சின்னத்திரை, சினிமா என இரண்டிலும் கவனம் ஈர்க்கும் நடிகராக வளர்ந்து வருகிறார் பாம்பே ஸ்ரீதர். "வேலையில்லா பட்டதாரி', "100' உள்ளிட்ட பலப் படங்களில் நடித்துப் பெயர் பெற்றவர் இவர். ""பாலசந்தர், பாலுமகேந்திரா இருவரும் தொடர்ந்து இயக்கிய டி.வி. தொடர்கள்தான் எனக்கு அறிமுகம் தந்தன. தொடர்ந்து மூடுபனி, மலையாளத்தில் "சங்கு புஷ்பம்', "மஜ்ஜ' ஆகிய படங்கள் அந்த நேரத்தில் எனக்குப் பெரும் வெளிச்சத்தைக் காட்டியது. "ரெட்டச்சுழி' படத்தில் பாலசந்தருடன் இணைந்து நடித்தது மறக்க முடியாத திரைப்பயணம்.
சசிகுமாரின்" ராஜவம்சம்", அஞ்சலி, யோகி பாபு இணைந்து நடிக்கும் படத்திலும் நடிக்கிறேன். நீ என்னவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்பது போல், சினிமாவே அமைந்து விட்டது. இதன் பின்னணியில் பெரிய உழைப்பு இருந்தது, ஏனென்றால் என்னிடம் எப்போதும் மெனக்கெடல்கள் உண்டு. எதைத் தொட்டாலும் ஜெயித்து விட வேண்டும் என்ற வேட்கை இருக்கும். படிக்கும் காலத்தில் இருந்தே சினிமாவுக்காக என்னைத் தயார்படுத்திக் கொண்டே வந்தேன். அதனால்தான் கதாபாத்திரங்களில் நேர்த்தியை கொடுக்க முடிகிறது. முக்கியமாக சினிமாவை புரிந்து கொண்டதும் இதற்கு ஒரு காரணம். ஒரு செயல் ஒரு மனிதனை அழகாக்க வேண்டும். அதை எனக்கு செய்து கொடுத்திருக்கிறது இந்தச் சினிமா'' என்றார் பாம்பே ஸ்ரீதர்.