தினமணி கொண்டாட்டம்

எனக்கு அரசியல் ஆசை துளியும் இல்லை!

22nd Sep 2019 03:41 PM

ADVERTISEMENT

"சின்ன வயதில் இருந்தே எனக்கு ஒரு பழக்கம் உண்டு. செய்த வேலையையே திரும்பத் திரும்பச் செய்வது பிடிக்காது. புதுசு புதுசா ஏதாவது செய்ய வேண்டும் என்பது என் குணம். "நோ பெய்ன்... நோ கெய்ன்' என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அதற்காக எந்த உழைப்புக்கும் எப்போதும் தயாராக இருக்கிறேன்.
 அதற்கு உங்கள் பார்வைக்கு வந்திருக்கிற "காப்பான்' ஒரு நல்ல உதாரணம்.'' "காப்பான்' படத்துக்கான எதிர்பார்ப்பு மெல்ல மெல்ல பரவிக் கொண்டிருக்க...
 "சூரரைப் போற்று' படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் இருக்கிறார் சூர்யா!
 எப்படி இருந்தது "காப்பான்' மேக்கிங் அனுபவம்...
 ஒவ்வொரு இயக்குநரும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு. ஒருவர் புதுப் புது டெக்னிக்கை சினிமாவில் கொண்டு வருவதில் வித்தை காட்டுவார். சிலர் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும் எனப் பிடிவாதமாக இருப்பார்கள். இன்னும் சிலர் பி, சி சென்டர் வரை இறங்கி அடிக்க வேண்டும் என இயங்குவார்கள். கே.வி.ஆனந்த் சார் கதை சொல்வதில் அசத்துவார். அன்றாட நிகழ்வுகளில் இருந்து கதை பிடிப்பார். எங்கோ ஒரு பயணத்தில் இருக்கும் போது, ஒரு சின்ன கரு சொல்லுவார்.
 எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரி சினிமா செய்வார். பத்திரிகை, கேமிரா என சின்ன வயதில் இருந்தே பயணமானவர். சினிமாவுக்குத் தொடர்பே இல்லாத குடும்பத்தில் இருந்து வந்தவர்.
 எல்லாமே அவருக்கு அனுபவங்கள். எதையும் உணர்தல் மூலமாக அனுபவம் பெறுவார். ஒரு ஊரை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டுமானால், அந்த ஊருக்கே போய் விடுவார். "காப்பான்' எங்கள் இரண்டு பேரையும் அடுத்த இடத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது. பார்த்தவர்களுக்கு அத்தனை பரவசம். ஒரு சினிமா தியேட்டரை விட்டு வெளியே வந்த பிறகும் மனதில் நிற்க வேண்டும். அதை எங்கள் உழைப்பு ரசிகர்களுக்குக் கொடுத்திருப்பாதாக உணர்கிறேன். ஒரு சினிமா பார்வையாளருக்கு அப்படி ஏதோ ஒன்றைக் கடத்த வேண்டும். காப்பான் அதற்கு ஒரு உதாரணம்.
 "சூரரைப் போற்று' படத்தில் உங்கள் கதாபாத்திரம் குறித்து இப்போதே பல கதைகள் உலவுதே...
 இருக்கத்தான் செய்யும். படம் அப்படி. அது எதுவுமே இல்லை என்றும் சொல்ல முடியாது. ஆனால், "சூரரைப் போற்று' இன்னும் மேலே போற மாதிரி இருக்கும். ரொம்ப நாள்களுக்கு முன்பே இது கேட்ட கதை. ரொம்ப சூப்பர் பேக்கேஜ். டெக்னிக்கலா மிரட்டுகிற படம். அப்படி கைக்கு வந்திருக்கிற கதை இது.
 
 இடையில் சின்ன சறுக்கல்... நீங்களே உணர்ந்து வந்திருப்பீங்க...
 யாருக்குத்தான் இங்கே சறுக்கல் இல்லை. எந்த இடமும் நிரந்தரம் கிடையாது. அதே நேரம், மற்றவர்கள் இடமும் அப்படிதான். இருக்கிற வாய்ப்பை கவனமாகப் பயன்படுத்திக் கொள்வதில்தான் சாமர்த்தியம். எனக்குப் பிடித்ததை மட்டும் இங்கே செய்ய முடியாது. ஒரு இயக்குநர் அவருக்கான அலைவரிசை பொருந்தி வரும் போது, என்னிடம் வருகிறார். அது எனக்குப் பொருந்தினால் இறங்கி வேலை செய்கிறோம்.
 நிறையப் பேர் கதை சொல்லும் போது, இது எங்கேயோ கேட்ட கதை மாதிரி தெரிந்தால், உடனே நிறுத்தச் சொல்லி விடுவேன். அந்தளவுக்கு இப்போது சினிமாவில் கதைகள் சர்ச்சை இருக்கிறது. இதையெல்லாம் தாண்டித்தான் சினிமா செய்ய வேண்டி இருக்கிறது. 10 வருடத்துக்கு ஒரு முறை சினிமா இங்கே மாறும். அந்த மாற்றம் இப்போது நடந்திருக்கிறது. அதற்கேற்றால் போல் எல்லோரும் மாற வேண்டியிருக்கிறது. நானும் மாறித்தான் ஆக வேண்டும்.
 
 கல்வி கொள்கைக்கு எதிரான உங்கள் பேச்சு பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது... எதிர்காலத் திட்டம் என்ன?
 அரசியல் ஆர்வம் எதுவும் உண்டா... என நேரடியாகவே கேட்கலாம். எனக்கு அரசியல் தெரியாது. நான் நற்பணி இயக்கம் என்று ஆரம்பித்து, இளைஞர் வளத்தை நல்ல வழியில் பயன்படுத்துகிறேன். இளைஞர்கள், மாணவர்கள் அதற்குப் பக்க பலமாக இருப்பதுதான் பெரிய விஷயம். நான் அகரம் பவுண்டேஷன் நடத்துகிறேன். பள்ளி, மாணவர்கள் என நாளுக்கு நாள் யோசிக்கிறேன். அப்படிப் பேசினதுதான் அந்தப் பேச்சு.
 நான் பேசாமல் வேறு யார் பேச முடியும். பல கல்வியாளர்கள் தொடர்ந்து பேசி வந்த விஷயம்தான் அது. நான் பேசியதால் வெளியே வந்தது. அவ்வளவுதான். என்னுடைய எல்லாச் செயல்களையும், நான் நேர்மையாகத்தான் செய்ய நினைக்கிறேன். அவர்களைப் பயன்படுத்தி மக்களுக்கு ஏதாவது நடக்க வேண்டும். அவ்வளவுதான். அதை அடிக்கடி தெளிவுபடுத்திக் கொண்டே இருக்கிறேன். வழிநடத்திச் செல்லும் ஆசை எல்லாம் எனக்கு நிச்சயம் கிடையாது. அரசியல் ஆசை துளியும் இல்லை. இப்போது கூட பேனர்கள் வைக்கக் கூடாது என என் ரசிகர்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். முடிந்தவரை நல்லது செய்வோம். அதுவே அரசியல் என நினைக்கிறேன்.

ஜோதிகாவும் அடுத்தடுத்துப் படங்கள் நடிக்கிறாங்க...
 அது அவரின் விருப்பம். நாங்கள் திருமணம் செய்து கொள்ளும் போது, நட்சத்திர தம்பதிகளின் விவகாரத்து செய்திகள் அடிக்கடி தந்தியடிக்கும். அந்த மாதிரியான கால கட்டத்தில்தான் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். அது மாதிரி ஒரு எல்லைக்குப் போய் விடக் கூடாது என்பதில் இருவருமே தீர்மானமாக இருந்தோம்.
 விட்டுக் கொடுத்தல் எங்கள் இருவருக்குள்ளும் உண்டு. அதுதான் எங்களை வழி நடத்துகிறது. ஜோ என் வாழ்க்கையின் பரிசு. என்னையும் அவர் அப்படித்தான் பார்க்கிறார். சில நேரங்களில் அவர் ஆசிரியராகவும் இருக்கிறார்.
 -ஜி. அசோக்
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT