என்றும் இருப்பவர்கள்! 16 - சா. கந்தசாமி 

மனிதர்கள் புலம் பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள். வேறு மொழி பேசப்படும் இடத்தில் வாழும் போது பேசிக் கொண்டு சென்ற தாய்மொழியைக் கைவிட நேர்கிறது.

ஆருத்ரா
 மனிதர்கள் புலம் பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள். வேறு மொழி பேசப்படும் இடத்தில் வாழும் போது பேசிக் கொண்டு சென்ற தாய்மொழியைக் கைவிட நேர்கிறது. ஏனெனில் அம்மொழி பேச ஆள்களும், கேட்க ஆள்களும் இல்லாமல் போகிறது. அதோடு புலம் பெயர்ந்தவர்கள் தங்களின் தாய்மொழியைக் கற்க பள்ளிக்கூடங்கள் இல்லாமல் போய்விடுகிறது. எனவே புலம் பெயர்ந்தவர்கள் இரண்டு தலைமுறைகளுக்குள் தாய்மொழியை மறந்து விடுகிறார்கள்.
 புலம் பெயர்ந்தவர்கள் எப்பொழுதும் ஒரே பகுதியில் வாழ்வதில்லை. பல்வேறு அரசியல், சமூக, பொருளாதார, வேலை வாய்ப்புகளை முன்னிட்டு சொந்த இடத்திற்கே வருகிறார்கள். இழந்துவிட்ட தாய்மொழியை மீட்டெடுக்கிறார்கள். நன்றாகப் பேசவும், எழுதவும் கற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் இருமொழியாளர்களாக வாழ்கிறார்கள். கலை, இலக்கியம் பற்றி ஒப்பாய்வு, மொழி பெயர்ப்பில் ஈடுபடுகிறார்கள்.
 1965-ஆம் ஆண்டில் க.நா.சுப்ரமண்யம், சபாபதி என்ற எழுத்தாளரை அறிமுகம் செய்து வைத்தார். அவர் தமிழர். ஆனால் மூன்று தலைமுறைக்கு முன்னால் ஆந்திரா-விஜயவாடா சென்ற குடும்பத்தில் பிறந்தவர். எனவே அவர் படிப்பு மொழி தெலுங்காகி விட்டது. ஆனால் வீட்டில் தமிழ்ப் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
 தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வந்து போய்க்கொண்டு இருந்தார்கள். எனவே அவர்கள் குடும்பத்தில் தமிழ் இருந்தது. குடும்பச் சூழ்நிலை காரணமாக விஜயவாடாவில் இருந்து குடி பெயர்ந்து சென்னைக்கு வந்தார்கள்.
 சபாபதி தமிழ் எழுதவும், படிக்கவும் கற்றுக் கொண்டார். அவர் சிறுவயதில் தெலுங்கில் கதைகள், கட்டுரைகள் படித்து வந்தார். இலக்கிய ஈடுபாடு காரணமாக தெலுங்கின் முக்கியமான படைப்பாளர்களின் சிறுகதைகள் நாவல்களைப் படித்து வைத்திருந்தார். அவருக்குத் தெலுங்கில் இருந்து சிறுகதைகளைத் தமிழில் மொழி பெயர்க்க முடியும் என்று பட்டது. எனவே சில சிறுகதைகள், கட்டுரைகளை மொழி பெயர்த்து க.நா.சுப்ரமணியத்திடம் கொடுத்தார். அவர் "இலக்கிய வட்டம்' என்ற தன் சிற்றிதழில் வெளியிட்டார். கதைகள் சராசரி தரத்துக்கு மேலாக இருந்தன. மொழி பெயர்ப்பு வசீகரமாக இருந்தது.
 சபாபாதிக்கு இருபத்தைந்து வயதிருக்கும். கல்லூரியில் படித்து பட்டம் வாங்கி இருந்தார். ஒரு நாள் அவரிடம் தமிழில் இருந்து தெலுங்கு மொழிக்குக் கதைகளை மொழி பெயர்த்துப் பாருங்கள் என்றேன். அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. "என் தெலுங்கு வளமானது இல்லை. பள்ளிக்கூடத்தில் படித்ததுதான். வீட்டில் பேசியது இல்லை. படித்த மொழியை வைத்துக் கொண்டு மொழி பெயர்ப்பு செய்வது சரியான காரியமில்லை. இரண்டு மூன்று முறைகள் முயற்சி செய்து பார்த்துவிட்டு விட்டு விட்டேன்'' என்றார்.
