மகாராஷ்டிரா நாடோடிக் கதை
ஒரு நாட்டை ராஜா ஒருவன் ஆண்டு வந்தான். அவனுக்கு மிகவும் பிடித்த விஷயம், தினமும் தன் மகாராணியுடன் அவையில் (தர்பாரில்) அமர்ந்து அங்குள்ளவர்களைக் கதை சொல்லச் சொல்லிக் கேட்டு மகிழ்வதுதான்.
ராஜா தனது அவையில் உள்ளவர்களிடம், "யார் எந்தக் கதை கூறினாலும், அது மிக நீண்ட கதையாகத்தான் இருக்க வேண்டும். உடனே முடிந்துவிடக்கூடிய சிறு கதைகளை யாரும் கூறக்கூடாது'' என்று நிபந்தனையும் விதித்திருந்தான்.
அவையில் உள்ள பலரும் ராஜா கூறியதைக் கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்தனர். என்றாலும், தங்களால் இயன்ற நெடிய கதைகளைச் சொல்லி ராஜாவை ஓரளவுக்கு மகிழ்வித்து வந்தனர்.
ஒவ்வொரு கதையும் முடியும் நேரம் வரும்போது, மிகவும் கோபப்பட்டு, "கதையை முடிக்காமல் இன்னும் நீண்ட நேரம் சொல்லுங்கள்'' என்று உரக்கக் குரல் கொடுப்பார் ராஜா.
இதனால், கதை கூறுபவர்கள் நீண்ட நேரம் அவரை சமாளிக்க முடியாமலும், இருந்த இடத்தைவிட்டு எழுந்து செல்ல முடியாமலும், கதையை நீட்டித்துக் கூறமுடியாமலும் திக்கு முக்காடிப் போனார்கள்.
ஒரு நாள் ராஜா, மந்திரியை அழைத்தார். "மந்திரியாரே! தாங்கள் இரண்டு மூன்று இரவுகள் வரை கேட்கும்படியான, மிக நீண்ட கதை ஒன்றைக் கூற வேண்டும்' என்றார்.
இதைக் கேட்ட மந்திரி, முதலில் ராஜா இப்படிக் கூறிவிட்டாரே என்று அதிர்ச்சி அடைந்தார். பிறகு ஓரளவு சமாளித்துக் கொண்டார். காரணம் அந்த மந்திரி மிகவும் புத்திசாலி. தனது புத்திசாலித்தனத்தையும், தனக்குக் கிடைத்திருக்கும் நல்லதொரு வாய்ப்பையும் பயன்படுத்தி ராஜாவுக்கு எப்படியாவது பாடம் புகட்ட நினைத்தார்.
அவையில் உள்ள மற்ற அறிஞர்களையும் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தார். கூடவே, "ஒருவேளை, ராஜா கூறுவது போல் மிக நீண்ட கதையை நான் கூறாவிட்டால், எனது மந்திரிப் பதவி பறிவோய்விடுமோ? இதனால் என்னை அரசவையில் இருந்து வெளியேற்றி விடுவாரோ?' என்ற பயமும் அந்த மந்திரிக்கு வந்தது. உடனே ஓர் உபாயத்தைக் கையாள நினைத்தார்.
மறுநாள் அவையில் அனைவரும் அமர்ந்திருந்தனர். ராஜா தன் ராணியுடன் வந்து சிம்மாசனத்தில் அமர்ந்ததும் மந்திரி கதை கூறத் தொடங்கினார்.
"அரசே, மிகப்பெரிய மரம் ஒன்றில் நிறைய பறவைகள் வசித்து வந்தன'' என்று கூறிவிட்டு, மேற்கொண்டு கதையைக் கூறாமல் நிறுத்திவிட்டார் மந்திரி.
"பிறகு'' என்றார் ராஜா.
"மரத்திலிருந்து ஒரு பறவை "விர்ர்ர்ர்...' என்று பறந்தது...'' என்று கூறிவிட்டு நிறுத்தினார்.
"பிறகு'' ராஜா மிகுந்த ஆர்வத்துடன் கேட்டார்.
"மேலும் இன்னொரு பறவையும் "விர்ர்ர்ர்...' என்று மரத்திலிருந்து பறந்து சென்றது...'' என்று கூறிவிட்டு கதையை நிறுத்தினார்.
"பிறகு என்னதான் ஆனது?'' ராஜா சற்று கோபம் மேலிடக் கேட்டார்.
"மூன்றாவது பறவையும் "விர்ர்ர்ர்...' என்று பறந்து சென்றது'' என்று கூறி நிறுத்தினார் மந்திரி.
மந்திரி இவ்வாறு கதை கூறுவதைக் கேட்ட ராஜா பொறுமை இழந்தார். அவருக்கு எரிச்சல் அதிகமானது.
"மந்திரியாரே! என்ன இது? மேற்கொண்டு கதையில் என்னதான் நடந்தது என்று கூறுங்களேன்? என் பொறுமையை சோதிக்காதீர்கள்?'' என்றார் ராஜா.
"அரசே! எதுவரை அந்த மரத்தில் உள்ள அத்தனை பறவைகளும் விர்ர்ர்ர்... என்று மரத்தைவிட்டுப் பறந்து போகவில்லையோ, அதுவரை கதையை எப்படி மேற்கொண்டு சொல்ல முடியும்? பறவைகள் அனைத்தும் அந்த மரத்தை விட்டுப் பறந்துபோன பின்புதானே ராஜா கதையே ஆரம்பிக்கிறது'' என்று சிரித்துக்கொண்டே கூறினார் மந்திரி.
மந்திரி கூறியதைக் கேட்டவுடன், ராஜாவுக்கும் சிரிப்பு வந்துவிட்டது. மந்திரியின் புத்திசாலித்தனத்தையும், தந்திரத்தையும் புரிந்துகொண்ட ராஜா, "மிக நீண்ட கதை கூற வேண்டும்' என்கிற தனது பழக்கத்தையும், பிடிவாத குணத்தையும் அன்றோடு விட்டுவிட்டார்.
-தமிழில்: இடைமருதூர் கி.மஞ்சுளா