தினமணி கொண்டாட்டம்

தாய்லாந்து நாடோடிக்கதை: உழைப்பு வீண் போகாது!

6th Oct 2019 06:52 PM | - ஜெயராமன், குடந்தை

ADVERTISEMENT

பிஜிலா என்ற வணிகன் குடும்பத்துடன் தேசாங் என்ற கிராமத்திற்கு வருமானத்திற்கு வழி தேடி வந்தான். 
செழிப்பான அந்தக் கிராமத்தில் ஆண்கள் வேலைக்குச் செல்வதில்லை. மது அருந்துவது தான் அவர்களுடைய வேலையாக இருந்தது.
பிஜிலா ஊரில் இருந்து கொண்டு வந்திருந்த போர்வைகளைத் தெருத்தெருவாக சென்று விற்க ஆரம்பித்தான். 
அவனுடைய சுறுசுறுப்பைக் கண்ட அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள்,  பிஜிலாவை ஊரை விட்டு துரத்தும் முயற்சியில் இறங்கினார்கள். 
இதற்காக அவன் தயாரித்து வைத்திருந்த போர்வைகளைத் தீ வைத்து கொளுத்துவது எனத் திட்டம் போட்டார்கள்.
அப்போது அந்த ஊருக்கு ஞானி ஒருவர் வந்திருந்தார். 
அவர் யாரிடமும் பேசாமல் எப்போதும் தியானத்தில் இருப்பார்.
ஊர் மக்கள் கூட்டமாகச் சென்று ஞானியிடம் தங்கள் எதிர்காலம் பற்றிக் கேட்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.
ஆனால், அவர் யாரையும் சந்திக்கவில்லை. 
இந்த நிலையில்,  அன்று இரவு பிஜிலா தயாரித்து வைத்திருந்த போர்வைக்கு அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தீவைத்தனர். 
அவர்கள் வைத்த தீ போர்வையின் நடுப்பகுதியில் பட்டு எரிய ஆரம்பித்தது. பிஜிலா தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டான். அதனால் போர்வைகள் அதிகம் பாதிக்கப்படவில்லை. சுமார் 100 போர்வைகளின் நடுவில் வட்ட வடிவில் எரிக்கப்பட்டு இருந்தன.
இந்த நிகழ்விற்குப் பிறகு பிஜிலா, "இனி இந்த ஊரில் இருக்கக்கூடாது என முடிவு செய்து நாம் ஊரை காலி செய்து வேறு ஊருக்குப் போய்விடலாம்' என்று முடிவு செய்தான்.
ஞானியிடம் எரிக்கப்பட்ட போர்வைகளுடன் சென்று விஷயத்தைச் சொல்ல காத்திருந்தான். அவர் முன்னே போர்வைகளை வைத்துவிட்டு, "ஐயா நியாயம் சொல்லுங்கள்' எனக்கு என்றான்.
ஞானி கண் விழித்தார். நடந்ததைச் சொன்னான். "உன் உழைப்பு வீண் போகாது. நீ ஊரைவிட்டு செல்ல வேண்டாம். வீட்டுக்குப் போ' 
என்றார்.
சரி, என்று  சொன்னபடி வீட்டுக்கு வந்தான். 
அந்த ஞானியை,  தொழிலில் நஷ்டமடைந்த துணி வியாபாரம் செய்யும் நபர் ஒருவர் பார்க்கச் சென்றார். 
அவர் ஞானியிடம், "தொழில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. எதிர்காலம் என்ன ஆகுமோ தெரியவில்லை. வழி சொல்லுங்கள்' என்று கேட்டார்.
ஞானியின் முன்பு வைக்கப்பட்டிருந்த போர்வைகளைக் காட்டி" இதை எடுத்துச் சென்று விற்பனை செய், உனக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது கலங்காதே' என்றார்.
அந்த துணி வியாபாரி தன்னுடைய கடைக்கு அந்தப் போர்வைகளை எடுத்துச் சென்றார். போர்வையின் நடுவில் தீ வைக்கப்பட்ட இடத்தில் வட்ட வடிவில் டிசைன்கள் போன்று இருப்பதைப் பார்த்த வாடிக்கையாளர்கள் அதனை விரும்பி வாங்கிச் சென்றார்கள்.
ஒரே நாளில் அந்தப் போர்வை வியாபாரத்தில் சில ஆயிரம் லாபம் சம்பாதித்தார் அந்த துணி வியாபாரி.
ஞானிக்கு  நன்றி சொல்லவும், இது போன்ற போர்வை எங்கே கிடைக்கும் என்பதை கேட்பதற்கு அவரை மீண்டும் சந்திக்க வந்தார் அந்த துணி வியாபாரி.
ஞானியை சந்தித்தும். " நன்றியை எனக்கு செல்லாதே,  இந்த ஊரின் பிஜிலா என்ற வியாபாரி இருக்கிறான். அவனிடம் போய் சொல். அவன் தான் இந்தப் போர்வைகளைத் தயாரித்தவன்' என்றார்.
பிஜிலாவும் அந்த துணி வியாபாரியும் சந்தித்துக் கொண்டனர். 
இதனால் நஷ்டமடைந்த துணி வியாபாரியும் லாபம் பெற்றான். உழைப்பை நம்பி இருந்த பிஜிலாவும் செல்வந்தன் ஆனான். 

ADVERTISEMENT
ADVERTISEMENT