தினமணி கொண்டாட்டம்

ரோஜா மலரே! - 36: குமாரி சச்சு

26th Apr 2020 05:16 PM | சலன்

ADVERTISEMENT

மேடை ஏன், என்று அந்த கோயில் குழுவின் தலைவர் கேட்டார்,. இதை எல்லாம் நாங்கள் அடுத்த அறையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்தோம். மேடையில்லாமல் எப்படி நடனம் ஆடுவது என்று எனக்கும்  அக்காவிற்கும் சரியாகப் புரியவில்லை. இதற்குள் பாட்டியும் அம்மாவும் சுதாரித்துக் கொண்டு மேடை இல்லாமல் எப்படி நடனம் ஆடுவது என்று கேட்டனர். 

""நாங்கள் சுமார் அரை டஜன் பேர்கள் மேடையில் இருப்போம். ஒருவர் பாடலை பாட  மற்றவர்கள் வயலின், மிருதங்கம் மற்றும் சில வாத்திய கருவிகளை இசைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் பாடல்களைப் பாடி, இசைக்கருவிகள் மூலம் இசையை  வாசிக்க, சச்சுவும், அவரது அக்காவும் நடனம் ஆடுவார்கள். இசைக்கலைஞர்கள் எல்லோரும் நடனம் ஆடும் மேடையிலேயே அமர்ந்து இருப்பார்கள். மேடையே இல்லை என்றால், எப்படி''  என்று பாட்டி திரும்பவும்  சொல்ல, அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க, அந்தக் குழுவின் தலைவர் சொன்னதுதான் எங்களுக்கு நகைச்சுவையாகவும், ஆச்சர்யமாகவும், கோபமாகவும் இருந்தது. 

""இல்லை பாட்டி, நீங்கள் சொல்லும் வண்ணம் எங்களுக்கு எதுவும் வேண்டாம். மாலை சுமார் 6 மணிக்கு மேல் சாமிக்கு அலங்காரம் நிறைவாக செய்யப்படும். சாமி அலங்காரம் முடிந்தவுடன் சாமி புறப்பாடு நடக்கும். சாமி கிளம்பும் போது முன்னால் இவர்கள் இருவரும் நடனம் ஆடிய படியே வர, இசை கருவிகளை வாசிப்பவர்கள் இவர்களுக்கு முன்னால் வாசித்துக் கொண்டே வர வேண்டும். நாங்கள் நாலு தெரு சுற்றுவோம். அப்படி சுற்றும் போது தாம்பாளம் ஏந்திய இருவர் இரண்டு புறமும் ஒவ்வொரு வீட்டின் முன் வந்து நிற்பார்கள். அதில் எவ்வளவு காசு விழுதோ, அதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்து, இப்பொழுது நாங்கள் ஒப்புக்கொண்ட சம்பளத்தை விட  குறைவாக இருந்தால், எங்கள் கையில் உள்ள காசை போட்டு உங்களுக்குக் கொடுத்து விடுவோம். பணம் சொன்னபடியே உங்களுக்குக் கிடைக்கும், நீங்கள் பயப்படவேண்டாம். சாமிக்கு முன்னால் ஆடும் போது அவர்களுக்கோ அல்லது இசை குழுவிற்கோ எதற்கு மேடை தேவை என்று யோசித்தேன்'', என்றாரே பார்க்கலாம். 

பக்கத்து அறையில் இருந்த எங்களுக்கு யாரும் சொல்லாமல், கிச்சு கிச்சு மூட்டாமல் தானாகவே சிரிப்பு வந்து விட்டது. ஒரு புறம் சிரிப்பு வந்தாலும் மறுபுறம் கோபமும் ஒரு சேர வந்தது. எங்களுக்கே இப்படி என்றால் அவர்கள் முன் உட்கார்ந்திருக்கும் என் பாட்டி மற்றும் அம்மாவிற்கு எப்படி இருந்திருக்கும் ? நாங்கள் உள்ளே இருந்ததினால் எங்களால் சிரிக்கவோ, கோபப்படவோ முடியும்.  இப்படி சிரிப்பு வந்தால் கூட சிரிக்க முடியாதவாறு அவர்களது எதிரில் அமர்ந்து இருக்கும் என் அம்மாவையும் பாட்டியையும் நினைத்தால் எங்களுக்குப் பாவமாக இருந்தது. ஆனாலும், அவர்களுக்குச் சில விஷயங்களைப் பாட்டி எடுத்து சொல்ல முயன்றார்கள். 

