தினமணி கொண்டாட்டம்

ரோஜா மலரே! - கதாநாயகி ஆனேன்: குமாரி சச்சு - 53

23rd Aug 2020 06:00 AM | சலன்

ADVERTISEMENT

"அன்னை' படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது ஒரு நாள் என்னை அழைத்து சென்று ஒருவரை அறிமுகம் செய்தனர். அவர்தான் இயக்குநர் ஏ.சி. திருலோக்சந்தர். பின்னாளில் அவரை நாங்கள் எல்லோரும் ஏசிடி என்றுதான் அன்பாக அழைப்போம். என்னைப் பார்த்த உடனேயே அவர் "ஓகே' சொல்லி விட்டார். ஆனால் ராஜா ராணி கதை என்பதனால் அந்த உடை அலங்காரம் செய்து பார்க்க வேண்டும் என்று அவர் ஆசை பட்டார். ஓகே என்று சொன்ன பிறகு தான் எனக்கு ஒரு டெஸ்ட் எடுத்து பார்க்க வேண்டும் என்று முடிவு செய்ய பட்டது. நான் முன்பே நடித்தவள் தான் என்றாலும் எனக்கும் டெஸ்ட் எடுத்து பார்த்த பிறகுதான் என்னை முழுமையாக ஒத்துக் கொண்டார்கள். என்னைப் பார்த்து அவர் ஓகே சொன்ன பிறகு தான் நானும் முதன் முதலாக ஏசிடி அவர்களை பார்க்கிறேன். 

அவரைப் பற்றி நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். இயக்குநர் ஏசிடி இதற்கு முன்பே சிட்டாடல் திரைப்பட நிறுவனத்தில் வேலை செய்து இருக்கிறார் என்று பிறகு எனக்கு தெரிந்தது. 

அதே போல் ஆனந்தனும் அதில் புதுமுகம் தான். நாங்கள் இருவரும் முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் கதாநாயகன், கதாநாயகி பாத்திரத்திற்கு புதியது தானே? சில நாட்களில் என்னையே கதாநாயகியாக போடலாம் என்று முடிவு தெரிஞ்ச பிறகு, நான் மிகவும் சந்தோஷப்பட்டேன்.

நான் முன்பே சொன்னது போன்று ஏவிஎம் நிறுவனத்தின் மூலம் தான் எனக்கு எல்லா மகிழ்ச்சியான விஷயங்களும் நடைபெற்றன. இதில் ஒரு விஷயத்தை நீங்கள் எல்லோரும் பார்க்க வேண்டும். நான் ஒரு புது முகம், ஆனந்தனுக்கும் அப்படித்தான், ஏ.சி. திருலோக்சந்தர் இயக்கப் போகும் முதல் படமும் இது தான். திருலோக்சந்தர் "குமாரி' படத்தில் வேலை செய்யும்போது ஏ.வி.எம் செட்டியார் பார்த்தாராம். அப்புறம் பல வேலைகளுக்கு இடையில் மறந்து போய் விட்டிருக்கலாம். 

ADVERTISEMENT

இந்த திரைப்பட துறைக்கு எப்படி ஏசிடி வந்தார் என்று அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 

""என் தாயார் நிறைய புராண கதைகளை என்னிடம் சொல்வார். அதனால் எனக்கு கதை எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது. "மிஸ் சந்திரா எம்.ஏ', "திருசந்தர்', "திருலோகசந்தர்' என்ற பெயர்களில் பல கதைகளை எழுதி இருக்கிறேன். ஆனால், என் தந்தைக்கு நாடகம், சினிமா என்றாலே பிடிக்காது. நான் கலெக்டர் ஆகவேண்டும் என்று வற்புறுத்தி வந்தார்.   

எனவே, ஐ.ஏ.எஸ். பரீட்சை எழுத, என்னை நான் தயார்படுத்திக் கொண்டிருந்தேன். இந்த சமயத்தில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. எனது கல்லூரி தோழரின் தந்தை பத்மநாபன் மூலமாக, திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. திரைப்படத்தில் நடிக்க வேண்டும், நடிகராக வேண்டும் என்ற ஆர்வமும், கதை எழுதி திரைப்படத்தை இயக்க வேண்டும் என்ற ஆர்வமும் எனக்குள் இருந்ததால், நான் விரும்பிய தொழிலுக்கு வந்தேன். திரைப்படத்தில் நடித்தால் மகன் கெட்டு விடுவான் என்று என் தந்தை நினைத்தார். அதனால், நடிக்கவே கூடாது என்று என்னிடம் உறுதிமொழி வாங்கிக்கொண்டார். அதனால் கதை எழுதி, படங்களை இயக்கினேன்''.

