899- ஆம் ஆண்டு முதல் அலங்காரப் பொருளாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT