ஆஷிகாகா மலர்கள் திருவிழா! - சாந்தகுமாரி சிவகடாட்சம்

இயற்கையின் மிக உன்னதமான அழகான, அசத்தலான, விலைமதிப்பற்ற, விலைமதிப்புள்ள, காதல், அன்பு, வெற்றி, மகிழ்ச்சி, நட்பு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற, மென்மையான பல வண்ணங்களையும்
ஆஷிகாகா மலர்கள் திருவிழா! - சாந்தகுமாரி சிவகடாட்சம்

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் 73
"சூரிய ஒளி இல்லாமல் ஒரு
மலரினால் மலர முடியாது. 
அன்பு இல்லாமல் ஒரு
மனிதனால் வாழ முடியாது''
- மேக்ஸ் 
இயற்கையின் மிக உன்னதமான அழகான, அசத்தலான, விலைமதிப்பற்ற, விலைமதிப்புள்ள, காதல், அன்பு, வெற்றி, மகிழ்ச்சி, நட்பு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற, மென்மையான பல வண்ணங்களையும், உருவங்களையும் கொண்ட மணத்தைப் பரப்புகின்ற, மனதைக் கொள்ளை கொள்கின்ற பூக்களை விரும்பாதவர்கள் இந்தப் பூவுலகில் இருக்கமுடியாது.
ஜப்பானிய மக்களும் பூக்கள் மீது தீராக் காதலை வெளிப்படுத்தி வாழ்கிறார்கள். மலைகள், பூங்காக்கள், தோட்டங்கள், தெருவீதிகள், புதர்கள் என்று எங்கு பூக்கள் பூத்திருந்தாலும் ஹனாமிக்கு (Hanami) செல்கிறேன் என்று கிளம்பி விடுகிறார்கள்.
ஹனா (Hana) என்றால் பூக்கள், மி (mi) என்றால் காண்பது." பூக்களைப் பார்க்கப் போகிறேன்' என்பதுதான் ஹனாமியின் அர்த்தம். இதுமட்டும் அல்லாமல் அவர்களுடைய பாரம்பரிய உடைகளான கிமோனோவில் (Kimona) பூக்களின் உருவங்களே, வண்ணம் தீட்டப்பட்ட நிலையில் எம்பிராய்டரி, அச்சிடப்பட்டு காணப்படும். டாட்டூ (Tattoo) செய்து கொள்வதை அதிகம் விரும்பும் ஜப்பானியர்கள், அதற்கும் மலர்களின் உருவங்களையே தேர்ந்தெடுக்கிறார்கள்.
ஒவ்வொரு ஜப்பானிய வீடுகளிலும், மலர்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. வீட்டின் உள்ளே சிறிய தொட்டிகளில் பூத்திருக்கும் செடியை நட்டு வைத்திருப்பார்கள் அல்லது பூ ஜாடிகளில் அழகிய பூங்கொத்துகள் சொருகப்பட்டிருக்கும். இந்தப் பூக்கள் சீக்கிரத்தில் வாடிவிடாமல் இருக்கத் தேவையானவற்றைச் செய்திருப்பார்கள்.
தாமரைப் பூவின் மீது அலாதியான பிரியம் கொண்டிருப்பவர்களாக ஜப்பானியர்கள் இருக்கிறார்கள். வியட்நாமிலும், ஜப்பானிலும் தடாகங்களில், மிகப்பெரிய அளவில் பூத்திருக்கும் தாமரை மலர்களைக் கண்டு மதிமயங்கி நின்றிருக்கிறேன்.
ஜப்பானிய முறைப்படி பூக்களை அழகாக ஜாடிகளிலும், குவளைகளிலும் அடுக்கும் முறைக்கு இகேபானா என்று பெயர். இப்படி "இகேபானா' முறையில் மலர்களை அடுக்கச் சொல்லிக் கொடுக்கும் இக்கிநோபோ பள்ளிகள் உலகெங்கிலும் பரவி இருக்கின்றன.
மூங்கில் இலைகள், சிறிய மரம் மற்றும் செடியின் கிளைகள், இலைகள், பைன் மரத்தின் பாகங்கள் வில்லோ செடி இவைகளோடு அழகிய மலர்கள் என்று அலங்கார ஜாடிகளில் ஜப்பானிய இகேபானா கலைஞர்கள் உருவாக்கி இருந்த மலரின் அலங்காரங்களைக் கண்டு "வாவ், வாவ்' என்று சொல்லி எனக்கு வாய் வலித்துப் போயிருக்கிறது.
