தினமணி கொண்டாட்டம்

காந்தி நிச்சயம் சோறு போடுவார்!

29th Sep 2019 03:54 PM | முனைவர் குழந்தைசாமி

ADVERTISEMENT

 

என்னுடைய பதினெட்டு வயதில் 1969-இல் காந்திஜி எனக்கு அறிமுகமானார். அப்பொழுது நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்தேன்.

காந்தி பற்றி ஒரு கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள மு. வரதராசனார் எழுதிய "காந்தி அண்ணல்' என்ற சிறு நூலைப் படித்தேன். ஓர் இரவு முழுவதும் அந்த நூலைப் படித்துவிட்டு பல முறை அழுதேன். இப்படிப்பட்ட ஒரு மனிதர் நம் நாட்டில் வாழ்ந்திருக்கிறாரே என்ற வியப்பு ஏற்பட்டது.

உடனே சைவமாக மாறினேன். விவேகானந்தரின் "ஞானதீபம்' எட்டு தொகுதிகளையும் படித்து முடித்தேன். தினமும் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து பச்சை தண்ணீரில் குளித்துவிட்டு யோகாசனங்கள் செய்தேன். விடுதியில் உள்ள சக மாணவர்கள் கேலி செய்தவார்கள். உடனே சிதம்பரம் வடக்குத் தெருவில் இருந்த காந்தி மன்றத்தில் சென்று தங்கினேன்.

ADVERTISEMENT

என்னுடன் சேர்ந்து அங்கு இருந்த மூவரும் இணைந்து சமைப்பது, துப்புரவுப்பணி செய்வது, ராட்டையில் நூல் நூற்பது, சர்வ சமய வழிபாடு செய்வது என்று காந்திய முறையில் வாழ்வை நடத்தி வந்தோம்.

கல்லூரியில் சோதனைக் கூடங்கள் செல்லும் போது மட்டும் பேண்ட், சட்டை அணிந்து மற்ற வகுப்புகளில் கதர் வேட்டி ஜிப்பா அணிந்து சென்றேன். இதனால் சில ஆசிரியர்களின் கண்டனத்துக்கு உள்ளானேன்.

காந்திஜி மீது வெறுப்பு கொண்ட ஆசிரியர் ஒருவர் வேண்டுமென்றே கடினமான கேள்வியைக் கேட்டு பதில் அளிக்குமாறு என்னை நோக்கி விரலை நீட்டுவார்.

பொதுவாகவே நான் பயந்து நடுங்குபவன். ஆனால் அன்றோ நான் துணிந்து எனக்குத் தெரியாது என்று பதில் கூறினேன். என்னை வெளியில் அனுப்புபவும் அவர் துணியவில்லை.

அஞ்சாமையும், தெளிவும் காந்தியைப் பற்றிப் படித்ததிலிருந்து இயல்பாகவே எனக்கு வந்தது. பெண்ணின் அழகை மட்டும் பகுதியாகப் பார்த்தால் அது காமமாக மாறும், அதே பெண்ணை பிரபஞ்சத்தில் இணைத்து அதையே இயக்கும் சக்தியாக முழுமையாகப் பார்த்தால் ஒவ்வொரு விநாடியும், ஞானத்தில் பரிணமிக்கலாம் என்ற ரகசியத்தைச் சொல்லி தந்தார்.

படிப்பு முடித்த பிறகு என் பெற்றோர் வரன் பார்க்கத் தொடங்கினர். நானோ வேலைக்குப் போவதில்லை என்று முடிவு செய்துவிட்டேன். "காந்தி நிச்சயம் சோறு போடுவார் கவலைப்படாதே' என்று எனக்கு சொன்னவர் காந்தி அமைதி நிறுவனத்தில் செயலராக இருந்த டி.டி திருமலை. அவருடன் 21 ஆண்டுகள் கூட இருந்து காந்தியப் பணிகள் செய்து வந்தேன்.

தற்போது பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு சுயசிந்தனை, சுயக்கட்டுப்பாடு, சுய ஆளுமை மூலம் எல்லோருக்கும் நன்மை புரியக்கூடிய வாழ்வை மேற்கொள்ளும் படி உந்துதல் பெற செய்வதே என்னுடைய நித்தியக் கடமையாகச் செய்து வருகிறேன்.

- முனைவர் குழந்தைசாமி
காந்தி அமைதி நிலையம், சென்னை-4
 

ADVERTISEMENT
ADVERTISEMENT