தினமணி கொண்டாட்டம்

ரோஜா மலரே! - 8 

6th Oct 2019 06:24 PM | - குமாரி சச்சு

ADVERTISEMENT


நான் "ஒளவையார்'” படத்தில் செய்த குறும்பு என்ன தெரியுமா? முதல் நாள் படப்பிடிப்பு ஒரு குளத்தில் நடந்தது. சென்னையைத் தாண்டி, கும்மிடிபூண்டி அருகில் உள்ள தடா என்ற இடத்தில் தான் ஒரு குளம் இருந்தது. அந்த குளத்தில்தான் என் சம்பந்தப்பட்ட சூட்டிங் ஆரம்பித்தது. 

கதைப் படி குழந்தையாக இருந்த "ஒளவையார்' அந்த தடாவில் உள்ள குளத்தில் இருந்து, தான் கொண்டு வந்த குடத்தில் தண்ணீரை  நிரப்பி, அதை அங்கிருந்த பிள்ளையார் சிலை மீது  ஊற்ற வேண்டும். அதாவது அபிஷேகம் செய்யவேண்டும். இதுதான் அன்று படமாக்கப்பட்ட முதல் நாள் காட்சி. அந்த சமயத்தின் போதுதான், சிறு பெண்ணாக இருந்த, அந்த குழந்தை -பருவ வயது நங்கையாக மாறுகிறார் என்று அழகாக அந்தக் காட்சியை அமைத்திருந்தார்கள். 

நான் எப்படி  நடிக்கிறேன் என்று பார்க்கவோ என்னவோ வாசன் அவர்களே அங்கு வந்திருந்தார்கள்.  படத்தின் தயாரிப்பாளர் அவர். படத்தை எழுதி, இயக்கியது கொத்தமங்கலம் சுப்பு. அவர் மட்டும் அல்ல வேப்பத்தூர் கிட்டு, வித்வான் வே. லக்ஷ்மணன் போன்ற பலரும் அந்த படப்பிடிப்பிற்கு வந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த காட்சி மட்டும் அல்ல ஒரு பாடல் காட்சியையும் அங்குதான் எடுத்தார்கள். அங்கு எடுக்கப்பட்ட பாடல், நான் நடிப்பு தேர்வுக்கு வரும்போது எந்தப் பாடலை சொல்லச் சொல்லி பார்த்தார்களோ அந்த செய்யுள், பாடலாக மாறி அந்த பாட்டையும் அங்கு வருவது போல் படம் பிடித்தார்கள். "வாக்கு இருந்தால் மட்டும் போதாது, நல்ல மனமிருக்க வேண்டும், நல்ல மனமிருக்க வேண்டும்', என்ற பாட்டு ஒலிக்க படப்பிடிப்பு நடந்தது. 

வாசன் அவர்களே படப்பிடிப்பைப் பார்க்க வந்துள்ளதால் எல்லோரும் சந்தோஷத்துடன் வேலை செய்து கொண்டிருந்தார்கள். எல்லாமே கன கச்சிதமாக நடந்து கொண்டிருந்தது. கொத்தமங்கலம் சுப்பு  டைரக்ஷன் என்பதால் அவரும் மிகவும் கவனதுடன் இந்த படப்பிடிப்பை நடத்தினார். என்னிடம் ஒரு சிறிய குடத்தை கொடுத்தார்கள். என்னைச் சுற்றிலும் பல்வேறு குழந்தைகள் இருந்தன. அதைத் தவிர சுமார் 10 பேர்கள், கேமராவில் தெரியாத வண்ணம், இரண்டு பக்கமும் நின்று கொண்டிருந்தார்கள். 

