திருமண நிபந்தனை: பீகார் மாநில நாடோடிக்கதை

ஒரு நகரத்தில் மிகவும் செல்வந்தனான சேட் ஒருவர் இருந்தார். அவருக்கு அழகிய மகள் ஒருத்தி இருந்தாள். அவள் தன் திருமணம் குறித்து விசித்திரமான ஒரு நிபந்தனையை விதித்திருந்தாள்.
திருமண நிபந்தனை: பீகார் மாநில நாடோடிக்கதை

ஒரு நகரத்தில் மிகவும் செல்வந்தனான சேட் ஒருவர் இருந்தார். அவருக்கு அழகிய மகள் ஒருத்தி இருந்தாள். அவள் தன் திருமணம் குறித்து விசித்திரமான ஒரு நிபந்தனையை விதித்திருந்தாள்.
 "சேறு நிறைந்த குளத்தில் முழுவதுமாக மூழ்கி எழும் ஓர் இளைஞன், ஒரே ஒரு குவளைத் தண்ணீரில் தன் உடல் முழுவதும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அப்படி எவன் செய்கிறானோ அவனையே திருமணம் செய்து கொள்வேன்' என்பதுதான் அந்தப் பெண் விதித்த நிபந்தனை.
 இதைக் கேள்விப்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அந்த அழகியைத் திருமணம் செய்து கொள்ளும் ஆசையில் முயற்சி செய்து பார்த்தனர். ஆனால், ஒரு குவளை நீரில் உடல் முழுவதும் சுத்தம் செய்ய எந்த இளைஞனாலும் முடியவில்லை. தோற்றுப்போய் தலை குனிந்து திரும்பினர்.
 அந்நகரில் வசித்து வந்த ஒரு புத்திசாலி இளைஞன் ஒருவன் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டான். அவனும் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்யும் ஆசையில், சேறு நிறைந்த குளத்தில் மூழ்கி எழுந்தான். உடனே வெய்யிலில் போய் நின்றான். வெய்யிலில் நின்றதால் சேறு நன்கு காய்ந்தது. அவ்வாறு காய்ந்ததும் பஞ்சைக் கொண்டு மேலும் அதை சுத்தம் செய்தான். உடனே காய்ந்த சேறு உதிர்ந்தது.
 பிறகு ஒரு குவளை தண்ணீரில் தன் கை, முகம், உடல் முதலியவற்றை சுத்தம் செய்து கொண்டான். இப்போது அவன் உடலில் எந்த இடத்திலும் சேறு இல்லை. நிபந்தனை போட்ட சேட்டின் மகள் இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தாள். அந்த இளைஞன் தான் போட்ட நிபந்தனையில் வெற்றி பெற்றுவிட்டான் என்று கூறி, அவனைத் திருமணம் செய்துகொள்ளச் சம்மதித்தாள்.
 அப்போது அந்த இளைஞன் அந்த அழகியைப் பார்த்து, ""திருமணத்திற்கு முன்பு நானும் உனக்கு ஒரு தேர்வு வைப்பேன். அதில் நீ வெற்றி பெற்றால்தான் உன்னைத் திருமணம் செய்து கொள்வேன்'' என்றான். அதற்கு அந்தப் பெண்ணும் சம்மதித்தாள்.
 அந்தப் பெண்ணிடம் ஒரு சேர் தானியத்தைக் கொடுத்து "இதை வைத்துக்கொண்டு எனக்கு விதவிதமான உணவு வகைகளைத் தயார் செய்து தந்தால்தான் உன்னைத் திருமணம் செய்து கொள்வேன்'' என்றான்.
 அந்த இளைஞன் கூறியதைக் கேட்ட அந்தப் பெண், "சரி, சரி... ஆனால், நீங்கள் எனக்கு ஓராண்டு அவகாசம் தரவேண்டும்' என்று கேட்டாள். அதற்கு அவனும் சம்மதித்தான்.
 ஓராண்டு கழிந்த பிறகு அந்த இளைஞன், அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்றான். அந்தப் பெண்ணும் அவனுக்காக விதவிதமான உணவு வகைகளைத் தயாரித்து வைத்திருந்தாள்.
 இதைப் பார்த்து மிகவும் வியந்துபோன அந்த இளைஞன், ""நான் கொடுத்த ஒரு சேர் தானியத்தில் நீ எப்படி இவ்வளவு பதார்த்தங்களைத் தயார் செய்தாய்?'' என்றான்.
 அதற்கு அவள், "நீங்கள் கொடுத்த அந்தத் தானியத்தை விளை நிலத்தில் விளைவித்துப் பயிரிட்டேன். அதில் நல்ல விளைச்சல் கண்டது. அதனால்தான் இவ்வளவு பதார்த்தங்களை என்னால் தயாரிக்க முடிந்தது. இதில் என் பங்கு, ஓராண்டு உழைப்பைத் தவிர வேறு ஒன்றும் இல்லை'' என்றாள்.
 அந்தப் பெண்ணின் புத்திசாலித்தனத்தை நினைத்து மகிழ்ந்த அவன், அவளைத் திருமணம் செய்துகொண்டு இனிதே இல்லறம் நடத்தினான். புத்தி இருந்தால் புவியை ஆளலாம் என்பதை இருவரும் நிரூபித்துக் காட்டினர்.
 -தமிழில் இடைமருதூர் கி.மஞ்சுளா
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com