காந்திய சேவையில் 45 ஆண்டுகள்

காந்திய வாழ்வியலைப் பரப்புவதில் 45 ஆண்டுகளாகத் தொடர்ந்து செயல்பட்டு வருபவர் சூ.குழந்தைசாமி. சென்னை காந்தி அமைதி நிறுவனச் செயலராக இருந்து சர்வ சமய வழிபாடுகளை நடத்தி வருபவர்.
காந்திய சேவையில் 45 ஆண்டுகள்

காந்திய வாழ்வியலைப் பரப்புவதில் 45 ஆண்டுகளாகத் தொடர்ந்து செயல்பட்டு வருபவர் சூ.குழந்தைசாமி. சென்னை காந்தி அமைதி நிறுவனச் செயலராக இருந்து சர்வ சமய வழிபாடுகளை நடத்தி வருபவர். பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று காந்திய அறநெறிக் கொள்கைகளை மாணவர்களிடம் சொல்லிக் கொடுத்து வருகிறார். அவரை மாலைப்பொழுது ஒன்றில் சந்தித்தோம்.
 என்னுடைய சொந்த ஊர் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள பள்ளங்கோயில் கிராமம். கல்லூரியில் படிக்கும் போது காந்தி பற்றிய கட்டுரைப் போட்டியில் பங்கேற்க விருப்பம் ஏற்பட்டது. அப்போது மு.வரதராசனார் எழுதிய "காந்தி அண்ணல்' புத்தகம் படித்தேன். அந்தப் புத்தகத்தைப் படித்த நான் இரவு முழுக்கத் தூங்கவில்லை. நீண்ட நாள் மனதில் இருந்த கேள்விகளுக்கு விடை தந்தது அந்தப் புத்தகம். என் வாழ்க்கையிலும் ஏராளமான மாற்றங்களை அந்தப் புத்தகம் ஏற்படுத்தியது.
 அது வரை அசைவப் பிரியராக இருந்த நான் சைவத்திற்கு மாறினேன். யோகா பயிற்சிகளைச் செய்ய ஆரம்பித்தேன். 1973- ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றேன். அப்பா விவசாயி என்பதால் அவருக்கு உதவியாக வயலில் வேலைகள் செய்தேன். ஆனால் அப்பா "வயல் வேலை செய்யவா, உன்னைப் பொறியியல் பட்டம் வாங்க வைத்தேன்?'' என்றார். தன்னுடைய நண்பர் ஒருவரின் மூலம் என்னை சென்னையிலுள்ள நிறுவனத்தில் பணியாற்ற அனுப்பினார். ஆனால் , அது எனக்கு சரி வராததால், மூன்றே மாதங்களில் விட்டு விட்டேன்.
 அப்போது மயிலாப்பூர் லஸ் பகுதியில் காந்தி அமைதி நிறுவனம் நடத்தி வந்த டி.டி.திருமலையிடம் போய்ச் சேர்ந்தேன். "படித்த படிப்பை பணத்திற்கு விற்கக்கூடாது' என்ற என் உள்ளுணர்வுக்கு உறுதி தந்த அவர் என்னை அவருக்கு உதவியாக வைத்துக் கொண்டார். 21 ஆண்டுகள் இணைந்து பணியாற்றினேன். திருமலையின் மறைவுக்குப் பிறகு அவர் செய்து வந்த பணிகளை நான் காந்தி அமைதி நிறுவனத்தில் தொடர்ந்து செய்து வருகிறேன்.
 காந்தி அமைதி நிறுவனம் செயல்படுவதன் நோக்கம் என்ன?

சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் சர்வ சமய வழிபாடு தான் முக்கியமான நோக்கங்களில் ஒன்று. இந்த வழிபாட்டில் இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம், சீக்கியம், புத்தம், சமணம், பார்சி என ஏழு சமயத்தினரும் பங்கு கொள்வார்கள். இதனை 1995- ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறோம். வழிபாட்டின் போது தங்கள் புனித நூலில் உள்ள நல்ல சிந்தனைகளை 7 நிமிடம் வீதம் வாசிப்பார்கள். ஒரு மணி நேரம் சமூக ஒற்றுமையை வலியுறுத்தி இந்த வழிபாடு நடைபெறும். இந்த காந்தி அமைதி நிறுவனத்தின் தலைமைப் புரவலராக இருந்தவர் முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன். அவரைத் தொடர்ந்து அவருடைய மகள் பத்மா வெங்கட்ராமன் இதில் முக்கியப் பங்கு வகித்து வருகிறார்.
 மேலும் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று சுயசிந்தனை வகுப்புகளை நடத்தி வருகிறோம். ஒருவர் பேசினால் குறுக்கே பேசாமல் கூர்ந்து கவனிக்க வேண்டும். பேச வேண்டுமெனில் அனுமதி பெற்றுப் பேச வேண்டும். கோள் சொல்லாமல் நேரடியாகப் பிரச்னையைத் தீர்க்க வேண்டும். மாற்ற முடியாத ஒன்றைக் குறை சொல்லக்கூடாது. யாரும் இல்லாத இடத்தில் அவர்களைப் பற்றி கிசுகிசு பேசக்கூடாது. தான் செய்த தவறைத் தானே முன் வந்து ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற ஆறு விதிகளையும், எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம், உடலுழைப்பின் மேன்மை, நேர்மையான எளிய வாழ்க்கையின் சிறப்புக்களையும் அவர்களுக்குச் சொல்லி தருகிறோம். இதனால் எதிர்காலத்தில் அவர்கள் காந்திய அறநெறிக் கொள்கைகளைப் பின்பற்றி அமைதியுடன் வாழமுடியும். மேலும் குழந்தைகளுக்கான குட்டிக்
 கதைகள் அடங்கிய 21 குட்டி நூல்களைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் பல வண்ணப் படங்களுடன் அச்சிட்டு மிகக்குறைந்த விலையில் மாணவர்களுக்கு வழங்கும் முயற்சியில் இறங்கியுள்ளேன். இதுவரை 25 நூல்கள் எழுதியுள்ளேன். எல்லாமே காந்திய சிந்தனையில்தான். காந்திய சிந்தனையில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளேன்.
 காந்திய அறநெறிக் கொள்கைகளை இப்போதுள்ள சமூகத்தினர் ஏற்றுக்கொள்கிறார்களா?
 நிச்சயமாக ஏற்றுக்கொள்கிறார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்களின் வாழ்வில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துகிறது அது. மன அழுத்தம் தீர்க்கும் அருமருந்து அது. நாங்கள் சென்ற பள்ளி ஒன்றில் மாணவி ஒருவருடன் உரையாடிய போது, அவருடைய ஆசை மருத்துவர் ஆக வேண்டும் என்றார். எங்கள் வகுப்பில் கலந்து கொண்ட பிறகு அவர் எண்ணம் மாறிவிட்டது. நான் மருத்துவர் ஆக மாட்டேன், வேறு துறையைத் தேர்ந்தெடுக்கப் போகிறேன் என வீட்டில் போய் சொல்லியிருக்கிறார். மறு நாள் அந்த பள்ளித் தலைமை ஆசிரியர் எனக்கு போன் செய்து "என்ன சார், அந்த மாணவி இப்படிச் சொல்கிறார். நீங்கள் மறுபடியும் வந்து அந்த மாணவியிடம் பேசுங்கள்'' என்றார்.
 "ஏழை, எளியவர்களிடம் பணம் வாங்காமல் நீ மருத்துவம் பார்க்கலாமே. இது காந்திய அறநெறிக் கொள்கைகளில் ஒன்று தான். அதனால் நீ கட்டாயம் மருத்துவம் படித்து சேவை ஆற்ற வேண்டும்'' என்று மாணவிக்கு எடுத்துக்கூறிய பிறகு இயல்பு நிலைக்கு வந்தார். கிராம சபை மூலம் அரசாட்சியை மக்களே நடத்தும் ரகசியத்தை அப்போதே சொல்லிவிட்டுப் போய் இருக்கிறார் காந்திஜி. அதற்குத் தேவையான சுயக்கட்டுப்பாட்டையும் அகிம்சைப் போராட்ட முறைகளையும் குழந்தைகளின் ஆழ்மனதில் பதிக்கிறோம். காந்தியின் சிந்தனைகளை மாணவர்களுக்குப் பாடத் திட்டங்களாகக் கொண்டு வர வேண்டும் என்று அரசிடம் பல முறை கோரிக்கை வைத்தும் இதுவரை செவிசாய்க்கவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.
 உங்களுக்கான நிதி யார் தருகிறார்கள்?
 நிரந்தர நிதி என்று எதுவும் கிடையாது. புத்தகம் வெளியிட வேண்டும் என்றால் நண்பர்கள் யாரிடமாவது சொல்வேன். அவர்கள் உதவி செய்வார்கள். 45 ஆண்டுகள் நான் எந்த வேலைக்கும் செல்லவில்லை. அக சக்தியின் உதவியுடன் காந்தியக் கொள்கைகளைப் பரப்புவதும், காந்தி அமைதி நிறுவனத்தை நடத்துவதும்தான் என்னுடைய வேலை. எனவே வாழ்க்கையில் நிம்மதியாக வாழ்கிறேன். எனக்கும் திருமணமாகி, மகள், மகன், பேத்தி என்று நல்ல நிலையில் இருக்கிறோம்.
 இதுவரை நான் அவர்களுக்குப் பெரிதாக எதுவும் செய்ததில்லை. வீட்டில் ஏதாவது பிரச்னை என்றால், காந்தி நூல்களைத் தூக்கிக் கொண்டு ஏதாவது ஒரு பள்ளிக்குச் சென்று இரண்டு மணி நேரம் அந்தக் குழந்தைகளை சுயமாய்ச் சிந்திக்க வைத்து சந்தோசப்படுத்திவிட்டு வருவேன். வீட்டிற்குத் திரும்பிய பிறகு அந்தப் பிரச்னை காணாமல் போயிருக்கும். இப்படியாக நான் காந்தி மகானை உணராத தருணங்கள் இல்லை என்கிறார் குழந்தைசாமி.
 - ராஜன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com