தினமணி கொண்டாட்டம்

ஒழுக்கத்தை கற்றுத் தந்த ஜிம்னாஸ்டிக்ஸ்: மேகனா ரெட்டி குண்டளப்பல்லி

17th Sep 2019 01:18 PM | கண்ணம்மா பாரதி

ADVERTISEMENT

 

இந்தியாவின் முதல் இசைநய (RYTHMIC) ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை மேகனா ரெட்டி குண்டளப்பல்லி. பின்னணியில் இசை ஒலிக்க, பந்து, வளையம், வெகு நீளமான ரிப்பன், கோலைப் பயன்படுத்தி உடலை பலவிதத்தில் வளைத்து நெளித்து மடக்கி, பாய்ந்து கரணமிட்டு வித்தைகள் செய்வதுதான் ரிதமிக் ஜிம்னாஸ்டிக்ஸ். 2016 ரியோ ஒலிம்பிக்ஸில் தீபா கர்மாகர் ஜிம்னாஸ்டிக்ஸில் இன்னொரு பிரிவான "கலைநய சீருடல்' (ARTISTIC  GYMNASTICS) வீராங்கனை. 

2010 -இல் டில்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ரிதமிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியைப் பார்த்த பிறகு மேகனா அதில் மனதைப் பறிகொடுத்தார். அப்போது மேகனாவுக்கு வயது பதினொன்று. இந்தக் கலையைப் பயில இது அதிக வயது. மனம் தளராத மேகனா ஒரு தீர்மானத்துடன் தனது பதினோராவது வயதில் ரிதமிக் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியைத் தொடங்கினார்.

அப்படித் தொடங்கும் போது "என்றாவது ஒரு நாள் இந்தியாவை நான் பிரதிநிதித்துவம் செய்வேன்' என்று நினைத்துப் பார்த்தது கூடக் கிடையாது. ஆம்.." மேகனா 2018 காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் சார்பாகப் போட்டியாளராகக் கலந்து கொண்டார். இந்தியாவின் சார்பில் 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸில் கலந்து கொள்ள வேண்டும் என்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் மேகனாவின் பயிற்சியாளர் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த வர்வரா ஃபிலோ. மேகனா குச்சிப்புடி நாட்டியக் கலைஞரும் ஆவார். 

ADVERTISEMENT

மேகனா தனது "இசைநய சீருடல்' பயிற்சி அனுபவங்களைச் சொல்கிறார்:

"சிறு வயதிலிருந்தே நான் துரு துரு. புதியவைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வப் பொறி எழுந்து கொண்டே இருக்கும். அப்படித்தான் சின்ன வயதில் குச்சுப்புடி கற்றுக் கொண்டேன். கூடவே பல விளையாட்டுக்கள் குறித்தும் தெரிந்து கொண்டேன். 2010 டில்லி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஓர் அங்கமாக இருந்த ரிதமிக் ஜிம்னாஸ்டிக்ஸ் நிகழ்ச்சியைப் பார்த்துப் பரவசப்பட்டேன்.

குச்சுப்புடி கலைஞரான எனக்கு ரிதமிக் ஜிம்னாஸ்டிக்ஸ் கலைஞர்களிடம் இருந்த கலைநயம், அதைப் பின்னணி இசைக்கேற்ப வெளிப்படுத்தும் பாங்கு... அத்துடன் அவர்கள் உடலை ரப்பர் போன்று வளைத்து செய்யும் சாகசங்கள் .. என்னைக் கவர்ந்தன. அப்போதே இந்தக் கலையைப் பயிலுவது என்று முடிவு செய்தேன். 

"தொடக்கத்தில் இந்தக் கலையைப் பயிற்றுவிக்க ஹைதராபாத்தில் யாரும் இல்லை. அதனால் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, உஸ்பெஸ்கிஸ்தான் நாடுகளுக்குச் சென்று பயிற்சி பெற்றேன். அமெரிக்காவில் எனது வயதைக் கேட்டு தெரிந்து கொண்டவுடன் "ஜிம்னாஸ்டிக் கற்க நான்கு அல்லது ஐந்து வயதில் வகுப்பில் சேர வேண்டும். அப்போதுதான் உடம்பு வளையும். உனக்கோ பதினொன்று ஆகிவிட்டது, இந்த வயதில் உடல் கை கொடுக்காது. வளைந்து கொடுக்கும் தன்மை இந்த வயதில் குறைவு.. அதனால் பயிற்சி தர இயலாது." என்று ஒரு பயிற்சியாளர் சொல்ல.

வேறு பயிற்சியாளரிடம் சேர்ந்தேன். ஆரம்பத்தில் எனது வயது குறித்து அவரும் பயிற்சி தரத் தயங்கினார். ஆனால் எனது ஆர்வத்தைப் பார்த்ததும் பயிற்சி தர ஒத்துக்கொண்டார். நானும் கடுமையான பயிற்சி செய்து அவரது பயத்தைப் போக்கிப் பாராட்டுகளைப் பெற்றேன்.

"அப்பா ராமலிங்க ரெட்டி மனிதவள மேம்பாட்டு வல்லுநர். பெற்றோரும், ரிதமிக் ஜிம்னாஸ்டிக்கும் எனது இரண்டு கண்கள். வேறு எந்த ஆசிரியரும் பயிற்றுவிக்காத சுய ஒழுக்கத்தை இந்தக் கலை எனக்குச் சொல்லிக் கொடுத்தது. அது எனது வாழ்க்கை முழுவதும் என்னுடன் பயணிக்கும். என்றாவது ஒருநாள் ஏதாவது ஒரு காரணத்திற்காக இந்தக் கலையை நான் விட்டுவிட வேண்டிவரும். ஆனால் இந்தக் கலை கற்பித்த சுய ஒழுக்கத்தை என்னால் விட்டுவிட முடியாது.

ஜிம்னாஸ்டிக்ஸின் இதர பிரிவுகளான ஆர்டிஸ்டிக், ஏரோபிக்ஸ், அக்ரோபேட்டிக்ஸில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாகப் பங்கு பெறுவார்கள். அப்படிப் பங்கு பெறுபவர்களில் தீபா கர்மாகர் மட்டுமே ஒலிம்பிக்ஸ் வரை சென்றார்.

எனது திறமையைப் பார்த்து நான் பெறும் புகழை பதக்கங்களைப் பார்த்துப் பெண்கள் இந்த வித்தையைக் கற்க முன்வர வேண்டும் என்பதற்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இந்த ஆண்டு குரோஷியாவில் நடந்த லெடா கப் போட்டியில் எனக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது எனது லட்சியத்தை விரைவில் தொடுவேன் என்பது என்னை உற்சாகப்படுத்தியுள்ளது'' என்கிறார் மேகனா ரெட்டி குண்டளப்பல்லி.

ADVERTISEMENT
ADVERTISEMENT