ADVERTISEMENT

அவர்கள் எல்லோரும் நன்றாக நீச்சல் தெரிந்தவர்கள், எங்களைச் சுற்றி நின்று இருந்தார்கள். ஒரு வேளை எங்காவது ஒரு குழந்தை தவறி தண்ணீரில் விழுந்தால், காப்பாற்ற இவர்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள். உதவி இயக்குநர்களில் ஒருவர் என்னிடம் வந்து காட்சியைப் பற்றியும், நான் செய்யவேண்டியது என்ன என்றும் விவரமாக விளக்கி சொன்னார். அதாவது நான் நிற்கும் இடத்திற்கு  கிடையாது." நீ இந்தப்  படிக்கட்டில் நின்று, குடத்தை இப்படி தண்ணீரில் அழுத்தி, பின்னர் குடம் தண்ணீரால் நிரம்பியவுடன், அதை தூக்கி இப்படி இடுப்பில் வைத்துக் கொள்ளவேண்டும்' என்று தெளிவாக சொல்லிவிட்டு சென்றார். 

மற்ற குழந்தைகள் எல்லாரும் மூன்று படிக்கட்டுக்கள் மேல்தான் நிற்கவேண்டும் என்றும், காமிரா ஓடும் போது நான் மட்டும் இறங்காமல் குடத்தில் இருக்கும் தண்ணீரை மொள்ள வேண்டும் என்று  சொல்லி விட்டு, இயக்குநர் ஸ்டார்ட் சொல்லும் போது யாரும் இறங்காமல் நடிக்க வேண்டும் என்றும் பலமுறை சொன்னார்கள். நான் உட்பட எல்லோரும் பலமாக தலையை ஆட்டினோம். "ஸ்டார்ட்' என்று குரல் வந்தவுடன் அவர்கள் சொன்னது எதுவுமே எனக்கு மனதில் இல்லை. நான் பாட்டிற்கு அடுத்த படிக்கட்டு இருப்பது போல் ஒரு காலை தண்ணீருக்குள் வைக்க, படிக்கட்டே இல்லாததால் நான் கீழே விழ, தண்ணீரில் மூழ்கத் தொடங்கினேன். தயாராக நின்றுருந்த ஒரு நீச்சல் வீரர் என்னை காப்பாற்றி, மேலே எடுத்து வந்தார். 

இதைப் பார்த்த மற்ற குழந்தைகள் எல்லோரும் அலறி அடித்துக் கொண்டு நாலாபுரமும் ஓடினார்கள். விழுந்தது என்னவோ நான் தான் என்றாலும், மற்ற குழந்தைகள் பயத்தால் ஓடின. எனக்குத் தலையை துவட்டி, வேறு சட்டை, பாவாடை அணிவித்து, நான் விழுவதற்கு முன் போட்டிருந்த அதே சட்டை, பாவாடையை இஸ்திரி செய்து கொண்டு கொடுத்தார்கள். என் பாட்டி என்னை கடிந்து கொண்டார். “""உன்னிடம்தான் முன்பே சொல்லி விட்டார்கள் இல்லையா? நீ நின்று கொண்டிருக்கும் படிக்கட்டிலிருந்து அடுத்து படிக்கட்டே இல்லை என்று. பின்னர் நீ ஏன் அடுத்த படிக்கட்டில் கால் வைக்க போனாய்?'' என்றார்.  “""நான் நடிக்கும் ஷாட் நன்றாக வர வேண்டும்” என்று எண்ணத்தில் அப்படி செய்து விட்டேன்”, என்று சொன்னேன்.''  ""உனக்கு ஷாட் பற்றி எல்லாம் தெரியுமாக்கும்''” என்று என்னை திட்டிக் கொண்டே நகர்ந்தார். என்னுடன் அந்தக் காட்சியில் நடித்த குழந்தைகள் பயத்தால் குளம் பக்கமே வரத் தயங்கின.

