பாலைவனமே உண்மையான துபாய்: எஸ்.ஆர்.அசோக்குமார் 

சென்ற வாரத்தில் நான் என்ன அதிசயத்தைக் கண்டேன் என்று முதலில் சொல்லி விடுகிறேன்.
பாலைவனமே உண்மையான துபாய்: எஸ்.ஆர்.அசோக்குமார் 

சென்ற வாரத்தில் நான் என்ன அதிசயத்தைக் கண்டேன் என்று முதலில் சொல்லி விடுகிறேன். ஒரு கைடு (வழிகாட்டி) நாம் எங்குப் போகிறோம், எந்த இடங்களைக் கடக்கிறோம் என்று ஒலி பெருக்கியில் சொல்லிக் கொண்டே வருவார். அது பெண்ணாகவும், ஆணாகவும் இருப்பார்கள். ஆனால் அதிகமாக அது பெண்களாகத் தான் இருப்பார்கள். நான் ஏறி அமர்ந்த பஸ்ஸின் இருபுறமும் மைக் பிடித்தபடி ஒரு பெண் பேசுவதுபோல் அழகாக விளம்பரமும் செய்திருந்தார்கள். அந்த விளம்பரத்தைப் பார்த்து விட்டுப் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தவுடன் அதே பெண் மைக் பிடித்தபடி விவரங்களைச் சொன்னால் அதிசயமாகப் பார்ப்போம் இல்லையா? அந்த ஸ்வீட் சர்ப்ரைஸ் எனக்கு ஏற்பட்டது. 

பிக் பஸ் டூர் என்பது மக்களுக்கு மிகவும் நன்மை செய்வது. பல்வேறு நாடுகளில் உள்ள நகரங்களில் இந்தப் பிக் பஸ் போக்குவரத்து சீராக நடை பெற்று வருகிறது. அவை அபுதாபி, புடாபெஸ்ட், சிக்காகோ, டார்வின், துபாய், ஹாங்காங், இஸ்தான்புல், லாஸ்வேகாஸ், லண்டன், மியாமி, மஸ்கட், நியூ யார்க், பாரிஸ், பிளடெல்பியா, ரோம், சான்பரான்சிஸ்கோ, சிட்னி, வியன்னா, வாஷிங்டன் டி..சி முதலிய பல நகரங்கள் இதில் அடக்கம். 

ஒரு நகரத்தில் நாம் சுற்றுப் பயணம் செய்யும் போது இதுபோன்ற ஒரு போக்குவரத்து மிகவும் தேவை. வெளிநாட்டில், அதுவும் தெரியாத நகரத்திற்கு நாம் போகும் ஒரு இடத்தில் இருந்து ஒவ்வொரு முறையும் டாக்ஸி வைத்தால் நம்மிடம் உள்ள காசு (அவர்கள் நாட்டு காசு தான்) கரைந்து விடும். இந்த பிக் பஸ் நிர்வாகத்தினர், நாம் டிக்கெட் வாங்கும் போதே நம்மிடம் ஒரு சிறிய கையேட்டை கொடுக்கிறார்கள். அதில் பொருள் வாங்கினாலும், சாப்பிட ஏதாவது வாங்கினாலும் அதில் பல்வேறு சதவிகிதம் கழிவு உண்டு. அது மட்டும் அல்லாமல் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் போன்ற சலுகைகளும் அதில் இருக்கிறது.

நாங்கள் சென்ற பஸ் ஒரு நிறுத்ததில் அதிக நேரம் நிற்கும்படி ஆகிவிட்டது. அந்தச் சமயத்தில் அந்தப் பெண்ணை நெருங்கி "நீங்கள் தான் உங்கள் பஸ் விளம்பரத்தில் இருக்கிறீர்களா", என்று கேட்க, அவர் தலை அசைத்தபடியே புன்னகைக்க, அதற்குள் பஸ் கிளம்பிவிட்டது. எங்கோ போகவேண்டிய நான் அவருடன் பயணிக்கும் ஆசையுடன், அவர் செல்லும் அதே பஸ்ஸில் ஏறினேன். சாதாரணமாக இம்மாதிரி விளம்பரப் படத்தில் நடிக்க ஒரு நடிகையைதான் ஒப்பந்தம் செய்வார்கள். தனது நிர்வாகத்தில் வேலை செய்யும் ஒரு பெண்ணையே விளம்பர மாடலாக மாற்றிய பிக் பஸ் நிர்வாகத்தினர் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். 

அவரைப் பற்றிய விவரம் கேட்டேன். "என் பேரு செட்டியல் (Cetille). நான் இங்கு சுமார் ஒரு வருடமாக வேலை செய்கிறேன். சென்ற நவம்பரில் தான் இந்த விளம்பரத்திற்கான புகைப்படம் எடுத்தார்கள். என்னை மட்டும் அல்ல. சுமார் 8 பேர்களைப் படமெடுத்தார்கள் என்று நான் கேள்விப்பட்டேன். புகைப்படம் எடுக்கும் போது நான் மகிழ்ச்சி அடைந்தேன். காரணம் நான் செய்யும் வேலை தானே படமாக வரப் போகிறது என்று நினைத்தேன். ஆனால் அது இவ்வளவு பெரிய அளவில் எங்கள் பஸ்சிலேயே என் படம் வந்ததைப் பார்த்தவுடன் என் சந்தோசத்திற்கு அளவே இல்லை. என்னுடன் சேர்ந்து 8 பேரை புகைப்படம் எடுத்தார்கள் என்று சொன்னேன் இல்லையா? அதில் நான் தேர்ந்தெடுக்கபட்டு, நான் தான் சரியானவள் என்று என்னைத் தேர்ந்தெடுத்து விளம்பரம் செய்த போது என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை.'' என்றார். 

