தினமணி கொண்டாட்டம்

சிமெண்ட் இல்லாமல் வீடு கட்டலாம்!

5th Apr 2020 05:15 PM | -சுதந்திரன்

ADVERTISEMENT


சிமெண்ட் வேண்டாம்... மணல் வேண்டாம்... கருப்பட்டி, முட்டையின் வெள்ளைக்கரு, சுண்ணாம்பு இருந்தால் போதும்.. மூன்று தலைமுறை வாழுகிற மாதிரி வீட்டினைக் கட்டிவிடலாம்' என்கிறார் திருப்பூரை அடுத்து வெள்ளக்கோவிலில் வாழும் அரவிந்த் மனோகரன்.

சிமெண்ட்டைத் தவிர்த்து களிமண், மூங்கில், சுண்ணாம்புக் கலவை கொண்டு வீட்டைக் கட்டும் இயற்கை ஆர்வலர்கள் இன்றைக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

"நமது முன்னோர்கள் காலத்தில் சிமெண்ட் இல்லை. சுண்ணாம்பு, கருப்பட்டி, முட்டையின் வெள்ளை கரு இவற்றைக் கொண்டுதான் வீடுகள் கட்டினார்கள். எனது உறவினர் ஜவஹர் தமிழகத்தின் பாரம்பரிய வீடு கட்டமைப்பு முறைப்படி வீடு கட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நான் அவருடன் சுற்றுவட்டாரத்தில் வாழும் முதியவர்கள், அனுபவம் வாய்ந்த கொத்தனார்களைச் சந்தித்து அவர்கள் காலத்தில் வீடுகள் எப்படி கட்டப்பட்டன என்று கேட்டு தெரிந்து கொண்டோம்.

அதன்படி 3200 ச. அடி பரப்பில் வீட்டினைக் கட்டி வருகிறோம். கருப்பட்டி அல்லது வெல்லம் சிமெண்ட் மாதிரி இறுக்கப் பிடிக்கும் தன்மையைத் தரும். முட்டையின் வெள்ளைக் கரு சுவர்களுக்குப் பளபளப்பைத் தரும். வீடு கட்ட செங்கல்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால் சிமெண்ட்டுக்குப் பதிலாக சுண்ணாம்பு, கருப்பட்டி . முட்டையின் வெள்ளைக் கரு, பொடிக்கப்பட்ட கடுக்காய், மணல், கலந்த கலவையைப் பயன்படுத்துகிறோம்.

ADVERTISEMENT

செதில் இல்லாமல் இருக்க வாழை இலையை சுவரில் வைத்து அதன் மேல், நிலைப்படி, ஜன்னல், இவற்றை வைக்கிறோம். இந்த வீட்டின் சுவர்களின் அகலம் கான்கிரீட் வீடுகளின் சுவர்களை விட அகலம் அதிகமாக இருக்கும். சுவர்களுக்கு ஆறுமுறை பூச்சு செய்யப்படும். சுண்ணாம்பு கொண்டு கட்டப்படும், தேய்க்கப்படும் சுவர் வீட்டினுள் வெப்பத்தைக் கடத்தாமல் குளுமையைத் தரும். குளிர் காலத்தில் வெளியே உள்ள குளிரை வீட்டினுள் விடாது. கூரை வார்க்க செதில் இல்லாத பழையமரத்தூண்களைப் பயன்படுத்துவோம்.

இந்தத் தூண்களும் அவை அமரும் சுவருக்கும் இடையில் வாழை அல்லது தாமரை இலையை வைப்போம். இந்த இலைகள் மரத்தூண்களை செதில் பிடிக்காதவாறு காக்கும். கூரைக்கு அகலம் குறைந்த சிறிய செங்கல்களை செங்குத்தாக வைத்து சுண்ணாம்புக் கலவையால் ஒன்றுடன் ஒட்டச் செய்வோம். தரைக்கு இயற்கையாகக் கிடைக்கும் கல் பாளங்களை விரிப்போம்..." என்று சொல்லும் அரவிந்த் இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் சென்று அங்கு பாரம்பரிய வீடுகளில் சிறிய பெரிய அளவில் கட்டப்படுகின்றன என்பதையும் அறிந்து கொண்டிருக்கிறார்.

களிமண். மூங்கில் பயன்படுத்தியும் வீடுகள் கட்டியுள்ளார். வீடு கட்டுமானப் பொறியாளரான அரவிந்த் "பிழை அழகு' என்ற பாரம்பரிய முறையில் வீடு கட்டித் தரும் நிறுவனத்திற்குச் சொந்தக்காரர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT