தினமணி கொண்டாட்டம்

தினமணி: தரத்தில் முதலிடம்!

6th Oct 2019 05:49 PM | -முனைவர் தெ. ஞானசுந்தரம்

ADVERTISEMENT

இன்று தமிழகத்தில் உலாவரும் நாளிதழ்களில் தனிச் சிறப்புக்குரியது தினமணி.  பாரதியாரின் "நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்' என்னும் கவிதைத்தொடர்களைக் குறிக்கோள் வாசகமாகக் கொண்டு நாளும் சமுதாயத்திற்கும் தமிழுக்கும் அரும் பணி புரிந்து வருவது தினமணி நாளிதழ் ஆகும்.

இந் நாளிதழுக்குத்  ஏ என் சிவராமன், ஐராவதம் மகாதேவன், மாலன் போன்றோர் புகழ் சேர்க்கும் வகையில் பணிபுரிந்தவர்கள்.  

ஏ. என் சிவராமன் பன்மொழி அறிஞர். பல துறை அறிவும் நாட்டுப்பற்றும் மிக்கவர். பொருளாதாரம் குறித்தும் அரசியல் குறித்தும் அவர் எழுதிய கட்டுரைகள் பலருக்குத் தெளிவும் அறிவு விருந்தும் அளித்தன.

ஐராவதம் மகாதேவன் சிந்துவெளி நாகரிகம் குறித்து விரிவான ஆய்வு நிகழ்த்தியவர். எழுத்துத்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவர் காலத்தில் வடசொற் பயன்பாடு குறையத் தொடங்கியது. கங்கா நதியில் ஜல ப்ரவாஹம் போன்ற தொடர்கள் மாறிக் கங்கையில் பெருவெள்ளம் போன்ற தொடர்கள் உருவாயின. திரு, திருமதி போன்ற நல்ல தமிழ்ச் சொற்கள் இடம் பெறலாயின.  

ADVERTISEMENT

மாலன் படைப்புத்திறன் மிக்கவர். அவர் ஆசிரியராக இருந்த காலத்தில் தினமணியின் சிறப்பு வெளிப்படும் வகையில் தமிழ்நாடெங்கும் பல்வேறு நகரங்களில் விழாக்கள் நடைபெற்றன. 

இப்போது சில ஆண்டுகளாகத்  வைத்தியநாதன்  ஆசிரியராக விளங்கி வருகிறார். ஞாயிறுதோறும் இடம்பெறும் "தமிழ்மணி' இவருக்குப் பெருமை சேர்ப்பதாகும். அப்பகுதியில் தரமான இலக்கியக் கட்டுரைகள் பல வெளிவருகின்றன. "சொல் வேட்டை' போன்ற புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

கலாரசிகன் எழுதும் இந்த வாரம் பகுதி பலரால் ஊன்றிப் படிக்கப்படும் பகுதியாக அமைந்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் அப்பகுதியைப் படித்து அதனை எழுதுபவர் யார் என்று வினவி அறிந்துகொண்டது இதற்குச் சான்றாகும். 

கலைஞரின் பணி குறித்த தலையங்கம் பலரை ஈர்த்தது. நடுநிலைமையோடு எழுதப்பெற்ற அதனைப் பலர் படி எடுத்து விநியோகித்தனர் என்பதே அதன் சிறப்பை காட்டும். அமெரிக்காவில் பணிபுரியும் என் மகன் தன்மானத் தமிழன் என்ற தலைப்பில் வந்த தலையங்கத்தைப் படித்து மகிழ்ந்ததோடு அதனை தன் கணிப்பொறியில் அவ்வப்போது படிக்க சேமித்து வைத்திருப்பதாகச் சொன்னபோது தலையங்கத்தின் சிறப்பை உணர்ந்து மகிழ்ந்தேன்.  தினமணி ஆசிரியர் வைத்தியநாதன்  தம் எழுது கோலால் சொல்லோவியம் தீட்டுகிறார்.

"சிறுவர் மணி' சிறுவர்களுக்கு மட்டுமன்றிப் பெரியோர்களுக்கும் அரிய பல தகவல்களைத் தரும் தகவல் களஞ்சியம். "இளைஞர் மணி' இளைஞர்களுக்கு நல்ல ஆங்கிலத்தில் பேசக் கற்றுக் கொடுப்பதோடு எதிர்கால வாழ்க்கைக்கும் வழிகாட்டும் கட்டுரைகள் பலவற்றைத் தாங்கி வருகிறது. மகளிர் பலரின் திறமைகளையும் எழுத்தாற்றலையும் பிரதிபலிப்பது "மகளிர் மணி'. கதிர் தரமான சிறுகதைகள் தாங்கி வருவது.

இவை தவிர அவ்வப்பொழுது வெளிவரும் "மருத்துவ மலர்' போன்ற மலர்கள் பல அரிய குறிப்புகளை கொண்டு பலருக்கும் பயன்படும் வகையில் அமைகின்றன. "தீபாவளி மலர்கள்' பழைய இலக்கியங்கள் பலவற்றை மீண்டும் வாசகர்களுக்கு அளித்தும் சிறந்த எழுத்தாளர்களின் அரிய படைப்புகளைத் தந்தும் சுவைப் பெட்டகங்களாகத் திகழ்கின்றன.

யாரேனும் என்னைப் பார்த்து ‘உனக்கு மிகவும் பிடித்த நல்ல தமிழ் நாளிதழ் எது?' என்று கேட்டால் எந்தத் தயக்கமும் இல்லாமல் "தினமணிதான்' என்று உரத்த குரலில் ஒலிப்பேன். வாசகர்கள் எண்ணிக்கையில்  தினமணி முதல் இடத்தில் இல்லாமலிருக்கலாம். ஆனால்,  தரத்தில் முதலிடத்தை என்றும் தக்க வைத்துக் கொண்டிருப்பது தினமணியே என்பது  உண்மை.

ADVERTISEMENT
ADVERTISEMENT