தெரு 20 கிரிக்கெட் போட்டி: கனவை நனவாக்கிய தென்னிந்திய அணி..!

வாய்ப்பு வசதிகள் இல்லாமல் வீதியில் வாழும் சிறுவர்களுக்கான முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்து முடிந்தது.
தெரு 20 கிரிக்கெட் போட்டி: கனவை நனவாக்கிய தென்னிந்திய அணி..!

வாய்ப்பு வசதிகள் இல்லாமல் வீதியில் வாழும் சிறுவர்களுக்கான முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்து முடிந்தது.
 இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ், நேபாளம், தான்சானியா, மொரிஷியஸ் , காங்கோ, இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து சிறுவர்கள் அடங்கிய அணிகள் கலந்து கொண்டன. அணியில் சிறுமிகளுக்கும் இடம் தரப்பட்டது என்பது முக்கிய அம்சம். இந்தப் போட்டியின் பெயர், "தெரு 20 கிரிக்கெட்". ஒவ்வொரு அணியிலும் ஆறு பேர். காயம் ஏதும் ஏற்பட்டால், ஆட்டக்காரருக்குப் பதிலாகக் களம் இறங்க இரண்டு ஆட்டக்காரர்கள் உபரியாக இருந்தனர்.
 ஆட்டத்தில் ஐந்து ஓவர்கள். ஒவ்வொரு ஓவருக்கும் நான்கு பந்து வீச்சுகள். ஆட்டக்காரர் 15 ரன்கள் எடுத்துவிட்டால் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். ஆட காத்துக் கொண்டிருப்பவர் பேட்டிங் செய்ய வாய்ப்பு தருவதற்காக இந்த ஏற்பாடு.
 இந்தியாவிலிருந்து தென்னிந்திய, வட இந்திய அணிகள் என்று இரண்டு அணிகள் கலந்து கொண்டன. டில்லி கொல்கத்தா நகரங்களைச் சேர்ந்த வீதியோர சிறுவர்கள் அடங்கிய வடஇந்திய அணி போட்டியில் தகுதி பெறவில்லை.
 தென்னக அணியில் தலா நான்கு பேர் சென்னையிலிருந்தும் மும்பையிலிருந்தும் கலந்து கொண்டனர். இந்த அணி வெற்றி பெற சவுரவ் கங்குலி வாழ்த்து அனுப்பியிருந்தார். போட்டிகள் இங்கிலாந்தின் பிரபல லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.
 இறுதி போட்டி தொடங்குவதற்கு முன் லார்ட்ஸ் மைதானத்தின் பொறுப்பாளரான ஃபிரைசர் ஸ்டூவர்ட் ஒரு சம்பவத்தை இந்திய ஆட்டக்காரர்களுக்கு நினைவுபடுத்தினார். "பிள்ளைகளே .. கவனமா கேட்டுக்கோங்க .. இந்த அறையில்தான் இந்திய அணி தன்னைத் தயார் செய்துக்கும். 2011-இல் ராகுல் திராவிட் நூறு ரன் எடுக்கறதுக்கு முன்னால் இங்கேதான் அமர்ந்திருந்தார்..' என்று ஓர் இடத்தைக் காட்டினார். பிறகு "அதே இடத்தில் அமர்ந்திருந்த இலங்கையைச் சேர்ந்த தில்ஷனும் நூறு ரன் எடுத்திருந்தார்..' என்று சொன்னதும் தென்னிந்திய அணியினரும் கொஞ்ச நேரம் அந்த இடத்தில் அமர்ந்தார்களாம். அந்த அதிர்ஷ்டமோ என்னவோ தெரியவில்லை, ஆரம்பத்தில் இங்கிலாந்து அணியிடம் தோற்ற தென்னிந்திய அணி, இறுதி போட்டியில் இங்கிலாந்தை வென்று உலகக் கோப்பையை இந்தியாவிற்குக் கொண்டு வந்துள்ளது.
 தென்னிந்திய அணியை இங்கிலாந்து அழைத்துச் சென்றது சென்னையைச் சேர்ந்த "கருணாலயா' அமைப்பும் மும்பையைச் சேர்ந்த "மேஜிக் பஸ்' அமைப்பும். தென்னிந்திய அணியின் வெற்றியை அறிந்த லண்டன் தமிழ் சங்கம் இந்த அணிக்குப் பாராட்டு விழாவையும் நடத்தியுள்ளது.
 சென்னையில் கருணாலயாவின் வீதி வாழ் சிறுவர் சிறுமியரின் கிரிக்கெட் அணி பயிற்சி பெற்று வருவது சென்னை துறைமுக ஆணையத்தின் மைதானம் மற்றும் பாபு ஜெகஜீவன்ராம் ஸ்டேடியம். கனவில் மட்டுமே வீதியோர சிறார்கள் இங்கிலாந்து சென்று லார்ட்ஸ் மைதானத்தில் விளையாட முடியும். அதை நனவாக்கிய சென்னை கருணாலயாவுக்குப் பாராட்டுகள்.

 -பிஸ்மி பரிணாமன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com