தினமணி கொண்டாட்டம்

ரோஜா மலரே! - 51: குமாரி சச்சு

தினமணி

"அன்னை' படத்தில் என்னுடன் நடித்தவர் ஹரிநாத். இவரது தாய் மொழி தெலுங்கு என்றாலும் இந்தப் படத்தில் மிகவும் திறமையாகப் பேசி நடித்தார். நான் முன்பே சொன்ன மாதிரி, ஏவி.எம் பட நிறுவனம் இவருக்குப் பயிற்சி கொடுத்து, அழகாகத் தமிழ் பேசி நடிக்க வைத்தனர். அது மட்டுமல்ல, ஹரிநாத் என்ற அவரது பெயரை மாற்ற முடிவு செய்தனர். என்ன பெயர் வைக்கலாம் என்று பலரும் யோசித்தனர். "ராஜா' என்ற பெயர் நன்றாக இருந்ததால், அந்தப் பெயரையே வைக்கலாம் என்றார் செட்டியார். அன்று எந்த நடிகரும் அந்தப் பெயரில் இல்லை. அதனால் அந்தப் பெயரையே இவருக்கு வைக்கலாம் என்று முடிவாகியது.

நானும் அன்று புதுமுகம் தான் என்பதனால் என் பெயரையும் மாற்ற யோசனை நடந்தது. பலரும் பல பெயர்களைச் சொல்லிப் பார்த்தனர். கடைசியில் செட்டியார் என்ன சொன்னார் தெரியுமா? "நீங்கள் எந்தப் புதிய பெயரை வைத்தாலும், எல்லோரும் அவரை சச்சு என்றே கூப்பிட போகிறார்கள். சச்சு என்ற பெயரே அழகாக இருக்கிறது, அதனால் அவரது பெயரை மாற்ற வேண்டாம் என்று கூறி விட்டார்கள்' என்று எனக்குப் பிறகு சொன்னார்கள். சச்சு என்ற பெயரில் வேறு நடிகையும் இல்லை. அன்றிலிருந்து இன்றுவரை யாரும் இல்லை. தமிழில் மட்டும் அல்ல, இந்தியில் கூட இல்லை. ஹிந்திப் பட உலகில், "சச்' என்ற வார்த்தை உண்டு. அப்படி இருந்தும் கூட அங்கு சச்சு என்ற பெயரில் யாரும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், உலகில் எங்குமே இந்தப் பெயரில் யாருமே இல்லை. அதனால் இந்தப் பெயரே எனக்கு நிலைத்து விட்டது. இன்றளவில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. 

ஒரு நாள்  "அன்னை' படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. எனக்கும், பானுமதி அம்மாவுக்கும் அன்று கொஞ்சம் வேலை இல்லை. அப்பொழுது அவரிடம் நான் சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தேன். அவரிடம் ஒரு கேள்வி கேட்கவேண்டும் என்று ரொம்ப நாளாக நினைத்துக் கொண்டிருந்தேன். காரணம், அவரிடம் எல்லோரும் பயம் கலந்த மரியாதையுடன் நடந்து கொண்டதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னும் சொல்லப்போனால், அன்று இருந்த பெரிய கதாநாயகர்கள் கூட அவரிடம் நெருங்கிப் பேச, தயக்கம் காட்டினார்கள். காட்சி ஒத்திகையின் போது பானுமதி அம்மா எப்பவுமே நடிக்க மாட்டார்கள். காதல் காட்சியாக இருந்தாலும் அதையே தான் பின்பற்ற வேண்டும். காட்சியின் போது தான், அது கதாநாயகரே இருந்தாலும் தொட்டு நடிக்க அனுமதிப்பார்கள். இப்படி இருந்த பானுமதி அம்மா, எப்படி, எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் என்னுடன் பழகினார் என்று மகிழ்ந்து போய், நானும் பேசிக்கொண்டிருந்தேன். முதலில் பயத்துடன் நான் பேசினேன். அப்புறம் போகப் போக அவரது தோற்றம் தான் பயத்தின் காரணம் என்று நானே புரிந்து கொண்டேன்.