அவர் சிரிக்கும் போது பல்லில் braces போட்டுள்ளது தெரிந்தது. ஆனால், படத்தில் அது இல்லை. கேட்டால், அதை மறைத்துள்ளார்கள் என்று சிரித்துக் கொண்டே கூறினார். அவர் இறங்க வேண்டிய இடம் வந்தவுடன் அவர் இறங்க, துபாய் அருங்காட்சியகம் பார்த்தோம். சுமார் 3 கிரவுண்டில் எல்லாமே முடிந்து விட்டது. முன் காலத்தில் இருந்த மண்பாண்டம், அவர்களின் வாழ்வு முறை, முதலியவற்றைக் காட்சிக்கு வைத்திருந்தார்கள். வெளியே அவர்கள் பயணம் செய்த படகு அல்லது கப்பல் இவையும் வைக்கப்பட்டிருந்தது. 

அடுத்த நாள் காலை முழுவதும் ஷாப்பிங். எங்கள் ஓட்டலுக்கு அருகிலேயே டேரா மால் (Deira mall) இருந்ததால், அங்கே மதியம் வரை சுற்றி பொழுதைக் கழித்தோம். ஆனால் ஒன்றும் வாங்கவில்லை. காரணம் ஒவ்வொருமுறையும் விலையைப் பார்த்தவுடன் என் மனைவி காசை செலவு செய்ய விரும்பாமல் கணக்கு மட்டுமே போட்டு, வேண்டாம் என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். 

மாலை சரியாக 4 மணிக்குக் கார் வர உண்மையான துபாயைப் பார்க்க போகிறோம் என்று சந்தோசத்துடன் கிளம்பினோம். உண்மையான துபாய் என்றால் என்ன தெரியுமா? பாலைவனம் தான். மணல் மேடுதான். அதையும் ஒரு சுற்றுலாத்தலமாக மாற்றி "டெசர்ட் சபாரி' (desert safari) என்று பெயர் கொடுத்துப் பணம் பண்ணுகிறார்கள். 

தினமும் இது நடக்கிறது. நமது சென்னையிலும் உலகிலேயே இரண்டாவது அதிக தூரமுள்ள கடற்கரை (second longest beach in the world) உள்ளது. அதை ஏன் சுற்றுலா தலமாக மாற்றவில்லை என்று தெரியவில்லை. எங்கள் கார் டிரைவர் மொஹம்மத் ஷகீல் "சீக்கிரம் வாருங்கள்'' என்று அவசரப்படுத்தினார்.

எங்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அவர் சொன்ன விஷயங்கள் என் வயிற்றில் புளியை கரைத்தது. அவர் சொன்னது இதுதான். "நான் சமீபத்தில்தான் வண்டி ஒட்டவே கற்றுக் கொண்டேன். நாம் கிளம்பி வர இரவு சுமார் 9 மணியாகும். ஒரு வேலை வழி தெரியவில்லை என்றால் என் கைபேசியில் GPRS இல்லை. உங்களில் யாரிடமாவது இருந்தால் தயவு செய்து இப்பொழுதே on செய்து கொள்ளுங்கள். வழி தெரியாமல் நாம் சுற்ற தேவை இல்லை. சரியான வழியை அதன் மூலம் பார்த்து வந்து விடலாம்".'' என்றார். 

தெரியாத ஊரில் இப்படி யாராவது சொன்னால் பயம் ஏற்படாமல் இருக்குமா என்ன? ஆனால் அவர் சொன்னது வேறு, செய்தது வேறாக இருந்தது. நகரத்தில் இருந்து வண்டி ஒட்டிக் கொண்டு டெசர்ட் சபாரி' நடக்கும் இடத்திற்கு வந்தவுடன், அவரிடம் என் ஆவலை அடக்க முடியாமல் கேட்டு விட்டேன். உண்மையைக் கூறினார் சிரித்துக்கொண்டே. அவர் ஒரு தேர்ந்த கார் டிரைவர் என்றும், சுமார் 10 வருடங்கள் தினமும் மாலை வேளை இதே வேலையைச் செய்கிறாராம். 

வண்டி ஓட்டுவதில் என்ன சிறப்பு என்று நீங்கள் நினைக்கலாம். பாலைவனத்தில் வண்டி ஓட்டுவது மிகவும் சிரமமான வேலை. அதிலும் அவர்கள் போகும் வேகம் நம்மைப் பயங்கொள்ள வைக்கிறது. முதலில் ஒரு இடத்தில் இருந்து பாருங்கள் என்று நிறுத்துகிறார்கள். பல ஆண்கள் இரண்டு சக்கர மோட்டார் சைக்கில் வண்டியில் மணலில் மேலும் கீழும் பெரும் சப்தத்துடன் ஓட்டுகிறார்கள். அதே போல் நான்கு சக்கர ஜீப்பிலும் பலர் தனியாகவும், துணையுடனும் தாங்களே ஓட்டிக் கொண்டு போவதைப் பார்க்க ஒரு பக்கம் பயமாகவும், ஒரு பக்கம் சந்தோஷமாகவும் இருந்தது. தயாரா, போகலாமா என்று கேட்க, மேலும் ஒரு குண்டை தூக்கிப் போட்டார். அது என்ன தெரியுமா?

(அடுத்த இதழில் நிறைவுறும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com