தினமணி கொண்டாட்டம்

இணைப்புக்கு பாலமான மாமல்லபுரம்

20th Oct 2019 11:24 AM

ADVERTISEMENT

இந்திய - சீனா நாட்டு தலைவர்களின் சந்திப்பு, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பிற்குப் பின் மாமல்லபுரம் உலகளவில் பிரசித்தி பெற்றதாகிவிட்டது. அங்குள்ள சிறப்பு வாய்ந்த சிற்பங்கள் புதுப் பொலிவு பெற்றுள்ளன.
அழைப்பு விடுத்த மோடி
இரு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் இரு நாடுகளும் தங்களது ராணுவத்தைக் குவித்தன. போர் பதட்டம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு சீனா சென்ற மோடி, ஜின்பிங்கை சந்தித்து எல்லைக்கோடு குறித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார் . அதில் முழுமையான உடன்பாடு எட்டப்படாத நிலையில் ஜின்பிங்கை இந்தியாவுக்கு அழைத்தார் மோடி. அந்த அழைப்பின்படியே இந்தியா வந்தார் ஜின்பிங்.
இந்தியா-சீனா தலைவர்கள் சந்திப்பிற்காக முதலில் தேர்வு செய்யப்பட்ட இடம் வாரணாசி. ஆனால், சீனாவின் அடையாளமான சில்க் வர்த்தகச் சாலையில் மாமல்லபுரம் முக்கியத் தளமாக இருந்ததால் இந்த இடத்தை சீனா பரிந்துரை செய்ததாகத் தெரிகிறது. மேலும், மாமல்லபுரத்தில் உள்ள நினைவுச்சின்னங்கள் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாக வகைப்படுத்தப் பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது.
வரலாற்று ரீதியாகப் பார்த்தால் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த போதிதர்மர் சீனர்களால் வணங்கப்படுபவர். மேலும் 1956-இல் சீனாவின் பிரதமராக இருந்த சூ என்லாய் இரண்டுநாள் பயணமாகத் தமிழகம் வந்தார். அப்போது மாமல்லபுரத்திற்கு வருகை புரிந்தார். மாமல்லபுரத்திற்கும் புத்தமதத்திற்குமுள்ள தொடர்புகளைப் பற்றி முழுமையாகக் குறிப்பு எடுத்துக்கொண்டார் சூ என்லாய். அதன் பாதிப்பில் தற்போதைய சீன அதிபரும் மாமல்லபுரத்தை தேர்வு செய்திருக்கலாம் என்கிறார்கள்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் அதிபர் ஜின்பிங், "சீனாவுக்கும் தமிழகத்துக்கும் இடையிலான பரிமாற்றங்களின் நீண்ட வரலாற்றை நினைவு கூர்ந்தார். பண்டைய சில்க் சாலையில் சரக்குகளுக்கான கடல் போக்குவரத்து மையமான தமிழகம், சீனாவுடனான பரிமாற்றங்களின் நீண்ட வரலாற்றையும், பண்டைய காலங்களிலிருந்து கடல் வர்த்தகத்தில் சீனாவுடன் நெருங்கிய தொடர்புகளையும் கொண்டுள்ளது' என்று ஜின்பிங் கூறியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் பிரச்னை குறித்து இரு தலைவர்களுக்கிடையில் எந்தப் பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்கிறது இந்திய தரப்பு. மேலும் ஜம்மு-காஷ்மீர் குறித்த பிரச்னை எழுப்பப்படவில்லை, விவாதிக்கப்படவில்லை. மேலும் சீன அதிபர் ஜின்பிங் , இம்ரான்கானின் வருகை குறித்து பிரதமரிடம் கூறினார். பிரதமர் மோடி அதைக் கவனமாய் கேட்டறிந்தார்" என்பதோடு தனது விளக்கத்தை முடித்துக் கொண்ட இந்திய வெளியுறவுத்துறை,
"இரு நாடுகளுக்கான வர்த்தக பற்றாக்குறையை எவ்வாறு குறைப்பது? என்பதை சீனா முழுமையாகக் கருத்தில் கொள்கிறது என்றும், தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் இந்தியாவின் கோரிக்கைகளை நிறைவேற்ற சீனா அதிபர் மனப்பூர்வமாகத் தயாராக இருக்கிறார்'' என்றும் வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே தெரிவித்தார்.
பேச்சு வார்த்தையின் முத்தாய்ப்பாக, சீன அரசின் "சின்ஹுவா' செய்தி நிறுவனம் , அனைத்து கண்ணோட்டத்திலும் , அர்த்தத்திலும் சீனாவும், இந்தியாவும் நல்ல அண்டை நாடுகளாகவும், நல்லுறவைப் பேணுபவர்களாக மட்டுமே இருக்க வேண்டும். சீனாவின் டிராகனும், இந்தியாவின் யானையும் ஒன்றாய் நடனமாடுவதே இரு நாட்டு மக்களின் விருப்பம் என்று சொல்லியிருந்தது. இதிலிருந்து சீனா-இந்தியாவின் நட்பு பலப்பட்டு இருப்பது உறுதியாகிறது.
சீன அதிபருக்கு பரிசு

