22 செப்டம்பர் 2019

எட்டு லட்சம் பேர் ஒன்று கூடிய விழா !

DIN | Published: 19th May 2019 11:24 AM

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் 68 - சாந்தகுமாரி சிவகடாட்சம்
"காற்று இல்லையேல்,
பலூன்கள் இல்லை''
- லுப்கா சிடநோவா

ஜப்பானின் கியுசு தீவில் இருக்கும் சாகா நகரம் வழக்கத்தைவிட மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஹோட்டல்கள் எல்லாம், உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த உல்லாசப் பயணிகளினால் பொங்கி வழிந்து கொண்டிருந்தன.
சாகாவின் சுற்றுப்புற நகரங்களான புகுஓகா, கராட்சு பகுதிகளிலிருந்தும் மற்றும் சுற்றியிருக்கும் கிராமங்களிலிருந்தும் மக்கள், தங்கள் குழந்தைகளோடு புற்றீசல்களாகச் சாகாவை நோக்கி வந்தவண்ணம் இருந்தனர்.
ரயில், கார், பேருந்து, விமானம், சைக்கிள், பைக் என்று கிடைத்த வாகனங்களில் எல்லாம் பயணித்து சாகாவில் ஓடிக்கொண்டிருக்கும் காசகாவா (Kasegawa) நதிக்கரையை மக்கள் அடைந்தனர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இறுதியில் நடைபெற்ற "சாகா சர்வதேச வெப்பக்காற்று திருவிழா'வை காணவே இப்படி கூடியிருந்தனர். ஆண்டுதோறும் எட்டு லட்சம் மக்கள் இந்த விழாவைக் காண இங்கே கூடுகிறார்கள் என்பதை அறிந்து மலைத்தோம். ஆனால், இந்த கணக்கீடு மிகைப்படுத்திச் சொல்லப்பட்டது அல்ல என்பதற்கு அத்தாட்சியாக எங்கள் முன் கூடியிருந்த பெரும் கூட்டம் நிரூபித்தது.
ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் ஆரம்பம் இருப்பது போல, வெப்பக்காற்று பலூன்களுக்கும் சரித்திரம் இருக்கிறது. முதல் வெப்பக்காற்று பலூன்கள் என்பது கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் சீனாவில் உருவாகியது. காற்றில் மிதக்கும் லான்டன்கள் அதாவது விளக்குகள் திருவிழா காலங்களிலும், ராணுவ சிக்னல்களை அனுப்புவதற்காகவும் பயன்படுத்தப்பட்டது.
1783-ஆம் ஆண்டு, செப்டம்பர் 19-ஆம் தேதி மான்ட்கோல்பியர் சகோதரர்கள் முதல்முதலில் வெற்றிகரமாக சுமையைத் தூக்கும் வெப்பக்காற்றுப் பலூனை தயாரித்தார்கள். பலூனுக்குள் சூடான காற்றை உருவாக்க வைக்கோல், கம்பளி துண்டுகள், குதிரையின் சாணம் முதலியவற்றைப் போட்டு எரித்தனர். காகிதம் மற்றும் துணியாலும் செய்யப்பட்ட அந்த பலூன் எரிந்துபோவதை, எரியும் கம்பளியும், குதிரையின் காய்ந்த சாணமும் உண்டாக்கிய புகை தடுத்துவிட்டது.
முதல்முதலில் வானில் பறக்க இருந்த அந்தப் பலூனில் பறக்க மனம் இருந்தாலும், தைரியம் கைகொடுக்காததால், மான்ட்கோல்பியர் சகோதரர்கள் அதில் ஏறி பறக்கவில்லை. தங்களுக்குப் பதிலாக ஆடு, வாத்து, மற்றும் சேவலை ஏற்றி அனுப்பினர். எட்டு நிமிடங்கள் வானில் பறந்த பிறகு அந்த வெப்பக்காற்று பலூன் பத்திரமாகத் தரை இறங்கியது.
மனம் மகிழ்ந்துபோன மான்ட்கோல்பியர் சகோதரர்கள், பிரான்ஸ் நாட்டின் அரசரான, லூயிஸ் 16-யை அணுகினர். தங்களுடைய இந்த அரிய கண்டுபிடிப்பை, பாரீஸ் நகரத்தில் மன்னரின் முன் பறக்கவிட்டு காட்ட அனுமதி கேட்டனர். மன்னரும் சம்மதம் கொடுத்துவிடுகிறார்.
