தரமான படத்தைத் தருவேன் !

அந்த இடத்தை கொடுத்த தமிழ் மக்களுக்கு நன்றி. அதனால் எனக்குப் பொறுப்பு கூடி இருக்கிறது. என்னை நம்பி வருகிற ரசிகர்களுக்கு நான் நல்ல கதைச் சொல்லியாக இருக்க வேண்டும்
தரமான படத்தைத் தருவேன் !

சசி... தமிழ் சினிமா உலகில் தனிக்குரல். "பூ' மாதிரி படம் கொடுத்து நெகிழ வைப்பார். "பிச்சைக்காரன்' மாதிரியும் பெரும் ஹிட்டும் கொடுப்பார். தீராத வாசிப்பில் எப்போதும் மிதக்கும் வாசகன். இப்போது "சிவப்பு மஞ்சள் பச்சை' இயக்கிக் கொண்டிருக்கிறார்.
 புத்தகங்கள் விரிந்து கிடக்கும் அறையிலிருந்து உதடுகள் பிரியாமல் சிரிக்கிறார்...
 உங்கள் படத்துக்கான தீவிரமும், எதிர்பார்ப்பும் இப்போது பரவலாக இருக்கிறது...
 அந்த இடத்தை கொடுத்த தமிழ் மக்களுக்கு நன்றி. அதனால் எனக்குப் பொறுப்பு கூடி இருக்கிறது. என்னை நம்பி வருகிற ரசிகர்களுக்கு நான் நல்ல கதைச் சொல்லியாக இருக்க வேண்டும். கதாபாத்திரங்களை வித்தியாசமாகப் படைக்க வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது."இதுவரை நீங்க பார்த்த நடிகரை நான் எப்படி காண்பிச்சிருக்கேன் பாரு..'என்று ரசிகர்களுக்கு மாற்றிக் காட்ட வேண்டி இருக்கிறது. அதற்காகக் கொஞ்சம் பாடுபடுகிறேன். எனக்கென எந்த இலக்கும் இல்லை. மனதில் தோன்றும் கதை எப்போது என்னைப் பிடித்து தள்ளுதோ, அப்போதுதான் படம் இயக்குவேன். தரமான படத்தைத்தான் தருவேனே தவிர, தவறான படத்தைத் தர மாட்டேன். அது என்னுடைய கடமை. ரசிகர்களுக்கு நன்றி.
 
 சிவப்பு மஞ்சள் பச்சை..... என்ன விசேஷம்...
 என் கதைகளுக்கு எப்போதும் அன்பும், உறவும்தான் அடிப்படை. அன்பு, காதல், பரிவு... கதையை நகர்த்தும் கரு. உறவுகள்தான் மனித வாழ்வின் ஆதாரம் என நினைக்கிறேன். அதை விட்டு வெளியேற நினைக்கிற மனப்பாங்கு இப்போது பரவிக் கிடக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு வரலாறு இருக்கிறது. பிறக்கும் போது அவனோடு பிறக்கிற வரலாறு, அவன் இறந்த பின்னாலும் அவனது உறவுகள் மூலம் சுற்றிக் கொண்டே இருக்கிறது.
 என் கடவுள், என் மதம், என் ஜாதி, என் பயம், என் பணம்... இப்படி எத்தனை எத்தனை விஷயங்கள் மனிதனை ஆட்டிப் படைக்கின்றன. இந்த எல்லாவற்றையும் கடந்தவர்கள் மரணத்தை அடைய துடிக்கிறார்கள். ஒரு சிலர்தான் சில நல்ல நிமிடங்களைத் தவிர வேறு எதையும் விட்டுப் போகக் கூடாது என நினைக்கிறார்கள். இந்த மாய மந்திரம் இந்தச் சினிமாவுக்கும் பொருந்தும். மனித உறவுகளின் மகத்துவத்தை, ஆழத்தை முன் வைக்கிற கதை. உலகம் எங்கும் நிறைந்து கிடப்பதும், உலகமே தேடிக் கொண்டிருப்பதும் அன்புதானே. அது போன்ற அசைக்க முடியாத நம்பிக்கைதான் இந்தப் படம்.
 
 எப்படியிருக்கும் திரைக்கதை வடிவம்...
 என் கதையின் அடிநாதமாக அதன் கதாபாத்திரங்களுக்கு மன மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். மனதில், புத்தியில் ஏற்படுகிற அதிர்வின் காரணமாக மனமாற்றம் நிகழ்ந்து ஒரு புது வாழ்வு பரிசாகக் கிடைத்து விடும். கர்ப்பகிரகத்தில் ஏற்றப்படும் தீபம் போன்று அது மகத்தானது. இலக்குகள், லட்சியவாதங்கள், அரசியல் எதுவும் இல்லாத எளியவர்களின் வாழ்க்கை எவ்வளவு நிம்மதியானது. வாழ்க்கையை அதன் உண்மையோடும், அன்போடும் கொண்டாடுபவர்கள்தான் கொடுத்து வைத்தவர்கள். திருமணம் என்ற சடங்கு நம் சமூகத்தின் நம்பிக்கை.
 எங்கோ இருந்து வருகிற பெண், நம்முடைய தாயாக, மனைவியாக, எல்லாமுமாக மாறி விடுகிற தருணம் மகத்தானது. மனைவியின் குடும்பத்தையும் தன் குடும்பமாகக் கருதும் மனபக்குவம் கொண்டவர்கள்தான் நாம்.இது ஒரு பக்கம். இன்னொரு விதமாக சென்னை பெரு நகரத்துச் சாலைகளில் நடக்கும் பைக் ரேஸ். இந்த இரண்டையும் இணைத்து வைத்து கதை சொல்லப் போகிறேன். டிராபிக் போலீஸாக சித்தார்த், பைக் ரேஸராக ஜி.வி.பிரகாஷ். இந்த இரண்டும்தான் களம்.
 