ADVERTISEMENT

மகாபலிபுரத்திற்கு வருகை புரிந்த சீன அதிபர் ஜின்பிங்கிற்குப் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் அடையாளமாக விளங்கும் சில பரிசுகளை வழங்கினார். காஞ்சிபுரம் புடவையும், தஞ்சாவூர் நடனம் ஆடும் சரஸ்வதி தேவியின் ஓவியமும், தங்கமுலாம் பூசப்பட்ட நாச்சியர்கோயில் குத்துவிளக்கும், கையால் நெய்யப்பட்ட ஜின்பிங் உருவம் கொண்ட பட்டுத் துணி நரேந்திர மோடி நினைவுப் பரிசாக அளித்தார்.
மோடி கையில் இருந்தது என்ன?
சீன அதிபருடன் முதல்நாள் நிகழ்ச்சிக்கு நடந்து முடிந்த பிறகு, 12ஆம் தேதி காலை பிரதமர் மோடி தான் தங்கியிருந்த ஹோட்டல் அருகே உள்ள பீச் பகுதியில் நடைப்பயிற்சி செய்தார் மோடி. அப்போது அங்கு இருந்த குப்பைகளை அகற்றி கடற்கரையைத் தூய்மை படுத்தினார். இதுதொடர்பாக, 3 நிமிடங்கள் கால அளவிலான வீடியோவை, அவர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
மேலும் கரையில் இருந்தபடியே நீண்ட நேரம் கடலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது தான் கடல் உடன் உரையாடலில் ஈடுபட்டதாகத் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளவர், தன்னையே தான் தொலைத்துவிட்டதாகக் கவிதை வாயிலாகத் தெரிவித்துள்ளார்.
மோடி கடற்கரை பகுதியில் நடைப்பயிற்சி செய்த இந்த வீடியோவுக்கு, பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர். கவுன்சிலர் கூடச் செய்யத் தயங்கும் வேலையை, நாட்டின் பிரதமர் தயங்காமல் செய்ததாக பலரும் பாராட்டியுள்ளனர்.
இந்த வீடியோவில், மோடியின் கையில் ஓரு உபகரணம் இருப்பதைக் கண்ட பலர், அது என்ன என்று கேள்வி எழுப்பியிருந்தனர். பலர் இதற்குப் பல்வேறுவிதமான பதில்களைத் தெரிவித்திருந்த நிலையில், இதற்குப் பதிலளிக்கும் வகையில், பிரதமர் மோடி, டுவிட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
நடைப்பயிற்சியின் போது என் கையில் இருப்பது என்ன என்று பலர் கேள்வி எழுப்பியிருந்தனர். அது "அக்குபிரஷர் ரோலர்'. இது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என பிரதமர் மோடி, அந்த டுவீட்டரில் தெரிவித்துள்ளார்.
-வனராஜன்

 

ADVERTISEMENT
ADVERTISEMENT