இப்படிப்பட்டவரை தான் ஒரு நாள் நடிகர் அசோகன் எம்.சரவணன் அவர்களிடம் அறிமுகம் செய்ய அழைத்து வந்தார். இவர் பெயர் ஏ.சி.திருலோக்சந்தர். என் இனிய நண்பர். இவரிடம் நிறைய கதைகள் இருக்கு. இவர் சிலரிடம் உதவி இயக்குநராகவும் வேலை செய்திருக்கிறார். திறமைசாலி, உங்களுக்கு கண்டிப்பாக படங்களில் உதவி செய்வார் என்று சொல்ல, இவரை எம்.சரவணன் தனது தந்தையாரிடம் அறிமுகம் செய்ய, இவருக்கு கிடைத்த முதல் வாய்ப்பு "வீர திருமகன்'. 

அதற்கு பிறகு ஏசிடி  சுமார் 65 படங்கள் வரை இயக்கினார். சுமார் 20 படங்கள் வரை கதை வசனம் எழுதினார். ஏசிடி நிறைய புத்தகங்கள் படிப்பவர். இந்த "வீரதிருமகன்' படமே Ruritanian romance வகையைச் சேர்ந்தது என்று சொல்வார்கள். ஒரு கற்பனையான நாடு. அதில் உள்ள ராஜா ராணியின் காதல் கதை தான் இது. ஏசிடி பல்வேறு கதை புத்தகங்களை படித்ததனால் இந்த வகை கதையை தனது முதல் படமாக செய்தார் போலும். இது மட்டுமல்லாமல் அந்த காலத்தில் வந்த ரோமன் ஹோலிடே (Roman Holiday) என்ற ஒரு படத்தில் உலகமறியா இளம் பெண் எப்படி உலகத்தை அறிகிறாள் என்பது தான் கதை.       
இந்த படத்தை ஏவிஎம் ஸ்டூடியோஸ் வழங்கும் முருகன் பிரதர்ஸ் "வீரதிருமகன்' என்று படம் எடுத்தார்கள். முதன் முதலாக பிள்ளைகளுக்காகவே, அதாவது முருகன், குமரன், சரவணன், பாலசுப்ரமனியம் இவர்களுக்காக ஒரு படம் பண்ண வேண்டும் என்று ஆரம்பிக்கபட்டது தான் முருகன் பிரதர்ஸ் என்ற புதிய பட 
நிறுவனம். 
அந்த காலத்தில் சிறிய வயதிலேயே நடிக்க வந்த நடிகைகள் மிகவும் குறைவு. இன்னும் சொல்லப் போனால் யாருமே இளம் வயது நடிகைகள் இல்லை என்று சொல்லலாம். அதனால் எல்லோரும் என்னை பார்த்து மிகவும் சந்தோஷபட்டார்கள்.    
"வீரதிருமகன்' படப்பிடிப்பும் எந்த ஆரவாரமும் இன்றி தொடங்கி நடக்க ஆரம்பித்தது. இதில் நான், ஆனந்தன், ஈவி.சரோஜா  நடித்தோம்.  ஈ.வி. சரோஜாவை ஏன் போட்டார்கள் என்றால் எனக்கும் அவருக்கும் முக சாடை ஒத்து போயிருந்தது. படத்தில் பிற்பாதியில் அவர் எனக்கு சகோதரி என்று கூறப்படுவார்.  அதனால் அவரும் இந்த படத்தில் நடித்தார். நான் முன்பே சொன்ன மாதிரி ஏவிஎம் செட்டியார் எடுத்த வரை படத்தைப் போட்டு பார்த்தார். அப்போது செட்டியார் சொன்னதுதான் என்னை கலக்கமடைய செய்தது. 
"அன்னை' படத்தில் இந்த பொண்ணு சரியா இருக்கா! ஆனா இந்த "வீரதிருமகன்' படத்தில் ரொம்ப சின்ன பொண்ணு  மாதிரி  தெரிகிறாள்? ஆனந்தன் கூட காதலிக்கும் போது ரொம்ப குழந்தையா தெரிவாள் இல்லையா? மக்கள் ஒத்துப்பாங்களா? என்று செட்டியார் சொன்னதைக் கேள்விபட்டவுடன் நான் மிகவும் பயந்தேன். அவர் அப்படி சொன்னது ஒரு பெரிய விஷயமாசு  ஸ்டூடியோ முழுவதும் பேசப்பட்டது. சில சமயம் பெரிய நடிகர் நடிகைகள் நடித்தும், அந்த பாத்திரத்திற்கு