செவ்வாய்க்கிழமை 20 ஆகஸ்ட் 2019

கரிசனங்களின் குவியல் இந்தக் "குடிமகன்'

DIN | Published: 25th March 2019 10:03 AM

ஒவ்வொரு அரசுத் துறைக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. கல்வித் துறையின் நோக்கம் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் கல்வி வழங்குவது; சுகாதாரத் துறையின் நோக்கம், தரமான மருத்துவ வசதிகளை அனைவருக்கும் வழங்குவது; வனத் துறையின் நோக்கம் வனங்களைப் பாதுகாப்பது. இப்படி டாஸ்மாக் என்ற அரசுத் துறையின் நோக்கம் என்ன... ?
 தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குடிகாரரை உருவாக்குவதா? நான் ஒருவன் குடிப்பதால் என் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்து விடும் என்பதெல்லாம் ஓவர் என்பது பல குடிகாரர்களின் எண்ணம்.
 தன் போதையும் குடியும் எப்போதும் தன் கட்டுப்பாட்டில் இருப்பதாகவே இவர்கள் கருதுகிறார்கள். ஆனால் போதை, இவர்களை மயக்கி, வீழ்த்தி சாலைக்கு இழுத்து வந்து விடுகிறது. அதன் பின் அந்தக் குடும்பம் என்ன ஆகிறது...? கேள்விகளால் நிறைத்து கொண்டே இருக்கிறார் அறிமுக இயக்குநர் சத்தீஷ்வரன். "குடிமகன்'படத்தின் மூலம் அவல நிலையை எடுத்து வைக்க வருகிறார்.
 குடி குடியை கெடுக்கும்... இதுதான் கதையின் உள்ளடக்கமா...?
 கந்தன், செல்லக்கண்ணு, ஆகாஷ் இவர்களின் எளிய வாழ்க்கைதான் படம். வாழ்க்கையை உற்சாகமாக, ரசனையாகப் பார்க்கிறவன் கந்தன். ஒவ்வொரு நிமிஷத்தையும் நம்பிக்கையோடு கடக்கிற மனுஷி செல்லக்கண்ணு. இவர்களின் அன்பு மகன் ஆகாஷ். வறுமை, இயலாமை என இருந்தாலும் அன்பு மட்டுமே இவர்களின் பிரதானம். அழகு, பணம் என நம்முடைய அத்தனை அபத்தங்களையும் அடித்து நொறுக்கி அன்பையும், அக்கறையையும் முன் வைக்கிற காதல். அவ்வளவு அற்புதமாக, அழகாக வாழ்கிற வாழ்க்கை ஒரு கட்டத்தில் சின்னா பின்னமாகிறது. குடிப் பழக்கமே இல்லாத கந்தன், ஒரு கட்டத்தில் குடியின் கோரப் பிடியில் சிக்குகிறான். அவன் வாழ்வு, குடும்பம் எல்லாமே குடி என்ற அரக்கனால் சபிக்கப்படுகிறது. ஒரு பெரும் சோகக் காவியத்தின் உணர்ச்சியும் உயிர்த்துடிப்பும் மிக்க அந்தக் கணங்களை எண்ணிப்பார்க்கவே மனம் நடுங்குகிறது.
 
 எப்படி இருக்கும் படத்தின் திரை வடிவம்....?
 இந்தப் படத்துக்காக ஒரு காட்சி, ஒரு வசனத்தைக்கூட எங்கேயோ யாருடனோ விவாதிக்கவில்லை. . எல்லாமே எங்கேயோ நடந்த சம்பவம், யாரோ பேசின வார்த்தைகள், நம் உள்ளங்கை உணர்ந்த கண்ணீர், கண் கூடாகப் பார்த்த அம்சங்கள்...இது உண்மைக்கு நெருக்கமெல்லாம் இல்லை... இது உண்மையேதான். ஒரு சினிமா, இரண்டரை மணி நேரம்தான். ஆனா, ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் 24 மணி நேரம். வாழ்க்கைதான் நாம யோசிக்கவே முடியாத சினிமா என்பது டிஸிகாவின் கோட். இது எவ்வளவு உண்மை? நாம் அனுதினமும் கவனிக்காமல் கடந்து போகிற ஒவ்வோர் எளிய மனிதனின் வாழ்க்கைதான் இது. கண்ணுக்குத் தட்டுப்படாத பிரியங்களின், கரிசனங்களின் குவியல்தான் இந்தக் குடிமகன். எங்கோ கோடி பேரில் ஒருவனுக்கு நடக்கிற கதை இல்லை. இது எல்லோருக்குமானது. உங்களை விட, என்னை விட எல்லோரும் சந்திக்கப் போகிற பிரச்னை. இந்தக் கோரத்தின் பிடியில் யாரும் சிக்கிக் கொள்ளலாம்... அதற்கான விழிப்புணர்வு இது.
 