நவம்பர் 21-ஆம் தேதி 1783-ஆம் ஆண்டு, மன்னரிடம் கொடுத்த வாக்கின்படி இந்த முறை மிருகங்களை வெப்பக்காற்றுப் பலூனில் பறக்க விடாமல், தங்களுடைய மிகவும் நெருங்கிய நண்பர்களான பிலட் டி ரோஜியர் மற்றும் பிரான்சியஸ் லாரன்ட் என்பவர்களை தங்களின் பலூனில் மான்ட்கோல்பியர் சகோதரர்கள் பறக்கச் செய்தனர்.
150 மீட்டர் உயரம் பாரீஸ் நகர குடியிருப்பு கூரைகளின் மீது சில நிமிடங்கள் அந்த பலூன் பறந்து பிறகு சில மைல்களுக்கு அப்பால் இருந்த ஒரு திராட்சை தோட்டத்தில் தரையிறங்கியது.
பென்ஜமின் பிராங்லின் என்கின்ற அமெரிக்க பல்துறை வல்லுநர் இந்த பலூனை பறக்கவிட்டபொழுது பார்வையாளராக இருந்து, மான்ட்கோல்பியர் சகோதரர்கள் நீட்டிய பார்வையாளர்கள் அறிக்கையில் கையொப்பம் இட, அது அறிவியல் அகாதெமியில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. 
இந்த வெப்பக்காற்று பலூன் திராட்சை தோட்டத்தில் தரையிறங்கியபொழுது, அங்கே இருந்த குடியானவர்கள், வானத்திலிருந்து ஏதோ ஒரு விசித்திரமான பொருள் வருகிறது என்று அதைத் தாக்க குப்பை வாரும் குச்சிகளைக் கொண்டு வந்தார்களாம். 
இப்படி வந்த குடியானவர்கள் வெப்பக்காற்றுப் பலூனை சேதம் செய்யாமல் இருக்க, பிலட்டும், பிரான்சிஸ்சும் மிகச்சிறந்த பிரான்ச் ஷேம்பைன் பாட்டில் ஒன்றை அவர்களுக்குக் கொடுத்து, அவர்கள் நிலத்தில் பலூன் இறங்க அனுமதித்தற்கு நன்றியாக இந்த ஷேம்பைனை கொடுத்ததாகக் கூறினார்கள். 
இந்த நிகழ்ச்சியைப் போற்றி, ஞாபகம் வைத்துக் கொள்ளும் வகையில் இன்றளவும் உலகம் முழுவதிலும் வெப்பக்காற்றுப் பலூனில் பயணத்தை முடித்துக் கொண்டு தரையிறங்குபவர்களுக்கு ஷேம்பைனை அருந்த தருகிறார்கள்.
இன்று விமானங்களை வானத்தில் செலுத்துகின்ற விமானிகளுக்குப் "பைலட்' என்ற பெயர் எதிலிருந்து வந்திருக்கிறது என்றால், முதல்முதலில் பாரீஸில், வெப்பக்காற்றுப் பலூனை வானில் செலுத்தி அதில் பயணம் செய்த(pilatre) பிலேட்டிலிருந்துதான் என்பதை அறிந்து மகிழ்ந்தேன். 
சாகா ரயில் நிலையத்தில் மிக நீண்ட கியூ வரிசையில் மக்கள் பொறுமையாகக் காத்துக் கொண்டிருந்தனர். ரயில் நிலையத்தில், சுவர்களில் எல்லாம் பெரிய, பெரிய வெப்பக்காற்றுப் பலூன்களில் கட்அவுட்டுகள் அலங்கரித்துக் கொண்டிருந்தன. இந்த பலூனின் சிறிய படங்கள் தோரணங்களாக குறுக்குவாட்டில் தொங்கி அந்த இடத்திற்கே ஒரு தனித்தன்மையுடைய அழகை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தது. எங்கள் முறை வந்ததும் டிக்கெட்டுகள் வாங்கிக் கொண்டு ரயிலில் ஏறினோம். இந்த வெப்பக்காற்றுப் பலூன் திருவிழாவுக்காகவே தற்காலிக பலூன் சாகா ஸ்டேஷனை உருவாக்கியிருந்தனர். நாங்கள் வாங்கிய ரயில் டிக்கெட்டில் மற்றொரு வசதி இருந்தது. ரயிலில் பயணிப்பதற்கு மட்டும் அல்லாமல் திருவிழாவைக் காண்பதற்கான நுழைவு டிக்கட்டுகளாகவும் அவை இருந்தன.
(தொடரும்)

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஒழுக்கத்தை கற்றுத் தந்த ஜிம்னாஸ்டிக்ஸ்: மேகனா ரெட்டி குண்டளப்பல்லி
சொற்ப வருமானத்திலும் செயற்கைக்கோள் ஆசை!
பசுமை பணியில் பட்டதாரி இளைஞர்கள்!
ரோஜா மலரே! 5 - குமாரி சச்சு
உங்களுக்குத் தெரியுமா?