"இந்தியாவும், சீனாவும் அண்டை நாடுகள்; உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள். இரு நாடுகளின் நல்லுறவுஆசியாவுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த உலகின் சமாதானத்திற்கும், வளர்ச்சிக்கும் அவசியம்' என்று சில நாள்கள் முன்பாக நடைபெற்றபத்திரிகையாளர் சந்திப்பில் சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். சீனாவின் பேச்சும் செயலும் வெவ்வேறாக அமைந்து விடுவது வாடிக்கை. இச்சூழலில் இந்திய-சீன எல்லைப் பிரச்னை என்னவென்பதைப் பார்ப்போம்:
பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்னதாக "இந்தியா' என்பது பல்வேறு சமஸ்தானங்களாக இருந்து வந்த நிலையில், வடக்கில் தங்களது பகுதியைக் தற்காத்துக் கொள்ள "சீக்கியர்கள்' அணி உருவாகி இருந்தது.
அந்த அணியைச் சேர்ந்த துருப்புகள், லடாக்கை 1834-இல் கைப்பற்றியதால் அவ்வமைப்பு மேலும் பலம் பெற்றது. வடக்கு மற்றும் வடமேற்கு-கிழக்கு உள்ளிட்ட எல்லைகளில் உள்ள பகுதிகள் சீக்கிய கூட்டமைப்பு வசமே இருந்தன.
இந்த நிலையில் திபெத்தைக் கைப்பற்றி, ஆக்கிரமிப்பு இல்லாத ஒப்பந்தத்தில் சீக்கியர்கள் நுழைந்தனர். இது 1842 -ஆம் ஆண்டு வரை நீடித்தது. இதன் காரணமாக அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தங்களது எல்லையை வரையறுத்துக் கையெழுத்திட்டனர்.
1846-இல் இந்த நிலை மாறியது. சீக்கிய கூட்டமைப்புடன் மோதிய பிரிட்டிஷார், அவ்வமைப்பின் வசமிருந்த பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டனர். இதன்பின் பிரிட்டிஷார் தங்களது பகுதிகளுக்கு எல்லையைத் தீர்மானிக்க சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தீர்மானித்தனர்.
காரகோரம் கணவாய், பாங்ஆங் ஏரி வரை வரையறுக்கப்பட்ட நிலையில் "அக்சய்சின்' பகுதியை மட்டும் வரையறுக்காமல் அந்தக் குழு விட்டுவிட்டது.
பிரிட்டிஷ் அரசு தங்களது இருப்பை பலப்படுத்திக் கொண்ட நிலை 1865-இல் உருவானதும், பிரிட்டிஷ் நில ஆய்வாளரான ஜான்சன் தலைமையில் ஒரு குழுவினை அமைத்து, எல்லையை வரையறுக்க முயன்றது. அந்தக் குழு காஷ்மீர் மகாராஜா அனுமதி பெற்று "அக்சய்சின்' பகுதியை காஷ்மீர் எல்லைக்குள் வருமாறு செய்து எல்லையை வரையறுத்தது. அந்த எல்லைக் கோடு "ஜான்சன் எல்லைக்கோடு' என்று அவரது பெயரால் அறியப்பட்டது.
ஜான்சனின் இந்த எல்லைக்கோட்டை சீனா ஏற்கவில்லை. எனவே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று - அது முடிவுறாத நிலையிலேயே 1892-ஆம் ஆண்டில் சீனா காரகோரம் கணவாய்ப் பகுதியில் தனது "எல்லைக் கல்'லை நட்டது. தங்களது எல்லைப்புற மாகாணமான ஜின்ஜியாங்கின் எல்லைக்குள் அப்பகுதி வருவதாக சீனா அறிவித்தது. இச்செய்கையை அத்துமீறல் என்று கூறி, ஆங்கிலேயே அரசு நிராகரித்தது.
19-ஆம் நூற்றாண்டின் மத்தியில், மத்திய ஆசியப் பகுதிகளை யார் வசப்படுத்துவது என்ற போட்டி ரஷிய-பிரிட்டிஷ் அரசுகளுக்கிடையே தீவிரமாக இருந்தது. இச்சூழலில் "அக்சய்சின்' பகுதி குறித்தப் பிரச்னையை ஆங்கிலேய அரசு கிடப்பில் போட ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான் ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ளத்தக்க "கஷ்கர்' என்னும் நகரில் அமைந்த பிரிட்டிஷ் தூதராகப் பணிபுரிந்த ஜார்ஜ் மக்கார்டினி மற்றும் சீனா பீஜிங் நகரில் பிரிட்டிஷ் தூதராக இருந்த சர்.கிளாட் மெக்டோனால்டு ஆகிய இருவரையும் எல்லைப் பகுதியை மறுவரையறை செய்யப் பணித்து உத்தரவிட்டது. இதன் மூலம் இப்பிரச்னை தற்காலிகமாக கிடப்பில் போடப்பட்டது.