"" என்னை மீண்டும் அதே காட்சியில் நடிக்கிறாயா'' என்று கேட்டபோது, “""எனக்கென்ன பயம்.  நான் மீண்டும் நடிக்க தயார்''”, என்று சொன்னேன். காரணம் எனக்கு என்றுமே, எதற்கும் பயம் ஏற்பட்டது இல்லை. என்னை காண்பித்து மற்ற குழந்தைகளிடம் பயம் வேண்டாம் என்று எல்லோருக்கும் சொல்லி, மற்ற குழந்தைகளை நடிக்க அழைத்து வந்தார்கள். வாசன் சார் என்னை மிகவும் பாராட்டினர். அதுவும் குறிப்பாக பயம் இல்லாத குழந்தை என்றும், தொழில் மேல் எவ்வளவு அக்கறை இந்த குழந்தைக்கு இருக்கிறது என்று மகிழ்ந்து என்னை மிகவும் பாராட்டினர். இப்படி பாராட்டு பெற்ற அந்த குழந்தை, அந்தப் படத்திலேயே நடித்திருக்காமல் போயிருக்கக் கூடும். “

"ஒளவையார்'”  படத்தில் நான் நடித்ததே தனிக்கதையாக கூறலாம். நடிப்புத் தேர்வு எப்படி நடந்தது?   என்பதையும் இங்கேயே சொல்லி விடுகிறேன், கேளுங்கள்.  நான் "ராணி'” படத்தில் நடித்ததிலிருந்து எனக்கு பல படங்கள் வரத் தொடங்கின. ஒரு நாள் ஜெமினி ஸ்டூடியோவில் இருந்து என்னை நடிக்க கூப்பிட்டு ""கார் அனுபட்டுமா'' என்று கேட்டார்கள். கரும்பு தின்ன யாருக்கு கசக்கும். நாங்களும் நடிக்கத் தயார் நிலையில் இருந்தோம். கார் வந்ததும் நானும் என் பாட்டியும் மிகுந்த சந்தோஷத்துடன் கிளம்பினோம். காரணம், ஜெமினி என்பது பெரிய படக் கம்பெனி. 

அவர்களது படத்தில் நடித்தாலே நமக்கு பெருமையும், புகழும் கூடும். அது மட்டும் இல்லாமல் சிறிய வயது ஒளவையாராக நான் நடிக்கப் போகிறேன் என்று தெரிந்தவுடன், வீட்டில் எல்லோருக்கும் அளவில்லாத மகிழ்ச்சி. கார் வந்ததும் நானும் என் பாட்டியும் ஏறி உட்கார்ந்து, ஜெமினி ஸ்டூடியோவிற்கு சென்றோம். ஜெமினி வாசன், கொத்தமங்களம் சுப்பு , ஜெமினி கணேசன் ஆகியோர் அங்கு இருந்தார்கள். இவர்கள் மட்டும் அல்ல, பல குழந்தைகளும் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக நின்றும்,  விளையாடிக்கொண்டும் இருந்தார்கள். 

என்னை பார்த்தவுடன் ஒரு வசனம் சொல்ல சொன்னார்கள். "வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்' என்ற செய்யுளை சொல்ல சொன்னார்கள், நான் சரியாக சொன்னேன். என்னை நடந்து காண்பிக்கச் சொன்னார்கள், இப்படி உட்கார வேண்டும் என்றார்கள். அவர்கள் கூறியபடி செய்தேன். அனைத்தையும் நான் செய்வதை பார்த்து விட்டு, இந்தக் குழந்தை ரொம்பவும் குட்டியாக இருக்கிறது. குடத்தை தூக்குமா என்று அவர்களுக்குள்ளேயே பேசிக்கொண்டு விட்டு, நாங்கள் சொல்லி அனுப்புகிறோம் என்று என்னை அன்று திருப்பி அனுப்பி விட்டார்கள். நாட்கள் மாதங்களாயின. "சந்திரலேகா' எடுத்த ஜெமினி ஸ்டூடியோவிலிருந்து எங்களுக்கு எந்த ஒரு தகவலும் வரவில்லை. என்னை விட என் பாட்டிக்கு மிகவும் வருத்தமாகி விட்டது. ஒரு பெரிய படக் கம்பெனி, மிகவும் பெரிய படங்களை எல்லாம் எடுத்த படக் கம்பெனி, எங்களை கூப்பிட்டு விட்டு திருப்பி அனுப்பி விட்டார்களே என்று வருத்தம் ஒரு பக்கம், சின்ன ஒளவையாராக நடிக்க முடியாமல் போய்விட்டதே என்ற ஆதங்கம் ஒரு புறம். 

