தினமணி கொண்டாட்டம்

வல்லம் குடைவரைக் கோயில்கள்

22nd Sep 2019 04:08 PM | -கி. ஸ்ரீதரன்

ADVERTISEMENT

செங்கல்பட்டிலிருந்து - திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள, வல்லம் என்ற ஊரில், சிறிய குன்றில், பல்லவர் காலத்தைச் சேர்ந்த மூன்று குடைவரைக் கோயில்கள் அமைந்துள்ளன. இவை அனைத்தும் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தைச் சேர்ந்தவையாகும்.
வசந்தீசுவரம்: இங்கு அளவில் சற்று பெரியதாக உள்ள குடைவரைக் கோயில் "வசந்தீசுவரம்" என அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் தூண்களில் மகேந்திரவர்மனின் சிறப்புப் பெயர்களான "பகாப்பிடுகு", "லளிதாங்குரன்', "சத்ருமல்லன்', "குணபரன்', போன்ற பெயர்கள் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
பல்லவர் காலத்தில் சிற்றரசனாக விளங்கிய வயந்தப்பிரியன் மகன் கந்தசேனன் என்பவரால் இக்கோயில் குடைந்து வடிவமைக்கப்பட்டது என்பதையும் இங்கு காணும் தமிழ்க் கல்வெட்டினால் அறிகிறோம். 
பகாப்பிடுகு லளிதாங்குரான்
சத்துரு மல்லன் குணபரன்
மயேந்திரப் போத்தரெசரு அடியான்
வயந்தப் பிர் அரசர் மகன் கந்தசேனன்
செய்வித்த தேவகுலம்
இங்குள்ள கோயில்கள் "தேவகுலம்' எனப் பெயரிட்டு அழைக்கப்படுகிறது. மற்ற இரு குடைவரைக் கோயில்களில் காணும் கல்வெட்டுகளால் அக்கோயில்கள் "லக்கச்சோமாசியார் மகள் தேவகுலம்" என்றும், "பல்லவ பேரரசர் மகள் கொம்மை தேவகுலம்" என்றும் குறிக்கப்படுவதை கல்வெட்டுகளால் அறிகிறோம். பல்லவர் காலத்தில் இரண்டு பெண்களால் இக்கோயில்கள் அழகிய சிற்பங்களுடன் அமைக்கப்பட்டது.
கோப்பெருஞ்சிங்கன்: வசந்தீசுவரம் குடைவரைக் கோயில் தூணில் காணப்படும் சகலபுவன சக்கரவர்த்தி கோப்பெருஞ்சிங்கனின் 14-ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டில் இக்கோயிலூரில் விளக்கு எரிப்பதற்காக தானம் அளித்து இக்கோயிலைப் போற்றிய செய்தி காணப்படுகிறது.
பாறை முகப்பில் காணப்படும் விநாயகப்பெருமானின் அழகிய வடிவத்தைக் கண்டு ஆனந்தம் கொள்கிறோம். அவரது வடிவமே அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் அமைந்துள்ளது. விநாயகர் இடக்காலை மடக்கி, வலக்காலை குத்திட்டு அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். நான்கு கரங்கள், விரிந்த அழகான காதுகள், திண்டு போன்ற அமைப்பின் மீது வைத்து, சாய்ந்த நிலையில் அழகிய வடிவுடன் ஒய்யாரமாக அமர்ந்து பக்தர்களின் குறைகளை போக்குகின்றார். மனதில் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறோம்.
மேலும் இக்குடைவரையின் வடக்குப் பக்கத்தில் ஜேஷ்டாதேவியின் சிற்பமும் காணப்படுகிறது. இக்குடைவரைக் கோயிலில் காணப்படும் அனைத்து துவாரபாலகர் சிற்பங்களும் கலையழகுடன் காட்சி அளிக்கின்றன.
வல்லம் குடைவரைக் கோயில்கள் பல்லவர் கால கலைப் படைப்பிற்கு மிகச் சிறந்த சான்றாக விளங்குகிறது. மேலும் இங்குள்ள இரு குடைவரைக் கோயில்களும் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இரு பெண்களால் தோற்றுவிக்கப்பட்டது. செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் சாலை அருகே இக்கோயில்கள் அமைந்திருப்பதால் இவ்வழியே செல்பவர்கள் இக்குடைவரைக் கோயில்களைக் கண்டு பெருமை கொள்வோம்! மகிழ்ச்சி அடைவோம்!

கட்டுரையாளர் : தொல்லியல் துறை (ஓய்வு)

ADVERTISEMENT
ADVERTISEMENT