பசுமை பணியில் பட்டதாரி இளைஞர்கள்!

செங்கல்பட்டைத் தலைமையிடமாகக் கொண்ட "டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை' 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது
பசுமை பணியில் பட்டதாரி இளைஞர்கள்!

செங்கல்பட்டைத் தலைமையிடமாகக் கொண்ட "டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை' 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளை டாக்டர் கலாமிற்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளைக்குத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 190 கிளைகள் உள்ளன. சுமார் 15,000 உறுப்பினர்கள், செயல்பட்டு வருகிறார்கள் இவர்களது பணிகள் என்ன? இந்நிறுவனத்தின் உந்து சக்தி யார்?
செங்கல்பட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஜெயராஜ், தனியார் நிறுவனத்தில் செய்து வந்த வேலையை விட்டுவிட்டுச் சமூகப் பணியில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் களமிறங்கினார். இது குறித்து ஜெயராஜ் மனம் திறக்கிறார். 
"கல்வியின் முக்கியத்துவம் மற்றும் பசுமையை விரிவாக்கம் செய்தல் என்ற கலாமின் லட்சியத்துடன் எங்களது அறக்கட்டளை செயல்படுகிறது . அதற்காகச் சமுதாயத்தைப் பாதிக்கும் பேரிடர்கள் நிகழ்ந்தால் மற்றவர்கள் உதவி செய்வார்கள் என்று நாங்கள் ஒதுங்கி நின்றுவிடுவதில்லை. 2015-ஆம் ஆண்டு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மாவட்ட மக்களுக்கு உணவு, உடை போன்ற அத்தியாவசிய உதவிகளை நாங்கள் செய்து கொடுத்தோம். வெள்ளத்தினால் குடிசை வீடுகளை இழந்த 20 ஏழைக் குடும்பங்களுக்குச் சவுதி அரேபியா "ஜெட்டா தமிழ்ச்சங்கத்தின்' உதவியோடு இலவசமாக வீடுகளைக் கட்டிக் கொடுத்தோம். 

பூமி வெப்பமடைதலை தடுக்கும் முயற்சியாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் உதவியோடு பல ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி வருவதுடன் .. மரக்கன்றுகளை மாணவர்கள் சரிவரப் பராமரிக்கிறார்களா? என்பதையும் தொடர்ந்து கண்காணித்து வழிகாட்டி வருகிறோம். அதனால் பல பள்ளிகள் நிழல் தரும் மரங்கள் கொண்ட பூங்காவாக மாறியுள்ளன. உதாரணத்திற்கு செங்கல்பட்டின் செயின்ட் மேரிஸ் பள்ளி. 
படிக்க வசதியற்ற 150-க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்களுக்குக் கல்வி கேள்விக்குறியாக மாறிவிட்ட தருணத்தில் பள்ளி மற்றும் உயர்கல்வி படிப்பதற்கு அமெரிக்காவில் உள்ள SEED மற்றும் "ஹோப் 3' பவுண்டேஷன் ஆகிய தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து உதவி செய்து வருகிறோம். 
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் டாக்டர் அப்துல் கலாம் அறக்கட்டளையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் ஆதரவற்றோர் தங்கும் இல்லத்தில் 50 }க்கும் மேற்பட்டவர்களை மீட்டு பாதுகாத்து வருகிறோம். 

கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகம் மற்றும் புதுவை முழுவதும் மின்சார சிக்கனம், குடிநீர் சிக்கனம், புகையிலை குறித்த விழிப்புணர்வு, பாலித்தின் - பிளாஸ்டிக் விழிப்புணர்வு, கண்தானம் குறித்த விழிப்புணர்வு, ரத்ததானம், போக்குவரத்து விழிப்புணர்வு, நீர் நிலைகளைப் பாதுகாப்பது போன்று இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான விழிப்புணர்வு முகாம்களை நடத்தியுள்ளோம். பொது மக்களைப் பங்கேற்கச் செய்தோம். 
மாதந்தோறும் ஒரு அரசுப் பள்ளியைத் தேர்ந்தெடுத்து அந்தப் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்புக் கருவிகள், மேஜை, நாற்காலிகள் போன்றவற்றையும் வழங்கி வருகிறோம். நீர்நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியாக மாவட்டங்களில் உள்ள குளங்களைத் தூர் வாருவது சுத்தம் செய்வது போன்ற பணிகளையும் மேற்கொள்கிறோம். இந்த நடவடிக்கைகளுக்கு ஜெட்டா தமிழ்ச் சங்கம் நிதி உதவி செய்து வருகிறது. 
எங்கள் அறக்கட்டளையின் இலக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகளைத் தமிழகம் முழுவதும் நடுவது. மரக்கன்றுகளை யார் கேட்டாலும் அவர்களைத் தேடித் சென்று கொடுத்து வருகிறோம். ஆண்டுக்கு , ஐம்பது மாணவர்களைப் படிக்க வைப்பது, மாதந்தோறும் ஒரு அரசு பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்வது . மாதம் ஒரு குளத்தையாவது தூய்மைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம்'' என்கிறார் ஜெயராஜ். 

-பிஸ்மி பரிணாமன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com