 மொழி பெயர்ப்பில் உள்ள இடர்பாடு அதுதான். புலமை இலக்கண அறிவு எல்லாம் மொழி பெயர்ப்புக்கு அவ்வளவாகப் பயன்படாது. மொழி ஆளுமை சொல்லின் உட்பொருள் தெரிய வேண்டும். பலருக்கு அது கைவராமல் போய்விடுகிறது. எனவே மொழி பெயர்ப்பு வசீகரம் இழந்துவிடுகிறது. மொழி பெயர்ப்பு என்பது பற்றித் தமிழர்கள் வெகுகாலமாகவே அறிந்திருந்தார்கள். தொல்காப்பியம் மொழி எப்படி இருக்க வேண்டுமென்று சொல்கிறது. ஆனால் எந்த இலக்கணமும், ஒரு நல்ல வளமான மொழிநடையையும், சிதையாத கருத்தையும் கொண்டு வந்துவிட முடியாது.
 ஒரு மொழி படைப்பை மெருகு குலையாமல் அப்படியே கொண்டு வந்துவிட முடியாது. மனிதர்களுக்கு அந்த ஆற்றல் இல்லை. நெருக்கமாக மொழி பெயர்க்கிறார்கள். எனவே மொழி பெயர்ப்பாளர்கள் துரோகிகள், ஒரு படைப்பை வதம் செய்கிறவர்கள் என்று பழிக்கப்படுகிறார்கள். ஆனாலும் மொழி பெயர்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. அவை படிக்கவும் விமர்சிக்கவும் படுகின்றன. ஒரு படைப்புக்கு ஒரு மொழி பெயர்ப்பு காணாது என்று பல மொழி பெயர்ப்புகள் வருகின்றன.
 சபாபதி, தியாகராய நகரில் உள்ள ஆந்திரா கிளப்பில் பக்தவச்சல சங்கர சாஸ்திரி என்ற ஆருத்ராவை அறிமுகம் செய்து வைத்தார். அவர் "கவிஞர், பாடலாசிரியர், திரைக்கதை வசன கர்த்தா, நல்ல மொழி பெயர்ப்பாளர்' என்றார்.
 அவர் ஐம்பதாண்டுகளுக்கு மேலாக சென்னைவாசி. சென்னை தென்னிந்தியாவின் சினிமா தலைநகரம். எனவே சினிமா சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினரும் தியாகராய நகரில் வசித்தார்கள். அவர்களில் பலர் நன்றாகத் தமிழ் பேசவும், எழுதவும் கற்றுக்கொண்டிருந்தார்கள். இரு மொழி படங்களிலும் பணியாற்றினார்கள்.

விசாகப்பட்டினத்தில் பிறந்த ஆருத்ரா முற்போக்கு எழுத்தாளர். அவர் குடும்பத்தில் பலரும் தெலுங்கு புலவர்கள். கவிஞர்கள். தெலுங்கின் புதுக்கவிஞர், மகாகவி என்று கொண்டாடப்படும் ஸ்ரீஸ்ரீ அவரது நெருங்கிய உறவினர். இவர்களைப் போன்று ஆருத்ராவும் நிறையப் படித்தவர். பெரிய கலைக்களைஞ்சியத்தை வெளியிட்டு உள்ளார். பல்துறை ஆற்றல் பெற்றிருந்த அவர் தமிழ்ப் படித்தார். சில தமிழறிஞர்களோடு பழக்கம் இருந்தது. தமிழ் இலக்கியச் செறிவு தன் படைப்புகளுக்குப் பயன்படுமென்று கருதினார். அவற்றைத் தமிழில் படித்தார். தன்னைப் போலவே தெலுங்கு மொழி பேசுபவர்கள். திருக்குறள் படிக்க வேண்டுமென்று அதனை மொழிபெயர்த்தார். ஆருத்ரா பேசக்கூடியவராகவும், கேட்கக்கூடியவராகவும் இருந்தார். எனவே பலமுறைகள் சந்தித்துக் கொண்டோம். சில நேரங்களில் அவர் மனைவி ராமலெட்சுமி உடன் இருப்பார். ராமலெட்சுமி தன்னளவில் எழுத்தாளர். தெலுங்கு புத்தகங்களுக்கு மதிப்புரைகள் எழுதி வந்தார்.
 "புத்தக மதிப்புரைகளுக்கு மதிப்பு இருக்கிறதா? என்று அவரிடம் ஒரு முறை கேட்டேன். எழுதுகின்றவர்களுக்கு மதிப்பு இருக்கிறது. எனவே எழுத வேண்டியிருக்கிறது'' என்றார்.
 ஆருத்ரா பதினாறு திரைப்படங்களுக்கு மேல் திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார். அவற்றில் சில அவரின் கதைகள். பல சில எழுத்தாளர்களின் கதைகள். நிறையவே பாடல்கள் எழுதியிருக்கிறார். அவர் வாழ்க்கையின் பெரும் பகுதி, சென்னையில் சினிமாவில் கழிந்தது. ஆனால் தான் ஒரு கவியாக அறியப்பட வேண்டுமென்று ஆசைப்பட்டார். ஆனால், "எல்லோர்க்கும் ஆசைக்கனவுகள் நிறைவேறுவதில்லை' என்றார்.
 "திருக்குறளுக்குப் பிறகு என்ன மொழி பெயர்த்தீர்கள்?'' என்று ஒரு முறை கேட்டேன். அதற்கு அவர் "தமிழில் வீர பாடல்களும், காதல் பாடல்களும் நிறைய இருப்பது தெரிந்தது. நான் காதல் பாடல்களை அதிகமாக விரும்பினேன். காதல் பாடல்களில் காமமும் இருப்பது தெரிந்தது. அது படிக்கப் பிடித்திருந்தது. ஆந்திர மக்கள் காதலையும், காமத்தையும் கொண்டாடக்கூடியவர்கள். அதற்காக கலிங்கத்துப்பரணியைக் கண்டெடுத்தேன். வீர பாடல்களை எல்லாம் விட்டுவிட்டேன். பெண்ணின் ஏக்கத்தையும் காத்திருப்பின் சோகத்தையும், காதல் களிப்புகளையும் கொண்ட "கதவு திறப்பு' என்ற பகுதியை மொழி பெயர்த்தேன். கணவனும் மனைவியும் சேர்ந்திருந்த வீட்டில்- கணவன் போருக்குப் போன பிறகு எப்போது திரும்பி வருவான் என்று காத்திருக்கும் மனைவியின் மனதில் என்னவெல்லாம் நிழலாடும் என்பது சொல்லி முடிக்க முடியாதது. ஆனால் சொல்லிப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.'' என்றார்.
 "கலிங்கத்துப்பரணி' காதல் பாட்டுகள் வெளிவந்ததும் அதற்கு பெரிய அளவில் வரவேற்பு இருந்தது. காதலும் காமமும் எப்பொழுதும் இருப்பது தான்.
 "கலிங்கத்துப்பரணியில் இருந்து ஒரு மொழி பெயர்ப்பைப் பாடுங்கள்' என்றேன். அவர் தன் மனைவியை அழைத்துப் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு
 "நேயக் கலவி மயக்கத்தே நிகழ்ந்த மொழியைக் கிளியுரைப்ப வாயைப் புதைக்கும் மடநல்வீர்' என்ற வரிகளைச் சுந்தர தெலுங்கில் பாடினார்.
 "அற்புதம்'' என்று அவர் மனைவி எழுந்து கை குலுக்கினார்.
 நான் தமிழ் மட்டுமே தெரிந்த எழுத்தாளன். என் நண்பர் சபாபதி தமிழ், தெலுங்கு மொழிகளின் இலக்கியம் படிக்கிறவர் தமிழிலும், தெலுங்கிலும் என்ன நிகழ்ந்து கொண்டு இருக்கிறது என்பதை அறிந்தவர். எனவே "தமிழ், தெலுங்கு பத்திரிகைகள், இலக்கியம், புதுக்கவிதைகள் எப்படி இருக்கிறது'' என்று கேட்டேன். அவர் சொன்னார், "தமிழ் சிற்றிதழ் இலக்கியக்காரர்கள் கடுமையாக வெகுஜன பத்திரிகைகள் பற்றி விமர்சிக்கிறார்கள். ஆனால், தெலுங்கு வெகுஜன பத்திரிகைகள், பெண்கள், ஆண்களில் பெரும்பான்மையினர் எழுதும் சிறுகதைகள் நாடகங்கள், நாவல்களைப் படிக்கும் போது தமிழ் வளமாகத்தான் இருக்கிறது. தெலுங்கு அளவிற்கு இலக்கியமே சினிமாவாக இல்லை'' என்றார்.
 "அப்படியா?''
 "தெலுங்கு எழுத்தாளர்கள் ஒருவர் கூட ஆந்திராவில் இல்லை. எல்லோரும் சினிமாவிற்காக, கதை, வசனம் எழுத, பாட்டு, எழுத சென்னைக்கு வந்துவிட்டார்கள். தியாகராய நகரே தெலுங்கு கலைஞர்கள் வாழும் இடமாக இருக்கிறது'' என்றார்.

 "பாலகும்மி பத்மராஜி நன்றாகத்தானே சிறுகதைகள் எழுதி வருகிறார். அமெரிக்க நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் தெலுங்கிற்குப் பரிசு பெற்று இருக்கிறார். அவரது "படகு பயணம்' படித்து இருக்கிறேன். எளிய மக்களின் ஒழுக்கவியல் மாறிய வாழ்க்கைப் பற்றி உளவியல் ரீதியில் சிறப்பாகத்தானே எழுதியிருக்கிறார். சாகித்ய அகாதெமி விருது கூட சிறுகதைக்காகப் பெற்றுத்தானே இருக்கிறார்'' என்றேன்.
 " அவர் நல்ல சிறுகதை, நாவலாசிரியர்தான். ஆனால் சினிமா ஆசை அவரையும் விடவில்லை. சினிமாவிற்கு எழுத தியாகராய நகருக்கு வந்து விட்டார்.''
 ""சினிமாவிற்கு எழுதுவது அவ்வளவு மட்டமானதா?''
 "இல்லை. நான் அப்படி சொல்லவில்லை. ஆனால் சினிமா தரமாக இல்லை. எனவே அதற்கான எழுத்துக்களும் சரியில்லை'' என்றார்.
 பாலகும்மி பத்மராஜீவை பல முறைகள் சந்தித்தேன். வெகுநேரம் இந்திய இலக்கியம் பற்றிப் பேசிக்கொண்டு இருந்தோம். பேச்சு சிறுகதைகள், நாவல்கள் பக்கம் திரும்பியது.
 "தெலுங்கில் எத்தனை மகத்தான நாவல்கள் இருக்கின்றன'' என்று கேட்டேன்.
 "ஒன்று கூட இல்லை. என் நாவல்கள், சிறுகதைகள் உட்பட ஒன்று கூட மகத்தான படைப்புகள் இல்லை'' என்றார்.
 "தமிழில் என்னைவிட்டால் நாவலாசிரியன் சிறுகதை எழுத்தாளன் இல்லை என்று சொல்வது போல இருக்கிறது'' என்றேன்.
 அவர் சிரித்துக்கொண்டே காபி குடிக்க ஆரம்பித்தார்.
 தமிழ்நாட்டில் இருபத்தைந்து சதவீதத்தினர்கள் ஆந்திராவில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள். ஆனால், அவர்கள் தாய்மொழி தமிழாகிவிட்டது. தமிழில் நவீன இலக்கியம் படைத்த ந. பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன் தாய்மொழி தெலுங்குதான். கி. ராஜநாராயணன் தாய்மொழி கூட தெலுங்குதான்.
 என் இலக்கிய நண்பர் சஞ்சீவி வங்கி அதிகாரி. தாய்மொழி தெலுங்கு. சென்னைவாசி. தமிழில் இருந்து தெலுங்கு மொழிக்கு நவீன இலக்கியத்தை மொழி பெயர்த்துக் கொண்டிருக்கிறார். அவர் புலவர் இல்லை. சுயமாகத் தமிழ்ப் படித்து மொழி பெயர்ப்பில் ஈடுபட்டு இருக்கிறார்.
 "விபுலா' என்ற தெலுங்கு மாத இதழ் மொழி பெயர்ப்புக்கு என்றே நடத்தப்படுகிறது. ஜெயகாந்தன், சுஜாதா, ஜி.நாகராஜன், சுந்தர ராமசாமி, கந்தசாமி சிறுகதைகள் "விபுலா'வில் வந்திருக்கின்றன.
 சிரஞ்சீவி எழுத்தாளர் இல்லை. வெறும் மொழி பெயர்ப்பாளர் தான். அவர் பெரும்பாலும் தன் சொந்த ஈடுபாட்டின் வழியாகவே சிறுகதைகள், நாவல்களைத் தேர்ந்தெடுக்கிறார். அவர் தமிழ்ப் படிப்பும், தெலுங்கு அறிவும் இலக்கியத்தை மக்களிடம் கொண்டு செல்வதாகவே உள்ளது.
 என்னுடைய "அவன் ஆனது' என்ற நாவலை சிரஞ்சீவி தெலுங்கில் மொழி பெயர்த்தார். அதன் சுருக்கத்தை "விபுலா' வெளியிட்டது.
 மனிதர்கள் எப்படி எப்பொழுதும் இருக்க முடியும் என்ற கேள்விக்குப் பதில், பல இழைகள் கொண்டது. சிலர் சொந்தப் படைப்பின் வழியாக உயிரோடு இருக்கிறார்கள். வேறு சிலரோ மொழி பெயர்ப்பின் மூலம் இருக்கிறார்கள். சிலர் நடிப்பு, பாட்டு, நடனம், ஓவியம், சித்திரம் என்று தங்களின் ஆளுமை வழியாகவே வாழ்கிறார்கள். அவர்கள் பற்றி எத்தனைச் சொன்னாலும் அது சொல்லி முடிக்க முடியாமலேயே இருக்கிறது.
 (அடுத்த இதழில்
 ஏ.கே.ராமனுஜன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com