ஜப்பானியர்கள் கொண்டாடும் "செரிபிளாசம்' திருவிழா உலகப்புகழ் பெற்றது. வசந்த காலத்தின் பொழுது, ஜப்பான் முழுவதிலும் இருக்கும் செரி மரங்கள் பூத்துக் குலுங்கிவிடும். கண்கொள்ளா இக்காட்சியைக் காண, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் ஜப்பானில் குவியத் தொடங்கி விடுகிறார்கள். ஜப்பானியர்கள் செரி மலர்களை சகூரா என்று அழைக்கின்றனர். இந்த மலர்கள் அன்பு, பாசம், தூய்மை, தொண்டு, அதிர்ஷ்டம் போன்ற நற்குணங்களை அடையாளப்படுத்துவதாகக் கொண்டாடுகிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில் ஜப்பானின் பூங்காக்களிலும், தெரு ஓரங்களிலும், ஏரிகளைச் சுற்றிலும் செரி மரங்களை வளர்த்து அவை பூத்துக் குலுங்கும் அழகை ரசிக்கிறார்கள். ஆனால் பண்டைய காலத்தில் மலைகளில் பூத்திருக்கும் செரிமரங்களின் அழகைக் காண, மலை ஏறி சென்றிருக்கிறார்கள். பலவிதமான பானங்களையும், உணவு வகைகளையும் கட்டிக்கொண்டு சென்று, அந்த மரங்களின் நடுவே அமர்ந்து உண்டு, பாடி ஆடி களித்திருக்கிறார்கள். அதுமட்டுமா, அறுவடைக்கு உதவும் கடவுள்கள் இந்த பூத்துக்குலுங்கும் செரி மரங்களுக்கிடையேதான் வாழ்கின்றனர் என்று நம்பி தங்களுடைய விளைநிலங்களில் நெற்கதிர்கள் செழித்து வளர்ந்து, நல்ல மகசூலைத் தரவேண்டும் என்று பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
"கமேலியா' என்ற மலர்கள் ஜப்பானியர்களின் மனதைக் கவர்ந்த மலர்களாக இருக்கின்றன. பல நிறங்களில் பூத்துக் குலுங்கும் இந்த மலர்களில், சிகப்பு நிறத்தையுடைய மலர்களைக் குறிப்பிடும்பொழுது, "என்னுடைய இதயத்தின் தீ நாக்கு நீ' என்று குறிப்பிடுகிறார்கள்.
"அஜிசாய்' என்கின்ற நீல கண்களைப் போல் கொத்து கொத்தாக பூத்துக் குலுங்குகின்ற மலர்களும் ஜப்பானின் பூங்காக்களில் நிறைந்து காணப்படும். இந்த மலர்கள் புகழையும், பூர்ணத்துவத்தையும் தரும் என்று ஜப்பானிய மக்கள் நம்புகிறார்கள்.
"கிரிஸான்தமம்' என்று ஜப்பானியர்கள் அழைக்கும் பூ வேறு எதுவும் இல்லை நம்ம ஊர் செவ்வந்தி பூக்களாக இருக்கிறது. இந்த பூக்கள் நீண்ட ஆயுளையும், புத்துயிர்ப்பையும் வெளிப்படுத்துகிறது என்று ஜப்பானிய அரச குடும்பத்தினர் கிரிஸான்தமம் மலர்களை அரச குடும்பத்தின் சின்னமாக ஆக்கினர்.
இப்படி பல வேறுபட்ட மலர்களுக்கு, பலவிதமான குணங்களைக் கொண்டவைகளாகக் கொண்டாடி மகிழும் ஜப்பானியர்கள், இந்த மலர்களை உருவாக்கும் செடிகளையும் மலர்களையும் பூங்காக்களிலும், தோட்டங்களிலும் பயிர்செய்து, அந்த அந்த காலகட்டத்தில் பூத்துக் குலுங்கும் மலர்களை, பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக்கி, அந்தக் காலகட்டங்களைத் திருவிழாக்களாகக் கொண்டாடி தாங்களும் மகிழ்ந்து, உல்லாசப் பயணிகளையும் ஆனந்தக் கடலில் மூழ்க வைக்கின்றனர்.
இப்படிப்பட்ட பூங்காக்களில் ஒன்றுதான் ஆஷிகாகா பூங்கா (Ashikaga). 2014-ஆம் ஆண்டு உலகின் தலைசிறந்த 10 கனவு இடங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. சொர்க்கத்தின் பிரதிபலிப்பு இப்படித்தான் இருக்குமோ என்று எங்களை மயங்க வைத்த இந்த இடத்தையும் அங்கே அரங்கேறி இருந்த மலர்கள் திருவிழாவையும் காண என்னோடு பயணியுங்கள்.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com