நான் சந்தித்த நல்ல மனிதர்!- நடிகை கே.ஆர். விஜயா 

தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிப் படங்கள் உட்பட சுமார் 400 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நான் சந்தித்த நல்ல மனிதர்!- நடிகை கே.ஆர். விஜயா 

பிடித்த 10
தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிப் படங்கள் உட்பட சுமார் 400 திரைப்படங்களில் நடித்துள்ளார். இரண்டு முறை தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றவர் "புன்னகை அரசி' என அழைக்கப்படும் கே. ஆர். விஜயா. தனக்கு "பிடித்த பத்து' பற்றிக் கூறுகிறார்.
பொற்காலம்: நான் பேசிப், பழகி, நடித்த ஜாம்பவான்கள், இருந்த காலம் எல்லாம் பொற்காலம் என்று கூறுவேன். ஒவ்வொருவரையும் பற்றிக் கூற எனக்கு ஒரு நாள் போதாது. அவ்வளவும் சந்தோஷமான நினைவுகள். அவர்கள் எல்லோருடனும் நான் நடித்தேன் என்பதை விட அவர்களின் ஆசிகளைப் பெற்றேன் என்று தான் கூறுவேன். "கற்பகம்'படம் முதல் இன்றுவரை நல்ல நினைவுகள், நல்ல செயல்கள் இவற்றை மட்டுமே நான் தாங்கி ஒவ்வொரு நாளையும் சந்தோஷமான நாளாக மாற்றிக் கொண்டு வருகிறேன். 
கோயில்: எல்லாக் கோயில்களும் எனக்கு விருப்பமானதுதான் என்றாலும், பழனியில் உள்ள முருகன் கோயிலில் என்னை இறக்கி விட்டால் அங்கு இருக்கும் செந்தில் வேலனைப் பார்த்துக் கொண்டே இருப்பேன். கே.பி.சுந்தராம்பாள் பாட்டு, அந்த ஆண்டவனின் அபிஷேக ஆராதனை, இவற்றை எல்லாம் பார்த்து-கேட்டுக் கொண்டே இருந்தால், எனக்கு நேரம் போவதே தெரியாது என்றுதான் சொல்வேன். குறிப்பாகக் காலை 5.30 மணிக்கு அந்த ஆண்டவனைப் பார்க்கச் சென்றால், என்னை மறந்து அங்கேயே நின்றுவிடுவேன். 
மக்கள் திலகம் எம்ஜிஆர்: மக்கள் அவர் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள் என்று எனக்குப் புரிந்தது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை யாராக இருந்தாலும், இவர் மரியாதை கொடுப்பது பெரிய விஷயம். அதே போல் படப்பிடிப்புத் தளத்தில் உள்ள எல்லோருக்கும், அது ஒலி-ஒளி உதவியாளராக இருந்தாலும் சரி, எல்லோரையும் பெயர் சொல்லிக் கூப்பிடுவார். உதவி என்றால் அவர்கள் கேட்கும் முன்பே உதவுவது அவர் பழக்கம். 
நடிகர் சிவாஜி கணேசன்: நடிப்பிற்கே இவர் தலைவன் என்று கூறினால் அது தவறில்லை. காலையில் படப்பிடிப்பு தளதிற்குள் இவர் நுழைத்து விட்டால், இயக்குநர் பிரேக் என்று கூறும் வரை எல்லோரது நடிப்பையும் பார்த்துக் கொண்டே இருப்பார். நாம் ஏதாவது சரியாகச் செய்யவில்லை என்று தோன்றினால், நம்மை அழைத்து விவரத்தை கூறி இன்னும் ஒருமுறை அதே காட்சியை எடுக்கச் சொல்வார். மற்றவர்கள் நடிப்பதை ஒவ்வொருவரும் பார்க்க வேண்டும் என்று சொல்வார். 
ஜெமினி கணேசன்: என்னுடைய திரை உலக வாழ்கையில் easy going person என்றால் ஜெமினி தான். எனது முதல் படமே அவருடன் தான். "கற்பகம்'" படத்தில் நான் நடித்தது மட்டுமல்ல, எனது 100 வது படமான "நத்தையில் முத்து', 200 வது படம், 350 வது படம் என்று சில முக்கியப் படங்களிலும் அவர்தான் நாயகன். நடிகர் ஜெமினி கணேசன் தான் என்னை முதன் முதலாகப் பாராட்டினார். நான் அப்பொழுது நடிகை இல்லை. எனது நடன நிகழ்ச்சிக்கு அவர் தலைமை தாங்கினார். என் நடனத்தை பற்றி புகழ்ந்துப் பேசினார். நன்றாக நடித்தால் மனம் திறந்து பாராட்டுவார். அன்றும் அப்படியே செய்தார். அவர் ஒரு சிறந்த நடிகர் மட்டும் அல்ல நல்ல மனிதர்.
இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் :
இவர் இயக்கும் பாணி வித்யாசமானது. அவரே நடித்துக் காட்டுவார். அவரிடம் பாராட்டுப்பெற்றால் அதுவே ஒரு சிறந்த விருதுதான் என்று கூறுவேன். அவர் சொல்வதைச் சரியாகச் செய்துவிட்டால் புகழ்வார். எனது முதல் படம் அவரது இயக்கத்தில் வெளியானது நான் செய்த பக்கியம். 
இயக்குநர் ஏ. பி.நாகராஜன்: ஆண்டவனின் திருவிளையாடல்களை, பல்வேறு அவதாரங்களைப் படமாக எடுப்பதில் மிகவும் சிறந்தவர். இப்படிப்பட்ட படங்கள் என்பதினால் நடிப்பதிலும், வசனங்களை உச்சரிப்பதிலும் பயிற்சி தேவை. அதனால் படப்பிடிப்பிற்கு முன்பே அதற்கான பயிற்சிக்கு அழைப்பார்கள். அது குருகுலவாசம் போல் இருக்கும். "ஆச்சி' மனோரமா, சாவித்ரி ஆகியோர் வந்தால் எங்களுக்கெல்லாம் கொண்டாட்டம்தான். 
இயக்குநர் ஸ்ரீதர் - மதுரை திருமாறன்: இருவரது முறையும் வெவ்வேறு விதம் என்றாலும் இருவரும் மக்களை மிகவும் கவர்ந்தவர்கள். இயக்குநர் ஸ்ரீதர் காதலை இதமாக, பதமாகக் காட்டி மக்களை மயக்கியவர். ஒரு சிணுங்களில் காதல் உணர்வுகளைக் காட்டக் கூடியவர். அவர் நகத்தைக் கடித்த வண்ணம் காட்சியை அமைக்கும் முறையிலேயே வித்தியாசம் தெரிந்து விடும். இந்த வித்தியாசம் "ஊட்டிவரை உறவு'" படத்தில் பல இடங்களில் பார்க்கலாம். இயக்குநர் மதுரை திருமாறனை என்னால் மறக்க முடியாது. நான் நடிக்க முடியாது என்று நினைத்த பாத்திரங்களில் எல்லாம் என்னை நடிக்க வைத்து என் திறமையை வெளிக்கொண்டு வந்தவர். உதாரணதிற்கு "வாயாடி". நான் அதிகமா பேசமாட்டேன். என்னை வாயடியாக மாற்றிப் பெயர் வாங்க வைத்தவர்.. 
நாகேஷ்-மனோரமா: இந்த இருவருடன் நடிக்கும் போது கொஞ்சம் ஜாக்கிரதையாக நடிப்பேன். காரணம் rehearsal இல் எல்லாம் சாதாரணமாக நடித்து விட்டு take இல் நம்மைத் தூக்கி சாப்பிட்டு விடுவார்கள். வசனங்களை அசால்டாகப் பேசக் கூடியவர்கள். . அதே போல் நாகேஷின் உடம்பு செய்ய சொல்லும் எல்லாவற்றையும் செய்யும். ரப்பர் பந்தை போல் துள்ளிக் குதித்து நடனம் ஆடக் கூடியவர். ஆச்சியும் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல. 
நடிகர் முத்துராமன்: என்னைப் பொருத்தவரை மிகச்சிறந்த நடிகர் மட்டும் அல்லாமல் மென்மையாகப் பேசும் நல்ல பண்பாளர். அவ்வப்போது குறும்புகள் செய்வார். அவரை என் இனிய அண்ணன் என்று சொன்னால் அது தவறல்ல. அந்தக் காலத்தில் சில வேடங்கள் என்றால் இவரை விட்டால் வேறு ஒருவர் கிடையாது என்று கூறும் அளவிற்குக் கதை எழுதும் போதே கதாசிரியர் மனதில் வந்து நிற்பார். 
-சலன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com