22 செப்டம்பர் 2019

மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று!

DIN | Published: 19th May 2019 11:32 AM

புவியின் வெப்பத்தைத் தணிக்கும் வகையில் சுற்றுச்சூழல் சேவையில் இன்று பலர் சமூகத்தின் மீது அக்கறை காட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள். அந்த வகையில் இறைவனுக்கு அடுத்தபடியாக உயிர்களைக் காக்கும் உன்னதப் பணியில் ஈடுபடுத்திகொண்ட மருத்துவர்களில் சிலர் மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை மருத்துவக் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் இணைந்து பசுமை மன்றத்தை உருவாக்கியுள்ளனர். அவர்கள் மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்கத் தொடங்கியுள்ளனர்.
 மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ஜி.சாம்பசிவத்திடம் கேட்ட போது சொன்னார்:
 "தஞ்சை மருத்துவக் கல்லூரியில் 1978-ஆம் ஆண்டு 175 மாணவ, மாணவிகள் மருத்துவம் படித்தோம். எங்களில் சிலர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், இணை இயக்குநர்கள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளிலும் இருந்து வருகின்றனர். பலர் பணியாற்றி ஓய்வு பெற்று விட்டனர். சிலர் அயல்நாடுகளில் சிறப்பு மருத்துவர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2014-ஆம் ஆண்டு நாங்கள் செல்போன், மூலம் ஒன்றிணைந்தோம். 96 திரைப்படத்தைப் போலவே அனைவரும் ஓர் இடத்தில் கூடி நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தோம். திட்டமிட்டப்படி குறிப்பிட்ட நாளில் புதுச்சேரியில் அவரவர் குடும்பத்தினருடன் சந்தித்துக் கொண்டோம். அப்போது பழைய நினைவுகளைப் பரவசத்துடன் பேசி மகிழ்ந்தோம். இத்தனை நாள்கள் மருத்துவர்களாக இருந்து மக்கள் சேவையில் ஈடுபட்டோம். இதனுடன் இனி மரங்களை நடும் சேவையில் நாம் ஈடுபட வேண்டும் என வேண்டுகோளை விடுத்தேன். எனது வேண்டுகோள் ஏற்று சக மருத்துவ நண்பர்கள் ""நாங்கள் என்ன செய்ய வேண்டும்'' என கேட்டனர்.
 குழந்தைகளின் திருமணநாள், பிறந்தநாள், போன்ற விசேஷ நாட்களில் மரக்கன்றுகளை அன்பளிப்பாக வழங்குங்கள். நாம் அனைவரும் இணைந்து இந்தப் பூமியை காக்கும் பணியில் ஈடுபடவேண்டும் என்று கூறினேன். இதனையடுத்து சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் இருதய நோய் நிபுணராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற மருத்துவர் பழனிசாமி மூலம் நடிகர் விவேக்கிடம் பேசி பசுமை மன்றம் தொடங்கப்பட்டது. இதன் ஒருங்கிணைப்பாளர், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து தாங்கள் பணிபுரியும் இடங்களில் நாள் ஒன்றுக்கு ஒரு மரம் என ஆண்டுக்கு 365 நாட்களுக்கு 365 மரங்கள் நடுவது எனவும், நட்ட மரங்களை விட்டுவிடாமல் அவற்றைத் தொடர்ந்து பராமரிப்பது என முடிவு செய்தோம். இப்போது நாங்கள் செய்யும் பணிகளை அன்றாடம் செல்போன் இணையதளம் மூலமாகப் பகிர்ந்து கொள்வோம்'' என்றார்.

மருத்துவராகப் பணியாற்றிய உங்களுக்கு மரக்கன்று மீது எப்படி ஆர்வம் உண்டாயிற்று?
 நான் அடிப்படையில் காந்தியவாதி. நம்மாழ்வார் எனக்கு வழிகாட்டி. இயற்கை விவசாயத்திற்காகப் பாடுபட்டு மறைந்தவர் நம்மாழ்வார். அவரது வழியில் இப்போது இயற்கை விவசாயம் பற்றியும், மரங்களின் அவசியம் பற்றியும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். நான் பணியாற்றிய கும்பகோணம் அரசு மருத்துவமனை வளாகத்திலேயே 100 மரக்கன்றுகள் நட்டோம். அதற்கு இரும்பு வேலி அமைத்து நாள்தோறும் தண்ணீர் விட ஏற்பாடு செய்துள்ளோம். மரங்களின் மீது எனக்கு இருக்கும் ஆர்வத்தைப் புரிந்து கொண்ட எங்களது பகுதி இளைஞர்கள் என்னிடம் மரக்கன்று வாங்கித் தரச் சொல்லி பல இடங்களில் நட்டு வருகிறார்கள். எங்களுடன் தன்னார்வலர்களும் இணைந்து செயல்பட முன் வந்தால் 10 லட்சம் பனை மரக்கன்றுகளை நடத் தயாராக உள்ளோம். ஏனெனில் பனை மரங்கள் தான் குறைந்த நீரிலும் வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது என்றார்.
 -அருள்ராஜ்
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஒழுக்கத்தை கற்றுத் தந்த ஜிம்னாஸ்டிக்ஸ்: மேகனா ரெட்டி குண்டளப்பல்லி
சொற்ப வருமானத்திலும் செயற்கைக்கோள் ஆசை!
பசுமை பணியில் பட்டதாரி இளைஞர்கள்!
ரோஜா மலரே! 5 - குமாரி சச்சு
உங்களுக்குத் தெரியுமா?