ADVERTISEMENT

""மேடை போட்டால் தான் நாங்கள் ஆடமுடியும். இப்படித் தெருவில் நடனமாடுபவர்கள் நாங்கள் இல்லை. தயவு செய்து போய் வாருங்கள்'', என்று பவ்யமாக அவர்களிடம் சொல்லி அனுப்பி வைத்தார்கள். போகும் போது அவர்களின் தலைவர், எங்கள் பாட்டியிடம், ""கண்டிப்பாக அடுத்த வருடம் வருவோம். நீங்கள் எங்களுக்கு இதே நடன நிகழ்ச்சியை நடத்தி, எங்கள் மக்களையும், சாமியையும் மகிழ்விக்க உறுதியாக வர வேண்டும்'', என்று சொல்லிவிட்டு  சென்றார். 

அது மட்டும் அந்தத் தலைவர் சொல்லவில்லை. அவர்கள் கண்டிப்பாக மேடையை அழகாக அமைத்து விட்டு எங்களை அடுத்த வருடம் வந்து சந்திக்கிறோம் என்றும் சொல்லி விட்டு தான் சென்றார்கள். அவர்கள் போன பிறகு நாங்கள் வெளியே வந்து எங்கள் ஆதங்கத்தை எங்களுக்குள் கொட்டித் தீர்த்தோம். இதை நாங்கள் மறந்தாலும் அவர்கள் மறக்கவில்லை என்று தெரிந்தது. அவர்கள் சொன்னபடியே அடுத்த வருடம் திரும்பவும் வந்தார்கள். இந்த முறை அவர்களைக் கூப்பிட்டு உட்கார வைத்து பேசும் போது முன் எச்சரிக்கையாக நாங்கள் மேடையைப் பற்றிக் கேட்பதற்கு முன்பாக அவர்களாகவே,  நாங்கள் உங்களுக்கு மேடையை சரியாக அமைத்து விட்டோம். 

""நீங்கள் இந்த முறை சிறப்பாக வந்து நடன நிகழ்ச்சியை நடத்தி தரவேண்டும்''”, என்று வேண்டினார்கள். பாட்டிக்கும் அம்மாவிற்கும் அவர்கள் மேல் உள்ள சந்தேகம் முழுவதுமாக தீரவில்லை. கோயில் எங்கே, மேடை எங்கே என்று பல கேள்விகளைக் கேட்க, அவர்கள் விலாவாரியாகச் சொல்ல தொடங்கினார்கள். “

""நீங்கள் மேடை வேண்டும் என்று சொன்னதால், நாங்கள் முதலில் அதைத்தான் சரியாக அமைக்க முடிவு செய்தோம்.  இரண்டு மாடு பூட்டிய அழகான வண்டியை ஏற்பாடு செய்து விட்டோம். சாமிக்கு அலங்காரம் முடிந்து புறப்படும் போது, சாமிக்கு முன்பாக இந்த வண்டி இருக்கும். அதன் மேல் உங்கள் பேத்திகள் இருவரும் நடனம் ஆட, நாலு தெரு சாமியை தாங்கி உள்ள அந்தப் பல்லக்கும் சுற்றும், உங்கள் பேத்தியை தாங்கி இருக்கும் அந்த வண்டியும் சுற்றும். இந்த ஏற்பாடு சரிதானே'', என்று பாட்டியிடம் கேட்க, இவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது என்று தெரியாமல் பாட்டி தடுமாறியது எங்களுக்கு நன்றாகப் புரிந்தது. 

இந்த முறை அவர்களுக்கு விஷயமே தெரியவில்லை என்று எங்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. இப்படி எல்லாம் நாங்கள் நடனமாட வரமாட்டோம் என்று அவர்களுக்கு ஒருவழியாக சொல்லி அனுப்பி வைத்தார்  பாட்டி. இது ஒரு அனுபவம் என்றால் ஸ்ரீலங்காவில் ஏற்பட்டது வேறு ஒருவிதமான அனுபவம்.  

இன்று ஸ்ரீலங்கா என்று அழைக்கும் நமது அண்டை நாட்டிற்கு சென்ற போது எங்களுக்கு ஏற்பட்டது வித்தியாசமான அனுபவம்.  எல்லோரும் அரசாங்கத்தை சேர்ந்த என்ஜிஓ, அவர்கள் சங்கத்திற்கு நிதி திரட்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய வந்தார்கள். இது நடந்தது 1964-65 என்று நினைக்கிறேன். அவர்கள் வந்து எங்கள் நடனத்தை நாலு இடங்களில், ஆறு நிகழ்ச்சிகள் நடத்த ஒப்பந்தம் செய்திருந்தார்கள். 