மறுவரையறை மூலம் உருவான இந்த எல்லைக்கோடு "மக்கார்ட்டினி-மெக்டோனால்டு' என்று அழைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, "அக்சய்சின்' பகுதிகள் சீனாவுக்கு என்ற நிலை உருவாகி, அவர்களது வரைபடத்திலும், பிரிட்டிஷ் வெளியிட்ட வரைபடத்திலுமாக இடம்பெற்றது. இதன் மூலம் "அக்சய்சின்' பகுதியை சீனாவுக்கு விட்டுக் கொடுத்து, ரஷியாவை தங்கள் பக்கம் வராமல் பார்த்துக்கொண்டது.
1911-இல் சீனாவில், டாக்டர் சன்-யாட்-சென் நிறுவிய "சீனப் புனருத்தாரண சங்கம்' செல்வாக்குப் பெற, இளைஞர்கள் அவ்வமைப்பில் வெகுவாக சேர்ந்தனர். பின்னர் அந்த சங்கம் "கோமின்டாங்' (மக்கள் தேசியக் கட்சி) என மாற்றியமைக்கப்பட்டது. இப்பெயர் மாற்றம் காரணமாக சீனப் புரட்சியின் முக்கிய இடம் அவ்வமைப்புக்கு அளிக்கப்பட்டது. மஞ்சு வம்ச ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்தனர். 1911-ஆம் ஆண்டு அக்டோபரில் யாங்ட்சி பள்ளத்தாக்கில் புரட்சி ஏற்பட்டது. விரைவிலேயே சீனாவின் மத்திய பகுதி-தென்பகுதி முழுவதும் மக்கள் பெருமளவில் பங்கேற்றனர். 1912-ஆம் ஆண்டு தொடக்கத்தில் புரட்சி செய்த மாகாணங்கள் "நாங்கிங்கை'த் தலைநகராகக் கொண்ட குடியரசைப் பிரகடனம் செய்தன. டாக்டர் சன்-யாட்-சென் அக்குடியரசின் பிரசிடெண்டாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். (நேரு எழுதிய "உலக சரித்திரம்' பக். 26, 27. பாகம்-2).
அதனைத் தொடர்ந்து சீனாவில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகவும், 1918-இல் ரஷியாவில் ஏற்பட்ட அக்டோபர் புரட்சி மற்றும் அதன் தொடர்ச்சியான மாற்றங்கள் காரணமாகவும் பிரிட்டிஷார் "அக்சய்சின்' பகுதி மீது கவனம் செலுத்த ஆரம்பித்தனர். இதன் விளைவாக "அக்சய்சின்' பகுதியை சீனாவுக்கு அளிப்பதால் எந்தப் பயனும் இல்லை என்று கருதி, ஜான்சன் எல்லைக்கோட்டின் படி, அந்தப் பகுதியை காஷ்மீர் மாகாணத்தின் ஒருபகுதியாக வரைபடத்தை மீண்டும் மாற்றியது. ஆனால் இம்மாற்றம் உறுதி செய்யப்படாததாகவே இருந்தது.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு ஜான்சன் எல்லைக்கோடு மேற்குப் பகுதி எல்லையாக மறு வரையறை செய்யப்பட்டது. பிரதமர் நேரு பலமுறை பேச்சு வார்த்தை நடத்தினார். இறுதியில் "அக்சய்சின்' இந்தியாவின் ஒரு பகுதி. பல நூற்றாண்டுகளாக லடாக் பகுதியுடன் "அக்சய்சின்' உள்ளது, இதில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை'' என்று நேரு கூறினார்.
பஞ்சசீலக் கொள்கை
இந்தியா - சீனா இடையே எழுந்த இப்புகைச்சலை முடிவுக்குக் கொண்டுவர எழுந்ததே நேருவின் "பஞ்சசீலக் கொள்கை'. பிரதமர் நேரு, சீனப் பிரதமர் சூ-யென்-லாய் இருவரிடையே 1954 ஏப்ரல் 28-ஆம் நாளில் பீஜிங்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, பஞ்சசீலக் கொள்கையை ஏற்றுக் கொண்டு இரு தலைவர்களும் கையொப்பமிட்டனர்.
