தினமணி கொண்டாட்டம்

பல்சுவை

5th Apr 2020 05:21 PM

ADVERTISEMENT


கல்கி கடிதம்

ஒரு முறை ராஜாஜிக்கு கல்கி ஒரு கடிதம் எழுதினார். ""நான் இந்தியாவின் விடுதலைக்காக உயிர் துறக்கவும் விரும்புகிறேன். தங்கள் கட்சியின் தலைமைப் பதவி காலியாக இருந்தால் சொல்லுங்கள். அந்தப் பதவியை ஏற்று பாடுபடுவேன்'' என்று நகைச்சுவையுடன் எழுதினார்.

அதற்கு ராஜாஜி ""தற்போது தலைமைப் பதவி எதுவும் காலியாக இல்லை. சீன எல்லையில் தான் போர் வீரர்கள் குறைவு. எனவே அந்த எல்லைக்கு சென்றால் உயிர்விட நிறைய வாய்ப்பு கிடைக்கும்'' என்று நகைச்சுவையாக பதில் எழுதினார்.

சுய சரிதம்

ADVERTISEMENT

1957-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய காப்பிரைட் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நூல், முதல் குடியரசு தலைவரான ராஜேந்திர பிரசாத் எழுதிய "சுய சரிதம்' ஆகும்.

-தஞ்சை என்.ஜே.கந்தமாறன்

அமெரிக்காவிலுள்ள வாஷிங்டனில் கி.பி.2012-ஆம் ஆண்டு நவம்பர் 29-ஆம் தேதி மிக அமைதியான நாள் என்று சிறப்பாகக் கூறப்படுகிறது. காரணம் அன்று வாஷிங்டன் நகரில் எந்த ஒரு வன்முறையோ, குற்றமோ பதிவாகவில்லை. இன்றும் அந்த நாள் கொண்டாடப்படுகிறது.

 

மக்கள் தொகை பாதிக்காதா?

நேருவும் தொழில் அதிபர் டாடாவும் சந்தித்த போது ""இந்தியாவில் மக்கள் தொகை பெருகிக்கொண்டே இருக்கிறதே. இது நாட்டை பாதிக்காதா?'' என்று கேட்டார் டாடா. அதற்கு நேரு சொன்னார். 

""பிறக்கும் குழந்தைகளுக்கு வயிறு மட்டுமா இருக்கிறது? இரண்டு கைகளும் இருக்கிறதே?'' என்று எதிர் கேள்வி கேட்டார்.

-அமெரிக்க அதிபர் மாளிகையை "வெள்ளை மாளிகை' என்று அழைப்பது போல் தென்கொரிய நாட்டு அதிபர் மாளிகை "நீலமாளிகை' என்று அழைக்கப்படுகிறது.

-தங்கத்துக்கு காமத்தை உண்டாக்கும் சக்தியும், வெள்ளிக்கு காமத்தை கட்டுப்படுத்தும் சக்தியும் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால்தான் திருமணத்தின் போது பெண்ணின் கால் விரலில் வெள்ளியில் மெட்டியும், கொலுசும் அணியும் வழக்கம் உருவானதாம்.

-போளூர் சி.ரகுபதி

குறளுடன் சட்டப்பேரவை கூட்டம்

சி.பா. ஆதித்தனார் தமிழக சட்டப் பேரவைத் தலைவராக ஆனதும் சட்டசபையின் பட்ஜெட் கூட்டம் ஆரம்பம் ஆயிற்று. வான்புகழ் கொண்ட வள்ளுவரின் "அகர முதல எழுத்தெல்லாம்  ஆதிபகவன் முதற்றே உலகு' என்ற குறளின் முதலடியைக் கூறி சட்டப்பேரவை நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தார் ஆதித்தனார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் வள்ளுவரின் குறளுடன் தொடங்கப்பட்டது அதுவே முதல் முறையாகும். 

-ம.செ.மயில், திருநெல்வேலி

ADVERTISEMENT
ADVERTISEMENT