அவர்கள் சரியாக, பொருத்தமாக இல்லை என்று தெரிந்தால் ஓசைப்படாமல் அந்த நடிகரை தூக்கி விட்டு வேறு ஒருவரை நடிக்க வைப்பார்கள். இது எல்லாம் நான் கேள்வி பட்டதுதான். அதனால் படம் முடிந்து வெளியாகும் வரை எனக்கு பயம் இருந்தது. ஆனால் கடவுள் அருளால், படமும் வெளி வந்து, அதில் உள்ள ஒவ்வொரு காட்சியையும் மக்கள் பார்த்து மகிழ்ந்த போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. 
இதற்கு காரணம் ஏவிஎம் செட்டியார், இயக்குநர் ஏ.சி. திருலோக்சந்தர், வசனம் எழுதிய ஆரூர்தாஸ், இசை அமைத்த விஸ்வநாதன் ராமமூர்த்தி, பாடல்கள் கண்ணதாசன், சிறந்த ஒளிப்பதிவு, அதற்கு நடனம் அமைத்து கொடுத்த தண்டபாணி 
பிள்ளை போன்ற பலர் எனக்கு உறுதுணையாக இருந்து என்னை இன்றும் வாழ வைத்து கொண்டிருக்கிறார்கள். 
“"வீரதிருமகன்' வெளிவந்தது சென்ற நூற்றாண்டு. அதாவது 3-ஆம் தேதி, மே மாதம் 1962 -ஆம் ஆண்டு. ஆனால், பாடல்களை இன்று கேட்டாலும் என் முகம் கண்டிப்பாக மக்கள் மனதில் நிழலாடும். அதே போல் எங்கு என்னை பார்த்தாலும் பலருக்கும் அந்த படத்தின் பாடல் கண்டிப்பாக அவர்களது செவிகளில் ரீங்காரமிடும். 
 இது எனக்கு மட்டும் அல்ல, அந்தக் காலத்தில் வெளிவந்த எந்தப் பாடலை கேட்டாலும் அந்த பாடலில் நடித்த கதாநாயகியின் முகம் கண்டிப்பாக நினைவுக்கு வரும். அப்படிப்பட்ட சினிமாவாக இன்று இல்லை என்று நினைக்கும்போது கண்டிப்பாக வருத்தமாகதான் இருக்கிறது. 
இன்று விஞ்ஞானம் வளர்ந்து இருக்கிறது. அதனால் புதிய புதிய திரைப்பட சாதனங்கள் வந்துள்ளன. ஆனால் சினிமா உணர்வுபூர்வமாக உள்ளதா என்று கேட்டால் பதில் சொல்வது கண்டிப்பாக கஷ்டமாக தான் இருக்கும். உணர்வு நாம் வாழ்க்கையோடு ஒன்றி விட்ட ஒன்று. அது திரையில் காண்பிக்கப்படும்போது நாம் அதனுடன் ஒன்றி விடுவோம். உணர்ச்சியும் அதனுடன் இணைந்த உணர்வு எப்பொழுதும் அப்படியே தான் இருக்கும். 
சினிமா என்பதை நிழல் என்று தான் சொல்வார்கள். நிழல் படங்கள் என்று தானே நாம் சொல்கிறோம். நாங்கள் நிழலாக அன்று நடித்தவர்கள், மக்கள் மனங்களில் போய் நிரந்தரமாக இடம் பிடித்துள்ளோம். அன்று படங்களை ஒவ்வொரு பிரேமாக (FRAME) செதுக்கினார்கள். உணர்வுபூர்வமாக படங்கள் பேசவேண்டும் என்று மெனக்கெட்டார்கள். 
"வீர திருமகன்' படத்தில் ஒரு பாடல் காட்சி வரும், "ஒன்றோடு ஒன்றை வைத்தான், உன்னோடு என்னை வைத்தான்' இந்த பாடல் காட்சியை மிகவும் அழகாக  எடுத்தார்கள். மாலை மயங்கும் நேரம். ஒரு சிறிய படகில் காதலனும், காதலியும் தங்களை மெய்மறந்து இருப்பது போல் காட்சி எடுக்கபட்டது. நான் இந்த காட்சியை விவரித்து விட்டேன். அன்று இந்த காட்சியை எடுக்க நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம். எப்படி?

-  (தொடரும்)

ADVERTISEMENT
ADVERTISEMENT