அதன்படி,
1.ஒருவர் (நாடு) மற்றொருவரின் பிராந்திய ஒருமைப்பாட்டை- இறையாண்மையை மதித்து நடப்பது.
2.ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது ஆக்கிரமிப்பு செய்யாதிருப்பது.
3. ஒரு நாடு மற்ற நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாதிருப்பது.
4.சமத்துவம் மற்றும் பரஸ்பர நன்மை மற்றும் சகவாழ்வுக்கு பங்கம் செய்யாதிருப்பது என உறுதியளித்தல்.
5.பொது அமைதியை நிலைநாட்டுதல்-ஆகிய கொள்கைகள் ஏற்கப்பட்டன.
-இந்த ஒப்பந்தம் மூலம் சுதந்திரமடைந்த நாடுகளுக்கிடையே சர்வதேச உறவு மற்றும் பொருளாதாரக் கொள்கை ரீதியான அணுகுமுறை உறுதி செய்யப்பட்டது.
இந்த ஒப்பந்தம் உருவான பின்னர் இலங்கைத் தலைநகர் கொழும்புவில் ஆசிய பிரதமர்கள் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் நேருவின் பஞ்சசீலக் கொள்கைகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.
இந்த ஐந்து கோட்பாடுகள் யூகோஸ்லாவியா தலைநகர் பெல்கிரேடில் 1961-இல் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் மாநாட்டிலும் பேசுபொருள் ஆயிற்று.
1956-57-ஆம் ஆண்டுகளுக்கிடையே சீனாவின் வடமேற்கு மாநிலமான ஜியான்ஜிங் - திபெத்தின் மேற்குப் பகுதிக்கிடையே 1200 கி.மீ. தூரம் இணைப்பு சாலையை அந்நாடு மிக ரகசியமாக அமைத்தது தெரியவந்தது. இந்தப் பாதை, இந்தியா சொந்தம் கொண்டாடும் "அக்சய்சின்' வழியாக 179 கி.மீ. செல்கிறது என்பதும் கூடுதல் தகவல். 1958-இல் சீனா வெளியிட்ட வரைபடத்தில் இந்த சாலையைப் பதிவு செய்ததன் மூலமே இது வெளியுலகுக்கு தெரிய வந்தது.
ஆனால், பிரதமர் நேரு "அக்சய்சின்' பகுதி இந்தியாவின் பகுதியே என்பதில் உறுதியாக இருந்தார். சீனத் தரப்பில் எந்தப் பதிலும் உடனடியாகத் தெரிவிக்கவில்லை. இருப்பினும் சீனப் பிரதமர் சூ-யென்-லாய் "இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு உரிமை கோரப் போவதில்லை; ஆனால் "அக்சய்சின்' சீனாவின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி' என்றார்.
ஐந்து விரல் கொள்கை
மாசேதுங் 1949-இல் கட்சி, ஆட்சி, ராணுவம் மூன்றிற்கும் பொறுப்பேற்றதும் முக்கிய கொள்கைகளை அறிவித்தார். அவர் செய்த கலாசாரப் புரட்சி போலவே, எல்லைப் பாதுகாப்பிலும் சில கொள்கைகளை அறிவித்தார். அதில் திபெத்தின் "ஐந்து விரல் கொள்கை' என்பது இந்தியாவுக்குத் தலைவலியைக் கொடுக்கக்கூடியதாயிற்று. "திபெத் உள்ளங்கை என்றால் லடாக், நேபாளம், சிக்கிம், பூட்டான், அருணாசலப்பிரதேசம் ஆகியவை ஐந்து விரல்கள் ஆகும். இவற்றை நாம் வசப்படுத்த வேண்டும்' என்பதே மாவோவின் கூற்று. இந்த லட்சியத்தை செயல்படுத்துவதே சீனாவின் தலைவராக வருபவர்களுக்கு இடப்பட்ட கட்டளையாக அமைந்தது.