கொழும்பு, திரிகோணமலை, நுவேரெலியா உள்ள ஹட்டன், யாழ்ப்பாணம் போன்ற சில இடங்களில் எங்கள் நிகழ்ச்சியை நடத்த அவர்கள் கேட்க நாங்கள் ஒப்புக்கொண்டோம். இந்த நிகழ்ச்சிகளுக்கு நானும் அக்காவும் எங்கள் குழுவுடன் செல்ல முடிவு செய்தோம். எப்பவுமே எங்கள் கூட  இசை கலைஞர்களைக் கூட்டிச் செல்லவே நாங்கள் விரும்புவோம். காரணம் இசை தரமானதாக இருக்கும், திடீரென்று ஏதாவது பாடலை கேட்டால் அதை இசைக்க எங்கள் இசைக்குழு தயாராக இருப்பார்கள். ஒரு பாட்டை திரும்பவும் பாடும் போது, ஒரு வரியை ஒருமுறை பாடினால் போதும். திரும்பவும் அதே வரியை பாடத்  தேவையில்லை. 

இப்படியெல்லாம் நாங்கள் முடிவு செய்வதற்கு எங்கள் இசைக்குழு இருந்தால் நலமாக இருக்கும் இல்லையா? இது மட்டுமல்ல இசை குழுவினர் எங்களைப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். நாங்கள் கண்ணை காண்பித்தால் அதற்கு ஒரு அர்த்தம் உண்டு. கையை ஒரு விதமாக அசைத்தால் வேறு ஒரு அர்த்தம் இருக்கும். ஒரு பாட்டிற்கு மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தால், மறுமுறை அதே வரியை திரும்பவும் இசைக்க சொல்ல கண்களைக் காண்பிப்போம். இசைக்குழுவினர் எங்களைப்  புரிந்து கொண்டு திரும்பவும் அதே வரியை பாடுவார்கள். வேறு மாதிரி நாங்கள் அபிநயம் பிடிப்போம். இப்படி எங்களுக்குள் ஒரு புரிதல் இருந்ததால், எங்கள் இசைக்குழு இருந்தால் தான் சரியாக இருக்கும்.  எப்பொழுதுமே ப்ண்ஸ்ங் இசைக்கலைஞர்கள் இருந்தால் மேடையில் நிறைவாக இருக்கும்.  அதனால் நாங்கள் எப்பொழுமே  ப்ண்ஸ்ங் இசைக்கலைஞர்களையே விரும்புவோம். 

ஸ்ரீலங்காவிற்கு சென்னையில் இருந்து கிளம்பும் முன் ஒரு விதமான தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இந்த ஊசியைப் போட்டுக் கொண்டால் மட்டுமே அவர்கள் நாட்டிற்கு  செல்லலாம். அப்படி ஊசி போட்டக் கொள்ளா விட்டால், இன்று எப்படி "கரோனா' விற்காக நாம் தனிமை படுத்தப்படுகிறோமோ, அதைப் போலவே அவர்களது விமான நிலையத்திலேயே நம்மைத் தனிமைப்படுத்தி விடுவார்கள்.

எனக்கோ ஊசி என்றாலே பயம். அந்த ஊசியை அன்று நமது மாநகராட்சியில் தான் போடுவார்கள். அதைப் போட்டுக் கொண்டு விட்டோம் என்று நமது மாநகராட்சி எழுத்துபூர்வமாக ஒரு கடிதம் கொடுத்தால் தான் விசா கிடைக்கும். இன்று இருப்பது போல் எல்லா நாடுகளுக்கும் அன்று  ஒரே பாஸ்போர்ட் கிடையாது. இலங்கைக்கு தனியாக ஒரு சிவப்பு நிறத்தில் பாஸ்போர்ட் எடுத்திருக்க வேண்டும். ஆவணங்கள் எல்லாம் சரியாக கொடுத்த பிறகும், எங்களுக்கு விசா கிடைக்கவில்லை. காரணம், எங்களுக்கு எதுவுமே சொல்லப்படவில்லை. நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. விசா வந்து சேரவில்லை. விசா வந்ததா? நாங்கள் ஸ்ரீலங்கா போனோமா இல்லையா? அடுத்த வாரம் சொல்கிறேன்.

(தொடரும்)

சந்திப்பு: சலன்

ADVERTISEMENT
ADVERTISEMENT