அந்தக் காலத்தில் மட்டும் அல்ல, எல்லா காலத்திலும் இப்படிபட்ட மனசோர்வுற்ற நிலையில், நாம் எல்லோரும் ஆண்டவனிடம் தானே தஞ்சம் அடைவோம். நாங்கள் மட்டும் என்ன அதற்கு விதி விலக்கா என்ன? ஆண்டவனிடம் வேண்டினால் கண்டிப்பாக பலிக்கும் என்று என் பாட்டி நம்பினார்கள். இப்படிபட்ட நம்பிக்கை உடையவர்கள் அன்றும்  இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள். என் பாட்டி அந்த வகையை சேர்ந்தவர். நான் இது எதுவும் தெரியாமல் என் சூட்டிங் உண்டு, நடிப்பு உண்டு என்று சென்று கொண்டிருந்தேன்.

என் பாட்டியோ, ஆண்டவரிடம், ஒளவையாராக என் பேத்தி  நடித்தே ஆக வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருந்தார்கள் போலும். ஆண்டவரின் பார்வை கிடைத்தால் கல்லும் கனியாகும், முள்ளும் மலராகும், இல்லையா? 6 மாதம் தொடர்ந்து இந்த வேண்டுதல் நடைபெற்றது என்று கூறலாம். இந்த சமயத்தில் ஜெமினி ஸ்டூடியோஸ் பல்வேறு இடங்களில் தேடித் தேடி ஓய்ந்து விட்டார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போல் எந்த குழந்தையும் அவர்களுக்கு கிடைக்க வில்லை. 

இது எதுவும் எனக்கும் சரி, என் பாட்டிக்கும் தெரியாது. சுமார் ஆறு மாதத்திற்கு இந்தத் தேடல் நடத்தி விட்டு, சரியான சிறுமி கிடைக்காததால் திரும்பவும் என்னை அழைத்தார்கள். அன்று எனக்கு மட்டும் அல்ல, என் பாட்டிக்கும், எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் சந்தோஷம். இந்த 6 மாத காலத்தில் நானும் ஓரளவிற்கு வளர்ந்து விட்டேன். என்னை மறுபடியும் பார்த்த ஜெமினி வாசன்  என்னை ஒப்பந்தம் செய்தார்கள். முதல் நாள் படப்பிடிப்பை பார்த்த என் பாட்டிக்கு ஒரே ஆச்சர்யம். 

காரணம்  அவர்கள் 6 மாத காலம் வேண்டிக் கொண்டது அந்த விநாயகப் பெருமானை! நான் “"ஒளவையார்'” படத்தில் நடித்த முதல் காட்சி என்ன என்று இந்த கட்டுரையின் முதல் நாலைந்து வரியில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். பிள்ளையார் தான் என்னை அந்த படத்திலேயே நடிக்க வைத்தார் என்று என் பாட்டி பலமுறை என்னிடம் அதற்கு பிறகு சொன்னதுண்டு. ஆனால்,  அந்தப் படத்தில் நான் நடித்ததால், அதுவும் சிறப்பாக நடித்ததால் எனக்கு ஒரு பரிசும் கிடைத்தது. அதை கொடுத்தவர் யார் தெரியுமா? அடுத்த வாரம் சொல்கிறேன்.

(தொடரும்)

சந்திப்பு: சலன்

ADVERTISEMENT
ADVERTISEMENT