இக் கொள்கை காரணமாகவே திபெத் சீனாவின் ஒரு பகுதி என அதன் மீது 1950-இல் சீனத்துருப்புகள் நடவடிக்கை எடுத்து அந்நாட்டை ஆக்கிரமித்தன. 1959 வரை திபெத்தின் உள்நாட்டு அரசியலில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. இறுதியில் திபெத்திய தலைவர் தலாய்லாமா, சீனத் தலைமையை எதிர்த்து அந்நாட்டிலிருந்து வெளியேறினார்.
அவருக்கும் அவரைச் சார்ந்த குழுவினருக்கும் இந்தியா அடைக்கலம் கொடுத்து அவர்களை தர்மசாலாவில் தங்க வைத்தது. இச்செயல் சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
சீனாவின் அத்துமீறல்கள்
நாளடைவில் அருணாசல பிரதேசத்தின் எல்லையில் சீனா தனது துருப்புகளைக் குவிக்க ஆரம்பித்தது. இதன் பின்னர் மத்திய அரசு "இந்தியாவின் எல்லைப்புற ஆட்சிப் பணிகள்' என்ற அமைப்பினைக் கண்டது. இதன்மூலம் வெளியுறவுச் செயலாளர் முக்கிய முடிவுகளை எடுப்பதுடன், எல்லைப்புற மாகாணங்களைக் கண்காணிக்கவும் செய்வார் என்று அதிகாரம் அளிக்கப்பட்டது. இந்த "ஐ.எஃப்.ஏ.எஸ்' செய்த முக்கியப் பணிகளின் விளைவாக நேபாளம், பூடானுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் பலம் வாய்ந்தவையாகக் கருதப்பட்டன. காஷ்மீருடன் இணைக்கப்பட்ட லடாக், அருணாசலப்பிரதேசப் பகுதிகள் ராணுவ ரீதியில் கவனம் பெற்றன. சிக்கிமுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் மூலம் இந்திய ராணுவத்தால் பாதுகாக்கப்படும் பகுதியாக அந்நாடு மாறியது.
இறுதியில் 1962 அக்டோபர் 20-இல் சீனத் துருப்புகள் லடாக் மற்றும் மக்மோகன் கோட்டை கடந்து தாக்குதல் தொடுத்தது. சீனா மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பல பகுதிகளைக் கைப்பற்றியது. மேற்கில் சுசுல் பள்ளத்தாக்கில் - ரிசாங்லா கணவாய் வரையும், கிழக்குப் பகுதியில் தாவாங் பகுதி வரையிலும் சீனப்படைகள் உள்ளே நுழைந்தன.
காலமாற்றம் -அதாவது பனிப்புயல் -காரணமாக சீனத் துருப்புகள் பெரும் இன்னலுக்கு ஆளானதால் போர் நிறுத்தத்தை நவம்பர் 20-இல் சீனா அறிவித்தது. இப்போரில் சீனாவுக்கு கடும் குளிரால் ஏற்பட்ட இழப்பே அதிகம்!
துருப்புகள் பழைய நிலைக்குத் திரும்பியதாகக் கூறப்பட்டாலும் லடாக் பகுதியில் பனிகள் சூழ்ந்த - பாறைகள் நிறைந்த 32,265 சதுர கிலோமீட்டர் சீனா வசம் சென்றது. சீனா தனது வரைபடத்தில் இத்தகவலை குறிப்பிட்டும் வருகிறது.
எனினும் "அக்சய்சின்' பகுதி, தெற்கு திபெத், அருணாசலப்பிரதேச எல்லைகள் சீனாவின் போக்கால் முடிவுகள் எட்டப்படாமல் நீடித்துக் கொண்டே இருக்கின்றன.
1967 செப்டம்பர் 11-இல் சிக்கிம் வடக்குப் பகுதியில் உள்ள நாதுல்லா கணவாய் பகுதியை வசப்படுத்தும் முயற்சியில் சீனா தனது துருப்புகளை இறக்கியது. இம்முயற்சியை இந்தியத் துருப்புகள் முறியடித்தன.
அதே ஆண்டில் அக்டோபர் 11-இல் சீனா தரப்புடன் ஏற்பட்ட மோதல் போராக மாறும் சூழல் ஏற்பட்டது. இந்திய தரப்பில் 83 பேர் பலியானார்கள். 163 பேர் காயமடைந்தனர். சீனத் தரப்பிலோ 300 பேர் பலியாகி, 450 பேர் காயமுற்றதாகப் பதிவு இருக்கிறது. நாதுல்லா, சோலா பகுதியில் இந்த மோதல் நடைபெற்றது. சீனா பின்வாங்கியது.