 விமர்சிக்கிற விதமாகத்தான் இந்த மாதிரியான கதைகளைச் சொல்ல முடியுமா?
 ஆமாம், கண்டிப்பாக விமர்சனம் இருக்கிறது. "இரண்டு படி லட்சியம். ஒரு படி நிச்சயம்' என அண்ணா சொன்னார். அவர் சொன்னது அரிசிக்கு. ஆனால் இன்றைக்கு, "வீட்டுக்கு இரண்டு குடிகாரர் லட்சியம்; ஒருவர் நிச்சயம்' எனக் கோட்பாடு வகுக்கப்பட்டுள்ளது. அதனால்தான் மிகக் கடுமையாக மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊர்களில் கூட விடாப்பிடியாக மதுக்கடைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகில் இருக்கிறது செல்லம்பட்டி என்ற கிராமம். புது ஆற்றுத் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவர... எங்கும் குளுமையும் பசுமையும் நிறைந்திருக்கின்றன. சுற்றியுள்ள விவசாயக் கிராமங்களுக்கு இந்த ஊர்தான் ஒன்று கூடும் இடம். மாலை நேரமாகிவிட்டால் ஆற்றுப்பாலம் எங்கும் கூட்டம் மொய்க்கும். செல்லம்பட்டியில் மொத்தம் மூன்று டாஸ்மாக் கடைகள். முழுக்க முழுக்க விவசாயிகளும் விவசாயக் கூலித் தொழிலாளர்களும் நிறைந்த பகுதி என்பதால், மூன்று கடைகளிலும் கூட்டம் அதிகம். ஆற்றில் தண்ணீர் வந்தாலும் வராவிட்டாலும் டாஸ்மாக் தண்ணீருக்கு மட்டும் எந்தத் தடையும் இல்லை. ஆற்றில் தண்ணீர் வரவில்லை என்றால், குடிகாரர்களுக்கு அதுதான் திறந்தவெளி பார். ஆற்று மணலில் அமர்ந்து ஏகாந்தமாகக் குடிப்பார்கள். இப்படியான நிலைக்கு யார் காரணம். இது சொல்லாமல் சினிமா ஒதுங்குவது சரியாக இருக்குமா....
 
 நடிகர்களின் பங்களிப்பு எப்படி...?
 கதாசிரியர் கலைஞானத்தின் பேரன் ஜெய்குமார்தான் ஹீரோ. பெரும் சினிமா தாகம் உள்ளவர். அவர் பொருந்தி வந்து நடித்திருக்கிறார். அன்பின் பிரிவில் தவித்து, குடியின் கோரத்தில் சிக்கிக் கொண்டு திணறும் இடங்களில் அவ்வளவு அற்புதமாகப் பொருந்தியிருக்கிறார். "ஈரநிலம்'" ஜெனிபர் செல்லக்கண்ணுவாக நடிக்கிறார். வனங்களை, மிருகங்களைக் கடந்த பயணம் இருக்கிறது அவருக்கு. கணவன், மகன் இரண்டுக்குமான அன்பின் நெகிழ்வில் கரைந்தோடியிருக்கிறார். மது ஒழிப்புப் போராளி" மாஸ்டர் ஆகாஷ் இவர்களுக்கு மகன். அத்தனை நேர்த்தியான நடிப்பு. பவா செல்லதுரை, வீரசமர், கிருஷ்ணமூர்த்தி, கிரண், பாலாசிங், பாவா லெட்சுமணன் இப்படி இன்னப் பிற இடங்களை இவர்களெல்லாம் நிறைத்திருக்கிறார்கள்.
 -ஜி.அசோக்
 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இயற்கையை நேசிக்கும் அற்புத மனிதர்!

ரோஜா மலரே!- குமாரி சச்சு
 

தமிழக இளைஞர் சாதனை
பராக்பூர்
ஓர்ச்சா