சினிமாவைப் பற்றி நிறையப் பேசிக் கொண்டிருந்தோம். அவர் நடிச்ச "சொர்க்க சீமா', அது மட்டும் அல்லாமல் அவர் பாடின பாட்டுக்கள், குறிப்பாக "கண்ணிலே இருப்பதென்ன' என்ற பாட்டையும்,  அது போல அவர் பாடிய மற்ற பாடல்களையும், அவரது நடிப்பையும் பற்றிப் பேசி கொண்டிருந்தோம். இப்படி நாங்கள் பேசிக்கொண்டிருந்த போது, அவரிடம் நான் கேட்க விரும்பிய கேள்வியை, நாங்கள் இருவரும் கொஞ்சம் சூட்டிங் இல்லாமல் உட்கார்ந்து இருந்த போது, நான் கேட்டும் விட்டேன். அவர் கொடுத்த பதில் தான் என்னை வியப்பில் ஆழ்த்தியது.  

"என்னம்மா நீங்கள் செட்டில் நுழைந்தாலே, எல்லோரும் அலறியடித்து ஓடுறாங்க' என்று சிரித்துக்கொண்டே கேட்டேன். "நான் யாரையும் எதுவும் பண்ணல. நான் ஆரம்பத்தில் இந்த சினிமா துறைக்குள் நுழைந்த போது என் தோற்றமே அவர்களை அப்படி செய்ய வைத்தது என்று நான் நினைக்கிறேன். நான் செட்டில் நுழைந்தால், எல்லோரும் எழுந்து நின்று எனக்கு மரியாதை கொடுத்தார்கள். மற்றவர்களும் அதையே பின்பற்றினார்கள். பலர் என்னிடம் வந்து நின்று பேசவே பயந்தார்கள். இது எனக்கு சவுகரியமாக இருந்தது. தேவை இல்லாதவர்கள் என்னிடம் நெருங்கி பேச வராமல் தடுத்தது. இந்த மரியாதையை நான் ஏற்றுக் கொண்டேன், அல்லது இதை நான் தக்க வைத்துக்கொண்டேன் என்று சொல்லலாம். அவ்வளவுதான்', என்றார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்  காலையில் செட்டினுள் நுழைந்தால், இயக்குநர் உணவு இடைவேளையின் போழுது "பிரேக்' என்று சொன்னால் தான் செட்டை விட்டு மேக்-அப் அறைகே செல்வார் என்று பலரும் சொல்ல, நான் கேட்டும், பார்த்தும் இருக்கிறேன். காரணம் என்னவென்றால் மற்றவர்கள் நடிப்பதை நாம் பார்க்க வேண்டும் என்று சிவாஜி கணேசன்  சொல்வார். அப்படிப் பார்த்தால் தான் அவர்கள் நடிப்பிற்கு ஏற்ற மாதிரி,  நம் காட்சி எடுக்கும் போது நம்மால் நடிக்க முடியும் என்று சொல்வார். அது முற்றிலும் உண்மை. எவ்ரி ஆக்ஷன் ஹாஸ் இட்ஸ் ஓன் ரியாக்ஷன் இல்லையா? நாம் அவர்கள் நடிப்பிற்கு ஏற்ற விதத்தில் ரியாக்ஷன் கொடுக்க, நாம் அவர்கள் நடிப்பை பார்த்தால் தானே  முடியும். இன்று இது எல்லாம் மறந்து விட்ட ஒன்றாகி விட்டது என்பது வருத்தமடையச் செய்யும் விஷயம்.  இது மட்டும் அல்லாமல் அவர்கள் நடித்த மாதிரி ஒரு பாத்திரம் நமக்குப் பிற்காலத்தில் கிடைத்தால், அவர்கள் எப்படிச் செய்தார்கள் என்று நாம் யோசித்துப் பார்த்து, அவர்கள் நடிப்பு, அவர்கள் குரலில் உள்ள ஏற்ற இறக்கங்கள் மாடுலேஷன் அதை எல்லாம் நமக்கு ஏற்ற மாதிரி, நமது ஸ்டைலில் செய்யப் பெரும் உதவியாக இருக்கும். இதையே என்னிடம் பானுமதி அம்மா சொல்லியிருக்கிறார்.