1975 -ஆம் ஆண்டில் அருணாசலப் பிரதேசத்தில் ரோந்துப் பணியில் இருந்தவர்களில் 4 பேர் கொல்லப்பட்டனர். 1996 -இல் கட்டுப்பாட்டு கோட்டுக்கு 2 கி.மீ. வரை துப்பாக்கிச்சூடு, குண்டு வீசுவது கூடாது என்று இரு தரப்பினரிடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.
2006-இல் இந்தியாவிற்கான சீனத் தூதுவர் அருணாசலப் பிரதேசத்தின் மீது உரிமை கோரி, "அது சீனாவின் பகுதி' என்றார். இதே நேரத்தில் சிக்கிமின் வடக்கு எல்லையில் உள்ள சில பகுதிகளையும் சீனா உரிமை கோரியது.
2009-இல் எல்லைப் பகுதிகளில் இந்தியா கூடுதல் படைகளை நிறுத்தும் என்று அறிவித்தது.
2013-இல் கட்டுப்பாட்டு கோட்டைத் தாண்டி 10 கி.மீ. தொலைவில் இந்தியப் பகுதியில் சீனத் துருப்புகள் (தவுலத் பெக் ஓல்டியில்) முகாம்கள் அமைத்தனர். இந்தியா கண்டனம் தெரிவித்தது. தாங்கள் அவ்வாறு செய்யவில்லை என்றனர். 2014 -இல் எல்லைப் பகுதியில் நமது எல்லைக்குட்பட்ட "டெம்சோக்' என்னும் இடத்தில் இந்தியா சாலை அமைத்தது. இதை சீனர்கள் எதிர்த்தனர்.
2015 -இல் லடாக்கின் கிழக்கே பிரச்னைக்குரிய இடத்தில் சீனர்கள் காவல் கோபுரம் அமைத்தனர். இந்தியத் துருப்புகள் அதனைத் தகர்த்தனர். 2017 -இல் டோக்லாம்-இந்தியாவின் பாதுகாப்பில் உள்ள பூடானின் மேற்கு எல்லைப் பகுதியில் சீனத் துருப்புகள் சாலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது முறியடிக்கப்பட்டது. 2020 -கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15-இல் மோதல், 20 இந்தியர்கள் பலி என்பது சமீபத்திய நிகழ்வுகள்.
இந்தியாவும் சீனாவும் நீண்ட எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. மங்கோலியா, ரஷியாவுக்கு அடுத்து இந்திய - சீன எல்லையில் பூடானும், நேபாளமும் வருவதால் இந்திய எல்லை மூன்று துண்டுகளாக உள்ளது. "அக்சய்சின்' என்பது லடாக்கில் உள்ள சீன ஆக்கிரமிப்புப் பகுதி; இந்திய மேற்கு எல்லையில் உடன்பாடு எட்டப்படாத பகுதி. இதை இந்தியா காஷ்மீரின் ஒரு பகுதி என்றும், சீனா தனது எல்லையோர மாகாணமான ஜிங் ஜியாங்கின் ஒரு பகுதி என்றும் கூறுகின்றன.
பூடானுக்கும் மியான்மருக்குமிடையே உள்ள பகுதி அருணாசலப்பிரதேசம். இதை சீனா திபெத்தின் தென்பகுதி என்கிறது.
எல்லையில் சீனா மேற்கொள்ளும் பிரச்னைகளுக்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு.
ஒன்று: மாவோவின் ஐந்து விரல் கொள்கை. மற்றொன்று: சீனப் பொருள்களை இந்தியாவில் சந்தைப்படுத்தும் தங்கு தடையற்ற வர்த்தக முஸ்தீபு. இந்தியாவின் மீது தொடுக்கும் ஆக்கிரமிப்பை திசை திருப்பவே தைவான், ஹாங்காங், தென் சீனக்கடல் பிரச்னைகளை சீனா கையிலெடுத்திருக்கிறது என்பாரும் உண்டு. ஆனால் சீனாவின் தலைமை நினைப்பது ஏக காலத்தில் எல்லாவற்றையும் சாத்தியப்படுத்துவது என்பதே. 1962-இல் உள்ள இந்தியாவை நினைத்துக் கொண்டு ஆக்கிரமிப்பில் இறங்கினால் இன்றைய நிலை (2020) யில் சீனா பெறப்போகும் அனுபவம் வேறாகவே இருக்கும்.