 கமர்ஷியல், கதைச் சொல்லி என இரு விதங்களிலும் உங்களை தக்க வைத்தது..,.. எப்படி நிகழ்ந்தது..
 நான் சினிமாவுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகி விட்டன. நான் உதவி இயக்குநராக இருந்த போது, நடந்த சம்பவத்தின் புள்ளி அது. அதைக் கதையாகி விருட்சமாகப் பல ஆண்டுகள் ஆகி விட்டன. என் படங்களின் கதைகள் எதுவுமே எனக்குள் தோன்றுகிற விஷயம் அல்ல. அது ஒரு செடி மாதிரி. நல்ல காற்று, விதை, ஒளி எல்லாம் சேர்ந்து வந்தால் முளைப்பது மாதிரி. பிச்சைக்காரன் கரு நான் படித்த ஒரு விஷயம். அம்மா குணமான பின் 5 ஆண்டுகள் பிச்சை எடுக்க வந்ததுதான் உண்மையான கதை. அம்மாவுக்காக வேண்டிக் கொண்டவன், அவர் நலமான பின்னரும், அடிக்கிற வெயில், மழையில் 5 ஆண்டு பிச்சையெடுக்க வந்திருக்கிறான் என்பதுதான் அதில் இருந்த வியப்பு.
 நடிகை வினிதா , தமிழிலும், தெலுங்கிலும் பிஸியாக இருந்த நடிகை. அவர் விமானத்தில் போகும் போது, அங்கே இருந்த எல்லோருமே ஆட்டோகிராப் வாங்கினார். ஒருவன் மட்டும் வாங்கவில்லை. அடுத்த நாள் வினிதா நடிக்கும் படப்பிடிப்பு நடக்கும் போது அங்கே பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறான். போய் விசாரித்தால், அது நான் இல்லை என்று மறுக்கிறான். பின்னர் தீர விசாரித்தால், திருப்பூரில் பெரும் தொழிலதிபர் அவர். இப்படி உண்மை இல்லாமல் என்னால் இயங்க முடியாது.
 சித்தார்த், ஜி.வி. இருவருமே வெவ்வேறு கோண சினிமாக்களில் இயங்குபவர்கள்...
 19 வயது இளைஞன் ஒருவன். 27 வயது இளைஞன் ஒருவன். இந்த இரு கதாபாத்திரங்களும் கதையின் முதன்மை. எனக்கு இருவருமே சாய்ஸில் இல்லை. தயாரிப்பாளர்தான் தெரிந்த ஹீரோக்கள் வேண்டும் என்றார். அப்படி வந்தவர்கள்தான் சித்தார்த், ஜி.வி. லியோ, காஷ்மீரா என இரு ஹீரோயின்கள். இருவருமே புதுமுகங்கள். எல்லாமே சரியாக வந்திருக்கிறது என நினைக்கிறேன்.
 
 தீவிர வாசிப்பாளனாக இருப்பது எந்தளவுக்கு இயக்குநருக்கு உதவும்....
 "தொட்டால் சிணுங்கியை தொட்டவுடன், இலைகள் குறுகுகிறது. இலைகள் சுருங்க... கண்கள் விரிய...' இப்படிச் சில வரிகளைப் படிக்கிறேன். இப்போது தொட்டால்சிணுங்கியை தொடுவது ஒரு ஷாட். இலை சுருங்குவது ஒரு ஷாட். கண்கள் விரிவது ஒரு ஷாட். இந்த மூன்று ஷாட்டுகளுமே அப்படியே வரிசையாக வருகிறது.
 இதுதான் வாசிப்பாளனுக்கும், இயக்குநருக்குமான தொடர்பு. " ஈழத்தமிழன் மொட்டை மாடியில் நின்று கொண்டு இந்தப் பக்கம்தான் என் நிலம் இருக்கு...'' என்று திசையை காண்பிக்கிறான்.இதைத்தான் நான் "சொல்லாமலே' படத்துக்கான ஒன் லைன். வாசிப்பு எல்லாமே எனக்கு காட்சி, வசனங்கள். இதுவெல்லாம்தான் உணர்வுகள்.
 - ஜி.அசோக்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com