பானுமதி அம்மா சொந்தப் படங்களிலும் கூட, அதாவது "இப்படியும் ஒரு பெண்', "வாங்க சம்பந்தி வாங்க', படத்திலும் நடித்திருக்கிறேன். அவர்கள் தெய்வ பக்தி உள்ளவர். மிகுந்த திறமைசாலி. கதையை எப்படி உருவாக்கலாம், இசையைப் பற்றிய அறிவு, இயக்குநருக்கேற்ற ஆளுமை,  நிர்வாகத் திறமை, காமிரா கோணம் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பது போன்ற விஷயங்களில், அஷ்டாவதானி என்றால் அவர் தான். யாரும் அவரைப் போல் ஆகிவிட முடியாது. திறமை, பொறுமை, ஆளுமை, இப்படி அவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். "அன்னை' படத்திற்குப் பிறகு மைசூர் பல்கலைக்கழத்திற்குப் போய் படித்துப் பரிட்சை எழுதிவிட்டு வந்தார் என்றால் பார்த்துக் கொளுங்கள். 

அவர்களே கூப்பிட பல முறை அவர்கள் வீட்டிற்குச் சென்று இருக்கிறேன். ஒரு முறை அப்படிச் செல்லும் போது, அவர் பூஜை அறையில் இருந்திருக்கிறார். அப்படி இருந்தும் என்னை வரச் சொன்னார். அவர் கூப்பிட்டதால் நானும் அவர் முன்னாடி சென்று நின்றேன். அவரே தான் பூஜை அறையைத் துடைத்துக் கொண்டிருந்தார். அவரது வீட்டிற்குப் பின்புறம் பூஜை அறை இருக்கிறது. அங்குப் பெரிய அம்மன் சிலைகளை வைத்திருந்தார். பூஜை சாமான்கள் ஒவ்வொன்றும் எடுத்து, அலம்பி, துடைத்து, வைப்பார். இதை அவர் கூட இருந்து நான் பல முறை பார்த்து ரசித்திருக்கிறேன். பல விஷயங்களை அவரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டு இருக்கிறேன். 

பானுமதி அம்மாவுக்கு மத்திய அரசின் "பத்ம பூஷண்' விருது கொடுப்பதாக அறிவித்த போது,  ஒரு சால்வையை வாங்கிக் கொண்டு தி.நகரில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றேன். அப்பொழுது அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவருக்கு அணிவித்து விட்டு, நமஸ்காரம் செய்தேன். "உங்களுக்குக் கிடைத்ததில் எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி' என்று சொன்னேன். "லேட்டாகக் கொடுத்திருக்கிறார்கள். அது சரி இப்பவாவது கொடுத்தார்களே என எல்லோரும் என்னிடம் சொல்கிறார்கள்', என்று கூறிக்கொண்டே அவர் எழுந்திருக்க முயன்றார். வேண்டாம் அம்மா என்று நான் கூறிக் கொண்டிருந்த போதே, அவர்களது உதவியாளர்களை அழைத்தார். யாரும் அவர் அருகில் இல்லை.

சச்சு அடுத்த அறையில் வெற்றிலை பாக்கு  இருக்கு,  என்று சொல்லிக்கொண்டே கொத்து சாவியைத் தன் இடுப்பில் இருந்து எடுத்துக் கொண்டு எழுந்து பீரோவிலிருந்து ஒரு ரவிக்கை துணியை எடுத்ததோடு மட்டும் அல்லாமல் இரண்டாயிரம் ரூபாயையும் ஒரு தட்டில் வைத்து எனக்கு அளித்தார். நான் வேண்டாம் என்று சொல்ல சொல்ல அவருக்குக்கே உரிய அன்புடன் எனக்குத் தந்தார். அவர் என்னைப் பாராட்டிய நிகழ்வும் உண்டு. 

(தொடரும்)

சந்திப்பு: சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கி அதிபருடன் ஹமாஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

பெண் கெட்டப்பில் நடிகர் கவின்!

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT