தினமணி கொண்டாட்டம்

படைப்பு இலக்கிய அடையாளம் சா.கந்தசாமி!

9th Aug 2020 06:00 AM |  

ADVERTISEMENT

 

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியின் வைகைக் கரையிலிருந்து காவிரிக்கரையின் பூம்புகாருக்கு நல்வாழ்வுக்காக சா.கந்தசாமியின் முன்னோர் மூன்று தலைமுறைக்கு முன்னர் புலம்பெயர்ந்துள்ளனர்.

ஆனால், சிலப்பதிகாரத்தின் கோவலன் பூம்புகாரிலிருந்து நல்வாழ்வுக்காகக் கண்ணகியோடு மதுரைக்குப் புலம்பெயர்ந்து வந்தவன்.

சா. கந்தசாமி மாயூரத்தில் பிறந்தாலும் பூம்புகார், சாயாவனம் ஆகிய ஊர்களில் வளர்ந்து ஆற்றிலும், வனத்திலும் ஆடிப்பாடி மகிழ்ந்த விளையாடியவர். அவர் 1954-ஆம் ஆண்டு சென்னைக்குப் புலம்பெயர்ந்து வில்லிவாக்கம் உயர்நிலைப்பள்ளியில் படித்து வேலைக்குச் சென்றுள்ளார்.

ADVERTISEMENT

1964 - ஆம் ஆண்டு "கலைச்செல்வன்' என்னும் புனைபெயரில் க. நா. சுப்ரமணியம் நடத்திய "இலக்கிய வட்டம்' இதழில் கட்டுரை எழுதியுள்ளார்.

அவர் 25 வயதில் "சாயாவனம்' நாவலை 1965 -ஆம் ஆண்டு எழுதியுள்ளார். இந்த நாவலை எப்படி வெளியிடுவது என்று எண்ணிய காலத்தில் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி நடத்திய "வாசகர் வட்டம்' மூலம் 1968 - ஆம் ஆண்டு வெளியிட்டார். அந்த நாவல் சுற்றுச்சூழல் பற்றி உலகில், இந்தியாவில் பேசப்படாத காலத்தில் எழுதப்பட்ட முதல் நாவல். இது தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல். இதைச் சூழலியல் மற்றும் புலம்பெயர்நாவல் என்றும் அழைக்கலாம்.

1970- களில் நண்பர் ந. கிருஷ்ணமூர்த்தியை ஆசிரியராகக் கொண்ட "கசடதபற' என்னும் இதழை இராமகிருஷ்ணன், இராஜராம், ந. முத்துசாமி, ஞானக்கூத்தன் , இராஜகோபாலன் ஆகியோருடன் இணைந்து முன்னின்று நடத்தியவர். இக்குழுவினர் நடத்திய இலக்கிய சங்கமம் சார்பில் நடத்திய கூட்டத்தில் அசோகமித்திரன் கட்டுரை எழுதிப் படித்துள்ளார். இவர்கள் வெளியிட்டதுதான் "கோணல்கள்' சிறுகதைத்தொகுப்பு. அதில் சா. கந்தசாமி "தக்கையின் மீது நான்கு கண்கள்' சிறுகதையும் இடம் பெற்றது.

"கசடதபற' இதழ் கவிதை, சிறுகதை, நாடகம், நவீன ஓவியம் ஆகியவற்றில் அதிர்வுகளை ஏற்படுத்தித் தமிழ்நாட்டின் இலக்கியக் களத்தை மாற்றியது. அவர் எந்தக்கதையையும் வெகுஜனப் பத்திரிகையில் எழுதவில்லை.

அவர் எழுதிய "தொலைந்து போனவர்கள்' நாவல் பள்ளிப் படிப்பை முடித்து வாழ்க்கையைத் தொடங்கிய நான்கு இளைஞர்கள் எதிர்கொண்ட வாழ்வைப் பேசுகிறது. நாவல் படைப்பில் இது புதிய அணுகுமுறையான படைப்பு. இன்றும் வாசிக்க வேண்டிய நாவல்.
"அவன் ஆனது' நாவல் ராமு, சண்முகம், திருவேங்கடம் ஆகிய மூவரின் குடும்ப வாழ்வைப் பேசும் நாவல். இதில் ஆண்களைப் போலவே பெண்கள் எதிர்கொண்ட பிரச்னைகள்
சொல்லப்பட்டுள்ளன.
1995 - ஆம் ஆண்டு தமிழக அரசியல் சூழலின் பின்னணியில் எழுதப்பட்ட அரசியல் நாவல் "விசாரணைக்கமிஷன்'. இந்த நாவலுக்கு 1998 - ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது வழங்கியது. இதில் நிரபராதி தங்கராஜ் கொல்லப்படுகிறான். எத்தனை கமிஷன் அமைத்தாலும் இழந்தவனை மீட்க முடியுமா? என்னும் கேள்வியை இந்த நாவல் எழுப்புகிறது.

"சூரிய வம்சம்' நாவல் கிராமத்திலிருந்து சென்னைக்குப் புலம்பெயர்ந்த செல்லையாவின் வாழ்வின் படிநிலைகளைச் சொல்லுகிறது.

அவர் எழுதிய நாவலில் "நீலவன்' வித்தியாசமான நாவல். அதில் வரும் நீலவன் அருவமாகப் படைக்கப்பட்டுள்ளான். இக் கரோனா காலத்தில் வாசிக்க வேண்டிய ஒன்று.

நீலவன் அதிகார ஆதிக்கத்துக்கும், தீமைக்கும் எதிராகப் போராடும் நியாயவான். ஆனால் ஏழை வேலாயுத்துக்கும், குழந்தை அபிராமிக்கும் அன்பாகக் காட்சி தரும் சக்தி நீலவன். என் வாசிப்பில் இந்நாவலில் வரும் நீலவன் சா. கந்தசாமி என்பது என் கணிப்பு; காரணம் அவர் நியாத்தின் குரல், தாகூரைப் போல குழந்தைகளிடம் அன்பும் காட்டும் எழுத்தாளர்.

அவரின் இளைய மகன் முரளி கனடாவில் இருக்கிறார். அவரைப் பார்க்க 2005 - ஆம் ஆண்டு கனடா சென்ற போது எழுதிய அறிவியல் நூல், "நிகழ்காலத்திற்கு முன்பு' என்பது. இதுவும் சாயாவனத்தின் நீட்சியாகச் சுற்றுப்புறச்சூழலை, கிரீன் பீஸ் அமைப்பின் பணிகளை, மௌன வசந்தம் எழுதிய "ரேச்சல் கர்ஸன்' சூழலியல் போராட்டத்தை பேசும் நூலாகும். இந்நூலுக்கு 2006 ஆண்டு தமிழக அரசு சிறந்த அறிவியல் நூலுக்கான விருதை வழங்கியது.

"வான்கூவர்' என்பது புலம்பெயர்வு நாவல். இக்கதையில் ஆதிகுடிகளான செவ்விந்தியர்கள் பற்றியும் கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் மக்களின் வாழ்க்கையைக் காட்சிப்படுத்தியுள்ளார்.

சா. கந்தசாமி ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பையும், டச்சு மொழியில் 13 வயதில் ஹிட்லரின் கொடுமையை எதிர்த்து எழுதிய ஆனிபிராங் நாட்குறிப்பையும் படித்துப் பல மேடைகளில் சொல்லியும் எழுதியும் உள்ளார்.

அதுபோல் "கனடா நாட்குறிப்பு' என்னும் பயண நூலை வரலாற்று ஆவணமாக்கியுள்ளார். நயாகரா நீர்வீழ்ச்சியின் வரலாற்றை "நீரின் பேரோசை' என்று எழுதி நம்மை அங்கு அழைத்துச் சென்று விடுகிறார்.

அவரின் "புது டில்லி' நாவல் இந்திய அரசியலைப் பேசும் நாவல். இதில் டில்லியில் வாழும் வைத்தீஸ்வரன் குடும்ப வாழ்வையும் இந்திரா காந்தி சுடப்பட்ட போது இந்திய அரசியலில் ஏற்பட்ட அதிர்வுகளையும் இணைகோடுகள் போல் பதிவு செய்துள்ளார்.

தினமணி நடுப்பக்கக் கட்டுரையில் பங்கு கொண்டவர் சா. கந்தசாமி. இக்கட்டுரைகளில் ஆட்சிமொழி. அரசியல் அமைப்புச்சட்டம், தேர்தல் முறை, குடும்ப அரசியல், நீதி, சட்டம் முதலியவற்றில் வலுவான கருத்துக்களை எழுதிய படைப்பாளி. அக்கட்டுரைகளின் தொகுப்புத் தான் "நீதிக்கு மேலான அநீதி'.

தமிழர் மரபு என்பதே தொகுப்பு மரபு என்னும் நம்பிக்கை கொண்டவர். அதனால் சங்க இலக்கியம் மட்டுமல்ல சிலப்பதிகாரமும், தம் கதைகளும் வாழ்க்கையின் தொகுப்பு என்பார். அதனால் தான் அவர் தன்னுடைய கதைகளில் இல்லாத கதை எழுதும் போக்கைக் கையாண்டார்.

நாவலாசிரியர் என்பதற்கு அப்பால், 20-ஆம் நூற்றாண்டு தமிழ்ச் சிறுகதைகள், இந்தியச் சிறுகதைகள், சர்வதேசக் கதைகள், அயலக இலக்கியம், க. நா. சுப்ரமணியம் சிறுகதைகள், தமிழில் சுயசரித்திரங்கள் ஆகிய தொகுப்பு நூல்களை உருவாக்கியவர்.

அண்மையில் சாகித்ய அகாதெமிக்கு ரயில் பற்றிய தொகுப்பை வழங்கியுள்ளார். 5.10.2019 நாளன்று கனடாவிலிருந்து புறப்படும் போது சீனாவைப்பற்றியும், மரங்கள் பற்றியும் இரண்டு நூல்கள் எழுதிருப்பதைத் தொலைபேசியில் சொன்னார்.

எழுத்தாளர்களில் சா. கந்தசாமி பன்முக ஆளுமையாளர். தொடர்ந்து வாசிப்பவர். படிப்பவர், எழுதுபவர், எழுத வைப்பவர், குறும்படம், ஆவணப்பட இயக்குநர். மைசூர், இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்துக்காகத் தமிழ் மொழியின் வரிவடிவம் பற்றியும் புலம்பெயர்வு பற்றியும் கடல் வணிகம் பற்றியும் 10 ஆவணப்படங்களையும். மத்திய அரசின் செம்மொழி நிறுவனத்துக்காக ஐந்து திணைகள் பற்றி ஆறு ஆவணப்படங்களையும் எடுத்துள்ளார்.

சர்வதேச விருது பெற்ற சுடுமண் சிலைகள் பற்றியும் எழுத்தாளர் ஜெயகாந்தன், அசோகமித்திரன், சிற்பி தனபால் ஆகியோர் பற்றியும் ஆவணப்படங்கள் எடுத்திருக்கிறார்.

"என் இயக்கத்தில் படைப்பு எழுத்தாளர் சா. கந்தசாமி' என்னும் ஆவணப்படம் 10.4. 2019 நாளில் திரையிடப்பட்டது. அடையாற்றங்கரையிலிருக்கும் நந்தனம் குடியிருப்பில் 50 ஆண்டுகள் வசித்து வந்தவர். 50 ஆண்டுக்கு மேலாகத் தமிழில் தொடர்ந்து எழுதிய மூத்த எழுத்தாளராக வாழ்ந்தவர்.

-பேரா.பெ. சுபாஷ் சந்திர போஸ்

சா.கந்தசாமியின் ஆவணப்பட தயாரிப்பாளர்

சா.கந்தசாமி எழுதி வெளிவராத மூன்று கட்டுரைகள் அடுத்தடுத்த இதழ்களில் வெளிவரும்

ADVERTISEMENT
ADVERTISEMENT